சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டை ஒட்டிய பகுதியிலுள்ள போதிப்படுகை (கே.குடி, கர்நாடகா) அருகே சென்று கொண்டிருந்தபோது, தூரத்திலிருந்து பார்த்தபொழுது கேளை ஆடு போன்ற தோற்றத்துடன் ஒரு மான் நின்றது. முதலில் அதை கேளையாடு (Bark­ing deer) என்று நினைத்தாலும் கூர்ந்து பார்த்ததில் அதன் கொம்பின் வடிவம், சற்று அகன்ற மார்பு, சற்று நீண்ட கழுத்தை ஆகியவற்றை வைத்து அது நான்கு கொம்பு மான் என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த மான் இனம் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிடும் தன்மை கொண்டது. அது நான்கு கொம்பு மான்தான் என்று தெரிந்தவுடன் என்னை விரைவாகத் தயார்படுத்திக் கொண்டு, படம் எடுக்கத் தொடங்கினேன்.

முப்பாதாண்டுகளுக்கு முன்னால் சத்தி வனக்கோட்டத்தில் உள்ள பீர்கடவு, கொத்தமங்கலத்திலிருந்து ராஜன் நகர் செல்லும் சாலையின் மேற்கே தென்படும் சிறிய குன்றில் எண்ணிக்கையில் குறைந்த நான்கு கொம்பு மான் கூட்டமொன்று தொடர்ந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்தது எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. விலங்குகளின் மீது ஆர்வம் கொண்டவரும் அவற்றை கூர்ந்து கவனித்து வந்தவருமான முன்னாள் வேட்டைக்காரர் சின்னச்சாமி என்பவர், ஒரு முறை ஜெர்சி மாடு கன்று ஈன்றதைப் பார்த்துவிட்டு, "அதன் கண்ணைப் பாருங்கள், குள்ளமான் கண்ணைப் போலுள்ளது" என்று என்னிடம் கூறினார். குள்ளமான் என்று அவர் குறிப்பிட்டது இந்த நான்கு கொம்பு மானைத்தான்.

கன்றின் கண்ணுக்கு ஒப்புமையாக கூறும் அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மான் அதிகமாக இருந்தது மட்டுமின்றி, மக்கள் பார்வையிலும் பட்டுள்ளது இதிலிருந்து தெரிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த மானின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்துவிட்டாலும், தற்போது வனத்துறையின் வேட்டைத் தடுப்பு செயல்பாடுகளால் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இந்த மான் இனம் தற்போது கண்ணில் பட ஆரம்பித்திருப்பதை வைத்து இதை உறுதிப்படுத்தலாம்.

சத்தியமங்கலம் காட்டுயிர் சரணாலயத்தில் உள்ள தலைமலைப் பகுதியில் இந்த மான் தற்போது அருகிவிட்டது. மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியம், உலக இயற்கை நிதியத்தின் பூமிநாதன், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சிலர் இந்த மானைப் பார்த்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் நானும் அந்த மானைப் பார்த்தேன். தமிழகத்தில் முதுமலை பகுதியில் உள்ள சர்க்கிள் சாலை, மசினகுடி, காங்கரசு மட்டம், சிரியூர் பகுதிகளில் இந்த மான் அரிதாகக் காணப்படுகிறது. ஆராய்ச்சியாளர் ஆறுமுகமும் டாக்டர் கலைவாணனும் இந்த மானை இப்பகுதியில்  பார்த்துள்ளனர்.

வழக்கமாக மான்களுக்கு இரண்டு கொம்புகளே இருக்கும். இந்த மானுக்கு இரண்டு ஜோடிகளாக நான்கு கொம்புகள் உண்டு. காட்டில் இதைப் பார்ப்பது கடினம். ஆசியாவிலியே சிறிய இரலை மான் இனம் இது. எண்ணிக்கை மிகக் குறைவு, அதிக மிரட்சியும், நழுவும் தன்மையும் கொண்டது. சாதாரணமாக இணையாகவோ, குட்டிகளுடனோ காணப்படும். தமிழகம், தமிழகத்தை ஒட்டிய கர்நாடக காட்டுப் பகுதிகள், குஜராத் கிர் காடு, ஒரிசாவில் இந்த மான் வாழ்கிறது. திறந்தவெளிகளிலும், மலைச்சரிவுள்ள காட்டுப் பகுதிகளிலும், ஓடை, ஆற்றோரப் பகுதிகளிலும் இதைக் காணலாம்.

