கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
சென்னை மயிலாப்பூருக்கு அருகில் வாழ்பவன் நான். தினசரி அந்தப் பகுதியை குறைந்தபட்சம் இரண்டு முறை கடக்கும் வாய்ப்பு உண்டு. மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்து மதத்தில் பண்டிகைகளுக்குப் பஞ்சமில்லை. அதிலும் ஆத்திகமே கதியென்று கிடக்கிறவர்களுக்கு, சுற்றியிருக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு உணர்வையே இந்தத் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. திருவிழா காலங்களை நம்பியே மட்பாண்டம் செய்யும் குயவர்கள், பொம்மை விற்பவர்கள், சின்னச்சின்ன பொருட்களை விற்கும் எளிய மனிதர்களின் வாழ்வு அடங்கியிருக்கிறது. இதைத் தவிர, இந்தத் திருவிழாக்களில் மிகப் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. இதுவும் எவ்வளவு நாள் நீடித்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. விரைவில் இவற்றுக்கு மரணம் சம்பவிக்கும் என்பது மட்டும் நி்ச்சயம்.காரணம், ஒரு காலத்தில் பண்ருட்டியில் இருந்து மண் பொம்மைகள், சேலத்தில் இருந்து கல்சட்டிகள், ராமநாதபுரத்தில் இருந்து பனையோலை முறங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்படி தொலைவில் இருந்து வருவதெல்லாம் நின்றுவிட்டது. அதைவிட இன்னும் சோகம், இந்தத் திருவிழாவின்போது, பனையோலை முறத்தைப் போன்ற தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் முறத்தை நான் பார்த்தேன்.
மயிலையில் ஆண்டுதோறும் மிகப் பெரிதாக நடக்கும் விழா பிரம்மோத்சவம்-63 நாயன்மார்கள் விழா. திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்து, அதாவது ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்தத் திருவிழா நடைபெறுகிறதாம். 1909ல் 50,000 பங்கேற்றிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மக்கள் பாடலான "பீப்பிள்ஸ் பார்க் வழிநடைச் சிந்து" என்ற புத்தகத்தில் இந்தத் திருவிழா காலத்தில் நடத்தப்படும் "கிளாஸ்காரன் தண்ணீர் பந்தல்" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அப்போதிருந்து திருவிழாவில் தண்ணீர் பந்தல் நடப்பதற்கான ஆதாரமும் இருக்கிறது.
இந்த விழாக்களின்போது போக்குவரத்து மாற்றப்படும். ஏற்கெனவே குறுகலாக உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றங்கள், ஜனநெருக்கடி அதிகரிக்கும் போது என்ன நடக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. பிரம்மோத்சவம் விழாவின் போது, மயிலாப்பூர் பஸ் டெபோ அல்லது மயிலை குளம் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில், குறிப்பாக ஆர்.கே. மடம் சாலையில் உயரஉயரமான பந்தல்கால்களை நட்டு பந்தல் அமைக்கப்படும். அந்தப் பந்தல்கள் யாருக்கு நிழல் தரும் என்று தெரியவில்லை. ஆனால் உற்சவம் வரும் சாமி அந்த இடங்களில் நின்று செல்லும் என்று நினைக்கிறேன். இவை போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் சாலையின் நடுவில்தான் இந்தப் பந்தல்களை அமைப்பார்கள்.
ஏப்ரல் முதல் வாரம் அறுபத்து மூவர் திருவிழா நடந்த நேரத்தில் பகலில் போக்குவரத்து சுற்றிவிடப்பட்டது. அதிக மக்கள் கோயிலை நோக்கி வருவார்கள் என்பதால், அந்தப் பகுதியில் வாகனங்களைத் தடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இரவில் அலுவலகம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கண்ட காட்சி எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
லஸ் கார்னர் துவங்கி, மந்தைவெளி அஞ்சல் நிலையம் வரை, குளத்தைச் சுற்றி நான்கு மாட வீதிகளிலும் ஏதோ பெரிய போரி்ல் அனைவரும் குத்துப்பட்டு சாய்ந்து கிடந்தது போல, எங்கும் நீக்கமற நிறைந்து காணப்பட்டன பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், சில பேப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள். இவற்றோடு பாதி தின்றுவிட்டு பிடிக்காமலும், அவசரத்திலும் கீழே போட்ட உணவுப் பண்டங்கள், சோறு, இனிப்பு எல்லாம் கலந்து மயக்கத்தை வரவழைக்கும் நாற்றத்தை சந்தோஷமாகப் பரப்பிக் கொண்டிருந்தன. எல்லா குப்பையையும் ஜனக்கூட்டம் தன் சக்தியைச் செலவழித்து மிதிந்து போயிருந்தது. அதனால் எல்லாம் நசுங்கி கெட்டுப் போகத் துவங்கியிருந்த நிலையில்தான் அந்த நாற்றம் எழுந்தது. குப்பைக்குள் மாணிக்கம் தேடு்ம் சிலரைப் போல், தளராத மனதுடன் குப்பையள்ளும் தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் அந்த இரவிலும் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தனர். அநேகமாக அடுத்த நாள் காலை வரை அவர்கள் குப்பையை அள்ளியிருக்க வேண்டும். அவ்வளவு குப்பை.
அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்தப் பகுதியை கடந்து சென்றபோதும்கூட, சூட்டில் நிறைய பிளாஸ்டிக் பைகள் தார்ச்சாலையோடு ஒட்டிக் கிடந்தன. நாற்றமும் நீங்கயிருக்கவில்லை.
வருபவர் என்ன சாதி, மதம் என்றெல்லாம் கேட்காமல் அன்னதானம் கொடுப்பது நல்ல பண்புதான். ஆனால் அந்த தானம் உலகை, இயற்கையை சூறையாடுவதாக இருக்கலாமா? பங்குனித் திருவிழாவுக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லக்கூடும். இவர்கள் தாகத்தையும் பசியையும் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் சரிதான். அதேநேரம், இத்தனை பெரிய கூட்டமும் நோய் தொற்றிக் கொள்ளாமல், சுகாதாரமாக இருக்க வேண்டாமா? அடியார்களுக்கு உணவு கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ள விரும்புபவர்கள், அதோடு குப்பையையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமில்லையா? இல்லையென்றால் இந்த ஜென்மத்திலேயே அவர்களுக்கு மட்டுமின்றி யாருக்கு வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம்.
பிளாஸ்டிக் கோப்பைகள் புழக்கத்துக்கு வருதற்கு முன் இப்படிப்பட்ட பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பிளாஸ்டிக்கின் விலைதான் அதன் பரவலான பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. பிளாஸ்டிக் என்பது எந்த வகையிலும் நிலையான ஒரு தீர்வல்ல. வளங்களை சூறையாடுவது. அன்னதானம் வழங்க வேண்டும், அதிகமாகச் செலவும் ஆகக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தொன்னைகளும், பாக்குமட்டை தட்டுகளும் இருக்கின்றன. அதேநேரம், அவற்றை பயன்படுத்திய பின்னரும் முறைப்படி அகற்றுவது அவசியம்.
அன்னதானம் வழங்குகிறவர்கள் குப்பையை முறைப்படி அகற்ற குப்பைப் பெட்டிகள் வைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் வரி வசூலிக்கும் மாநகராட்சி திருவிழா நேரங்களிலாவது இதை ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். அவசரத்துக்கு ஒதுங்குவதற்காக கோயிலின் வாசல் அருகிலேயே மொபைல் டாய்லெட் வைக்கிறார்கள். அது பத்து நாட்களுக்கு அங்கே நின்று நாறிக் கொண்டிருக்கும். ஆனால் கீழே போடும் குப்பையை அகற்ற ஏற்பாடு கிடையாது.
நாம் எந்த வகையான நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள், எந்த நாகரிக நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெள்ளிக்கிழமையானால் கவிச்சி சாப்பிடாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். புரட்டாசி மாசம், ஐப்பசி மாசம் கறி சாப்பிடாதவர்கள் இருக்கிறார்கள். கோயிலுக்கு குளிக்காமல் போகக் கூடாது என்கிறார்கள். செருப்பை கழற்றி வைத்துவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழையலாம் என்கிறார்கள். இப்படி எல்லாவற்றிலும் அறிவிக்கப்படாத ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றுவோர், ஏன் அன்னதானம் வழங்கப்படும்போது, சாப்பிட்டுவிட்டு அதே இடத்திலேயே பிளாஸ்டிக் தட்டையும் கோப்பையையும் போட்டுவிட்டுச் செல்கிறார்கள்? சாமி சார்ந்த நடவடிக்கைகளில் சுத்தத்தை கடைப்பிடிப்பவர்கள், கோயிலுக்கு வெளியிலும் அதை கடைப்பிடிப்பதை எந்த அம்சம் தடுக்கிறது?
