Treeடிலாவேர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள அண்மைக்கால ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான உண்மை வெளியாகி உள்ளது. தாவரங்களின் இலைகள் நோய்க்கிருமிகளால் தாக்கப்படும்போது, வேர்ப்பாகத்திற்கு உதவிகோரி ஓர் அவசர செய்தி போகிறதாம். இந்த செய்தியை வேர்கள் ஏற்றுக்கொண்டு மெலிக் என்னும் அமிலத்தை சுரக்கின்றனவாம். வேரிலிருக்கும் நன்மை செய்யக்கூடிய ஒரு பாக்டீரியா இந்த அமிலம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேல்நோக்கி அனுப்பப்படுகிறதாம்.

தாவரங்கள் "குந்தித்தின்பவை" என்னும் கருத்து இதன்மூலம் தகர்க்கப்பட்டிருக்கிறது. மனிதர்களையும் விலங்குகளையும் போல தாவரங்களிலும் தூண்டல் துலங்கல் வினைகள் காணப்படுகின்றன என்பதையும் நாம் நினைப்பதை விட தாவரங்களுக்கு அதிகமான புத்திசாலித்தனம் இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

தாவரங்களின் வேர்கள் மண்ணிற்குள் புதையுண்டு இருப்பதால் அவைகளுக்கு நகரமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இருந்த இடத்தில் இருந்துகொண்டே தாவரங்கள் புற உலகிலிருந்து உதவியைக் கேட்டுப்பெறுவது இயற்கையின் விநோதமில்லையா?

Arabidopsis thaliana என்ற தாவரத்தின் இலைகளை Pseudomonas syringae என்னும் நோய்க்கிருமியால் தாக்கச் செய்தனர். கொஞ்ச நாட்களில் நோயின் தாக்கத்தால் இலைகள் மஞ்சளாகிப் போயின. நோயின் அறிகுறிகளும் தாவரத்தில் தெரிய ஆரம்பித்தன. ஆனால் Bacillus subtilis என்னும் நன்மை செய்யும் நுண்ணியிரியை வேர்ப்பகுதியில் செலுத்தப்பட்ட தாவரங்கள் மட்டும் நோய்க்குறிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்ததை காண முடிந்தது. இது எப்படி?

Bacillus subtilis என்னும் நுண்ணியிரியை நம்முடைய விவசாயிகள் இப்போதும் தாவரங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க பயன்படுத்துகிறார்கள். தாவரங்களின் வேர்களைச் சுற்றிலும் ஒரு படலமாக இந்த நுண்ணியிரி படர்ந்துகொள்கிறது. தாவரங்களின் இலைகள் அவசர உதவி கோரத் தொடங்கியதும் வேர்கள் மெலிக் என்னும் கரிம அமிலத்தை சுரக்கின்றன.

மெலிக் அமிலம் Bacillus subtilis நுண்ணியிரியை இலையை நோக்கி ஒருதிசையாக ஈர்ப்பதை ஒரு நவீன தொழில் நுட்பம் மூலமாக விஞ்ஞானிகள் நிரூபித்தனர். LSM 510 DUO என்னும் லேசர் சாதனம் இதற்காக பயன்படுத்தப்பட்டது. டிலாவேர் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த சாதனம் பல மில்லியன் டாலர்கள் மதிப்பு வாய்ந்தது.

ஒரு தாவரத்தின் ஏறத்தாழ பாதிப்பகுதி மண்ணுக்குள் புதையுண்டு இருப்பதால் வேரினுள் ஏற்படும் மாற்றங்களை படமெடுப்பது ஒரு மிகப்பெரிய சவால் ஆகும். ஆனால் டிலாவேர் பல்கலைக்கழகம் இதற்கான வசதிகளைப் பெற்றிருக்கிறது. ஒளி ஊடுருவும் அறைகளில், ஒளியியல் கருவிகளை இதற்காக இந்த பல்கலைக்கழகத்தில் பயன்படுத்துகிறார்கள்.

தாவரங்கள் உதவி கோரி எழுப்பும் எச்சரிக்கைகளை அறியவும், தாவர நுண்ணியிரிகளின் உதவியால் எவ்வாறு தாவரங்கள் நோய்களை எதிர்கொள்கின்றன என்பதையும் இந்த ஆய்வுகள் நமக்கு வெளிச்சமாக்குகின்றன.

- மு.குருமூர்த்தி

Pin It