ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பது போல, ஏழைகளின் மரம் என்ற பெருமைக்குரியது மூங்கில். புல் இனத்தைச் சேர்ந்த இந்தத் தாவரம் அண்டார்டிகா, ஐரோப்பா தவிர உலகம் எங்கும் காணப்படுகின்றது. பூமியில் 190 வகைகளில் 1600 இனங்கள் உள்ளன. இதில் 138 இனங்கள் இந்தியாவில் உள்ளன. அதிவேகமாக வளரும் இவை எடை குறைவு, உறுதித்தன்மை, மினுமினுப்பு போன்ற பண்புகளால் கட்டுமான செயல்களுக்கு உகந்தவையாக உள்ளன.

கூட்டமாக வளர்தல், வலுவான கணுக்கள், நார்ப்படலம் போன்ற பண்புகள் சூழல் பாதுகாப்பிற்கு மூங்கில் மரங்களை உகந்தவையாக மாற்றுகின்றன. குன்றின் சரிவுகள், வயலோரங்கள், மலைகளில் குறைந்த பராமரிப்புடன் வேகமாக வளர்வதால் இந்த மரங்களை ஒரு விளைபயிராகவும் விவசாயிகள் வளர்க்கின்றனர். நல்ல விலை, மரத்திற்கு மாற்றாக பல வேலைகளுக்கும் பயன்படுத்தலாம் என்பதால் இது பரவலாக வளர்க்கப்படுகிறது.

2 செமீ மட்டுமே அளவுள்ள ராடியெல்லா ரமன்சே என்ற பிரேசிலியன் இனம் முதல் 50 மீ உயரம் வரை நம் நாட்டில் வளரும் டெண்ட்ரோகிளாமஸ் ஜைஜான்ண்டிஸ் என்ற பிரம்மாண்ட இனம் வரை இவை பல தரத்தில் உள்ளன. ஒற்றை மூங்கில், சீன மூங்கில், தோட்ட மூங்கில், அலங்கார மூங்கில் என்று பல வகைகள் உள்ளன. திருவனந்தபுரம் பாலோடு என்ற இடத்தில் ஜவஹர்லால் நேரு வெப்பமண்டலப் பயிர்களுக்கான பூங்காவில் (JNTBGRI) மூங்கில் பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன.bamboo 427தோட்டப் பயிர்களுக்கான ரகங்கள் திசு வளர்ப்பு முறையில் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இதற்காக இங்கு 20 ஏக்கர் பரப்பில் 63 இனங்கள், 45 கலப்பினங்கள் அடங்கிய 1200 மூங்கில் மரக்கூட்டங்களின் தோட்டம் (மூங்கில் சிப்பம்) உள்ளது. மூங்கில்கள் மண் இடிந்து விழுதல், மண் சரிவு, மண் அரிப்பு, நதிக்கரை பாதுகாப்பு, சூழல் மீட்பு (eco restoration), பாறைகள் உருண்டு விழுதல், வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களைத் தடுக்க உதவுகின்றன.

காற்று மண்டலத்தில் வெளியிடப்படும் கார்பனின் அளவைக் குறைக்க, இதன் மூலம் வாயு மாசின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

இவற்றிற்கு நீர்மாசுக்களை உறிஞ்சி எடுக்கும் ஆற்றல் உண்டு. நட்டது முதல் உயிருள்ளவரை வெட்ட வெட்ட கிளைகள் மீண்டும் மீண்டும் வளர்வதால் இவற்றை மறுஜென்மம் எடுக்கும் மரங்கள் என்று சொல்லலாம். இவை இனத்திற்கு ஏற்ப 20 முதல் 120 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஒரு வித்திலைத் தாவரங்களான இவை ஆயுள் முடியும்போது ஒன்றுசேர்ந்து பூக்களை மலரச் செய்கின்றன.

விதை உற்பத்தி செய்தபிறகு மண்ணுடன் மண்ணாக மறைந்து போகின்றன. குறைந்த நீர்த்தேவை, பராமரிப்பு, பன்மயத்தன்மை, குறைவான முதலீடு போன்றவற்றால் இவை தாய்த்தாவரங்களின் மரம் என்று அழைக்கப்படுகின்றன.

கைவினைப் பொருட்கள், ஆயுதங்கள், மருந்துகள், வீட்டு உபகரணங்கள், இருக்கைகள், வேளாண் கருவிகள், சமூகப் பயன்பாட்டிற்குரிய உபகரணங்கள், வீட்டு கட்டுமானங்கள் போன்றவற்றிற்கு நீடித்த மூலப் பொருளாக மூங்கில் பயன்படுகிறது. மூங்கில் வீடுகள் சூழலுக்கு நட்புடையவை, குறைந்த செலவிலானவை. மூங்கிலின் அரிசி, பூ மொட்டுகள் உணவாகப் பயன்படுகின்றன. இதன் தடி ஒரு எரிபொருள், நீர் சுத்திகரிப்பான்.

பல உயிரினங்களின் உணவாகவும், வாழிடமாகவும் உள்ளன. பெரிய பாண்டா, சிவப்பு பாண்டா, வௌவால்கள், மூங்கில் எலி போன்றவை சில எடுத்துக்காட்டுகள். 2009 முதல் செப்டம்பர் 18 உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது.

காடுகளில் வனவிலங்குகள் சாலைகளைக் கடக்கும்போது விரைந்து செல்லும் வாகனங்களின் மோதி உயிரிழப்பதைத் தடுக்க மூங்கில்கள் கொண்டு அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் பயன்படுகின்றன. இந்த பாலங்கள் கோவை அருகில் உள்ள ஆனைக்கட்டி, கேரளா, உத்ராகண் போன்ற இடங்களில் எண்ணற்ற வன உயிரினங்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

புல்லாங்குழல் தரும் மூங்கில்கள் உள்ளுக்குள் எதையும் மறைத்து வைத்துக் கொள்வதில்லை. உள்ளீடற்ற அப்பகுதி வெறும் சூன்யமே! வெட்ட வெட்ட வளர்ந்து பயன் தருகிறது. உயிருள்ளவரை மற்றவர்களுக்காக வாழ்கிறது. மரணத்திலும் பூ பூத்து மகிழ்ச்சிப் புன்னகையுடன் மறைகிறது. மூங்கில் போல வாழ்வோம். நம் வாழ்வையும் மகத்துவமாக்குவோம். அவற்றில் இருந்தும் சில இராகங்களை மீட்டெடுத்து நமக்குள் இசைப்போம். மனோகர இராகங்கள் அவற்றில் இருந்து உயரட்டும்!

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It