கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பூவுலகின் நண்பர்கள்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சமீபத்தில் ஸ்வீடனில் இருந்து வந்திருந்த இரண்டு சூழல் இதழாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "எங்கள் நாட்டில் எல்லாமே பொதுமக்களின் தணிக்கைக்கு உட்பட்டவை. மக்கள் வரிப்பணம் சம்பந்தப்பட்ட எதையும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மறைத்துச் செய்துவிட முடியாது" என்றார்கள். 100 சதவீத ஆபத்து கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையமும், சூழலை பாதிக்காத காற்றாலைகளும் அருகருகே இருந்த முரணைப் பார்த்து அவர்களுக்குச் சிரிப்பு வந்தது. அவர்களது சிரிப்பில் பரிகாசமில்லை, வேதனையே மிகுந்திருந்தது.
இந்தியாவில் அணுமின் நிலையங்கள், அவை உருவாக்கும் கதிரியக்கக் கழிவு, விபத்துகள், மக்களிடையே கதிரியக்கம் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து அச்சமும் எதிர்ப்பும் தெரிவித்து வந்துள்ளனர்.
ஆனால் இதை புறங்கையால் தள்ளிவிட்டுவிட்டு மத்திய அரசு தன் வேலையை செவ்வனே செய்து வருகிறது. ஆனால் அணுமின் நிலையங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. நமது அணுமின்சாரம் எவ்வளவு பாதுகாப்பானது, அதன் உண்மையான லட்சணம் என்ன என்பதும் தெளிவாகியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கைகா அணுமின் நிலைய ஊழியர்களின் உடலில் நவம்பர் 24ந் தேதி கதிரியக்கம் அதிகரித்தது. கதிரியக்கத்தை வெளியிடக் கூடிய ஹைட்ரஜனின் ஐசோடோப்பான டிரைடியம், 50 ஊழியர்களை பாதித்திருந்தது. கதிரியக்கக் கசிவு நிகழ்ந்தால்தான் இத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சுற்றுச்சூழலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஊழியர்கள் தண்ணீர் குடிக்கும் வாட்டர் கூலரில் கதிரியக்கத் தன்மை கொண்ட கனநீர் கலக்கப்பட்டுவிட்டதுதான் காரணம் என்கிறது அணுசக்தித் துறை. "அதிருப்தி அடைந்த ஒரு ஊழியரின் விஷமச் செயல்" என்று இந்த பயங்கரத்தை எளிதாகக் குறுக்கிவிடவும் திசைதிருப்பவும் அணுசக்தித் துறையும் மத்திய அரசும் முயற்சிக்கின்றன.
பாதிக்கப்பட்ட அனைவரும் ஒப்பந்த ஊழியர்கள். நமது அணுமின் நிலையங்களில் கழிவை அகற்றுதல், பராமரிப்புப் பணிகளில் ஒப்பந்த ஊழியர்களே இன்னமும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரைசாண் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்த வேலையில் ஈடுபட அவர்கள் தயங்குவதில்லை. அவர்களுக்கு எந்த வகையான பாதுகாப்பும் கிடையாது. இறந்தால் உரிய நஷ்டஈடும் கிடைக்காது.
மகாராஷ்டிராவில் உள்ள தாராபூர் மின்நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இதேபோன்ற கதிரியக்கக் கசிவிலும், ஒரு ஊழியர் பலிகடா ஆக்கப்பட்டார். 15 ஆண்டுகளுக்கு முன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள் நிரம்பிய சிறிய குப்பியை, அங்கு வேலைபார்த்த ஊழியர்கள் கூவத்தில் எறிந்துவிட்டனர். அதைத் தேட கூவத்தையே சல்லடை போட்டுத் தேடியது அரசு.
நமது அணுமின் நிலையங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதில் உள்ள உண்மையைவிட, உள்ளே இருக்கும் பொருட்கள் எவ்வளவு ஆபத்தானவை, அதை கையாளுவதில் காட்டப்படும் அலட்சியத்தை இந்தச் சம்பவம் தெளிவாகவே உணர்த்தும். ஐரோப்பிய நாடுகளுக்கு மாறாக நமது அணுமின் நிலையங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் திட்டமிட்டு மறைக்கப்பட்டே வருகின்றன. நமது வரிப்பணத்தில் அமைக்கப்படும் இந்த அணுஉலைகளில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நமக்கு உரிமை மறுக்கப்படுகிறது. பெரும்பாலான அணுஉலைகளில் கிடைக்கும் செறிவூட்டப்பட்ட அணுசக்தி மூலப்பொருள், அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவலில் உண்மையில்லை என்று கூறிவிட முடியாது.
அணுசக்தியைவிட விலை குறைவான, பாதுகாப்பான, வளங்குன்றாத மின் உற்பத்தி முறைகளுக்கு மாறாத வரை, இப்படி கொள்ளிக்கட்டையை வைத்து தலையைச் சொறிந்து கொள்ளும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். கல்பாக்கம், கூடங்குளம் என்று நாட்டிலேயே இரண்டு அணுமின் நிலையங்களை பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான். இவை நமக்குப் பெருமையா?
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
- விவரங்கள்
- நக்கீரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும்போது அது எப்பாடுப்பட்டாவது தன்னை சீரமைத்துக் கொள்ளும். மனிதனால் அதற்கு ஆபத்து உண்டாகுமானால், அது அவனை திருப்பித் தாக்கும். அப்போது இளமஞ்சள் நிறமுள்ள ஒரு டஃபோடில் மலரைவிட ஒரு மைக்கேல் ஏஞ்சலோவோ, ஒரு ஷேக்ஸ்பியரோ, ஒரு மொஸார்ட்டோ இயற்கைக்கு முக்கியமல்ல. ஏனெனில் இயற்கை அன்னைக்கு செல்லக் குழந்தைகள் என்று எவருமில்லை.
- ‘Vanishing Species’ புத்தகத்தின் முன்னுரையில் ரோமன் கிரே
இருவாட்சி பறவைகள் இரண்டும் அலறி பறக்கின்றன. காற்று வெளியெங்கும் அதன் கதறல்கள் கரைந்துக் கொண்டிருக்கின்றன. அந்த மரத்தின் உச்சியிலுள்ள பொந்தில் அதன் கூடும், அதற்குள்ளே அவற்றின் குஞ்சுகளும் இருக்கின்றன. ஆனால் அந்த மரமோ இப்போது வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதோ அது வீழ்கிறது. அது சாயும் திசையில் சிறிதும் பெரிதுமான சுமார் இருபதுக்கு மேல் வெட்டப்பட்ட மரங்கள். அம்மரங்களின் மேல் இது சாய்வதால், எல்லாம் மொத்தமாகச் சேர்ந்து 'சடசட'வென சரிந்து சாய்ந்து வீழ்கின்றன. ஒரு சிறு பூகம்பம் போல் நிலம் அதிர்ந்து ஓய்கிறது. பச்சையத்தின் குருதி வீச்சம் நாசித்துளைகளில் நிறைகிறது.
அந்தக் குஞ்சுகளுக்கு என்ன நேர்ந்திருக்கும்? அலறிக்கொண்டிருந்த அந்த இருவாட்சிகளை எங்கே காணோம்? புள்ளினங்களும் காட்டு விலங்கினங்களும் எங்கே ஒளிந்துக் கொண்டு, இந்த அபாய கூக்குரலை எழுப்புகின்றன? யாரை நோக்கி எழுப்புகின்றன? உனக்கும் நாளை இதே கதிதான் என்று மனிதனை நோக்கி, அவை எச்சரிக்கின்றனவா? மனிதனின் காதில் அது விழுமா? விழாது. விழவில்லை. இதோ மறுபடியும் இயந்திரவாளின் ஓசை கர்ணகடூரமாக கேட்க ஆரம்பித்துவிட்டது. இன்னொரு மரம் மரணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஒரு மரணத்தைவிட அம்மரணத்துக்கு சாட்சியமாக இருப்பது பெருங் கொடுமை. வாழ்நாள் வரைக்கும் அது வதைத்துக் கொண்டே இருக்கும். ஒரு மழைக்காட்டின் மரணத்துக்கு நான்கு வருடங்களுக்கு மேல் நான் சாட்சியாக வாழ்ந்ததன் சுருக்கமான வாக்குமூலமே இக்கட்டுரை.
தஞ்சை மண்டலத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு, அங்கு அறவே இல்லாத மலை, காடுகளின் மீது ஒரு மோகம் இருந்தது இயற்கை. அதனால்தானோ என்னவோ "போர்னியோ காட்டுக்குள் ஒரு பணி இருக்கிறது. சேர்ந்துக் கொள்கிறாயா" என்றொரு அழைப்பு வந்தது. அன்று நான் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தைவிட குறைவான சம்பளம்தான் கிடைக்கும் என்றபோதிலும், காடுகளிள் மீதிருந்த அதீத மோகத்தில் சரியாகக்கூட விசாரிக்காமல் உடனே ஒப்புக்கொண்டு விட்டேன். ஆனால் அங்கு சென்று பணியில் சேர்ந்தபோது ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. எந்தக் காட்டைக் காண ஆவலுற்று நான் அப்பணியில் சேர்ந்தேனோ, அந்நிறுவனத்துக்கு அந்த கன்னிக் காட்டை அழித்து வெட்டு மரங்களை (லிஷீரீs) ஏற்றுமதி செய்வதுதான் தொழில்.
மனம் முரண்பட்ட அந்த சூழ்நிலையிலும் காட்டுக்குள் வசிக்க நேர்ந்தபோது பலவற்றை அனுபவ பூர்வமாக அறிந்துக் கொள்ளும் ஒரு நல் வாய்ப்பு கிடைத்தது. முதலில் ஒரு 'கன்னிக் காடு' எப்படி இருக்கும் என்று அப்போதுதான் அறிந்துக் கொண்டேன். கன்னிக் காடு என்றால் இன்னமும் வெளிமனிதர்களின் (பூர்வக்குடிகள் அல்ல) காலடிப் படாதக் காடு என்றுப் பொருள்.
மேலும் ஒரு காடு அழிவுறும்போது ஏற்படும் சூழலியல் பாதிப்பு என்ன? அக்காட்டில் வாழ்ந்துவரும் உயிரினங்கள், பூர்வக்குடிகளின் வாழ்வாதாரச் சிதைவு எவ்வகைப்பட்டது? மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளத்தை மறைமுகமாக சுரண்டி, தன் ஊளைச் சதையை இன்னமும் பெருக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்த நாடுகளின் நுண் அரசியல் எத்தகையது? இது போல் நிறைய... நிறைய... கற்றுக்கொண்டேன்.
காடு என்றால்?
