கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
"இது மிகவும் விநோதமான ஒரு சூழ்நிலைதான். பெருங்கடலில்தான் முதல் உயிரினம் தோன்றியது. அதிலிருந்து கிளைவிட்ட ஒரு உயிரினமான மனித இனத்தின் செயல்பாடுகள் காரணமாக கடல்கள் இன்று ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. மிகக் கொடுமையான வகையில் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், பெருங்கடல்கள் முற்றிலும் அழிந்து போய்விடாது என்று தோன்றுகிறது. மாறாக, அந்த ஆபத்து ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமானது"
- ரேச்சல் கார்சன், 1951ஆம் ஆண்டு வெளியிட்ட "தி சீ அரௌண்ட் அஸ்" புத்தகத்தில்.
நாம் ஒவ்வொருவரும் கடைக்குச் சென்று எந்தப் பொருளை வாங்கிய பின்னரும் கடைசியில் கடைக்காரர் கொடுக்கும் அல்லது நாமே கேட்டு வாங்கும் பிளாஸ்டிக் பை, ஒவ்வொரு முறை பயணத்துக்குச் செல்லும்போதும் அல்லது நிகழ்ச்சி நடத்தும் போதும் வாங்கும் பிளாஸ்டிக் தண்ணீர் குடுவைகள், பெரிய கடைகளில் வாங்கும் அனைத்துப் பொருள்களையும் சுற்றி வரும் பிளாஸ்டிக் தாள், பெரும்பாலான மளிகை பொருள்கள் அடைக்கப்பட்டு வரும் பிளாஸ்டிக் பை, அன்றாட பயன்பாட்டுப் பொருள்களை பயன்படுத்திய பின்னர் நாம் தூக்கி எறியும் கழிவு பிளாஸ்டிக் பெட்டிகள் (சிறிய கண்டெய்னர்) என்று எங்கும், எப்பொழுதும் நம்மைச் சூழ்ந்து நிறைந்து கிடப்பது பிளாஸ்டிக், பிளாஸ்டிக், பிளாஸ்டிக்தான்.
இப்படி பல வகைகளில் நாம் பெறும் ஞெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை குறைந்த கால பயன்பாட்டிலேயே விட்டெறிந்து விடுகிறோம். இப்படி நாம் ஒவ்வொருவரும் விட்டெறியும் ஞெகிழி என்ன ஆகிறது, எங்கே செல்கிறது, பிறகு என்ன நடக்கிறது என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருப்போமா?
நமது சுற்றுச்சூழலுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. நமது சாதாரண செயல்பாடுகள் அதை எப்படி மோசமாக பாதிக்கின்றன, பின்னர் எப்படி நம்மை திரும்பத் தாக்குகின்றன என்பதை புரிந்து கொள்ளாமல் போவதால், பல பேராபத்துகள் நமக்கு புரியாமலே போகின்றன. அது சார்ந்த அக்கறைகளும் குறைவாக இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் 80களிலும் இந்தியாவில் 90களிலும் ஞெகிழிப் பைகள் பயன்பாடு அதிகரித்தது. இன்று அது எல்லை கடந்து சென்றுவிட்டது. உங்களைச் சுற்றிலும் சற்று கண்ணை ஓட்டுங்கள். புதர்களிலும் மரக்கிளைகளிலும் சிக்கிக் கொண்டும், காற்றடிக்கும் நேரங்களில் குப்பைகளோடு குப்பைகளாகவும், நதிகளிலும் அவை மிதந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஒரு காலத்தில் சென்னையில் செழிப்பான ஆறாக ஓடி வளம் சேர்த்து, இன்று வெறும் சாக்கடையாகக் குறுகிவிட்ட அடையாறை, பாலம் வழியாக ஒவ்வொரு முறை கடக்கும்போதும், சுவாசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதை நான் அனுபவித்து வருகிறேன். எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்கு எதிரேயுள்ள அடையாறு கரையில் பெரும் பிளாஸ்டிக் கழிவு இதற்கு ஒதுங்கியிருப்பதே காரணம். இப்படி ஞெகிழிக் கழிவுகள் சாக்கடைகளையும், நீர் போக்குவரத்தையும் அடைத்துக் கொள்வதால் கொசு, நுண்ணுயிரிகள், பாக்டீரியா போன்றவை அதிகரித்து தொற்றுநோய்கள் பெருகுகின்றன.