தன் வீட்டில் யாராவது குப்பையை இறைத்து வைத்துக் கொள்ள விரும்புவோமா? வெளியில் மட்டும் அதைப் பற்றி கவலைப்படாமல் இறைப்பது ஏன்? தன் வீடு குப்பையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், சாலை, பார்க், பீச், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு குப்பையை போடுகிறோம். ரயில் பயணங்களில் அடுத்தவர் முகத்தில் தண்ணீரும், உணவுப் பருக்கைகளும் தெறி்ப்பது மாதிரி கழுவுவதில், குப்பையை தூக்கியெறிவதில் கைதேர்ந்தவர்கள் நாம். சுற்றுலா தலமானாலும், ரயில் பயணம் என்றாலும் பொது இடத்துக்குப் போகும்போது குப்பையை சரியான இடத்தில் போடுவதுதான் முறை. இந்த எளிய பழக்கத்தை என்றைக்கு நாம் கற்றுக் கொள்கிறோமோ அன்றுதான் நாகரிக சமூகம் என்று அழைத்துக் கொள்கிற தகுதி நமக்கு இருக்கிறது.
- ஆதி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
எரிபொருளுக்காக பெட்ரோலியத்தை நம்பியிருக்கும் காலம் முடிவுக்கு வர இருக்கிறது. இத்துறையில் முதல் தடத்தை பதிக்கப்போகும் நாடு அமெரிக்க ஐக்கியநாடுகள் என்பதை சமீப கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீர்வாழ் உயிரினமான ஆல்காக்களில் இருந்து சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காமலும், அதே சமயம் பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக் கூடியதுமான விலையிலும் புத்தம்புதிய பயோ டீசலைத் தயாரித்துள்ளார்கள் வேதியியலாளர்கள்.அண்மையில் அமெரிக்க வேதியியல் சொசைட்டியின் 237வது தேசீயக் கூட்டத்தில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. ஆல்காக்களில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும்போது இதுவரை உற்பத்தி செலவு மட்டுமே தலையாய பிரச்சினையாக இருந்துவந்தது. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பின்படி உற்பத்திசெலவு 40 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள கடல்கள், ஏரிகள், ஆறுகள் இவற்றிலெல்லாம் ஆல்காக்கள் அபரிமிதமாக கிடைப்பதால் மூலப்பொருள் தட்டுப்பாடு எனும் பேச்சே இருக்காது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உற்பத்தி முறையின்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கழிவுநீர் வெளியாவதில்லை. இந்த புதிய முறைக்கு “solid catalyst continuously flowing fixed-bed” method என்று பெயரிட்டுள்ளார்கள். மேலும் உற்பத்திக்கு குறைந்த இடப்பரப்பே போதுமென்பதால் தொழிற்சாலையின் அளவும் சிறியதாக இருக்கும்.
பயோ டீசல் தயாரிப்பில் தற்போது திரவ வினைஊக்கி பயன்படுத்தப்படுகின்றது. புதிய கண்டுபிடிப்பின்படி திடநிலையிலான வினை ஊக்கி பயன்படுத்தப்படுகிறது. திடநிலையிலான வினை ஊக்கிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தமுடியும் என்பதும், பயோடீசல் தயாரிப்பினை தொடர்ச்சியாக செய்யமுடியும் என்பதும் கூடுதல் சிறப்பு. பழைய முறையில் பயோ டீசல் உற்பத்தி செய்யும்போது திரவ வினைஊக்கிகளை அமிலத்துடன் நடுநிலையாக்கல் வினைசெய்து பிரித்தெடுக்கவேண்டி இருந்தது. இதனால் உற்பத்தியை இடையிடையே நிறுத்த வேண்டி இருந்தது.
புதிய முறை தொடர்ச்சியான உற்பத்தி முறை. ஓர் ஏக்கரில் விளைந்த சோயா பீன்களில் இருந்து தயாரிக்கப்படும் பயோ டீசலைக்காட்டிலும் 300 முதல் 400 மடங்கு அதிகமான உற்பத்தியை புதிய முறையில் ஈட்ட முடியும் என்கிறார் இதுபற்றிய அறிக்கையை அளித்த முதன்மை ஆய்வாளர் டாக்டர் பென் வென்.
- தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
நில நடுக்கோட்டுப் பகுதியில் காணப்படும் மழைக்காடுகளின் மொத்த பரப்பளவு 17.8 மில்லியன் சதுர கிலோமீட்டர். இவற்றில் 4.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் உலர்ந்த காடுகளும் அடக்கம். உலகில் உள்ள மழைக்காடுகளில் 50 சதவீதம் தென் அமெரிக்காவிலும் 30 சதவீதம் ஆப்பிரிக்காவிலும் மீதமுள்ளவை தெற்கு ஆசியா உட்பட பல இடங்களில் பரந்தும் காணப்படுகின்றன. பெட்ரோல் டீசல் போன்ற படிம எரிபொருட்களால் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடில் ஏறத்தாழ ஐந்திலொரு பங்கு இந்த மழைக்காடுகளால் உறிஞ்சி எடுத்துக் கொள்ளப்படுகிறதாம்.நாடுகளுக்கிடையேயான புவிவெப்பம் தொடர்பான குழுவின் அறிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் 32 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவிடப்படுவதாக தெரிவிக்கிறது. இவற்றில் 15 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்திலேயே தங்கி பூமியை வெப்பமடையச் செய்கிறது. மீதமுள்ள 17 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு எங்கே போகிறது என்பதைக் குறித்த ஆய்வுதான் இப்போது நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ பாதியளவு கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் கரைந்து போகிறதாம். 4.8 பில்லியன் டன்கள் அளவிலான கார்பன் டை ஆக்சைடை இந்த மழைக்காடுகள் சாப்பிட்டு விடுகின்றன.
ஆப்பிரிக்காவின் கணக்கில் மட்டும் இந்த அளவு 1.2 பில்லியன் டன்களாகும். ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு ஹெக்டேர் காடும் 0.6 டன் கார்பன் டை ஆக்சைடை சாப்பிட்டுவிடுகிறது. ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளைப் பற்றிய நாற்பது ஆண்டு ஆய்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
ஆப்பிரிக்க காடுகள் மட்டுமின்றி, தென் அமெரிக்க, ஆசிய காடுகளிலும் பரந்து கிடக்கும் 2,50,000 மரங்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதன்மூலம் இயற்கை நமக்கு மிகப்பெரிய மானியத்தை அளிக்கிறது என்கிறார் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் ராயல் சொசைட்டி ஆய்வாளர் டாக்டர் சைமன் லூயிஸ். கோபன் ஹேகனில் இவ்வாண்டு நடைபெற உள்ள புவிவெப்பம் சார்பான பேச்சுவார்த்தைகளில் இந்த ஆய்வுமுடிவுகள் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டலத்தில் உள்ள அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மரங்களுக்கு உரமாக அமைவதால் மரங்களின் அளவு பெருக்கிறது. மரங்கள் தொடர்ந்து பெருத்துக்கொண்டே போவப்போவதில்லை என்பதும் இந்த மழைக்காடுகளை மட்டுமே தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கக்கூடாது என்பதும் தான் ஆய்வாளர்களின் எச்சரிக்கை. ஒவ்வோர் ஆண்டும் துடைத்தெடுக்கப்படும் 5 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடின் கார்பன் மதிப்பு 13 பில்லியன் பவுண்ட்கள் ஆகும். இந்த ஆய்வுகளின் முக்கியத்தை இந்த தொகையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். வளிமண்டலத்தை மாசுபடுத்துவதில் முன்னணியில் உள்ள நாடுகள் வனவளத்தை பாதுகாக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு கொடுக்கவேண்டிய நட்ட ஈட்டுத்தொகையை இந்த ஆய்வுகள் முடிவு செய்கின்றன. மழைக்காடுகளின் மரங்கள் பெருத்துக்கொண்டே போவதால் புவிவெப்ப மண்டல காடுகளின் பல்லுயிர்களுக்கிடையே ஏற்படும் மாற்றங்களையும் ஆராய்ந்து வருகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் காடுகளில் சேமிக்கப்படும் கார்பனின் அளவைக் கண்டறிய லைபீரியாவில் இருந்து தான்சானியா வரையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் 79 அடர்ந்த வனப்பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் இருந்த 70,000 மரங்களின் சுற்றளவுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பதிவு செய்யப்பட்டன. மரங்களின் உயரம், அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டு இந்த 79 வனப்பகுதிகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வளவு கார்பன் சேமிக்கப்பட்டுள்ளது என்பது கணக்கிடப்பட்டது. ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் இருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வளிமண்டலத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 1.2 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு இந்த வனப்பகுதிகளால் உறிஞ்சி எடுக்கப்படுவது கணக்கிடப்பட்டது.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