காடு என்றால் நிறைய மரங்கள் இருக்கும். அதில் 'பயங்கரமான' மிருகங்கள் வசிக்கும். இதுதான் காடு பற்றிய நமது புரிதல். இவற்றையும் மீறி கூடுதலாக ஒரு தகவல் நமக்கு தெரியுமென்றால் அது காடு இருந்தால் மழை பெய்யும் என்பதே (சுவருக்கு சுவர் எழுதி வைத்திருப்பதால்). ஆனால் என்ன மாதிரியான காடு இருக்க வேண்டும்? எப்படி மழை வரும் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் சமூகக் காடுகள் என்ற பெயரில் வணிக நிறுவனங்களுக்காக அரசாங்கம் வளர்த்துக் கொண்டிருக்கும் தைல மரத் தோப்புகளை 'காடு' என்று நம்பிக் கொண்டிருப்போமா?
ஓர் உண்மையான மிதவெப்ப மண்டல மழைக்காடு (பார்க்க: பெட்டி செய்தி) எப்படி இருக்கும் என்று அறிமுகம் செய்ய, உங்களின் கரம் பிடித்து அக்காட்டுக்குள் அழைத்து செல்கிறேன் வாருங்கள். இக்காட்டின் உள்ளே நுழைந்ததும் பாருங்கள் என்ன ஒரு குளுமை! என்ன ஒரு இருட்டு! என்ன ஒரு ஈரப்பதம்! மழைக் காட்டைத் தவிர இந்த பூமியில் வேறெங்கும் இந்த அற்புத சூழலை நீங்கள் அனுபவிக்க முடியாது. இச்சூழல் எப்படி உண்டானது?
பொதுவாக சூரியனின் கதிர்கள் காற்றை நேரடியாக வெப்பமூட்டுவதில்லை. அது வெறும் நிலத்தில் பட்டு, அதன்மூலம் நிலம் சூடாகி, அதனால் அதனையட்டி உள்ளக் காற்றும் சூடாகி மேலேறுகிறது. அப்படி மேலேறிய காற்றால்தான் வளிமண்டலம் வெப்பமடைகிறது. ஆனால் நிலம் கட்டாந்தரையாக இல்லாமல் மரங்களால் போர்த்தப்பட்டிருந்தால் அதன் வெப்பநிலை ஒரு மட்டத்துக்கு மேல் உயரமுடியாது. ஏனென்றால் மரங்கள் நீராவியை வெளியிட்டு, தன்மீது விழும் வெப்பத்தை குறைத்துக் கொள்ளுகின்றன. காடுகளில் உள்ள மரங்களின் உயரமும் அடர்த்தியும் அதிகரிக்க அதிகரிக்க, அதன் உட்புற குளுமையும் அதிகரிக்கிறது. காடுகள் குளுமையாக இருப்பதன் ரகசியம் இதுதான்.
இக்காட்டில் உள்ள மரங்கள் சுமார் 200 அடி உயரத்துக்கு வளரக்கூடியவை (ஒரு இருபது மாடி கட்டிடத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்). இம்மரங்களுக்கு அதன் தண்டு பகுதியில் கிளைகள் கிடையாது. ஆனால் அதன் உச்சியில் கிளைகள் விரிந்து, அடர்ந்த இலைகளுடன் ஒரு குடைபோல் விரிந்திருப்பதை பாருங்கள். இப்படி எல்லா மரங்களும் இக்காட்டில் நெருக்கமாக இணைந்து ஒரு போர்வைப் போல் மேலே படர்ந்திருப்பதால் மொத்த சூரிய வெளிச்சத்தில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் மட்டுமே காட்டின் உள்ளே ஊடுருவுகிறது. எனவேதான் காட்டின் உட்புறம் எப்போதும் இருட்டாகவே காட்சியளிக்கிறது.
சூரிய வெளிச்சம் ஊடுருவி புகாததால் மண்ணில் உள்ள நீர் எளிதில் ஆவியாவதில்லை. இதனாலேயே மண் எப்போதும் ஈரப்பதத்தோடு இருப்பதோடு காற்றின் ஈரப்பதத்தையும் நிலையாக வைத்திருக்கிறது. இப்படி குளுமை, இருட்டு, ஈரப்பதம் இம்மூன்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருந்தன. இந்த சூழ்நிலையில் இக்காட்டுக்குள் கோடிக்கணக்கான தாவரங்கள் வாழ்ந்து பெருகி ஒரு முழு மழைக்காட்டை, அதன் பல்லுயிர் வளத்தோடு உருவாக்கி வைத்திருக்கிறது.
இக்காட்டில் உயிர் செறிவானது மூன்று நிலைகளில் காணப்படுகிறது. முதலாவது இந்த நீண்டு உயர்ந்த மரங்களின் உச்சியில் ஒரு குடை போல் விரிந்து அடர்ந்த கிளை, இலைகளாலான "மர மேற்கவிகை" இருக்கிறதல்லவா? அதை ஆங்கிலத்தில் சிணீஸீஷீஜீஹ் என்பார்கள். இந்த மர மேற்கவிகையில் மட்டும் வசிக்கும் உயிரினங்கள் இருவாட்சி பறவைகள், சில குரங்கினங்கள். இரண்டாவது தரைப்பகுதி. இங்குதான் நாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருக்கும் மான் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. மூன்றாவது ஓடைகள், குட்டைகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் வாழும் மீன்கள், நீர்-நில வாழ்விகள் இத்தொகுதியில் அடங்கும்.
இவ்வளவு அற்புதமான இயற்கையையும் செறிவான உயிர்ம சூழ்நிலையையும்தான் தன் ஒரே ஒரு செயலால் எங்கள் நிறுவனம் அடியோடு சீர்குலைத்தது. அச்செயல் - காடழிப்பு.
கானகத்தின் மரணம்
ஒரே ஒரு மரம் வெட்டப்படும் போது ஏற்படும் விளைவை முதல் பத்தியில் பார்த்தோம். ஒரு காடே அவ்வாறு அழிக்கப்படும்போது, அந்த பல்லுயிர் சூழலில் ஏற்பட்ட சீர்குலைவை இக்கட்டுரைக்குள் விளக்க முடியாது. ஒரு போர்க்களத்தைப் போல் காட்சியளித்த அந்த சூழ்நிலையில் பறவைகளின் இனிய ஓசைக்கு பதிலாக இயந்திர வாளின் கொடூர ஒலியும், விலங்குகளின் குரலுக்கு பதிலாக புல்டோசர்களின் கரடுமுரடான ஓசையும் கேட்டது நாராசம். குளுமையும் இருளும் குடியிருந்த இடத்தில் சுளீரென்று வீசும் சூரிய வெளிச்சம் கண்டது அதனினும் கொடிது.
காட்டில் வெட்டப்பட்ட மரங்களைத் தவிர மீதமுள்ள சிறு மரங்களும் இதர தாவரங்களும் மீண்டும் வளர்ந்து செழித்து முன்பிருந்த, பழைய மாதிரியான காட்டை உருவாக்க முடியாது. ஆண்டுக்கணக்கில் இப்படி இருட்டிலும் ஈரத்திலும் வளர்ந்த இத்தாவரங்கள் நேரடியான சூரிய வெளிச்சத்தால் பாதிக்கப்பட்டு, அவற்றின் தன்மையை இழப்பதே இதற்குக் காரணம். இக்காட்டுக்குள் முன்பு வாழ்ந்த பறவைகளும் விலங்குகளும் தப்பி வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து விடுகின்றன.
எனவே பெரிய மரங்களை மட்டும்தான் வெட்ட அனுமதிக் கொடுக்கிறோம் என அரசாங்கங்கள் சொல்வது ஒரு ஏமாற்று வேலை. இயற்கையான ஒரு மழைக்காட்டை அழித்துவிட்டு, மீண்டும் அதேமாதிரியான ஒரு மழைக்காட்டை உருவாக்குவது என்பது இயலாது எனும்போது, "மறுகாடு வளர்ப்பு" என்பதும் ஒரு மோசடி வார்த்தைதான்.
என்னுடைய அனுபவத்தில் இவ்வாறு அழிக்கப்பட்ட காடுகள் பின்பு தீயிட்டு சுத்தமாக அழிக்கப்பட்டு கொக்கோ, செம்பனை (ளிவீறீ றிணீறீனீ) முதலிய வணிக பயிர்களை பயிரிடும் தோட்டங்களாகவும் சில காடுகள் கனிம சுரங்ககளாகவும் மாற்றப்படுவதைத்தான் கண்டிருக்கிறேன். இதற்காகவே பெரும் வணிக நிறுவனங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன. பெரு நிலப்பரப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் இக்காட்டின் அற்புதமான மண் வளமும் கிடைப்பதுதான் அதற்கு காரணம்.
சூரிய ஒளிபுகாத மழைக்காட்டுக்குள் இலை தழைகள் கீழே விழுந்து, அதன் மேல் பறவைகள், விலங்குகளின் கழிவுகள் கலக்கின்றன. இவை நுண்ணியிரிகளால் உருமாற்றம் அடைந்து மக்கலான மேல்மண் படிவு உண்டாகின்றன. இந்த மேல்மண் படிவு வளமான சத்துக்கள் நிறைந்தது. இப்படி அரை அங்குல மண்ணை உருவாக்குவதற்கு ஒரு மழைக்காடு ஆயிரம் ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறது. போர்னியோ காட்டுக்குள் இம்மேல்மண் படிவு சுமார் ஒரு அடி உயரத்துக்கும் அதிகமாகவே இருந்ததை, பல இடங்களில் நான் கண்டிருக்கிறேன்.
இந்த வளமான மண்ணில் வணிகப் பயிர்களை பயிரிடும்போது, அதற்கான ஊட்டச்சத்து செலவில்லாமல் முதல் சில ஆண்டுகளுக்கு கிடைத்து விடுகிறது. ஆனால் மழையானது நேரடியாக இந்நிலத்தை தாக்கதாக்க, அக்காடுகளின் மர மேற்கவிகை தடுப்பால் லட்சக்கணக்கான ஆண்டுகளாய் சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்த வளமான மேல்மண் படிவு, மண்ணரிப்பு மூலம் அகற்றப்படுகிறது. நாளடைவில் நிலம் தன் வளத்தை இழக்கிறது. நரி இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன? கறக்கும் வரை இலாபம்தானே?