ஒரு தனி நபர் எத்தனை ஞெகிழிப் பொருள்களை பயன்படுத்தி விடப் போகிறார் என்று நினைப்பவர்களுக்காக ஒரு தகவல், உலகில் ஒவ்வொரு நிமிடமும் 10 லட்சம் பிளாஸ்டிக் பைகள் கைமாறிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் ஓராண்டில் 10,000 கோடி ஞெகிழிப் பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் ஒரு சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஒருவர் வாரத்துக்கு குறைந்தபட்சம் 6 ஞெகிழிப் பைகள் பயன்படுத்துவதாகக் கொண்டால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 300 ஞெகிழிப் பைகள் ஆகிவிடும். அதுவே அவரது வாழ்நாளில் 25,000 பைகள் ஆகிவிடும். உலகெங்கும் ஓராண்டில் 500,000,000,000 ஞெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அப்படி பயன்படுத்திவிட்டு நாம் அன்றாடம் விட்டெறியும் ஞெகிழி பை உள்ளிட்ட ஞெகிழி கழிவுகள் குப்பை மூலமாகவும், சாக்கடைகள் வழியாகவும் ஆறுகள், நீர்நிலைகளைச் சென்றடைந்து அங்கிருந்து நேரடியாக கடலில் சென்று கலக்கின்றன. உலகம் தோன்றியது முதல் கடல்தான் மிகப் பெரிய உயிர் இயந்திரம். உலகின் முதல் உயிரினம் தோன்றக் காரணமாக இருந்த கடல்தான் உயிர்வளத்தை தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது. இன்றும் கடலில் வாழும் மீன்கள், இதர உயிரினங்களே உலகின் மற்ற உயிரினங்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாக இருக்கின்றன. ஆனால் மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் பல பெரிய வகை மீன்கள் 90 சதவீதம் அழிந்துவிட்டன. 2050ஆம் ஆண்டுக்குள் வணிக மீன்கள் அனைத்தும் குறைந்துபோய்விடும் என்கின்றன கணிப்புகள். இந்த மீன்களின் அழிவுக்கு ஒரு முக்கிய காரணம் ஞெகிழிக் கழிவு. 1960களில் இருந்ததைவிட கடலில் மிதக்கும் ஞெகிழிக் கழிவின் அளவு தற்போது மும்மடங்கு அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. உலகக் கடல்களில் ஒவ்வோர் ஆண்டும் 640 கோடி கிலோ ஞெகிழிக் கழிவு கொட்டப்படுகிறது.
கடலில் மிதந்து கொண்டிருக்கும் ஞெகிழிக் கழிவுகளில் வெறும் 20 சதவீதம் மட்டுமே கப்பல்கள், கடல் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து வெளியேற்றப்பட்டவை. 10 சதவீதம் ஞெகிழி உற்பத்தி நிறுவனங்களில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் பெல்லெட் எனப்படும் ஞெகிழி உருண்டைகள். எஞ்சிய 70 சதவீதம் நிலப்பகுதியில் இருந்து விட்டெறிந்தவைதான். இப்படி உலகெங்கும் வீசிய ஞெகிழிக் கழிவுகள் கலிபோர்னியாவுக்கு மேற்கேயும், ஹவாய் தீவுகளில் இருந்து வடக்கேயும் 1,000 மைல் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் மிகப் பெரிய கழிவுக் குவியலாக சுழன்று கொண்டிருக்கிறது. இதற்கு "பசிபிக் பெருங்கடல் கழிவுக் குவியல்" என்று பெயர். இதன் பரப்பு 1,392,400 சதுர கிலோமீட்டர், அதாவது அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தைப் போல இரண்டு மடங்கு. 30 லட்சம் டன் எடை கொண்ட இது, கடல் மேற்பரப்பில் இருந்து 300 அடி ஆழத்துக்கு நீளமாக உள்ளது.
சார்லஸ் மூர் என்ற நீர் கண்காணிப்பாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 1997ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் இருந்து ஹவாய் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த பெருங்கடல் குழிவுக் குவியலை முதன்முதலில் பார்த்துள்ளார். "பெருங்கடலின் நடுவில் நிற்கும்போது உலகின் அனைத்து வகை ஞெகிழிக் கழிவுகளையும் நான் அங்கு கண்டதை நினைத்து" அவர் விக்கித்துப் போனார். 1994ஆம் ஆண்டு இவர் நிறுவிய அலகாலிதா கடல் ஆராய்ச்சி அறக்கட்டளை, இந்த கழிவுக் குவியல் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக கடல்களிலேயே சுற்றிக் கொண்டிருந்த ஞெகிழிக் கழிவுகள் கடல் நீரோட்டங்களின் காரணமாக உருவெடுத்த இந்தக் குவியல், கடல் கழிவுக் குவியல்களில் மிகப் பெரியது. இதைப் போல மேலும் எட்டு கழிவுக் குவியல்கள் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றன. வந்து இப்படி குவியலாக உருவெடுத்து இருக்கின்றன.
இப்படியாக உலகில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நம்மைச் சுற்றி சுழன்று கொண்டே இருக்கிறது. எந்த ஒரு பயன்படுத்தப்படாத பொருளும், உயிரிழந்த பொருளும், கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து மக்கிப் போய்விடும், வேறொன்றாக மாறிவிடும், அடிப்படை நிலையை அடைந்துவிடும். தாவரங்கள், விலங்குகள், அவற்றை மூலப்பொருள்களாகக் கொண்ட இயற்கையான பொருள்கள் இப்படி மக்கிச் சிதைகின்றன. வேதிப் பொருள்களின் கூட்டால் உருவாக்கப்படும் ஞெகிழி அப்படிச் சிதைவதில்லை.
