கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
புலிகளின் பாதுகாப்பு பற்றி சமீப காலங்களில் அதிகம் வலியுறுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், ஏன் புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற புரிதல் தெளிவாக விரிவாக விவாதிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக, "கூண்டில் அடைத்து வைத்தே புலிகளை பாதுகாத்துவிட முடியும்போது அதற்கு ஏன் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று ஒரு கேள்வி கூட வருகிறது. மேலும் புலிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற மிருகங்களுக்கு ஏன் கொடுக்கப்படுவதில்லை என்கிற கேள்வியும் எழக் கூடும்.
புலிகளின் பாதுகாப்பிற்கு முதலில் சொல்லப்படும் காரணம், இந்த உலகில் இல்லாத ஒரு உயிரினத்தை நம்மால் பாதுகாத்து விட முடியாது. இருக்கும்போதே இந்த உயிரினத்தை பாதுகாத்துவிட வேண்டும். இது மேம்போக்கான காரணமாக இருந்தாலும் அறிவியல் சொல்வது வேறு. புலிகளின் பாதுகாப்பைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, அவற்றின் குணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
-
புலி தனித்து வாழும் மிருகம்.
-
புலிகள் தனக்கென்று ஒரு எல்லையை காட்டில் தீர்மானித்துக் கொள்கிறது. சிறுநீர் கழிப்பதன் மூலமும், மரங்களில் கீறல்களை உண்டாக்குவதன் மூலமும் மற்ற புலிகளுக்கு தன்னுடைய எல்லைக் கோட்டை தெரியப்படுத்துகிறது.
-
தனக்குக் கிடைக்கும் உணவின் தேவைகளைப் பொருத்து (மான், காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் பல) தன்னுடைய எல்லைகளைத் தீர்மானிக்கிறது.
-
உணவு எளிதாகக் கிடைக்குமிடங்களில் எல்லையை சுருக்கவும், உணவு அரிதாக கிடைக்கும் இடங்களில் எல்லையைப் பரப்பவும் கற்றுக்கொள்கிறது.
-
எனவே புலிகள் பாதுகாப்பாக வாழ போதுமான உணவு அவசியமாகிறது. இதனால் புலிகள் பாதுகாக்கப்படும்போது புலிகளின் உணவு சார்ந்த மற்ற உயிரினங்களும் பாதுகாக்கப்படுகிறது. அந்த உயிரினங்கள் வாழ அவற்றின் உணவு சார்ந்த தேவைகளும் பாதுகாக்கப்படுகிறது. இது உணவுச் சங்கிலி அறுபடாமல் இருக்க உதவுகிறது.
-
எப்போதாவது அரிதாக இணை சேருகிற புலி ஒரு வார காலத்தில் பிரிந்து செல்கிறது.
-
புலிகள் வாழ அடர்ந்த வனப் பகுதியும், நீர்த் தேவைகளும், மனித இடையூறுகள் அற்ற பகுதியும் தேவைப்படுகிறது.
வேட்டையாடுவதன் மூலம் புலிகள் அழிக்கப்படுவதால் உணவுச் சங்கிலி முற்றிலுமாக அறுபடும். வனத்தின் உண்மைத் தன்மை குறையும். நூறு சதவிகிதம் தரமான வனம் தன்னுடைய தரத்தை இழக்கத் தொடங்கும். பின் வனம் சுருங்கத் தொடங்கும். வனம் சுருங்கச் சுருங்க மழை குறையும். மழை குறைந்தால் நீர்ப் பற்றக்குறை ஏற்பட்டு உலகம் அழிவை நோக்கி வேகமாக நகரத் தொடங்கும்.
எனவே புலிகளையும் மற்ற விலங்கினங்களையும் வேட்டையாடுவதைத் தவிர்த்து, வனமும், விலங்குகளும், பறவைகளும் மற்ற அனைத்து உயிரினங்களும் காக்கப்படுவது அவசியமாகிறது.
இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. மனிதனுக்கு மட்டுமல்ல; புலிகளுக்குமானது.