பூமியிலேயே ஆழமான பகுதியான சாக்கடலில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் மேற்குக்கரை, ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய பகுதிகள் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சந்திக்கவிருக்கின்றன. இதுபற்றிய ஆய்வு ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர் Shahrazad Abu Ghazleh மற்றும் அவரது குழுவினரால் நடத்தப் பெற்று வருகிறது. தற்போது நடந்துவரும் சாக்கடல்-செங்கடல், மத்திய தரைக்கடல்- சாக்கடல் இவற்றிற்கிடையேயான கால்வாய்ப் பணிகள் மூலம் சாக்கடலின் நீர்மட்டத்தை முந்தைய அளவிற்கு உயர்த்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மின் உற்பத்திக்காகவும், உப்புத்தன்மையை அகற்றி நன்னீராக மாற்றவும் இந்த கால்வாய் இணைப்புகள் உதவும். சாக்கடலின் நீர்மட்டம் குறைந்துபோனதற்கு புவி வெப்ப மாறுபாடு காரணமல்ல என்பதும், மனிதர்கள் தங்களுடைய தேவைகளுக்காக அதிக நீரை பயன்படுத்தியதும்தான் காரணம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.ஜோர்டானிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன.
கடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது. நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது என்று இந்தக் குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்போது சாக்கடலை செங்கடலுடனும், மத்தியதரைக்கடலுடனும் இணைக்கும் கால்வாய்கள் வெட்டப்படுவதால் ஆண்டிற்கு 0.9 கன கிமீ அளவிற்கு சாக்கடல் மீட்கபடுமாம். இன்னும் 30 ஆண்டுகளில் சாக்கடல் முன்பிருந்த நிலைக்கு கொண்டுவரப்படும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். சாக்கடலைச்சுற்றி இயங்கும் பொட்டாஷ் தொழிற்சாலைகளும், சுற்றுலா தொழிலும் இன்னும் மேம்பட இந்த ஆய்வுகள் உதவுகின்றன.
முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட சாக்கடல் ஓர் உவர் நீர் ஏரி ஆகும். 330 மீட்டர் ஆழமுடைய சாக்கடல் பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 6 முதல் 8 மடங்கு அதிக உப்புத்தன்மையைக் கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து தற்போது 418 மீட்டர்கள் கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழே இறங்குகிறது. பூமியின் மேல் ஓடுகளின் மீது ஏற்படும் விரிசல்களினால் இந்த நீர் இறக்கம் ஏற்படுவதாக ஒரு கருத்தும் இருக்கிறது.
பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படுதல், மாசுபடாத வளி, வளியழுத்தம் அதிகமாக இருத்தல், புற ஊதாக்கதிர்களின் வீச்சு குறைவாக இருத்தல் ஆகியவை உடல் நலத்தை மேம்படுத்தும் காரணிகளாக இருப்பதால் உடல் மற்றும் அழகு சிகிச்சைகளுக்கு சாக்கடல் பகுதி இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த ஆய்வுகள் ஒரு எச்சரிக்கை மணியாகும். நீர்வளத்தை எச்சரிக்கையுடன் கையாளத் தேவையான திட்டங்களை நமது நாடு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தகவல்: மு.குருமூர்த்தி
- கொள்ளை போகும் தண்ணீர்
- சூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்
- காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகள் - தர்மசங்கடமான உண்மைகள் சமரசங்கள் தீர்வைத் தருமா?
- எலும்புகள்
- இணையத்தை துண்டித்த கேபிள் இணைப்பு
- உடல் பருமனாகிப் போவதற்கு காரணம் என்ன?
- நீரில் இருந்து நிலத்திற்கு.
- வேளாண்மையின் பகைவன்
- டிஜிட்டல் படுதாக்களில் ஜிலுஜிலுக்கும் சீமான்கள்
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?
- தாவரங்களின் இனப்பெருக்கம்
- சுவையறிய உதவும் வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
- பூச்சிகளை விழுங்கும் தாவரம்
- பூமி வெப்பம் அடைவது ஏன்?
- தாவரங்களின் தோள் கொடுக்கும் தோழர்கள்
- 'அப்பன் குதிருக்குள் இல்லை' பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
- டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
- 'விளக்குகளை அணைப்போம்' - கவனம் பெறும் புதிய சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
- கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்