நிலத்தில் கழிவாகக் கொட்டப்படும் ஞெகிழி துகள்களாகச் சிதற (மக்கிப் போவதற்கு அல்ல) 300 ஆண்டுகள் ஆகும். கடலில் இது விரைவாக நிகழ்ந்து விடுகிறது. கடலில் மிதந்து கொண்டிருக்கும் ஞெகிழிக் கழிவுகளின் மீது தொடர்ந்து சூரியஓளி படும்போது அது சிறுசிறு துகள்களாகச் சிதைகிறது (போட்டோ டீகிரேட்). இவை மீன் முட்டைகளைப் போல தோற்றமளிப்பதால், பல கடல் உயிரினங்கள் தவறாக இவற்றைச் சாப்பிட்டு விடுகின்றன.
"ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான சுற்றளவு கொண்ட ஞெகிழி நுண்ஞெகிழி எனப்படுகிறது. அப்படிப்பட்ட ஞெகிழி துகள்கள் மணல் துகள்களைப் போலவும், பிளாங்கடன் போலவும் தோற்றமளிப்பதால் பல மெல்லுடலிகள் இவற்றை உண்டு இறக்கின்றன" என்கிறார் சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் பிரவுனி. இந்த பிளாஸ்டிக் துகள்கள் மற்ற உயிரினங்களின் திசுவுக்கும் கடத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.
கடலில் மிதக்கும் ஞெகிழிப் பைகள் இழுது மீன் (ஜெல்லி மீன்) போலவும், கணவாய் மீன்கள் போலவும் தோற்றமளிக்கும். கடல் மீன்கள், டால்பின், கடலாமைகள், கடல்பறவைகள் உள்ளிட்டவை ஏதோ ஒரு வகையில் இந்த ஞெகிழியை உட்கொள்கின்றன. அது அவற்றின் தொண்டை, வயிறு, குடல் என முக்கியமான ஜீரண உறுப்புகளில் சிக்கிக் கொள்ள, அவை பரிதாபமாய் செத்து மடிகின்றன. இது எவ்வளவு தூரம் உண்மை என்று கேட்பவர்களுக்கு, 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஃபல்மார்ஸ் என்ற கடல்காக்கை வகை பறவையின் வயிற்றைக் கிழித்து சோதனை செய்து பார்த்ததில் என்ன கிடைத்தது என்று படத்தை பார்க்கவும். அதன் குடலில் 30 வகை ஞெகிழிப் பொருள்கள் இருந்தன. அதேபோல உலகின் மிகப்பெரிய கடல்பறவையும், நீண்டதூரம் பறக்கும் திறன் படைத்ததுமான அல்பட்ராஸ் பறவைகளின் இறப்புக்குக் காரணமாகவும் ஞெகிழி இருக்கிறது.
கடல் ஞெகிழிக் கழிவால் ஓராண்டுக்கு 10 லட்சம் பறவைகள், ஒரு லட்சம் பாலூட்டிகள் - கடல் ஆமைகள் இறந்து போகின்றன என்று ஐ.நா. சபை தெரிவிக்கிறது. இது தவிர பிறந்த சிறிது காலத்தில் "சிக்ஸ் பேக்ஸ் ரிங்க்ஸ்" எனப்படும் பிளாஸ்டிக் ஓட்டைகளில் உயிரினங்கள் சிக்கிக் கொள்வதால், இயல்பாக வளர முடியாமல், வளரும்போதே அவை உடல்கோளாறுகளுடன் வளர ஆரம்பிக்கின்றன. ஏற்கெனவே அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை காரணமாக அவதிப்பட்டு வரும் உயிரினங்கள், மேற்கண்ட காரணங்களால் இனப்பெருக்கம் குறைந்து, அவற்றின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்து வருகிறது. வணிக முக்கியத்துவம் வாய்ந்த மீன்கள் அழிவுக்கும் இங்கே குறிப்பிடப்பட்ட அம்சங்களே காரணம்.
மீன்கள், கடல் உயிரினங்கள் அழிவதால், அல்லது பாதிக்கப்படுவதால் நமக்கு என்ன கேடு என்று நினைக்கலாம். சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சி ஒன்று கடல் உணவு சுழற்சியின் முக்கிய கண்ணியான பிளாங்க்டன் என்ற நுண்ணிய உயிரினத்தின் உடலிலும் நுணுக்கமான பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதை உறுதி செய்கிறது. இறால் போன்ற கடல் உயிரினமான கிரில், சூபிளாங்டன் மூலமாக கடல் உணவு சுழற்சியில் உட்புகும் ஞெகிழிக் கழிவுகள் நமது உணவு மேசைக்கும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. "தன் வினை தன்னைச் சுடும்" என்பது போல, அந்தக் கழிவுகளை உருவாக்கிய நம்மிடமே மீண்டும் அவை வந்தடைந்து விடுகின்றன.