இதன் மயிர்ப்போர்வை மஞ்சள் கலந்த மர நிறத்திலும், அடிப்பகுதி வெளிறியும் இருக்கும். மழைக்காலத்தில் நிறம் சற்று அடர்த்தியாகவும், குளிர்காலத்தில் நிறம் சற்று மங்கலாகவும் காணப்படும். நின்ற நிலையில் இதன் உயரம் தோள்பட்டை வரை 60 செ.மீ, 20-25 கிலோ எடையுடன் இருக்கும்.

பெண்ணுக்கு கொம்பு கிடையாது. ஆண்களுக்கு பொதுவாக நான்கு கொம்புகள் உண்டு. சிலவற்றுக்கு ஊட்டச்சத்து குறைவு, வாழுமிடத்தைப் பொருத்து இரண்டு கொம்புகள் மட்டும் இருக்கலாம். இரண்டு பெரிய கொம்புகள் இரண்டு காதுகளுக்கு இடையிலும் 8 - 10 செ.மீ நீளத்திலும், அடுத்து இரண்டு சிறிய கொம்புகள் பெரிய கொம்புகளுக்கு முன்னதாக முன்னந் தலையில் 1 முதல் 2 செ.மீ அளவுக்கு வளர்ந்திருக்கும். ஆண் குட்டிகளுக்கு பிறந்த சில மாதங்கள் கழித்து பெரிய கொம்புகள் வளரும். அடுத்து சில மாதங்கள் கழித்து அது உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்குத் தகுந்தவாறு 14, 15 மாதங்களில் இரண்டு சிறு கொம்புகள் வளரத் தொடங்கும். அரிதாக சிலவறறுக்கு இந்த சிறிய கொம்புகள் வளராமல் போவதுண்டு.

வெளிமான் அல்லது பிள்ளாய் (Blackbuck – an­telope) போன்றவற்றின் கொம்புகளைப் போல் அல்லாமல், இவற்றுக்கு கொம்பின் நுனி நேராகவும் கூர்மையாகவும் இருக்கும். இதன் கொம்புகள் உதிர்ந்து முளைப்பதில்லை. ஆனால் இனச்சேர்க்கை காலத்திலும், இடம் கைப்பற்றுவதற்காகவும் ஆண் மான்களிடையே ஏற்படும் சண்டையின்போது கொம்புகள் ஒடிவது உண்டு. அந்த நேரங்களில் மூர்க்கத்தனமாகச் சண்டையிடும். நீர்நிலைகளுக்கு தொடர்ந்து நீர் அருந்த வரும் தன்மை கொண்டது. எனவே, நீரற்ற பகுதிகளில் இதை அதிகமாகப் பார்க்க முடியாது. வாழ்நாள் முழுவதும் ஒரே இடத்தில் வாழும் தன்மை கொண்டது. திறந்த வெளிக் காடுகளில் நன்கு வளர்ந்த புற்களுக்கு இடையில் தங்கும் இயல்புடையது. வெளிமான் போல கூட்டமாக இருக்காது. இலைகள், புற்கள், வேர்முடிச்சுகள், பழங்கள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு.

சூலை - செப்டம்பர் மாதங்களில் இணைசேரும். சினைக்காலம் 7 - 8 மாதங்கள். ஜனவரி - பிப்ரவரி குட்டிகள் ஈனும் காலம். ஒன்று முதல் மூன்று குட்டிகள் வரை ஈனும். இதன் ஆயுட்காலம் சுமார் 10 ஆண்டுகள். புலி, சிறுத்தை, செந்நாய், மலைப்பாம்பு ஆகியவை இவற்றின் முக்கிய எதிரிகள். ஆனால் அவற்றைவிட பெரிய எதிரிகள் காடழிப்பும், மனிதத் தொந்தரவுகளும்தான். அரிய இனமான நான்கு கொம்பு மான்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வனத்துறையின் முழுமையான பாதுகாப்பு, வெளி மனிதர்களின் இடையூறு இல்லாதிருப்பது அவசியம்.

(இக்கட்டுரையை எழுதிய ஒளிப்படக் கலைஞர் டி.ஆர்.ஏ. அருந்தவச் செல்வன் பிரபல காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர். காடுகளில் அதிகம் சுற்றியவர். அவரது அரிய நேரடி அனுபவம் இங்கு கட்டுரையாகி இருக்கிறது.)

(பூவுலகு மார்ச் 2010 இதழில் வெளியானது)

Pin It