- பா.சதீஸ் முத்து கோபால் (
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வெட்டுக்கிளிக்கும் திமிங்கலத்திற்கும் எந்த சொந்த பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஒன்று பூச்சியினம் மற்றது பாலூட்டி. ஆயினும் இரண்டும் விலங்குளே. இரண்டும் சப்தம் எழுப்பி பேசிக்கொள்கின்றன. அப்படிப் பார்க்கப் போனால் ஏராளமான விலங்குகளுக்குள் தவகல் பரிவர்த்தனை சப்தம் மூலமாகத் தான் நடைபெறுகிறது.
ஃப்ளோரிடா பல்கலைக்கழகமும் ஆக்லஹாமா பல்கலைக் கழகமும் இணைந்து 500 வகையான விலங்கு சப்தங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தன. மேம்போக்காக பார்க்கும்போது அவற்றிடையே நிறைய சுருதி பேதங்களும் தாள வித்தியாசங்களும் காணப்பட்டாலும் விலங்கின் உருவ அளவு மற்றும் அதன் எடைகளில் காணப்படும் வித்தியாசங்களை ஒன்றுபடுத்திப் பார்க்கும்போது அனைத்து விலங்குகளின் ஓசைகளும் அதன் சங்கேதங்களும் ஒன்றுபோலவே இருந்ததைக் கண்டு வியந்தனர்.
அடிப்படையாக எல்லா விலங்கு பாஷைகளுக்குள்ளும் ஒருவித சப்த ஒற்றுமை இருக்கிறது. வெளிப்படையாக அவை விகாரப்பட்டாலும் ஆழமாக ஒற்றுமை சூக்குமமாக உள்ளது.
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஆல்வின் வழக்கம் போல் தனது ஆயிரம் வாட் கண்களால் நிதானமாக இருட்டைக் கிழித்தபடி ஆழ்கடலின் தரையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. ஆல்வின், ஆழ்கடல் மூழ்கிக் கப்பல். கலிபோர்னியா கடல் அருகில் 1240 மீட்டர் ஆழத்தில் மாமூல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. தண்ணீரின் அழுத்தம் அந்த ஆழத்தில் அசாத்தியமாக இருக்குமாதலால் உருக்கிய தாரில் நீந்துவது போல் மெள்ள நகர்ந்தது.
கடல் தரையில் 20 மீட்டர் நீளத்திற்கு, இரண்டுமாடி பஸ் போல ஒன்று கிடப்பதைக் கண்டது. சென்ற மாதம் இதே இடத்தில் நோட்டம் விட்டபோது அது அங்கே இல்லை. அண்மையில்தான் அது அங்கே விழுந்திருக்க வேண்டும். அது ஒரு திமிங்கலம். வளர்ந்து, முதிர்ந்து, வாழ்ந்து மடிந்துவிட்ட மிகப்பெரிய திமிங்கலத்தின் சடலம். கடலின் அதள பாதாளத்தைத் தஞ்சமடைந்த அந்தத் திமிங்கல சடலத்தைச் சுற்றிலும் எண்ணிச் சொல்ல முடியாத அளவுக்குப் புழு, பூச்சிகள், நத்தைகள், நண்டுகள் போன்றவை கும்பமேளா கூட்டம் போல் நிறைந்து இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் லட்சக்கணக்கில் திமிங்கல உடலை ஆகாரமாகச் சுவைத்தபடி இருந்தன. அவற்றில் 30 உயிரினங்கள், விலங்கியல் அறிஞர்கள் இதுவரை பார்த்திராதது, பெயரிடாதது.