பல்வேறு கடல் உயிரினங்களின் அடிப்படை உணவு பிளாங்க்டன் என்று நுணுக்கமான உயிரிகள். பைட்டோபிளாங்கடன் போன்ற கடல் நுண்ணுயிர்களில் ஞெகிழி கழிவுத் துகள்களின் அளவு 2.85 ( கன அளவில் 100 கோடியில் ஒரு பங்கு). சூபிளாங்கடன் இதை உண்ணும்போது, அதன் உடல் 1.56 பி.பி.பி ஞெகிழி கழிவை கிரகித்துக் கொள்கிறது. ஆனால் மீன்கள் பல சூபிளாங்க்டன்களை உண்பதால், அவற்றின் உடலில் ஞெகிழிக் கழிவு 6 - 45 பி.பி.பியாக அதிகரிக்கிறது. இந்த மீன்களை உண்ணும் கடல்பறவைகளின் முட்டையில் 3200-3560 பி.பி.பி ஞெகிழிக் கழிவும், ஓங்கில்கள் எனப்படும் டால்பின்களின் உடலில் 11400-17300 பி.பி.பி ஞெகிழிக் கழிவும் இருக்கின்றன. ஞெகிழிக் கழிவின் அளவு இப்படி ஒவ்வொரு உயிரினத்தின் உடலிலும் படிப்படியாக அதிகரிப்பதை உயிர் உருப்பெருக்கம் (பயோ மேக்னிஃபிகேஷன்) என்பார்கள். இப்படி ஞெகிழிக் கழிவை உட்கொண்ட பல கடல் உயிரினங்களை நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் விட்டெறிந்த விஷம் சுற்றிச் சுழன்று மீண்டும் நம்மையே வந்தடைந்து விடுகிறது.
"மேலும் கடலில் மிதக்கும் ஞெகிழிக் கழிவு டி.டி.டி, பி.சி.பி (பாலி குளோரினேடட் பைபினைல்) போன்ற வேதி விஷங்களை கிரகித்துக் கொள்வதால் பெரும் ஆபத்து நேரிடுகிறது. இப்படியாக ஞெகிழிக் கழிவுகள் வேதிப் பொருள்களை கிரகித்துக் கொள்பவையாகவும், நிரந்தர வேதி மாசுபாடுகளாகவும் மாறுகின்றன. இவை புற்றுநோயை உருவாக்கும் தன்மை படைத்தவை" என்கிறார், இதைக் கண்டறிந்த டோக்கியோ பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் புவிவேதியியலாளர் ஹைட்சிகே தகாடா.
ஞெகிழிக் கழிவுகள் உயிரினங்களின் ஹார்மோன் சுரப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகளுக்கான பால்புட்டி, தண்ணீர் குடுவைகள், மருத்துவ கருவிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கில் "பிஸ்பீனால் ஏ" என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. ஞெகிழியை மிருதுவாக்குவதற்காக இது கலக்கப்படுகிறது. ஆனால் இது எண்டோகிரைன் என்ற ஹார்மோனை தொந்தரவு செய்யும் தன்மை கொண்டது. இந்த "பிஸ்பீனால் ஏ" ஹார்மோன்களின் செயல்பாடுகளை பிரதி செய்யும் தன்மை படைத்தது. விலங்குகளின் இனப்பெருக்கத்தை பாதிக்கும் இந்த வேதிப்பொருள், மனிதர்களின் உடல்பெருக்கக் காரணமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தனைக்குப் பிறகும் ஞெகிழி ஆபத்தானது என்பதை நிரூபிக்க புதிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. நல்ல ஞெகிழி என்ற ஒன்று கிடையவே கிடையாது.
ஞெகிழிக் கழிவை உருவாக்குவதில் நாம் பெரும் பங்காற்றுகிறோம். எனவே, இந்த சுற்றுச்சூழல் சீரழிவை நம்மால் தடுக்கவும் குறைக்கவும் முடியும். தீர்வு நம் கைகளில்தான் இருக்கிறது. ஞெகிழிக் கழிவை தூக்கி எறிவதற்கு முன் "அது எப்படி உருவாகிறது, என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது" என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பதில்தான், அந்தக் கழிவை தடுப்பதற்கான தீர்வு அடங்கி இருக்கிறது. சிந்திப்போம், பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும்.
(பூவுலகு மார்ச் 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒரு புதிய மடிக்கணினி வாங்கிவிட்டோம். பழைய மேசைக்கணினியை என்ன செய்யலாம்? பிளாஸ்டிக், அலுமினியக் குப்பிகளைப்போல மறுசுழற்சிக்கு தள்ளிவிடலாமா? வீசியெறியப்பட்ட மின்னணு சாதனங்களில் இருக்கும் பிளாஸ்டிக் பாகங்களையும, உலோக பாகங்களையும் ஏன் உருக்கி எடுத்து மீண்டும் பயன்படுத்தக்கூடாது? எலக்ட்ரானிக் சாதனங்களில் மறுசுழற்சி என்பது நாம் நினைப்பதுபோன்று அவ்வளவு எளிதாக இல்லை. வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்ட கணினி போன்ற மின்சாதனங்கள் பெரும்பாலும் இந்தோனேசியா, சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கே தள்ளிவிடப்படுகின்றன. இங்கெல்லாம் ஆட்கூலி குறைவு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கெடுபிடிகள் இல்லை. மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணு சாதனங்களுக்கு அதிக தேவை இருப்பதும் இந்த நாடுகளில்தான். இதன்காரணமாக மறுசுழற்சி தொழிலில் கிடைக்கும் இலாபமும் அதிகமாக இருக்கிறது.
