மலைகளின் ஆண்டாக தனியாக ஒரு ஆண்டை அறிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் சபை. மக்களிடமிருந்து எப்படியாவது மலைகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற அவசியத்தின் விளைவாகவே இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. மலைத் தொடர்களும், அவற்றின் அழகும் கம்பீரமும் நாள் கணக்கில் நின்று ரசிக்கத்தக்கவை. நீளமான கடற்கரையைப் போலவே, நீளமான மலைத் தொடர்களையும் கொண்ட சிறப்பு நமது தமிழகத்திற்கு உண்டு.
அழகும் வளமும் நிறைந்த ஏராளமான மலைப் பகுதிகளைப் பெற்றிருந்தாலும் அவற்றை எந்த அளவிற்குத் தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் எனும் கேள்வி இன்று நம் முன்னே எழுந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டு வரை மலைகளையும், நிலப்பரப்புகளையும், கடல்களையும் காப்பாற்றியது ஒரு பெரிய காரியமே அல்ல. அது இயந்திரங்கள் இல்லாத காலம். இன்றைய காலமோ இயந்திரங்களின் காலம். மனிதகுலத்தின் நன்மைக்காகத் தான் இயந்திரங்கள் என்றாலும் அவை இயற்கைக்கு விரோதமாகவே பெரிதும் அரங்கேறி வருகின்றன.
தமிழகத்து மலைப்பகுதிகள் அனைத்தும் மிகவும் அடர்ந்த அல்லது ஓரளவு அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. அடர்ந்து உயர்ந்த மரங்கள் நிறைந்த மலைப் பகுதிகளில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் வாழ்கின்றன. சிறு சிறு மலைக் காடுகளிலும் பல்வேறு வகையான விலங்குகள் வாழ்கின்றன. விலங்குகளுக்குச் சொந்தமானவை காடுகள். ஆனால் பல்வேறு விதங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவற்றின் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. மலைப்பகுதிகளுக்கும் மனிதர்கள் புழங்கும் பகுதிகளுக்கும் இடையிலான மலையடிவாரப்பகுதி, மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதைத் தமிழகத்தின் பெரும்பாலான மலைப்பகுதிகளில் காணமுடிகிறது.
யானைகளின் காட்டிற்கும் மனிதர்களின் வயல்வெளிகளுக்கும் இடைவெளியின்றிப் போய்விட்டதன் விளைவாகவும் மலைப்பகுதிகளின் வறட்சி, தண்ணீர்ப்பற்றாக்குறை போன்றவற்றாலும் காட்டு விலங்குகள் - குறிப்பாக யானைகள் - காட்டைவிட்டு வெளியேறி வயல்வெளிகளைத் துவம்சம் செய்வதும் சில நேரங்களில் மின் கம்பிகளில் சிக்கி மாண்டு போவதும் நடந்து கொண்டிருக்கின்றன. அடர்ந்த காடுகளுக்கான மலையடிவாரப்பகுதிதான் அதிகமாகக் கவனம் செலுத்திப் பாதுகாக்க வேண்டிய, மரங்களையும் திட்டமிட்டு வளர்க்க வேண்டிய பகுதியாகும். ஆயினும், நமது மலையடிவாரங்களில் நடப்படும் மரங்களைவிட மலைப்பகுதிகளில் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை அதிகம். இன்றைய இயந்திர உலகில் ஒரு மரம் இரண்டே நாளில் கதவாகவும், சன்னலாகவும் மாறி விடுகிறது. ஆனால் ஒரு விதையை மரமாக்க இயற்கை எத்தனை ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க நமக்கு நேரம் இருப்பதில்லை.
