கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணமுடியாத இந்த வரையாடு தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம். தமிழ் நாட்டின் மாநில விலங்காகவும் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் நீலகிரியை ஒட்டிய பகுதிகளில் வாழும் இவை மிகவும் அரிதான விலங்காக மாறியிருக்கிறது. 80 கிலோ முதல் 100 கிலோ எடை கொண்ட இந்த வரையாடு சுமார் 1200 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான இடங்களில் வாழ்கிறது. தமிழ் நாட்டில் நீலகிரி, ஆனைமலை பகுதிகளில் இவை அதிகமாக வாழ்கிறது. பழனி மலை பகுதிகளிலும் அரிதாகக் காணப்படுகிறது. இந்த விலங்கை வேட்டையாடுவது தடை செய்யபட்டிருக்கிறது. நிறைந்த புல்வெளிப்பகுதிகள் இவற்றின் வாழ்வுக்கு சிறந்த இடமாக இருக்கிறது. தற்சமயம் வெறும் 2000 வரையாடுகள் மட்டுமே இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி.
International Union for Conservation of Nature - தகவலின் படி இந்த விலங்கு அருகிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈன்றெடுக்கும். ஆண் பெண் இரண்டுக்கும் வளைந்த கொம்புகள் உண்டு. இமாலய காட்டாடு மற்றும் அரேபிய காட்டாடு தவிர்த்து வனத்தில் வாழும் முக்கியமான ஆடு இதுவாக இருக்கிறது. இவற்றைப் பாதுகாக்க மேலும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. வேட்டைகளில் இருந்து இவற்றைப் பாதுகாக்க இந்த வரையாடு பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லப்படவேண்டும்.
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருந்த நீர் நாய்கள் இன்று அரிதாகிவிட்டன. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட இந்த நீர் நாய்கள் பல்வேறு சீதோசன நிலைகளிலும் வாழக் கூடியது.
சுமார் 10 ஆண்டுகள் வரை வாழும் இவை, பிறந்து இரண்டு ஆண்டு முதல் குட்டி போடத் துவங்கும். பிறந்து இரண்டு மாதம் தொடங்கி நீரில் நீந்துகிறது. பெரும்பாலும் மீன்களையே உண்டு வாழும். இது தவிர தவளை, நண்டு போன்றவற்றையும் உணவாக எடுத்துக் கொள்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு வகையான நீர் நாய்கள் வாழ்கின்றன. குறிப்பாக கடலில் வாழும் நீர் நாய்கள் பசிபிக் பெருங்கடலில் அதிகமாக காணப்படுகின்றன.
நீர் நிலைகளின் தரத்தை அங்கு வாழும் நீர் நாய்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். நீர் நாய்கள் வாழாத இடம் இயற்கை சுழற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
அதிகப்படியான மீன் பிடிப்புகளால் இவை பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் இவற்றின் தோல்களுக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. 2000 -ல் மட்டும் சுமார் 326 நீர் நாய்களின் தோல்கள் வட இந்தியாவில் கைப்பற்றப்பட்டன. இவற்றை வேட்டைகளில் இருந்து பாதுகாத்தால் நம் ஊரை சுற்றி இருக்கும் குளம், ஏரிகளில் கூட இவை விளையாடுவதைக் காண முடியும். மிகவும் எளிமையாக பாதுகாக்கப்படக் கூடிய உயிரினங்களைக்கூட நாம் இழந்து வருகிறோம்.
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் அரிய விலங்கு சோலைமந்தி (ஆங்கிலத்தில் Lion Tailed Macaque). IUCN கணக்கெடுப்பின்படி இந்த வகைக் குரங்கு 2500க்கும் குறைவாகவே உள்ளன. உலகின் வேறு எங்கும் பார்க்கமுடியாத இந்த விலங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக வனப் பகுதிகளில் காணப்படுகின்றன. பெரும்பாலும் பழங்கள், பூக்களின் மொட்டுகள், கொட்டைகள் மற்றும் ஒரு சில பூச்சி வகைகளை உண்டு வாழும் இந்த வகை குரங்கு பத்து கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். சிங்கத்தில் வால் போல இதன் வாலும் நீண்டு இருக்கும். முகத்தில் பிடரி மயிர் காணப்படும்.