மறுசுழற்சி தொழிலில் நன்மை தீமை இரண்டுமே இருக்கின்றன. ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெறுவதும், கட்டுபடியான விலையில் மின்னணு சாதனங்களை வாங்கமுடிவதும் நன்மைகள். அதே சமயம் தொழிலாளர்களின் உடல்நலனுக்கு எந்த பாதுகாப்புமின்றி இயங்கும் போலி தொழிற்சாலைகள் இங்கு இயங்குவதையும் கவனிக்கவேண்டும். மின்சுற்று பலகைகளில் உள்ள விலை உயர்ந்த உலோகங்களை அமிலங்களைக் கொண்டு உருக்கிப் பிரிக்கும்போது டையாக்சின், ஈயம் போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் கையாளப்படுகின்றன. செப்புக்கம்பிகளை பிரித்தெடுப்பதற்காக பிளாஸ்டிக் மேலுறை தீயிட்டு எரிக்கப்படும்போது வெளிப்படும் டாக்சின்கள் புற்றுநோயை ஏற்படுத்த வல்லவை.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஈயம், பாதரசம் போன்ற பொருட்களை உருக்கிப் பிரிக்கும் நடைமுறை இந்த நாடுகளில் இல்லை. மாறாக, மின்னணுக்கழிவுகள் பூமிக்குள் இட்டு புதைக்கப்படுகின்றன. விளைவு நிலத்தடிநீர் மாசுபடுகிறது. மின்னணுக் கழிவுகளினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்க அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சிறந்த வழி. ஒரு மடிக்கணினி வாங்கியவர் தன்னுடைய மேசைக்கணினியை தேவைப்படுவோருக்கு கொடுக்கலாம். இதன்மூலம் ஒரு புதிய கணினி உற்பத்தியாவதை ஒத்திப்போடலாம். ஒரு கணினியைத் தயாரிக்க அதன் எடையைக் காட்டிலும் 12 மடங்கு எடையுள்ள படிம எரிபொருள் தேவைப்படுகிறது. பள்ளிகளுக்கும், தேவைப்படுவோருக்கும் இவற்றைப் பெற்றுவழங்கும் தன்னார்வ நிறுவனங்களும் இயங்குவது ஆறுதலான செய்தி.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://news.discovery.com/tech/dont-recycle-your-computer.html
- விவரங்கள்
- பூவுலகின் நண்பர்கள்
- பிரிவு: சுற்றுச்சூழல்
புவி வெப்பமடைந்து வருவதைத் தடுக்க டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கூட்டப்பட்ட சர்வதேச மாநாட்டில் எந்த உறுதியான முடிவும் எட்டப்படாமல் அரைகுறையாக முடிந்துள்ளது. கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தாத நிலையில் பூமியின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயரும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். அதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பயங்கரமான விளைவுகள் எப்படியிருக்கும். சில எடுத்துக்காட்டுகள்:
- இந்தியா முழுவதும் 1 செ.மீ. கடல்மட்டம் சராசரியாக உயர்ந்து வருகிறது. கடல்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் இந்திய கடற்கரைப் பகுதியில் 1,700 சதுர கி.மீ. மூழ்கிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-மேற்குவங்கம் சுந்தரவனக் காடு பகுதியில் கடல்மட்ட உயர்வால் ஒரு தீவு முற்றிலும் மூழ்கிவிட்டது. 6000 குடும்பங்கள் வாழ்விழந்துள்ளன, 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கடல்மட்டம் உயரும் நகரங்கள் பட்டியலில் சென்னை, நாகப்பட்டினம் உள்ளன.
- இந்திய விவசாயம் 65 சதவீத பாதிப்பை சந்திக்கலாம். ஏற்கனவே இந்த ஆண்டு பருவமழை பொய்த்தது.
ஒவ்வொரு 0.5 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வுக்கும் 17 முதல் 30 சதவீத அரிசி, கோதுமை விளைச்சல் பாதிக்கப்படும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால், 40-50 லட்சம் டன் கோதுமை விளைச்சல் குறையும்.
- 50 சதவீத இந்தியக் காடுகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நமது பருவநிலை, காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
- 2035 ஆம் ஆண்டுக்குள் வடக்கில் ஓடும் ஜீவநதிகளின் தாயான இமயமலை பனிச்சிகரங்கள் முற்றிலும் மறைந்துவிட வாய்ப்புள்ளது.
- இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 27 சதவீதம் பாதிக்கப்படலாம்.
- கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும்.
- இதுவரை 1998ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு. உலகின் மிக வெப்பமான 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள், 1980க்குப் பிறகே வந்துள்ளன. 2009 மிக வெப்பமான ஐந்தாவது ஆண்டு.
- 20ஆம் நூற்றாண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.6 டிகிரி அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 2050க்குள் குளிர்கால சராசரி வெப்பநிலை 3.2 டிகிரி வரை, கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 2.2 டிகிரி வரை உயர்ந்துவிடும்.
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
- விவரங்கள்
- பாரதி பழனிச்சாமி
- பிரிவு: சுற்றுச்சூழல்
பணப்பயிரான புகையிலையை பயிரிடுவதால் 1 கோடி முதல் 2 கோடி மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர் பயிரிடும் நிலம் அபகரிக்கப்படுகிறது. இந்த உலகில் பணம்தான் எல்லாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் 40 வயதைக் கடந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடல்நலம்தான் நமது மிகப் பெரிய செல்வம் என்பார்கள். அது பாதிக்கப்பட்டால் நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்பதை அறிவோம். ஆனால் அதைவிட முக்கியமாக வளமான சுற்றுச்சூழலை இழந்துவிட்டால், நமது வாழ்வின் அடிப்படையை இழந்துவிடுவோம். மாசுபட்ட சுற்றுச்சூழல் நம் உடலையும் பாதிக்கும் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
உலகம் அதிவேகமாக மாறி வரும் சூழ்நிலையில் தொழில்மயமாதல், நகரமயமாதல், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, மக்கள்தொகை பெருக்கம் போன்ற ஒவ்வொரு காரணமும் தன் பங்குக்கு சுற்றுச்சூழலை சீரழித்து வருகின்றன. காடுகள் அழிக்கப்படுவதை அனைவரும் அறிவோம். இது ஒரு முக்கிய சூழல் பேரழிவு. அதேநேரம் இந்தக் காடுகளை அழித்த பின் நடக்கும் மாற்றமும் சுற்றுச்சூழலை இரண்டு மடங்கு பாதிக்கலாம். இப்படிப்பட்ட ஒன்றுதான் புகையிலை பயிரிடுதல். அந்தப் புகையிலையில் இருந்து உருவாக்கப்படும் பொருட்கள் மூலம் வெளிவரும் நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்து மூன்று மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, காடு அழிப்பு என்ற சுற்றுச்சூழல் சீரழிவு அத்துடன் முடிந்து போய்விடுவதில்லை.
1960களில் போதை ஏற்படுத்தும் புகையிலையை மக்களிடையே பழக்கப்படுத்துவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள்-உலக முதலாளிகள் மேற்கொண்ட தந்திரங்கள் முக்கியமானவை. உலக மக்கள்தொகையை ஒரு பொருளுக்கு அடிமையாக்குவதன் மூலம், எப்படி தங்கள் வருமானத்தை தொடர்ச்சியாகப் பெருக்குவது என்ற தந்திரத்தை அவர்கள் அப்போது கற்றுக் கொண்டார்கள். புகையிலை பரவலாகி பழக்கமாகும் வரை, புகையிலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பொய் என்பது போன்ற ஒரு தோற்றத்தை, தங்களுக்குச் சார்பான விஞ்ஞானிகள் குழு மூலம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து உருவாக்கினர். இந்தியாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள ஐ.டி.சி. என்ற இந்தியன் டுபாகோ கம்பெனி அடிப்படையில் ஒரு புகையிலை நிறுவனமே.
உலக புகையிலை உற்பத்தியில் சீனா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. புகையிலையை பயன்படுத்துவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் புகையிலை பயிரிடுவதற்காக இரண்டு லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதில் இந்தியாவில் 42 ஆயிரம் எக்டேர் பரப்பில் புகையிலை பயிரிடப்படுகிறது. புகையிலை பயிரிடுதல், எரிபொருள், புதிய வகை பயிர்கள் பயிரிடுதல், "பேக்" செய்வது ஆகிய காரணங்களுக்காக புகையிலை சார்ந்த காடழிப்பு நடைபெறுகிறது. இதற்காக பெரும்பாலான வளரும் நாடுகளில் காடுகள் அழிக்கப்படுவதால், உலக அளவில் 1.7 சதவீத காடுகளின் பரப்பு இதற்கு மட்டுமே அழிந்து வருகிறது. மொத்த காடுகளின் பரப்பளவில் 4.6 சதவீதம் புகையிலை பயிரிடப்படும் நாடுகளில் மட்டும் அழிக்கப்படுகிறது.
சிகரெட், பீடி, மெல்லும் புகையிலை போன்றவற்றை தயாரிப்பதற்கு புகையிலை பயன்படுத்தப்படுகிறது. உலக பீடி உற்பத்தில் 85 சதவீதம், அதாவது 19 கோடி கிலோ பீடி இந்தியாவில் உற்பத்தியாகிறது. உலக புகையிலை பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33 சதவீதம் (ஏழை பீடி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம், குழந்தை உழைப்பு போன்ற வேறு சமூகப் பிரச்சினைகளும் இதில் அடங்கியுள்ளன).