மேலும் பரந்த காட்டுப் பகுதியில் வெட்டுமர நிறுனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மரம்வெட்ட அனுமதியளித்து, காடுகளை மொட்டையடித்துவிட்டு ஆங்காங்கே பல நூறு மைல் இடைவெளி விட்டு துண்டுதுண்டாக சில காட்டுப் பகுதிகளை 'பாதுக்காக்கப்பட்ட வனப்பகுதி'யாக அரசு நிர்வாகங்கள் அறிவித்து வைத்திருக்கின்றன. இதுவும் ஒரு பயனற்ற வேலைதான். ஏனெனில் காடுகளில் மூன்று நிலைகளில் உயிரினங்கள் வாழ்வதைக் கண்டோம். ஒரு பரந்த வனப்பகுதி இவ்வாறு துண்டாக்கப்படுவதன் மூலம் இந்த உயிரினங்களின் புழக்கம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள்ளேயே பலவந்தமாக முடக்கப்படுகிறது.
இதனால் என்ன விளைவுகள் நேருகிறது என்று பார்ப்போம். முதலில் இரு வனப் பகுதிகளுக்கிடையேயான 'மகரந்த சேர்க்கை' தடைப்படுகிறது. மேலும் மர மேற்கவிகைகளில் மட்டும் வசிக்கும் உயிரினங்களின் எச்சத்தின் மூலம் நடைபெறும் விதைப்பரவலும் நின்று போகிறது. இதோடு தரைப்பகுதி விலங்கினங்களின் உணவு சுழற்சியிலும் தடை ஏற்படுகிறது. யானை போன்ற விலங்கினங்களின் பாரம்பரிய வழித்தடங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இறுதியாக வெட்டுப்பட்ட வனப் பகுதியினூடே ஓடும் ஓடைகள் நின்று போகின்றன. கூடவே நதிகளும் மாசடைவதால் நீர்வாழ் உயிரினங்களும் குறைந்துக் கொண்டே வருகின்றன.
இவ்வாறு துண்டிக்கப்பட்ட காட்டுப் பகுதிகளின் எல்லையோரங்களில் காணப்படும் தாவரங்கள் சூரிய வெளிச்சத்தின் நேரடி தாக்குதலால் மெல்லமெல்ல அழிவை சந்திக்கின்றன. எனவே இதன் எல்லைகள் குறுகிக்குறுகி, பாதுகாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் காட்டுப் பகுதியும் நாளடைவில் தன் பரப்பை இழந்து வருகின்றன என்பதே உண்மை.
போர்னியோ உயிர் மண்டலம் மிகவும் செறிவுமிக்க ஒன்று. உதாரணத்துக்கு ஒரு 25 ஏக்கர் நிலத்தில் 700க்கும் மேற்பட்ட மரவகைகளை காணலாம். இது வட அமெரிக்காவில் உள்ள மொத்த மரவகைகளுக்கு சமம். இப்படிப்பட்ட பசுமைக் காடுகளைதான் பணத்தாள்களாக உருமாற்றிக் கொண்டிருக்கின்றன கொள்ளைக்கார வணிக நிறுவனங்கள்.
இந்த பசுமைக் காடுகளையெல்லாம் நீங்கள் பணத்தாள்களாக உருமாற்றலாம். ஆனால் உங்கள் பணத்தாள்களால் பச்சையம் தயாரிக்க முடியுமா?
காடழிப்பின் அரசியல்
உலகில் மிதவெப்ப மண்டல காடுகளைக் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் ஏழை நாடுகள்தான். எனவே தங்களின் வருமானத்துக்காகவே இந்நாடுகள் காடுகளை அழித்துக் கொண்டிருக்கின்றன என பொதுவாக நம்பப்படுகிறது. இதனாலேயே இந்நாடுகளை 'சுற்றுச்சூழல் வில்லன்கள்' என வளர்ந்த நாடுகள் வர்ணிக்கின்றன. ஒரு பேச்சுக்கு இந்நாடுகளை வில்லன்களாக வைத்துக் கொண்டால்கூட இம்மரங்களையெல்லாம் இறக்குமதி செய்வது யார்? இந்த வளர்ந்த நாடுகள்தானே? அப்படியென்றால் இவர்கள் மட்டும் என்ன கதாநாயகர்களா?
மிதவெப்ப மண்டல நாடுகள் தன் வருமானத்துக்காகவே காடுகளை அழிக்கிறது என்பது அப்பட்டமான பொய். இக்காடழிப்பின் பின்னணியில் வளர்ந்த நாடுகளின் நுணுக்கமான பொருளாதார அரசியல் வலை பின்னப்பட்டுள்ளது. இதில் இம்மூன்றாம் உலக நாடுகள் சிக்கிக் கொள்கின்றன என்பதே உண்மை.
இந்த ஏழை நாடுகளின் மீது உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களுக்கு திடீர் என்று பாசம் பொங்கும். 'அய்யோ... உங்கள் நாட்டில் அணைகள் இல்லை, சாலைகள் இல்லை, மின்சார வசதி போதாது, வானுயர்ந்த கட்டடங்கள் இல்லை... உங்கள் வளர்ச்சிக்கு நாங்கள் உதவுகிறோம். வேண்டிய கடன் தருகிறோம். வாங்கி கொள்ளுங்கள்' என்பார்கள்.
ஆனால் இக்கடனை வாங்கிய பின், இதை எப்படி திருப்பி செலுத்துவது என்று இந்நாடுகள் யோசிக்கும் வேளையில் "இடுக்கண் களையும் நண்பனை" போன்ற தோற்றத்துடன் வரும் பெரு வணிக நிறுவனங்கள், 'இதற்கென்ன யோசனை? இவ்வளவு பெரிய காட்டை கையில் வைத்துக் கொண்டு யாராவது இப்படி நெய்க்கு அலைவார்களா?' என்று அறிவுரை கூறும். அவ்வளவுதான் விஷயம் முடிந்தது.
உலக நிதி நிறுவனங்களுக்கும் பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களுக்கும் உள்ள உறவை நாம் விரிவாக விளக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களின் சூழ்ச்சி வலையில் விழுந்த நாடுகளுக்கு கடைசியில் எஞ்சுவது என்னவோ வில்லன்கள் என்ற அவப் பெயர் மட்டும்தான்.
உண்மையில் காடழிப்பின் மூலம் வரும் வருமானத்தின் பெரும்பகுதியை வணிக நிறுவனங்களே விழுங்குகின்றன. சம்பந்தப்பட்ட நாடோ அதன் மக்களோ அனுபவிப்பது வெகு சொற்பமே. நிலம் கையகப்படுத்துவதில் இருந்தே இது தொடங்குகிறது. காடுகளை இந்நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கே கைப்பற்றுகின்றன.
எடுத்துக்காட்டாக போர்னியோவின் ஒரு குறிப்பிட்ட காட்டுப் பகுதி ஒரு பழங்குடி சமூகத்தினர் வசம் இருந்தது. 1986இல் ஒரு மிகப் பெரிய நிறுவனம் வெறும் 2000 மலேசிய வெள்ளியைக் (இன்றைய மதிப்பில்கூட வெறும் 27,000 இந்திய ரூபாய்தான்) கொடுத்து 69 லட்சம் ஏக்கர் காட்டை ஆக்கிரமித்துக் கொண்டது. மில்லியன் டாலர் கணக்கில் கொள்ளையடித்த அந்நிறுவனத்திடம் அந்த அப்பாவி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், இறுதியில் அந்நிறுவனத்துக்கே தினக்கூலிகளாக மாறி போயினர்.
இந்த அப்பாவி மக்களை போலவே இந்த நாடுகளும் இன்று நிர்கதியாக நிற்கின்றன. தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியை உலக நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனை அடைக்கவே அவை பயன்படுத்துகிறன. இறுதியில் தாங்கள் எந்நாளும் திரும்பவே பெறமுடியாத இயற்கை வளத்தையும் இழந்து நிற்கின்றன.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் பணக்கார நாடாக கருதப்படுவது பிரேசில். இந்நாடே தன் வருவாயில் 40 சதவிகிதத்தை கடனை அடைக்கத்தான் பயன்படுத்துகிறது என்றால், பிற ஏழை நாடுகளின் கதி? இவ்வாறு வளர்ந்த நாடுகளின் மேலதிக வளர்ச்சிக்காகவே மழைக்காடுகள் படுவேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது எவ்வளவு வேகத்தில் நடைபெறுகிறது தெரியுமா?
ஒரு நொடிக்கு... ஆம் ஒரு நொடிக்கு ‘ஒன்றிலிருந்து ஒன்றரை ஏக்கர்’ காடுகள் அழிந்துக் கொண்டிருக்கின்றன.
என் வனவாசத்தின் இறுதி நாட்களில் ஒரு நாள். அழிக்கப்பட்ட காட்டின் நடுவே தன்னந்தனியாய் அமர்ந்திருந்தேன். சுற்றிலும் உறுப்புகள் அறுபட்டு மாய்ந்து கிடக்கும் மரப் பிணங்கள். அப்போது எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.
இக்காட்டு மரங்களை இறக்குமதி செய்யும் மேலை நாடுகள் அவற்றை பெரும்பாலும் சவப் பெட்டிகள் செய்யவே பயன்படுத்துகின்றனவாம். அது யாருக்கான சவப்பெட்டி? பூமிக்கான சவப்பெட்டி அல்லவா?
அழிக்கப்பட்ட இக்காடு பின்னர் விவசாய நிலமாக மாறும். இவ்வாறு காடுகளை அழித்துஅழித்து விவசாய நிலமாக மாற்றி, அதனால் மண் வளம் இழந்து பஞ்சம் ஏற்பட்டு, இறுதியில் மக்களும் மடிய... இப்படியாகத்தானே ஒரு மாயன் நாகரிகத்தை நாம் இழந்தோம்?
மரங்களை இழந்த ஒரு நாடு என்னவாகும்? கடைசி மரம் வரை வெட்டி சாய்த்து எல்லா உயிரினங்களும் அழிய, இறுதியில் உண்ண உணவில்லாமல் ஒருவரை ஒருவர் வெட்டி தின்று ஒரு மனிதர்கூட எஞ்சாத 'பாப்புவா நுய்' தீவு காலியான வரலாற்றை நாம் ஏன் மறந்து போகிறோம்?
அளவுக்கு அதிகமான நுகர்வு கலாச்சாரமே இயற்கையின் அழிவுக்கும் தொடர்ச்சியாக மனித குலத்தின் அழிவுக்கும் காரணமாகிறது. இதைப் பற்றி எப்போது சிந்திக்கப் போகிறோம்?
நுகர்வு கலாச்சாரம் என்பதே மிக அழகாக ஒப்பனை செய்யப்பட்ட ஒரு புன்னகை. அதன் பின்னே எப்படிப்பட்ட ஒரு கோர மனதையும் ஒளித்து வைத்துவிட முடிகிறது. எனவே அப்புன்னகைக்கு பின்னுள்ள அரசியலை நாம் அடையாளம் காண முயல வேண்டும்.