தின்று முடிக்க 7 ஆண்டுகள்
ஆழ்கடலில் வெளிச்சமிருக்காது, ஆக்ஸிஜன் இருக்காது, சாப்பிட எதுவும் கிடைக்காது. கடல்பாசிகள் வெளிச்சம் மிகுந்த கடல்பரப்பில் வாழ்வதைத்தான் விரும்புகின்றன. அதளபாதாளத்தில் வழக்கமாக எதுவும் வாழவிரும்புவதில்லை. இருப்பினும் செத்து விழும் ராட்சத உயிரினங்களால் வினோதமான உயிர்கூட்டம் ஆழ்கடலில் கூடுகிறது. தினமும் 40-60 கிலோ திமிங்கல மாமிசத்தைக் கொத்திக் குதறி எடுத்தாலும் ஒரு திமிங்கலத்தைத் தின்று தீர்க்க குறைந்தது 7 ஆண்டுகளாவது ஆகுமாம். திமிங்கலங்கள் கடலில் ஒன்றுக்கொன்று 12 கிலோ மீட்டர் இடைவெளிவிட்டு வாழ்வதால், கடலடியில் அந்த இடைவெளியில் எப்போதும் ஏதாவதொரு திமிங்கல சமாதி காணப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70,000 திமிங்கலங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டு கடலடியைத் தஞ்சமடைகின்றன. ஆதலால் கடலடியில் மிகப்பெரிய உயிர்க்கூட்டம் செத்த திமிங்கலத்தைச் சாப்பிடுவதற்கென்றே சுற்றித்திரிகின்றன. ஒருவேளை திமிங்கலங்களே கிடைக்காவிட்டால் அந்த நாடோடிக் கூட்டம் என்ன செய்யும்? இருக்கவே இருக்கிறது ஆழ்கடல் வெப்பநீர் ஊற்றுகள்! கருப்பாக கந்தகம் நிறைந்த புகையை தண்ணீரில் கக்கியபடி ஆழ்கடல் வெப்பச்சுனைகள், தொழிற்சாலையின் பெரிய புகைப்போக்கிகள் போல் கடலடியில் காணக்கிடக்கின்றன. வெப்பம் மிகுந்த கரும்புகையை உணவாக ஏற்றுக்கொண்டு திமிங்கலம் கிடைக்காத நாடோடிக் கூட்டம் அங்கே காலம் கடத்துகின்றன.
ஒரு திமிங்கலத்தைத் தின்று தீர்ப்பதற்குள் இன்னொரு திமிங்கலம் அருகில் வந்து விழாமல் போகாது. ஆதலால் திமிங்கலந் திண்ணிக் கூட்டங்களுக்குப் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதேயில்லை. திமிங்கலங்கள் மனிதரையும், பசுக்களையும் போல, பாலூட்டி விலங்குகள். அவை 20 மில்லியன் ஆண்டுகளாகத்தான் கடலில் வாழ்ந்து வருகின்றன. ஆனால் திமிங்கலந் திண்ணிகள் பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவரும் உயிரினங்கள்! திமிங்கலம் கிடைப்பதற்கு முன்னர் அவை கடலில் வாழ்ந்து வந்த டைனாசார்களைத் தின்றிருக்கும் என்று தெரிகிறது. இதற்கு ஃபாசில் ஆதாரங்களும் கடலடியில் கிடக்கின்றன.
படிப்படியாக சிதைகின்றன
ஒரு திமிங்கலம் 3 நிலைகளில் படிப்படியாக தின்று தீர்க்கப்படுகின்றது. முதல் நிலையில் ஹேக் ஃபிஷ் என்ற மீன், சகதியில் வாழும் குருட்டு மீன், நீண்ட புழுக்கள், சுறா மீன் ஆகியவை விழுந்த திமிங்கலத்தின் சதையைக் கொத்திக் குதறி எடுத்துச் செல்கின்றன. கலவரத்தில் கடைகள் சூறையாடுவதுபோல் தினமும் 60 கிலோ தசை வெட்டி நீக்கப்படுகிறது. தசை முழுவதும் தீர 2 ஆண்டுகள் ஆகிறது.
இரண்டாம் நிலை: இப்போது திமிங்கலத்தில் எஞ்சியிருப்பது கொழுப்பு நிறைந்த பிளப்பர் கொழுப்பும் எலும்புகளும்தான். முதல் நிலையில் எஞ்சிய மென் தசைகளும், சகதியில் சிதறிய கொழுப்புகளும்; சிறிய நத்தைகள், ரோமப் புழுக்கள், சென்னாக்குனிகள் போன்றவற்றுடன் ‘ஸாம்பி புழு'க்களுக்கு விருந்தாகிறது.
ஸாம்பிப் புழு வினோதமானது. பிரேதம் போல மெள்ள நடமாடும். இதற்கு வாய், வயிறு, குடல் எதுவும் கிடையாது. செடிகளைப் போல தமது உடலிருந்து பச்சை நிற வேர்களை திமிங்கல எலும்புகளுக்குள் நுழைத்து, ஊன்றி ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன. திமிங்கல எலும்பின் எடை கிட்டத்தட்ட 40 டன் இருக்கும். அதில் 3000 லிட்டர் எண்ணெய் இருக்கும். அத்தனையும் ஸாம்பிப் புழுக்களுக்கு பிரசாதம். இரண்டாம் நிலை 2 ஆண்டுகள் நீடிக்கிறது.