புகையிலை பண்ணைகளில் 20 ஆயிரம் குழந்தைகளும், பீடி-சிகரெட் பாக்கெட் தயாரிப்பு பணியில் 27 ஆயிரம் குழந்தைகளும் ஈடுபட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலகப் பேரணி தெரிவிக்கிறது.
தமிழகத்தில் மெல்லும் வகை புகையிலை தென்மாவட்டங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. தவிர, தஞ்சாவூரிலும் கடற்பாங்கான மண் உள்ள பகுதிகளிலும் இவை பயிரிடப்படுகின்றன. மதுரையின் சில இடங்களில் குறைவான எரியும் தன்மை கொண்ட சுருட்டு தயாரிக்கப் பயன்படும் புகையிலை பயிரிடப்படுகிறது.
காட்டு வளம் பாதிப்பு:
ஒரு டன் புகையிலையை பதப்படுத்துவதற்கு ஒரு எக்டேர் மரங்கள் தேவைப்படுகின்றன. ஒரு கிலோ புகையிலையை பதப்படுத்துவதற்கு 7.8 கிலோ மரக்கட்டை எரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி ஒரு ஏக்கர் புகையிலை பயிரிடுவது 150 மரங்களை அழிப்பதற்குச் சமமாகும். 600 கிலோ புகையிலையை பதப்படுத்த உதவும் எரிபொருளைக் கொண்டு 20 வீடுகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யலாம்.
போபாலில் உள்ள இந்திய காட்டு மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 1962 முதல் 2002 வரையிலான 40 ஆண்டு காலத்தில் புகையிலை பதப்படுத்துதல், சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் தயாரிப்புக்காக 680 சதுர கிலோ மீட்டர் காடுகள் அல்லது 86.8 கோடி டன் மரக்கட்டைகள் அல்லது 22 கோடி டன் கட்டுமானத் தரம் வாய்ந்த மரக்கட்டைகள் அல்லது 66.8 கோடி டன் எரிபொருள் சுரண்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அழிக்கப்பட்ட எரிபொருளின் அளவைக் கணக்கிட்டால் அதைக் கொண்டு அனல் மின்நிலையம் ஒன்றை இயக்கி, தலைநகர் தில்லி, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ஓர் ஆண்டுக்குத் தேவையான மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்திருக்கலாம். இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்தியாவில் மட்டும் சிகரெட்டை சுருட்டவும் பேக் செய்யவும் 4 மைல் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. 300 சிகரெட்டுகள் தயாரிக்க ஒரு மரம் வெட்டப்படுகிறது.
புகையிலையை பதப்படுத்த எரிபொருள் பற்றாக்குறை நிலவும் இடங்களில் புகையிலை பயிரின் தண்டுகளையே பயன்படுத்துவதால், அது தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. ஆந்திராவில் கோதாவரி பாசனப் பகுதியில் உள்ள வடிசலேறு கிராமத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இங்கு வாழ்பவர்கள் காசநோய், கண்புரை போன்ற நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புகையிலை பயிரிடப்படாத ஒரு கிராமத்துடன் ஒப்பிட்டால் இது பல மடங்கு அதிகம்.
மண்ணரிப்பு:
புகையிலை பொதுவாக வறண்ட, ஓரளவு வறண்ட நிலங்களில் பயிரிடப்படுகிறது. தனியாகப் பயிரிடப்படுவதால் புகையிலை பயிர் உயரமாக வளர்கிறது. இது மண்ணரிப்புக்குக் காரணமாக இருக்கும் காற்று, மழை இவற்றிலிருந்து வளமான மேல்மண்ணை பிடித்து வைத்துக் கொள்ளும் திறனற்றது. மற்ற பயிர்களோடு ஒப்பிட்டால், மண்ணின் ஊட்டச்சத்துகளை புகையிலை பயிர் பாதிக்கிறது. மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்துகளை இப்பயிர் அதிக அளவில் உறிஞ்சுகிறது. பொட்டாசியத்தை 6 மடங்கு அதிகமாக உறிஞ்சுகிறது. இதனால் அடிக்கடி உரம் இடுவது அவசியமாகிறது. இதனாலும் சுற்றுச்சூழல் சீரழிகிறது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் வறண்ட நிலத்தில் பயிரிடப்படும் பயிர்களால் ஏற்படும் மண்ணரிப்பின் அளவைக் கணக்கிட்டது. புகையிலை பயிரால் ஒரு ஏக்கருக்கு 45 கிலோ மேல்மண் அரிக்கப்படுகிறது. இதனால் ஊட்டச்சத்து, மண்ணின் நீர்தேக்கும் திறன், நீர் உறிஞ்சும் திறன் போன்றவை குறைவதுடன், மண்ணரிப்பும் அதிகரிக்கிறது.