இதோ ஒரு வெட்ட மரத்தின் மீது அமர்ந்திருக்கிறேன் அல்லவா? இம்மரத்தின் பெயர் 'ஜெலுத்தோங்’ (Jelutong). இம்மரம் எதற்காக வெட்டப்பட்டது தெரியுமா? பியானோவின் தாளக்கட்டைகள் செய்ய.
ஒரு பியானோ இசைக்கப்படும்போது அதன் இன்னிசையில் நீங்கள் மெய் மறக்கலாம். ஆனால் எனக்கோ அதில் இருவாட்சி பறவைகளின் அலறல் இன்னும் கேட்கிறதே, என்ன செய்ய?
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
- விவரங்கள்
- நெடுஞ்செழியன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
தங்களது வாழ்நாளில் வாழ்க்கைக்காகப் போராடியவர்கள்,
தமது நெஞ்சில் அக்கினிப் பிழம்புகளை அணிந்தவர்கள்,
சூரியனில் இருந்து தோன்றி
சிறிது கால இடைவெளியில்
சூரியனை நோக்கி பயணம் செய்திருக்கிறார்கள்
தங்களுடைய பெருமைகளை காற்றில் தடம்பதித்துச் சென்றிக்கிறார்கள்...
- ஸ்டீபன் ஸ்பெண்டர்
90களில் "ஒற்றை வைக்கோல் புரட்சி" புத்தகத்தை படித்து முடித்தவுடன் சென்னைக்குப் பேருந்தில் ஏறினேன், நெடுஞ்செழியனைப் பார்ப்பதற்கு. இதுபோன்ற நிறைய புத்தகங்களைப் படித்துவிட்டு பேருந்தில் ஏறியிருக்கிறேன்.
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஒயாசிஸ் புத்தகக் கடையில் அவரைச் சந்தித்தேன், பேசினேன். பிறகு "பூவுலகின் நண்பர்கள்" பற்றியும் அவர்களது வெளியீடுகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். பிறகு வருடாவருடம் சென்னை புத்தகத் திருவிழாவில் அவரது கடையில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் அவருடைய பாதிப்பால் "பச்சையம்" என்ற சுற்றுச்சூழல் அமைப்பைத் துவங்கி எங்கள் பகுதியில் நயினார் குளம் என்ற குளத்தை சுத்தப்படுத்தினோம். "ஒற்றை வைக்கோல் புரட்சி" புத்தகத்துக்கு திருநெல்வேலியில் அறிமுகக் கூட்டமும் நடத்தினோம்.
"சூழலியல்" ஞானம் மிகுந்தவர், நம்முடன் ஏதாவது பேசுவாரா என்ற பயத்திலேயே அவர் உடன் இருப்பேன். இதற்கிடையில் சென்னை "மேக்ஸ் முல்லர் பவனில்" என்னுடைய "காணாமல் போவது" என்ற படம் திரையிடப்பட்டது. அந்தப் படம் செழியனுக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. படம் முடிந்து வெகுநேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு பிள்ளை பிடிப்பவரைப் போல என்னைப் பிடித்துக் கொண்டார். நானும் அவரை விடவில்லை. வாராவாரம் சிந்தாதிரிப்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அங்கு தான் ஓர் அதிகாரியாக இருந்தாலும், யார் வந்தாலும் எழுந்து நின்று வரவேற்பார். "நல்லவேளையாக வந்தாய்" என்று என்னுடைய தோளில் கைபோட்டுக் கொண்டே வெளியில் வந்துவிடுவார். வேறொரு அதிகாரி வந்து அவரைக் கூப்பிடும் வரை பேசிக் கொண்டே இருப்பார்.
பசுமைப்புரட்சியின் வன்முறை குறித்து நான் ஓர் ஆவணப்படம் எடுக்க முயற்சித்தபோது, அவர் முழுமையாக என்னுடன் இருந்தார். இதற்காக புதுச்சேரி ஆரோவில்லுக்கு நான், குட்டி ரேவதி, செழியன் மூவரும் சென்றோம். வழியெல்லாம் பேச்சு. கும்மாளம். மறக்க முடியாத அனுபவம் அது. அந்தப் படத்துக்காக அவரை 5 நிமிடம் பேட்டி எடுக்க என்னுடைய வீட்டுக்கு அழைத்திருந்தேன். பேட்டி ஆரம்பிக்க இருந்த நேரத்தில் எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, உங்களைப் பற்றியும், உங்கள் இயக்கத்தைப் பற்றியும் முழுமையாகக் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஒரு மணி நேரப் பேட்டி. இந்தப் பேட்டி 11.04.2001 அன்று ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
திடீரென்று அவர் இறந்துவிட்ட செய்தி மூன்று நாட்கள் கழித்தே எனக்குத் தெரிந்தது. இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வேறு வழியில் செல்ல வாய்ப்பிருந்தாலும், சுற்றிக் கொண்டு சிந்தாதிரிப்பேட்டை வங்கியை பார்த்துக் கொண்டே செல்கிறேன். தமிழகத்தில் சூழலியல், மனிதஉரிமை என்று பேசுகிறவர்கள் எல்லோருமே நான் பெற்றதைப் போன்ற அனுபவத்தையே அவரிடம் பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம். அவர் தமிழகத்தின் "அழிந்து வரும் உயிரினம்" என்றே எனக்குத் தோன்றுகிறது. இனி அவருடனான பேட்டி:
நாம் அனைவரும் சூழலியல், சுற்றுச்சூழல் பற்றிப் பேசும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருகிறோம். ஏனென்றால் புரட்சி, மேம்பாடு, வளர்ச்சி என்ற பெயர்களில் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இயற்கையாக கிடைக்கும் காற்று, நீர், நிலம் மாசுபட்டுவிட்டதால் உலகம் முழுவதும் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கின்றது.
"அதிக உற்பத்தி" என்ற பேராசையின் காரணமாக ஏற்பட்ட இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் விதமாக நாம் சூழலியல் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. சூழலியல் என்பது வெறும் மரம் நடுவதோ அல்லது பச்சை நிற வர்ணம் பூசிக் கொள்வதோ இல்லை. சூழலியல் என்பது அரசியல், சமூக, பண்பாட்டுப் பொருளியல் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது. சூழலியல் என்பது ஒரு நாட்டு எல்லைக்குட்பட்டு பார்க்க வேண்டிய விஷயமும் இல்லை. உதாரணமாக ரஷ்யாவில் செர்னோபில் அணு உலை விபத்தின் கதிரியக்கம் சுவீடன் வரை தாக்கியுள்ளது.
இதை உணர்ந்த எல்லா நாடுகளும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான ஆயத்தத்தில் இருக்கின்றன. ஆனால் நம்மைப் போன்ற நாடுகளில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. போபாலில் மிகப் பெரிய விபத்து நடந்த பிறகுதான், மக்கள் அதைப் பற்றி, சூழலியல் பற்றி சிறிதளவு பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இது வெறுமனே பேசிக் கொண்டிருக்கிற விஷயம் மட்டும் அல்ல, செயல்பாடுகளிலும் இறங்க வேண்டியுள்ளது.
"பூவுலகின் நண்பர்கள்" உருவான வரலாறு . . .
எந்தவொரு விஷயத்தையும் மக்கள் செயல்படுத்தவேண்டுமெனில் முதலில் அவ்விஷயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுவது மிகவும் அவசியம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டதால், மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்படுகளை முதலில் மேற்கொள்வது என முடிவெடுத்தோம். முதற்கட்டமாக மூன்றாம் உலகக் கவிதைகளான லத்தீன் அமெரிக்க கவிதைகளை "புதிதாய் சில" என்ற தலைப்பில் கொண்டு வந்தோம். இதை படித்த பிறகு என்ன உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு "சும்மாயிருப்பது ஆகாத செயல், எந்தவொரு அநீதியையும் தட்டிக்கேட்க வேண்டும் என்பதையே இந்த தொகுப்பு எங்களுக்கு உணர்த்துகிறது" என்று பதில் வந்தது. அடுத்ததாக "மௌனமுடன் எதிரி" என்ற தொகுப்பு வெளியிட்டோம்.
கவிதைத் தொகுப்புகளை மட்டுமே வெளியிடுவது போதுமானதல்ல என்ற எண்ணம் மேலெழும்பியதால் "அறிவியல் வளர்ச்சி - ஒரு சமூக நோக்கு" என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டோம். அந்தந்த காலகட்டத்திலிருந்த சமூகத்தை, ஆட்சி அதிகாரங்களை பொருத்து அறிவியல் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதை அப்புத்தகம் கூறியது. பிறகு "சூழலியல் ஓர் அறிமுகம்" என்ற முக்கியமான மொழிபெயர்ப்பை வெளியிட்டோம்.
கூடங்குளத்தில் அணு மின்நிலையம் அமைக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், "அணுசக்தி ஓர் அறிமுகம்" என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தோம். அதன் பிறகு சென்னை புக்ஸ் உடன் இணைந்து பூச்சி கொல்லி மருந்துகளைப் பற்றி ரேச்சல் கார்சனின் "சைலன்ட் ஸ்பிரிங்" புத்தகத்தை "மௌன வசந்தம்" என்ற தலைப்பில் மொழிபெயர்த்தோம்.
புத்தகம் மூலமாகவே புரட்சி செய்த மசனாபு ஃபுகோகாவின் "ஓற்றை வைக்கோல் புரட்சி" புத்தகத்தை வெளியிட்டதன் பின்னணி?
அந்த காலகட்டத்தில் பாம்பேயிலிருந்து புதிய நண்பர் ஒருவர் ஏன் நீங்கள் "ஒன் ஸ்டிரா ரெவல்யூஷன்" ஐ மொழிபெயர்க்கக் கூடாது என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இது கண்டிப்பாக மொழிபொயர்க்க வேண்டிய புத்தகம் என்பதை உணர்ந்து, "ஒற்றை வைக்கோல் புரட்சி"யை வெளியிட்டோம். அதற்கு மிகப் பரவலான வரவேற்பு கிடைத்தது.
அதன்பிறகு வந்தனா சிவாவின் "பசுமை புரட்சியின் வன்முறை" மற்றும் "உயிரோடு உலாவ" புத்தகங்களை மொழிபெயர்த்தோம். இவற்றுக்குப் பின்னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பாதிக்கும் "உலக வங்கி", "சர்வதேச நிதி நிறுவனம்" போன்றவற்றின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் புத்தகங்களை கொண்டுவந்தோம். இது போன்று மனித உரிமை, மூன்றாம் உலக பொருளாதாரம், சுற்றுச்சூழல் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பின் மூலமாக வெளியிட்டிருக்கிறோம்.