மூன்றாம் நிலை: நுண்கிருமிகளுக்கான வாய்ப்பு இது. எஞ்சியிருக்கும் எலும்பும் சதையும் பேக்டிரியாக்களால் செரிமானமாகிறது. வினோதமான கூம்பு நத்தை, சிப்பி நத்தை, குழாய்ப் புழு முதலியவை விருந்துண்ணுகின்றன. திமிங்கல எலும்பிலுள்ள கந்தகப் பகுதியை இரண்டு வகை பேக்டிரியாக்கள் சாப்பிடுகின்றன. ஒன்று கந்தகத்தை ஆக்ஸிஜன் போல பயன்படுத்தி நாற்ற மிக்க ஹைட்ரஜ சல்பைடை வாயுவாக வெளியிட, இன்னொன்று அதையே ஜீரணித்து சல்பேட்டாக மாற்றுகிறது. இந்த நிலை குறைந்தது 50 ஆண்டுகளாவது நீடிக்கும்.
கடலின் ஆழம் மிகப்பெரிய உப்புநீர் பாலைவனம் என்று நீங்கள் நினைத்திருந்தால் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பாலைவனத்தில் சோலை வனமும் இருக்குமல்லவா அதுபோல் செத்து விழுந்த திமிங்கல உடலைச் சுற்றிலும் எக்கச்சக்கமான உயிர்க் கூட்டம் சுவர்க்க இன்பத்தை அனுபவிக்கின்றன. சமுத்திரப் பாலையில் செத்த திமிங்கலங்கள் சோலைகள்.
- முனைவர் க.மணி (
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நாம் எல்லோருக்கும் பாம்பு என்றால் பயம்தான். பார்த்தால் அடித்துக் கொல்லாமல் விடமாட்டோம். ஆனால் பாம்பு மனிதனுக்கு எந்தத் தீங்கும் செய்வதில்லை. நன்மைதான் செய்கிறது. உணவுப்பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் எலிகளை தீர்த்துக் கட்டுகிறது. பொதுவாக பாம்பை கொல்லாமல் விடுவதுதான் இயற்கைக்கு செய்யும் நன்மை. பல்லுரியத்துக்கு பாதுகாப்பு.! இந்த ஆண்டு உலகப் பல்லுரிய ஆண்டு.
நல்ல பாம்பு வந்தால் என்ன செய்வது என்கிறீர்களா? கொல்லாமல் விட்டுவிடுங்கள். அவ்வளவுதான். நாம் தொந்தரவு செய்தால் மட்டுமே அல்லது நாம் மிதித்தால் தான் அது நம்மைக் கடிக்கும். நம்மைத் தேடி வந்து வீட்டுக்குள் வந்து கடிப்பது கிடையாது. நாம் அவைகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதால்தான் அவை நம் இடத்திற்கு வருகின்றன. அவைகளின் இடத்தை நாம் பிடித்தால்/ஆக்கிரமிப்பு செய்தால், அவை எந்த கோர்ட்டில் போய் வழக்கு தொடுக்கும்?
நாம் கதைப்பது போல், எந்த கட்டுவிரியனும் கொம்பேறி மூக்கனும். மனிதன் செத்துவிட்டானா என்று இடுகாடு வரை போய் இருந்து மரத்தில் ஏறிப் பார்ப்பதில்லை. எல்லாம் நம் கட்டுக்கதைதான். அதுபோல எந்த பாம்பு நண்பா டபராவில் உள்ள பாலை உறிஞ்சி குடிக்கிறது.. சினிமாவில் தவிர.!. யாராவது அதை நேரில் பார்த்ததுண்டா? அப்புறம் ஏன் நம் மக்கள் பாம்புப் புற்றில் பால் ஊற்றுகிறார்கள்?.. உண்மையிலேயே அந்த புற்று பாம்பின் புற்று தானா, பாம்பு கட்டியதா என்று யாராவது இதுவரை வினா எழுப்பி இருக்கிறீர்களா? அது கரையான் புற்று தான், நண்பா!