விளைய வைத்து அறுத்துக் கொள்ளும் அவகாசமும் திட்டமும் இல்லாமற் போய்விட்டதன் காரணமாகவே பலநூறு ஆண்டுகளாக விளைந்திருக்கும் காடுகளின் மீது நாம் கை வைக்க ஆரம்பித்து விட்டோம். மிகப் பெரிய மலைத் தொடர்களை நாம் பெற்றிருப்பது போல் தெரிந்தாலும் நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் போன்றவற்றின் மலைப்பகுதிகளை விட நமது மலைவளப் பகுதி குறைவானதே யாகும். தொலைநோக்குப் பார்வையில், இந்தக் குறைவான மலைப் பகுதிகளை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
குளிர் மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் வசதி மிக்கவர்கள் நிலம் வாங்கிப் போடும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் அப்பகுதிகள் மாளிகைகள் நிறைந்த மண் மேடுகளாகக் காட்சியளிக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. இது ஒருபுறம் இருக்க சுற்றுலாப் பயணிகள் வீசியெறியும் கூளங்களால் - குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் - மேற்குறிப்பிட்ட மலைப்பகுதிகள் மாசடைந்து வருகின்றன. தன்னார்வ அமைப்புகளும் அரசும் எவ்வளவோ முயன்று பணி செய்தும், மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் அதிக அளவு சென்றடைந்து கொண்டிருக்கிறது. கொடைக்கானல் ஏரியைச் சுற்றிலும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களே அதிக அளவில் கரை ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.
காலங்காலமாக மலைக்காடுகளில் வாழ்ந்து வரும் மக்களால் மலைகளுக்கும் அதன் காடுகளுக்கும் எந்த இடையூறும் நேர்ந்ததில்லை. காராளக் கவுண்டர்கள், முடுகர்கள், சோளகர்கள், இருளர்கள், புலையர்கள் போன்ற மலைவாழ்ப் பழங்குடி மக்கள் தமிழகத்தின் பல்வேறு மலைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரத்தின் எந்தச் சுவடும் இன்று வரை அவர்களுக்குத் தெரியாது என்பது கசப்பான உண்மையாகும். கோவை மாவட்டத்தின் அட்டுக்கல் மலைப்பகுதி இருளர்களையும், கல்கொத்தி மலைப்பகுதி முடுகர்களையும், திருமூர்த்தி மலைப்பகுதி புலையர்களையும், தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியின் தொங்கலூத்து, கலசப்பாடி, கருக்கம்பட்டி ஆகிய கிராமங்களின் காராளக் கவுண்டர்களையும் இவர்களைப் போன்ற இன்னும் பல்வேறு மலைவாழ் மக்களையும் பார்க்கிற எவருக்கும் இந்த உண்மை புரியவரும்.
தாம் வாழும் மலைகளே மலைவாழ் மக்களின் உலகமாக இருக்கிறது. பாறைகளும் மரங்களும் ஓடைகளுமாகப் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட மலைமக்கள் அப்பகுதிகளுக்கு, கரட்டியூர் அம்மன் படுகை, கோம்புத்துறை, குமரிப்பாறை, தங்கவலச கருப்புசாமி கோயில், பூதநாச்சித் தேருமலை என்றெல்லாம் பெயர்களைச் சூட்டி தங்களுக்குள் அடையாளம் காட்டிக் குறிப்பிட்டு அங்கெல்லாம் புழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்தந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது, உலகின் தட்பவெப்ப நிலையைப் பாதுகாப்பது, அருகிக் கொண்டே வரும் வன உயிர்களைப் பாதுகாப்பது, வனங்களில் வாழ்ந்தே பழகிப் போன, வனங்களிலேயே வாழ விரும்புகிற மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பது, பல கோடிக்கணக்கான மரங்களைப் பாதுகாப்பது என்கிற கோணத்தில்தான் மலைகளைப் பாதுகாப்பது என்கிற ஐ.நா. சபையின் பிரகடனத்தை ஒவ்வோர் அரசும் ஒவ்வொரு மனிதனும் புரிந்துகொள்ள வேண்டும்.
- ஜெயபாஸ்கரன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- விவரங்கள்
- ஜெயபாஸ்கரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்