தொடர்ச்சியாக எழுத்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த "பூவுலகின் நண்பர்கள்" குழு, மக்கள் செயல்பாட்டு இயக்கமாக மாறவேண்டியதன் அவசியம் என்ன?
இந்த நூல்களுக்கு மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவை தொடர்ந்து, வெறும் புத்தகங்களோடு நிறுத்திவிடாமல் மக்கள் செயல்பாட்டு இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கம் எழுந்தது. இப்பிரச்சினைகளுக்கு எதிராக ஆங்காங்கே போராடிக் கொண்டிருந்த போராட்டக் குழுக்களுக்கு தோள் கொடுத்து இயங்கத் துவங்கியது "பூவுலகின் நண்பர்கள்" இயக்கம். உலகின் குப்பைத்தொட்டி இந்தியா என்பது போல், இந்தியாவின் குப்பைத்தொட்டி தமிழகம் என்ற நிலை வந்து விட்டது, இந்தியாவில் ஆங்காங்கே விரட்டியடிக்கப்படும் ஆபத்து மிகுந்த தொழிற்சாலைகள் அனைத்தும் தற்போது தமிழகத்தில் தமது இருப்பை நிலைப்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு எதிரான போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
சென்னைக்கு அருகே " Dabber e nylon 66" என்ற ஆலை வருவதை எதிர்த்து போராடிய மக்களுக்கு ஆதரவாக "வேண்டாத விருந்தாளி" என்ற புத்தகத்தை வெளியிட்டோம். அந்த ஆலை வருவதன் மூலம் இயற்கை வளங்கள் எவ்வாறு சீரழியும் என்பதை மக்களுக்கு உணர்த்தினோம். அதேபோன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக "ஸ்டெர்லைட் ஆலையும் வரவிருக்கும் ஆபத்துக்களும்"" என்ற புத்தகம் மூலம், அந்த ஆலை வருவதால் உருவாகும் ஆபத்துகளை மக்களுக்கு கொண்டு சேர்த்தோம். அதேபோன்று கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் போராடிய விவசாய மக்களுக்கு ஆதரவாக "ஏலம் போகும் ஏழை விவசாயிகள்" என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.
இப்புத்தகங்கள் சம்பந்தப்பட்ட போராட்ட குழுக்களுக்கு ஆதரவாகவும் மிகப் பெரிய பலமாகவும் அமைந்தன. அதே போன்று மூலிகைக்குச் சிறப்பு பெற்ற கொல்லிமலையில் ஆறு அணைகள் கட்டப்பட இருந்ததற்கு எதிராக, மக்கள் போராட்டத்தை உருவாக்கி தடுத்து நிறுத்தினோம். பாக்ஸைட் கனிமம் தோண்டும் திட்டத்தையும் போராடி நிறுத்தச் செய்தோம். பொள்ளாச்சி அருகே மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலையையும் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். இந்தச் செயல்பாடுகள் அனைத்துமே வேறு பல சுற்றுச்சூழல் இயக்கங்களுடன் இணைந்து மேற்கொண்டவை.
இப்படியாக "பூவுலகின் நண்பர்கள்" இயக்கம் புதுச்சேரி, கோயம்புத்தூர், நாமக்கல், கொல்லிமலை, மயிலாடுதுறை, தூத்துக்குடி போன்ற ஊர்களில் இயங்கி வருகிறது. புதுச்சேரியிலிருந்து "சூழல்" என்ற மாத இதழும் கோவையிலிருந்து "பூவுலகு" காலாண்டிதழும் வெளிவருகின்றன. மக்களுக்கு கருத்துக்களை கொண்டு சென்று, விழிப்புணர்வை உருவாக்குவதே எங்கள் முதன்மை நோக்கமாக இருப்பதால் "பூவுலகின் நண்பர்களே" ஒரு வெளியீட்டகத்தையும் தொடங்கியிருக்கிறது.
நமது வேளாண்மையையும் உணவு பாதுகாப்பையும் புரட்டிப் போட்டிருக்கும் பசுமைப் புரட்சி நம் வாழ்வில் எப்படி ஊடுருவியுள்ளது?
வேட்டையாடி உண்டு வாழ்ந்த மனித சமூகம் ஓரிடத்தில் நிலையாக வசிக்கத் தொடங்கியதும், விவசாயம் செய்யத் தொடங்கியது. பின்பு வாழ்வியல், பண்பாடு உருவாகத் தொடங்கின. இதில் கடந்த பத்துப் பதினைந்தாயிரம் வருட காலமாக இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வந்த நாம், சமீப காலமாக நிலத்திற்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் விவசாய முறைகளை ஏன் செய்யத் தொடங்கினோம் என்று சற்று கவனமாகப் பார்க்க வேண்டும். 1960 வாக்கில் நார்மன் போர்க்கர் என்ற நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியின் கண்டுபிடிப்புதான் "பசுமைப் புரட்சி". நவீன தொழில்நுட்பங்களைக் கையாண்டு உணவு உற்பத்தியைப் பெருகச் செய்து வறுமையை ஒழிப்பதுதான் அதன் முக்கிய நோக்கம் என்ற தகவல் பரப்பப்பட்டது.
ஆனால் உன்மையில் உருவான விளைவு என்னவென்றால் நாளிதழின் ஒரு பக்கத்தில் "இந்தியா உணவு உற்பத்தியில் தற்சார்பபை எட்டியுள்ளது" என்றும், மற்றொரு பக்கம் "விவசாயிகள் வறுமையினால் தற்கொலை" என்றும் செய்திகள் வெளிவரும் அளவுக்கு நிலைமை ஒன்றுக்கு ஒன்று நேர் முரணாக போயுள்ளது.
வந்தனா சிவா தனது நூலில், பசுமைப் புரட்சி ஒரு வன்முறை என்றே குறிப்பிடுகிறார். கர்நாடக-தமிழக தண்ணீர் பிரச்சினையை எடுத்துக் கொள்வோம்... ஏன் காவிரியில் முன்பு வந்த தண்ணீர், இப்போது வருவதில்லையா...? - எல்லாம் இருக்கிறது - ஆனால் பசுமை புரட்சியின் விளைவாக உருவாக்கப்பட்ட அதிகப்படியான தண்ணீர்த்தேவைதான், தற்போது தண்ணீர் பங்கீட்டுப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் கன்னடன், தமிழன் என இனம் சார்ந்த பிரச்சினையாகவும் உருமாறிக் கொண்டிருக்கின்றது.
பசுமை புரட்சி வந்த புதிதில் அனைவரும் ஆகா ... ஓஹோ... என்று வரவேற்றார்கள், அப்பொழுது உற்பத்தித் திறனும் அதிகமாக இருந்தது (செலவு அதிகமாக செய்ததால்தான், உற்பத்தி அதிகமாக இருந்தது என்பதே உண்மை). முன்பெல்லாம் விவசாயத்திற்கு இந்த அளவிற்கு செலவு இல்லை. இப்பொழுது அரசு மானியம், அது இது என்று கொடுத்தும்கூட விவசாயம் மிகவும் செலவு பிடிக்கும் ஒன்றாக மாறிப் போய்விட்டது.
இதனால் பல பேர் விவசாயத்தைக் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பசுமைப் புரட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறு விவசாயிகளும், குறு விவசாயிகளும்தான். பெரும்பொருள் செலவு செய்து விவசாயம் செய்ய இயலாத காரணத்தால், தங்களது நிலங்களை பெரும்பண்ணையார்களுக்கு விற்று விட்டு அவர்களிடமே கூலி வேலைக்கு சேர்ந்து கொள்கிறார்கள். அல்லது சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் சென்று பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தும் நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள்.
பசுமைப் புரட்சியின் மற்ற வன்முறைகள் குறித்து. . .
பசுமைப் புரட்சியில் நாம் நிலத்திற்குள் செலுத்தும் அனைத்துமே வேதிப் பொருட்கள் என்பதால் நிலத்தின் வளம், பயிர் வளரும்தன்மை நாளடைவில் தீர்ந்து போகிறது. உதாரணமாக, இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவையில் இப்பொழுது எங்குமே பருத்தியைக் காணவியலாத நிலை வந்துவிட்டது. பருத்தி ஒரு முறை விளைவதற்கு 21 முறை மருந்து அடிக்க வேண்டியுள்ளது. 21 முறை மருந்தடிக்க விவசாயி காசுக்கு எங்கே போவான்? .
செய்தித்தாள்களில் வரும் விவசாயிகளின் தற்கொலை செய்திகள் வெறும் செய்திகளாகவே நம் மனதில் தங்கி விடுகின்றன. அந்தச் செய்திகள் அனைத்திலும் இருக்கும் ஒரு கனமான பின்புலத்தை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மிகமிகக் கடினமான உழைப்பைச் செலுத்தி, கடன் வாங்கி செலவு செய்து, அவர்கள் உணவை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் விளைவித்த பொருளுக்கு விலையில்லாது போகும் காரணத்தால் வாங்கியக் கடனைக்கூட அடைக்க முடியாமல் அல்லல் பட்டு, இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான் விவசாயி.
இந்தப் பசுமைப் புரட்சி நமக்குத் தந்தது சுற்றுச்சூழல் கேட்டை மட்டுமல்ல. பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சீரழிவையும் சேர்த்தே தந்திருக்கின்றது. பசுமைப்புரட்சி கொண்டு வந்திருக்கும் மற்றுமொரு கேடு ஒற்றைப் பயிர்முறை. தென்னிந்தியாவில் நெல், வட இந்தியாவில் கோதுமை இவற்றைத் தவிர பாரம்பரியமாக நம்மிடம் இருந்த எத்தனையோ தானியங்கள் அருகிப் போய் விட்டன. இனி அவற்றை மீட்டெடுக்க நாம் பெரும் உழைப்பை செலுத்த வேண்டியிருக்கும்.