பாம்பைப் பற்றி ஏராளமான சுவையான தகவல்கள் உண்டு.. ஒன்றை எடுத்து விடலாமா? நம்ம ஊரில் தண்ணீர் பாம்பு உண்டே அதே போல, ஐரோப்பாவில் உள்ள ஒரு பாம்பு ஐரோப்பிய புல்பாம்பு. இந்த பாம்பு விடத்தன்மை இல்லாதது. இது தண்ணீரில் அனாயசமாக நீந்தும். வருடத்தில் நிறைய நாட்கள், குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளுகிறது. அதாவது,, அசைவின்றி அப்படியே கிடக்கும், உணவு உண்ணாது, எதுவும் செய்யாது, மூச்சு விடுவதைத்தவிர..! ஆனால் எதிராளியிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள பல அற்புதமான நடவடிக்கைகளைக் கையாளுகிறது. சிந்தனைத் திறன் உள்ள மனிதன் போல, தேர்ந்த நடிகன் போல என்று கூட சொல்லலாம். நீண்ட நேரம் நீருக்குள்ளேயே இருந்து எதிரியிடமிருந்து தப்பிக்கப் பார்க்கும். சில சந்தர்ப்பங்களில், தன் உடலை முடிந்தவரை உப்பி, பயமுறுத்தப் பார்க்கும்; சிலசமயம் வேகமாய் சீறும். வேறு பல சமயங்களில், பூண்டு அல்லது பெருங்காய மணமுடைய மலத்தை வெளியேற்றி எதிராளியை விரட்ட முயற்சிக்கும். அதுவும் பலிக்கவில்லை என்றால், கடைசியாக ஒரு போர்க்கால தந்திரத்தை.. அஸ்திரத்தை எடுத்து வீசும்..!
என்ன என்று யூகித்து உண்மையாகவே பதில்/தகவல் சொல்லும் நண்பருக்கு நான் ஒரு பரிசு தருகிறேன்.. என்ன யுக்தியாக இருக்கும் சொல்லுங்களேன்..!
மூளையை கசக்கி யோசித்து விட்டீர்களா நண்பா? அந்த புல்வெளி பாம்பு செத்தது போல நடிக்குமாம்..! என்ன நம்புகிறீர்களா? உண்மைதாம்பா.. அப்படியே உடம்பைத் திருப்பி போட்டு, வாயைப் பிளந்து, நாக்கை வெளியில் நீட்டி, உண்மையாவே செத்துவிட்டது போல, நம்மையும் மிஞ்சி நடிக்கும் நண்பா? என்ன நம்ப முடிகிறதா? ஆச்சரியத்தில் மயக்கம் போடவில்லையே.. அது மட்டுமில்லை சுமார்15 நிமிடங்கள் அப்படியே கிடைக்குமாம். எதிராளி பாம்பு செத்துவிட்டது என நம்பி கம்பி நீட்டிவிடும். எப்படி இருக்கிறது. கதையல்ல உண்மை!!
- பேரா.சோ.மோகனா (
- அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்கள்
- சிலந்தியின் உருவ பேதங்களுக்கான காரணம்
- பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
- மனிதர்க்கு ரோமம் மறைந்த கதை
- பச்சோந்தி ஏன் அடிக்கடி நிறம் மாறுகிறது?
- கவாத்து செய்வது எதற்காக?
- தப்பிப்பிழைக்குமா தவளையினம்?
- பூக்களின் வில்லன் யார்?
- மிருகங்களும் சிந்தித்து முடிவெடுக்கின்றன
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?
- நோய்பரப்பும் வன உயிரிகள்
- கொலை செய்யப்பட்டோர் கணக்கு
- பசுமைக்கு ஏற்ப காதல் பாட்டு
- விலங்குகளின் ரியல் எஸ்டேட்
- நஞ்சு துப்பும் பாம்புகள்
- கார்பன் கிரகிப்பானாகச் செயல்படும் நெல்வயல்கள் மேற்கத்திய விஞ்ஞானிகளின் மோசடி அம்பலம்
- காதல் கீதம் பாடும் டெங்கு கொசுக்கள்
- வீட்டை மாற்றிய வண்ணத்துப்பூச்சி!
- நன்னீரைத் தேடும் கடல் பாம்புகள்