பல்லுயிரியம் பாதிக்கப்படுதல்:
ஒரு பகுதியில் புகையிலையை மட்டுமே பயிரிடுவதால் அப்பகுதியின் பல்லுயிரியம் பாதிக்கப்படுகிறது. அந்தந்த பகுதிக்கே உரிய தாவர, உயிரினங்கள் கொண்ட தனித்தன்மை வாய்ந்த சூழலில் இது மாற்றத்தை ஏற்படுத்தி தொந்தரவு செய்கிறது. இயற்கை சமநிலையைக் குலைத்து, உணவுச் சங்கிலியையும் பாதிக்கிறது.
ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், புகையிலை பயிரிடப்படாத இடங்களோடு ஒப்பிடுகையில், பன்னிரெண்டு பூஞ்சை வைரஸ் நோய்கள், 29 பூச்சிகள் தாக்குதல் போன்றவை புகையிலை பயிரிடப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. இது மற்ற உணவுப் பயிர்களிலும் நோய்களை உண்டாக்குவதற்குக் காரணமாக இருக்கிறது.
பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள்:
புகையிலை பயிர் எளிதில் பல நோய்களுக்கு ஆளாகக் கூடியது. அதனால் பயிரிடப்பட்ட முதல் மூன்று மாதங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மண் வகையைப் பொருத்து ஓர் ஏக்கருக்கு 80 முதல் 200 கிலோ வரை வேதி உரங்கள் புகையிலை பயிரில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உரங்கள் நிலத்தடி நீர், நில மேற்பரப்பு நீரில் கலந்து குடிக்கும் நீரை நச்சுத்தன்மை கொண்டதாக்கும்.
இப்பயிரில் அடிக்க பயன்படுத்தப்படும் டி.டி.டி, பூச்சிக்கொல்லி மருந்துகள் மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும் காரணிகளுக்கு ஊக்கமளிக்கின்றன. மேலும் இந்த வேதிப் பொருட்களால் குழந்தைகள், பெண்களை தோல் அரிப்பு, சுவாசக் கோளாறுகள், ஒவ்வாமை, பசியின்மை, தலைவலி போன்ற நோய்கள் தாக்கலாம்.
புகையிலை சுற்றுச்சூழல் பாதிப்புகள்
புகையிலை பொருட்களில் அடங்கியுள்ள 4,000 வகை நச்சுப்பொருட்கள் அதை பயன்படுத்துவோரை மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும், ஒட்டுமொத்த சமூகத்தையும் மறைமுகமாக பாதிக்கின்றன. அதிலுள்ள முக்கிய வேதிப் பொருளான நிக்கோடின், உலக அளவில் புகையிலை தொழிற்சாலைகளில் இருந்து ஓர் ஆண்டுக்கு 30 கோடி கிலோ கழிவாக வெளியிடப்படுகிறது. இது மனிதனை அடிமைப்படுத்தக் கூடிய போதைப்பொருள்.
புகையிலுள்ள மீதைல் புரோமைடு, மணமற்ற நச்சுத்தன்மை கொண்ட வாயு, பயிர்களில் பூச்சிகளை அழிக்க சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. இதை சுவாசித்தால் நரம்பு பிரச்சினைகள், மகப்பேறின்மை பாதிப்பு ஏற்படும். இப்படியாக புகையிலையில் உள்ள ஒவ்வொரு நச்சுப்பொருளும் சமூகத்தை மட்டுமின்றி நாம் ஆரோக்கியமாக உயிர்வாழத் தேவையான சுற்றுச்சூழல் சமநிலையை குலைத்து, உலகை மறைமுகமாக அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்றன. இந்த பகாசுரன் நமக்குத் தேவைதானா?
- பாரதி பழனிச்சாமி (புகையிலை தடுப்பு மையத்தில் பணிபுரியும் மானிடவியல் ஆய்வாளர்)
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
- கைகாவில் கதிரியக்க கசிவு-அணுசக்தியின் ஆபத்து நிரூபணம்
- மழைக்காடுகளின் மரணம் - அழிவின் வாசலைப் பற்றி ஒரு நேரடி சாட்சியம்
- தமிழகம்-கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு பசுமைப் புரட்சியின் வன்முறைதான் காரணம்
- அவசரக் கத்தரியும் அறிவியல் அநீதியும்
- வற்றிப் போகும் காவிரி
- கடலின் மீது ஒரு சுமை
- கார்பன் டை ஆக்சைடை கைப்பற்ற....
- பச்சை நிழல்
- நியூட்ரினோ ஆய்வகம் - வரமா? சாபமா?
- பட்டாசு வெடிக்கலாமா?
- சமையல் அறையிலும் சூழலை காக்கலாம்
- அணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்
- அவசரக் கத்திரி - அறிவியல் அநீதி
- அழிவின் விளிம்பில் பவளப் பாறைகள்
- BPA என்னும் நஞ்சு
- பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
- உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!
- ஆல்கா பெட்ரோல்
- வளிமண்டலத்தை தூய்மைப்படுத்தும் மழைக் காடுகள்
- சாகிறதா சாக்கடல்?