அதுமட்டுமல்லாது உணவுப் பயிர்களைவிட, பணப் பயிர்கள் விளைவிப்பது அதிக்கப்படுத்தப்பட்டு விட்டது. பசுமைப் புரட்சி நிகழ்ந்த இந்த நாற்பது வருடங்களில் நாம் பெற்ற பலன்கள் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பிரிவினரான செல்வந்தர்கள் மற்றும் பண்ணை விவசாயிகள் மேலும்மேலும் பொருள் சேர்க்கச் செய்தது, மற்றொரு பக்கம் சுற்றுச்சூழல், பொருளாதாரம், பண்பாடு, அரசியல் இவற்றில் பெரும் சீரழிவை ஏற்படுத்தியது ஆகியவற்றைத்தான். பசுமைப் புரட்சிக்கு ஒரு காரணமாக இருந்த எம்.எஸ். சுவாமிநாதன்கூட, பசுமைப் புரட்சியின் பாதகங்களை இப்பொழுது ஏற்றுக் கொண்டு, வளம் குன்றாத நிலைத்த வேளாண் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
விவசாயம் என்பது விவசாயிகளிடம் இருந்த நிலை போய், பெரிய நிறுவனங்களின் கைகளுக்குள் முடங்கிப் போயுள்ளது. முன்பெல்லாம் பழவிதைகள் கனிகளிடமிருந்து பெறப்பட்டன. ஆனால் இப்பொழுது விதையில்லாத திராட்சை, விதையில்லாத கொய்யாவையே நாம் விரும்புகிறோம். இதுவே பழகிப் போய்விட்டதால் விதைகளுக்காக குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி பசுமைப் புரட்சியில் உபயோகிக்கப்படும் பூச்சி மருந்தின் தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அதிகாரிகளை கைகளில் போட்டுக் கொண்டு அதிக அளவில் பூச்சி மருந்து பயன்படுத்த விவசாயிகளைத் தூண்டுகின்றன. ஆகவே, விவசாயம் என்பது வாழ்வு ரீதியாக, பண்பாடு ரீதியாக இருந்த நிலை போய் விவசாயி என்பவன் தொழிற்சாலையில் வேலை செய்பவனைப் போல் மாற்றப்பட்டு விட்டான். இந்த நாற்பது வருடங்களில் விவசாயம் இப்படி தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டது.
இந்த வன்முறைக்கு மாற்றுதான் என்ன. . . ?
நமது பழைய விவசாய முறையை மீட்டெடுக்கும் கட்டாயத்தில் இப்போதிருக்கிறோம். பசுமைப் புரட்சியின் சீரழிவை உணர்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள்கூட இப்பொழுது இயற்கை வேளாண்மைக்கு நிர்பந்திக்க தொடங்கியிருக்கின்றன. அறிவியல் என்றால் நாம் நினைப்பது ஆய்வுக் கூடங்களையும் சோதனைக் குடுவைகளையும் தான், ஆனால் அறிவியல் என்பது அது மட்டுமல்ல. வயல்வெளியில் செய்யப்படுவது கூட அறிவியல்தான். எந்தக் காலத்தில், எப்போது விதைப்பது. எந்த நிலத்திற்கு, எந்த சூழலுக்கு எந்தெந்த விதைகளை விதைப்பது என்பது போன்ற அறிவியல் நம் பாரம்பரிய விவசாயத்தில் இருந்தது.
இப்பொழுது நெல் என்றால் நமக்கு தெரிந்தது பொன்னி, ஐ ஆர் 8 போன்ற ஒன்றிரண்டு ரகங்கள் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால் நமது நாட்டைப் பொருத்தமட்டும் 200க்கும் மேற்பட்ட நெல்வகைகள் சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் அவற்றை இப்பொழுது அருங்காட்சியகத்தில் சென்று பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நெல் மட்டுமல்லாமல் வேர்க்கடலை, கத்தரிக்காய், தக்காளி, முருங்கைக் காய் என்று எதை எடுத்தாலும் 10க்கும் மேற்பட்ட வகைகள் இருந்திருக்கின்றன. அனைத்தும் கலப்பினம் (ஹைபிரிட்) மூலம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது.
கலப்பினப் பயிர்களுக்கு இடு பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக வேதி இடுபொருட்கள். முன்பெல்லாம் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வந்தோம். ஆனால் கலப்பினப் பயிர்களுக்கு இயற்கை உரம் உகந்ததாக இல்லாததால், வேதி உரங்களை கட்டாயமாக இடவேண்டியுள்ளது. இந்த வேதி உரங்கள் பயிர்களில் சேர்ந்து பின்பு உணவைச் சென்றடைகிறது. பிறகு அதை உண்ணும் கால்நடைகளுக்கு சென்றடைகிறது. கால்நடைகளிடம் இருந்து கிடைக்கும் பால், இதர உணவுப் பொருட்கள், அவற்றையே உணவாக உட்கொள்ளும் நமக்கும் அந்த வேதி எச்சங்கள் வந்தடைகின்றன. முன்பு மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த போது மனித உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. ஆனால் இப்பொழுது உடல் முழுவதும் வேதிப் பொருட்களே நிரம்பியிருக்கின்றன. தமிழ்நாடு வேளாண் பண்ணையின் ஒரு அறிக்கையின்படி பெண்களின் தாய்பாலில் கூட விஷம் இருப்பதாக கண்டறிந்துள்ளது.
அனைத்துமே வேதிப் பொருளாகிப் போன காரணத்தால், மக்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைந்தது மட்டுமில்லாமல், புதுபுது நோய்களும் உருவாகத் தொடங்கியுள்ளன. புற்று நோய் போன்ற மோசமான நோய்கள் உடலை பீடிப்பதற்கான சாதகக் கூறுகளை வேதிப் பொருட்கள் அதிகப்படுத்துகின்றன.1962ல் ரேச்சல் கார்சனின் "சைலன்ட் ஸ்பிரிங்" புத்தகம் வெளிவந்த போது டி.ட்டி.டியின் மூலமாக ராபின் என்ற பறவையினம் முழுவதுமாக அழிந்து போனது அறியப்பட்டு, அமெரிக்கா முழுவதுமே பெரும் சர்ச்சை எழுந்தது. அதன் மூலமாக டி.ட்டி.டி முழுவதுமாகவே தடை செய்யப்பட்டது. ஆனால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இன்னும் டி.ட்டி.டியை பயன்படுத்தி வருகிறோம். அது மட்டுமில்லாமல் இந்திய அரசே கொச்சின் அருகே ஒரு தொழிற்சாலை நிறுவி டி.ட்டி.டி உற்பத்தி செய்து வருகின்றது.
காப்புரிமை, உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் இவற்றிற்கும் விவசாயத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி. . . .
குறு விவசாயிகள், சிறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் இணைந்த விவசாய அமைப்பு நம்மிடம் இருந்து வந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் பெரும் நிறுவனங்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்தன. இந்நிறுவனங்களுக்கு விவசாயிகளைப் பற்றி எந்த அக்கறையும் இருக்காது. முழுக்கமுழுக்க விவசாயிகளைத் தம் அதிகாரத்திற்கு உட்படுத்தி வணிக லாபமீட்டுவதே இந்நிறுவனங்களின் நோக்கம். இப்போது இந்தியாவிலும் இந்நிலை வரத்தொடங்கியுள்ளது. உதாரணமாக, சூரிய காந்தி பயிர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை ஐடிசி நிறுவனம் வைத்திருந்தது. தங்கள் நிறுவன முன்னேற்றத்திற்காக இந்நிறுவனங்கள் அரசை பயன்படுத்துவதும், புதிது புதிதாக சட்டங்களை ஏற்படுத்துவதும் நிகழும்.
சமீப காலங்கள் "காப்புரிமை" என்ற சொல்லை அதிகமாக கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது நாட்டில் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த பொருட்களை இப்போது பயன்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் காப்புரிமை பெற்றுள்ள நிறுவனங்களுக்கு உரிமத்தொகை கொடுக்க வேண்டும். இதுதான் காப்புரிமை. உதாரணமாக மஞ்சள் காமலைக்கு நாட்டு மருந்தாகப் பயன்படுத்தி வந்த கீழாநெல்லியை, மருந்து-மாத்திரையாக மாற்றிப் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவிலுள்ள நிறுவனமொன்றுக்கு நாம் கப்பம் கட்டவேண்டியுள்ளது.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் இவை நமது விவசாயிகளை நெருக்கடிக்கு தள்ளக்கூடியவையாக உள்ளன. உதாரணமாக வெங்காயப் பற்றாக்குறையின் போது, ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்தோம். அதன் பிறகு நாட்டில் எல்லோரும் ஈரானிய வெங்காயத்தையே வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியானால் நமது வெங்காயத்தை யார்தான் வாங்குவது?
இதேபோன்றே இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து நெல் இறக்குமதி செய்தபோதும், நமது விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் திண்டாடினார்கள். வெளிநாட்டிலிந்து பாமாயில் என்ற எண்ணையை இறக்குமதி செய்யும் காரணத்தால் உள்நாட்டில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணைய் விலை வீழ்ச்சியடைந்து சிக்கல் உண்டானது. இதுவரை உணவில் தற்சார்புடைய நாடாகத் திகழ்ந்த இந்தியா, தற்பொழுது உணவிற்காக அந்நிய நாடுகளைச் சார்ந்து வாழும் நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமின்றி, இப்போது குறைந்த விலையில் அவர்கள் தருவதை நாம் வாங்குவதைப் போன்று ... விலைகளை உயர்த்தும் பொழுதும் அவர்களிடமிருந்தே வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிடுவோம். இலங்கை போன்ற நாடுகளின் நிலைமையிலிருந்து இதை நாம் புரிந்து கொள்ளலாம். பசுமைப் புரட்சி என்ற ஒன்று வராமல் போயிருந்தால், உணவு பற்றாக்குறையால் இப்பொழுது உலகமே அழிந்து போயிருக்கும் என்ற கருத்து பல பத்தாண்டுகளாக பரவலாக ஊன்றிப் போயிருக்கிறது. ஆனால் 40 ஆண்டு காலத்துக்கு பிறகு பசுமைப் புரட்சியின் தீங்குகளை அதன் பிதாமகர்களே ஏற்றுக் கொள்கின்றனர். மேலே சொன்ன பிரச்சினைகளுக்கும் பசுமைப் புரட்சிதான் காரணம்.
பசுமைப் புரட்சியைப் போலவே, நவீன வேளான்மையில் மரபணு மாற்றுப்பயிர்கள் இன்றைக்கு ரொம்ப அத்தியாவசியம் என்கிறார்களே நமது விஞ்ஞானிகள்...?
நவீன வேளான்மை என்ற பசுமைப் புரட்சி அலை வந்து இப்பொழுது ஓய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்ற புது ஜீன் டெக்னாலஜி மேலெழுப்பப்பட்டு வருகிறது. மரபணுக்களை மாற்றி அமைக்கும் இந்தத் தொழில்நுட்பம், பசுமைப் புரட்சியை விட மோசமானதாக அமையும். பசுமைப் புரட்சியால் சிறு விவசாயிகள்தான் விவசாயத்தை விட்டு தூக்கியெறியப்பட்டனர். ஆனால் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டால், உலகமே ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
எடுத்துக்காட்டாக "மான்சான்டோ" நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதைகளைக் கொண்டு வளர்க்கப்படும் தாவரங்களில் இருந்து கிடைக்கும் விதைகளை நாம் மீண்டும் பயிரிட முடியாது. இத்தனை காலமாக பசுமைபுரட்சியின் காரணமாக வேதிப் பொருட்களுக்கு மட்டுமே இந்த நிறுவனங்களை விவசாயிகள் சார்ந்திருந்த நிலை போதாதென்று, விதைகளுக்கும் கூட இவர்களையே சார்ந்திருக்க வேண்டும் என்ற திட்டத்துடனே, இது போன்ற மலட்டுத் தன்மையுள்ள விதைகள் கொண்டு வரப்படுகின்றன. அத்துடன் மேலைநாட்டு வி்ஞ்ஞானிகளுக்கு மரபணுக்களுடன் விளையாடுவது பிடித்தமான விஷயமாக இருக்கிறது.
இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அதிக வேதி உரங்கள் தேவையில்லை என்பதால், இதுவும் ஒரு விதத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கக் கூடியது தானே என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் வேதிப் பொருட்கள் கலந்த உணவை உண்பதே உடலுக்கு இத்தனை தீங்கு விளைவிக்கின்றது என்றால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் நம்மை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பது அனுமானிக்கமுடியாத ஒன்று.
பசுமைப் புரட்சியில்கூட தவறு என்று உணர்ந்த பிறகு, மீண்டும் பழைய முறைக்கு திரும்புவதற்கான வாய்ப்பும் குறிப்பிட்ட் அளவு கட்டுப்பாடும் இருக்கின்றது. ஆனால் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கும் என்பதால், அந்த முறையை கையாண்ட பிறகு அதிலிருந்து மீள முடியுமா என்பது சந்தேகம்தான்.
நேர்காணல்: ஆர்.ஆர். சீனிவாசன்
(இந்தப் பேட்டியில் செழியன் கூறியிருக்கும் சில விஷயங்கள் நிகழ்காலத்தில் கூறப்பட்டுள்ளன. அது அந்தக் காலத்துக்குரியது.)
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
- விவரங்கள்
- பாமயன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
'வரகரசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்' என்று அவ்வைப் பிராட்டி குறிப்பிடுகிற வழுதுணங்காய் என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கத்தரிக்காயே. இது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மண்ணில் சுவைக்கப்படுகின்ற உணவுப் பொருள்களில் ஒன்று. இந்த பாரம்பரியம் மிக்க கத்தரிக்காய்க்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது மரபீனி மாற்றம் என்ற பெயரில் கத்தரிக்காயின் மரபியல் கூறுகளில் மாற்றம் செய்து, அதை வணிகச்சிறையில் பூட்ட முனைந்துள்ளன பன்னாட்டு வணிக நிறுவனங்கள்.
சென்ற நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த உயிரியல் கோட்பாட்டை வழங்கியவர்கள் டார்வினும் கிரிகர் மெண்டலும். அதேபோல இந்த நூற்றாண்டை ஆட்சி செய்யும் உயிரியல் கோட்பாட்டை வழங்கியவர்கள் கிரிக், வாட்சன் ஆகிய இருவராவர். இவர்கள் கண்டறிந்த மரபணுவினுடைய வடிவமான திருகுச்சுருள் வடிவம் மிகப் புகழ்பெற்றது. இதற்காக இவர்களுக்கு நோபல் பரிசும் கிடைத்தது. இவர்களது முதன்மையான மற்றொரு தேற்றம் உயிரின் மறைவிடம் 'டி.என்.ஏ'க்கள் என்றும் அவற்றைக் கட்டமைப்பதன் மூலம் உயிரினங்களைத் தோற்றுவிக்க முடியும் என்பதுமாகும். இதன் அடிப்படையில் இன்று பல பில்லியன் டாலர்கள் புழங்கும் துறையாக உயிரிநுட்பவியல் துறை வளர்ந்துள்ளது. மாந்த இனத்தின் மரபீனிகளைத் தொகுக்கின்ற ஆய்வுத்துறையான 'மாந்தர் ஈனிமேனித் திட்டத்திற்கு' 1980களிலேயே 3000 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டன.
இன்று கணினித்துறையைவிட எதிர்காலம் மிகுந்த துறையாக, இந்த உயிரிநுட்பவியல் துறை மாறி வருகிறது. இதில் பன்னாட்டுக் கும்பனிகள் பல கோடி டாலர்களை தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக வேளாண் துறையிலும், மருத்துவத் துறையிலும் இவர்களது ஆதிக்கம் பெருகி வருகிறது. மீண்டும் முளைக்க இயலாத முடிவிப்பு விதைகளையும், விதைத்த விதை நன்கு வளர குறிப்பிட்ட வளர்ச்சி ஊக்கியை தெளித்தால்தான் வளர முடியும் என்ற அளவில் உள்ளுக்குள் குறிப்பிட்ட நஞ்சைப் பொதிந்து வைக்கும் மடிவிப்பு விதைகளையும் இன்று சந்தையில் புழக்கத்திற்கு விடுவதில் அவர்கள் மும்முரமாக உள்ளனர்.
இந்த அடிப்படையில் வந்த மான்சாண்டோவின் பாசில்லஸ் துரிஞ்சியன்சஸ் பருத்தி விதைகளும், சின்ஜெண்டாவின் பொன்னரிசி விதைகளும் உலக அளவில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. பல்வேறு நாடுகளில் இப்படிப்பட்ட மரபீனி மாற்ற உணவுப் பொருட்களுக்கு தடை உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதிப்பதில் முனைப்பாக உள்ளன. ஆனால் அமெரிக்கா மரபீனி மாற்றப் பயிர்களை அதிகம் விளைவித்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு அடையாளம் தெரிவதற்காக "மரபீனி மாற்ற உணவு" என்ற முத்திரை பதித்து விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு பல்வேறு அமைப்பினர் இதை எதிர்த்துக் போராடி வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் இப்படி எந்தக் கட்டுப்பாடும் இன்றி மரபீனி மாற்ற மலட்டு விதைகளை விற்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசுப் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்களும் துணைபோவதுதான் வேதனை மிகுந்த வேடிக்கை. பருத்திக்கு அடுத்தபடியாக, இப்போது மரபீனி மாற்றக் கத்தரியை புகுத்த முனைந்துள்ளனர்.
இந்தியா போன்ற உயிரியல் பன்மயம் மிக்க நாடுகளில் வேளாண்மை மட்டுமல்லாது உணவுப் பழக்கங்களும் பன்மயம் மிக்கவை. இதை அழிப்பதில் முதன்மைப் பங்கு வகித்தது பசுமைப் புரட்சி. எண்ணற்ற நெல் வகைகளும் பிற புஞ்சைத் தவசங்களும் நமது மண்ணில் நிறைந்து காணப்பட்டது. 60 நாட்களில் விளையும் 'அறுபதாம் குறுவை', 'அவசரக் கார்' முதல் வெள்ளத்திலும் வளரும் 'மடுமுழுங்கி' வரை ஆயிரக்கணக்கான வகைகள். அதுவும் பகுதிக்கேற்ற வகையில், இராமநாதபுரத்தில் பயன்படுத்திய நெல் தஞ்சாவூரில் பயன்படுத்தப்படவில்லை. இந்த வேளாண் பருவநிலைத் தன்மை அன்று பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் பசுமைப் புரட்சி காரணமாக இன்று ஐந்தாறு வகை நெல்வகைகளை மட்டுமே தமிழகம் முழுவதும் பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாக்கி இருக்கிறது.
வறட்சியைத் தாங்காத இந்த 'வீரிய' விதைகளால் பயிர் காய்கிறது. பெரு மழை பெய்தால் வெள்ளத்தைத் தாங்க முடியாத குட்டைப் பயிர்கள் (ஐ.ஆர். வகை நெற்கள் குட்டையானவை) அழிகின்றன. கூடவே வேதி உப்புகளும், பூச்சிகொல்லி நஞ்சுகளும் மண்ணையும் நீரையும் உப்பாக்கியும் நஞ்சாக்கியும் அழித்தன. இன்று இதற்கு தீர்வு காணப் போகிறோம் என்ற பெயரில் அவற்றின் தோல்விக்கான அடிப்படையான காரணங்களைக் கண்டறியாமல், பசுமைப் புரட்சியைவிடவும் ஆபத்தான வழிமுறைகள் தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. இது காயத்தின் அடிப்படையைக் கண்டறிந்து களையாமல், மேற்பூச்சாக புனுகு போடுவதுபோல் இருக்கிறது.
உயிரிநுட்பவியல்
உயிரியல் தொழில்நுட்பம் அல்லது உயிரிநுட்பவியல் என்ற அறிவியல்துறை இன்று மிகப் பெரிதாக வளர்ந்துள்ளது. பாலைத் தயிராக புளிக்க வைக்கும் எளிய நுட்பம் இதன் தொடக்கநிலையாகும். பாலை தயிராக மாற்றுபவை நொதிமம் எனப்படும் நுண்ணுயிர்கள். இவ்வாறு நுண்ணுயிரிகளைக் கொண்டு நடத்துவிக்கப்படும் தொழில்நுட்பத்திற்கு உயிரிநுட்பவியல் என்று பெயர். இதன் ஒரு பிரிவாக உருவானதே மரபீனிப் பொறியியல் எனப்படும். அதாவது உயிரிகளின் அடிப்படை மரபுக் கூறுகளான மரபீனிகளை மாற்றியமைத்து செயற்படுத்தும் தொழில்நுட்பம் என்பதே இதன் பொருள். இதன் மூலம் 'புதிய' உயிரினங்களை உருவாக்கிவிட்டதாக அறிவியல்வாணர்கள் (!) கூறுகின்றனர்.
ஒவ்வொரு உயிரினத்தின் அடிப்படை அலகாக செல் அமைந்துள்ளது. இந்த செல்களின் உள்ளே உட்கரு என்ற அமைப்பு உள்ளது. இந்த உட்கருவில் குருமேனிகள் விரல் போன்ற பகுதிகள் காணப்படுகின்றன. இவைதாம் ஓர் உயிரினத்தின் உறுப்புக் கூறு அமைப்புகளை ஈன்று புறந்தருபவை. எடுத்துக்காட்டாக, "ஆலமரத்தின் விதையில் இருந்து ஆலமரமே வரும். வேப்பமரம் வருவது கிடையாது". இதற்குக் காரணம் அவற்றில் அமைந்துள்ள மரபீனிகளின் ஒன்றுபட்ட அடுக்கு அமைப்பாகும். இந்த மரபீனிகள் மரபுக் கூறுகளை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்கின்றன. ஒருவரின் மூக்கு நீளமாக இருப்பதற்கு ஒரு மரபீனித் தொகுப்பு காரணமாக இருக்கும், ஒருவரின் தோல் கருப்பாக இருப்பதற்கு மற்றொரு மரபீனித் தொகுப்பு காரணமான இருக்கும். இப்படியாக பற்பல மரபீனித் தொகுப்புகள் இணைந்து ஓர் உயிரினத்தை உருவாக்குகின்றன. இயற்கையின் இந்த அடிப்படையான சூத்திரத்தை இன்றறைய அறிவியல் உலகம் பிரித்தரியத் தொடங்கிவிட்டது. அத்துடன் இந்தக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் திறனைப் பெற்றுவிட்டது.