சாதாரண குரங்குகளைப் போல இவை மனிதர்கள் இடத்தில் நெருங்குவதில்லை. வனம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளவதால் இவற்றின் வாழ்க்கை முறையில் மிகவும் சிரமங்கள் ஏற்படுகின்றன. மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இவை மிச்சம் இருப்பதால் துரிதமான சில நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இவற்றைக் காப்பாற்ற முடியும். குறிப்பாக வனத்துறையினர் புதிய மரக்கன்றுகளை நடும்போது இவற்றின் உணவுச் சூழ்நிலைக்கு ஏற்றார்போல மரக்கன்றுகளை நட வேண்டும். இந்த விலங்குகளின் போக்குவரத்தில் இடையூறு ஏற்படாதவண்ணம் போக்குவரத்தை வனப்பகுதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தமிழ்நாட்டிற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 2000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது பழனி மலைத் தொடர்ச்சி. நிறைய மலைக் கிராமங்களையும் கொடைக்கானல் நகரையும் உள்ளடக்கியது இந்த மலைத் தொடர்ச்சி. இதில் சுமார் 700 சதுர கி.மீ வனப்பரப்பு உள்ளது. இது தவிர காப்பித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் உள்ளது. இந்த பழனி மலைத் தொடர்ச்சியில் உள்ள வனப்பரப்பு பாதுகாக்கப்பட்ட வனமாகவோ அல்லது வனக் காப்பகமாகவோ தரம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது.
ஏராளமான உயிரினங்கள் இந்த மலைப்பகுதியில் உயிர் வாழ்கின்றன. குறிப்பாக மலை அணில்(Grizzled squirrel), வரையாடு (Nilgiri Thar), கேளையாடு (Muntjac), யானை, சீத்தல்(Chital), சிறுத்தைப் புலி(Leopard), கரடி மற்றும் ஒரு சில இடங்களில் அரிதாக புலியும் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பறவைகளிலும் பல விதமான பறவைகள் இந்த மலைப் பகுதிகளில் வாழ்கின்றன. குறிப்பாக இருவாச்சி(Hornbill) என்ற அரிதான பறவைகள் இங்கு உள்ளன.
இந்த மலைத் தொடர்ச்சியின் பல்வேறு இடங்களில் செழுமையான நீர் நிலைகளும் உள்ளன. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய அருவியும் தமிழ்நாட்டின் அதிக உயரமான அருவியுமான தாலையார் அருவி இங்கு உள்ளது. அதிகமாகும் போக்குவரத்தாலும், மரங்கள் வெட்டப்படுவதாலும், சுற்றுலாப் பயணிகள் கொண்டுவந்து போடும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் இந்த மலைப் பகுதி சீர்கேடடைந்து வருகிறது. கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்த்தால் பெருமளவு மாசுபடுவதைத் தவிர்க்க முடியும்.
Palani Hills Conservation Council என்ற அமைப்பு பழனி மலைப் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு தேனி வளர்ப்பு முறை பற்றி சொல்லித் தருவதோடு அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறது. இந்த மலைப் பகுதியில் மிச்சமிருக்கும் வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டுமெனில் நிறைய முயற்சிகளை செய்தாக வேண்டும். இணையத்தளம்: www.palnihills.org/
- மிரட்டும் தவளைகள்
- எறும்புக்கூட்டம் - யார் அந்த ராணி?
- டார்வினின் விதி மீறும் நாய்கள்
- பறவைகளின் ரேடியேட்டர்
- மீன்களின் உலகம்
- அபசகுனமா? ஆஸ்திரேலியப் பறவையா?
- நான்கு கொம்பு மான் (Four horned antelope–Tetracerus quadricornis)
- சிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை
- புலிகளும் புரிதலும்
- சப்தங்கள் பொதுவானதா?
- திமிங்கல மயானம்
- நாடகமாடும் பாம்பு
- அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்கள்
- சிலந்தியின் உருவ பேதங்களுக்கான காரணம்
- பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
- மனிதர்க்கு ரோமம் மறைந்த கதை
- பச்சோந்தி ஏன் அடிக்கடி நிறம் மாறுகிறது?
- கவாத்து செய்வது எதற்காக?
- தப்பிப்பிழைக்குமா தவளையினம்?
- பூக்களின் வில்லன் யார்?