யார் ஈன்றது?
ஆங்கிலத்தின் உள்ள Gene என்ற சொல் தமிழின் ஈன் என்ற சொல்லுக்கு இணையானது. இந்த ஆங்கிலச்சொல்லின் மூலம் தமிழில் இருந்து சென்றதாக சொல்லாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 'ஈன்று புறந்தருதல்' 'ஈன்றாள் பசி காண்பாள் ஆயின்' என்று பரவலாக பண்டைத் தமிழ் இலக்கியங்களில் ஈனுதல் என்ற சொல் காணப்படுகின்றது. ஈ என்பது கிரேக்க/லத்தீன் மொழிகளுக்குச் செல்லும்போது ஜீ என்று மாறுவது இயல்பு. இந்த அடிப்படையில் ஈன், இனம் என்ற சொற்கள் உருவாயின. மரபுக்கூறுகளை (ஈனுவதால்) தருவதால் இதை மரபீனி என்று அழைக்கலாம்.
மரபீனிகளை மிக எளிதாக மாற்றியமைப்பது இயலாத செயல். இயற்கையில் ஓர் உயிரினத்தின் மரபீனிகள், மற்றொரு வகை உயிரினத்தின் செல்களுக்குள் செல்ல முடியாது. ஏனெனில் புதிய செல்லுக்குள் நுழையும் டி.என்.ஏ.வை, அச்செல்களில் அமைந்துள்ள நொதிமங்கள் அழித்துவிடும். இதனால்தான் இன்றும் "அப்பனுக்குப் பிள்ளைகள் தப்பாமல்" பிறக்கின்றன. ஆனால் இந்தச் சட்டம் குச்சிலங்கள் (bacteria), நச்சுயிரிகள் (virusus) போன்ற உயிரினங்களில் சற்றுத் தளர்ந்து காணப்படுகிறது. அதாவது, நுண்ணுயிரிகளின் செல்களுக்குள் இருக்கும் நொதிமங்கள் அவ்வளவு 'கடுமையானவை' அல்ல. அவை பிற டி.என்.ஏக்களை உள்ளே வர இசைவு கொடுக்கின்றன. ஏனெனில் நுண்ணுயிரிகள், படிமலர்ச்சி (Evolution) நிலையில் முதல் படிக்கட்டில் இருப்பவை. இவ்வாறு குச்சிலங்கள், நச்சுயிரிகள், இவற்றின் டி.என்.ஏ.வைத் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகள் வேறு பெரிய உயிரினங்களின் உடலுக்குள் நுழைய முடியும். இதனால் வேறொரு மரபினப் பண்பு புதிய உயிரினங்களில் செல்ல ஏதுவாகிறது.
இந்தத் தன்மையைக் கண்டறிந்த அறிவியலாளர்கள், மரபீனிகளை கிடைமட்டத்தில் பரிமாற்றம் செய்யத் தொடங்கினர். கிடைமட்டம் என்பது, வேறு எவ்வித சூழலியல், இயற்கைக் கூறுகளைக் கணக்கில் எடுக்காமல் எந்திர வகையில் வெட்டி ஒட்டும் முறையாகும். இவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத உயிரினங்களின் பண்புகள் இணைக்கப்பட்டுகின்றன. இயற்கையாக நடக்கும் படிமலர்ச்சி முறையால் ஏற்படும் மாற்றம் நெடுங்குத்து மட்டத்தில் நடப்பதாகும்.
முன்பெல்லாம் கலப்பின முறையில் ஒரே குடும்ப இன உயிரினங்களை மட்டுமே இணைசேர்க்க முடிந்தது. அதாவது மரமரத்துடன் மாமரங்களை ஒட்டுவது, பாலா மரத்தில் (பலா மரம் வேறு) சப்போட்டா போத்துகளை ஒட்டுக்கட்டுவது என்ற அளவில் மட்டுமே இயன்றது. இதன்மூலம் கலப்பினங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற குச்சிலத்தின் மரபீனியை பருத்திச் செடிக்கும், கத்தரிச் செடிக்கும் மாற்றுவது கைகூடிவிட்டது. மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இப்படிப்பட்ட நுட்பங்களை வைத்தே தமது விதைச் சந்தையை விரிவாக்குகின்றன.
பருத்தியில் பா-து (Bt) விதைகளை அறிமுகம் செய்த மாண்சாண்டா வகையறாக்கள் இந்தியாவில் பெரும் தோல்வியைச் சந்தித்தனர். அதன் பின்னர் இப்போது கத்தரியில் தங்களது கைங்கரியத்தைக் காட்டியுள்ளனர். கத்தரிச் செடியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் புழுவைக் கொல்லும் புரதத்தைக் கொடுக்கக் கூடியது புதிய பா-து கத்தரி. அதாவது பா-து குச்சிலத்தின் உள்ள புரதம் அந்த தண்டுத்துளைப்பானுக்கு ஒவ்வாத நஞ்சாக மாறுகிறது. ஆனால் அதே மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நஞ்சாக இருக்குமா?, என்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றி நீண்ட ஆய்வு நடக்கவே இல்லை என்பது வேதனையான வேடிக்கை.
மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பன்னாட்டுக் கும்பணிகள் (கும் = குழு, பணி = செய்தல் - ஆங்கிலம் போன்ற தமிழ்ச் சொல்) அறிவுச் சொத்துரிமை (Intellectual Property) என்ற பெயரில் கைப்பற்றி வைத்துக் கொள்கின்றனர். இதன்மூலம் இவர்கள் வைத்ததுதான் விலை. எடுத்துக்காட்டாக 2006-07ஆம் ஆண்டளவில் ஒரு கிலோ சாதாரண பருத்தி விதையின் விலை ரூ.70 என்று இருந்தது. ஆனால் 450 கிராம் பா.து விதை ரூ.1050-க்கு விற்றது. அதுவும் அவை இரண்டாம் தலைமுறை விதைகள். எனவே பன்மடங்கு உயர்த்தப்பட்ட விலை உழவர்களின் தலையில் விடிகிறது.
இது ஒருபுறம் இருக்க, இதுவரை உணவுப் பயிர்களில் எந்த வகையிலும் மரபீனி மாற்றப் பயிர்களை அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது மரபீனி மாற்றக் கத்தரிப் பயிரை உலகிலேயே முதன்முறையாக இந்தியா அனுமதித்துள்ளது. இதை சூழலியளார்கள் மட்டுமல்லாது உழவர்கள், அறிவியல் அறிஞர்களும் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். 'இது அறிவியலே அல்ல' என்கிறார் சில்லஸ் எரிக் செராணி என்ற அறிஞர். மரபீனி மாற்றப் பயிர்களில் 99.9 விழுக்காடு நச்சுத்தன்மையுள்ள கொல்லிகள் உள்ளன. இவற்றைக் கும்பணிகள் வெளிப்படையாகச் சொல்வதில்லை, மூடி மறைத்து ரகசியமாகவே செய்கின்றன. இதன் தகுதிப்பாட்டை ஆய்வு செய்யாமல் அரசுகள் அனுமதி வழங்குகின்றன.
மரபீனி மாற்ற கத்தரிப் பயிருக்கு ஒப்புதலுக்காக வழங்கிய அறிக்கை 105 பக்கங்கள் கொண்டது. இதை மூன்று அமைப்புகள் தயாரித்து அளித்துள்ளன. இதில் முதல் அமைப்பு மகைகோ கும்பணி (Maharashtra Hybrid Seeds Company Ltd. (Mahyco), Mumbai) அடுத்தவை தார்வாட் வேளாண் பல்கலைக்கழகம், நமது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பருத்திக்குப் பயன்படுத்திய அதே முறையைத்தான் இதிலும் பின்பற்றியுள்ளனர். அதாவது மரபீனி மாற்றச் செயல்பாட்டில் மூன்று முகாமையான கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை குறிப்பிகள் (Markers) , சுமப்பிகள் (Carriers), ஊக்கிகள் (Promoters) போன்றவையாகும். இவை உயிரினங்களில் நோயை உருவாக்கும் நச்சுயிரிகள், நுண்ணுயிரிகளில் இருந்தே பெறப்படுகின்றன. குறிப்பாக 35 எஸ் காலிபிளவர் மொசைக் நச்சுயிரி (35 Sca MV) என்ற நச்சுயிரி, ஏறத்தாழ எச்.ஐ.வியையும் (மஞ்சள் காமாலை) ஹெப்பாடைடஸ்-பி-ஐயும் போன்றது ஊக்கியாகப் பயன்பட்டுள்ளது. அரதப் பழசான பயனற்ற இந்த நுட்பத்தை மகைகோ தனது தாய் நிறுவனமான மான்சாண்டோவிடம் இருந்து வாங்கியுள்ளது என்கிறார் செராலினி.
குறிப்பாக தண்டு மற்றும் காய்த்துளைப்பானாக உள்ள ஒரு புழுவைக் கொல்வதற்குத்தான் இத்தனை ஏற்பாடு. பூச்சி இனத்தைச் சேர்ந்த Leucinodes orbonalis என்ற உயிரினம் கத்தரியை பெருமளவு தாக்குகிறது. இதற்கு இயற்கைமுறையில் நிறைய கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன. குறிப்பாக முட்டையிடும்போதே அவற்றை அழிக்கக் கூடிய முட்டை ஒட்டுண்ணிகள் உள்ளன. புழுப் பருவத்தின் அவற்றைத் தாக்கக் கூடிய புழு ஒட்டுண்ணிகள் உள்ளன. அத்துடன் இயற்கைப் பூச்சிவிரட்டிகளும் உள்ளன. இவற்றை எல்லாம் கவனிக்காது, மரபீனி மாற்ற விதைகளுக்கு முன்னுரிமை தருவது நமது வேளாண்மையை பன்னாட்டுக் கும்பணிகளுக்கு அடகு வைப்பதாகும். விதைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் கும்பணிகள் தமது வணிக விருப்பங்களுக்கு ஏற்ப சந்தையில் விளையாட முடியும். ஏனெனில் இந்த விதைகளை மறுபடி விதைக்க முடியாத அளவிற்கு மலட்டு தன்மையுள்ளதாக முடிவிப்பு மரபீனிகளைக் (terminater) கொண்டு அவர்கள் ஆக்கியுள்ளனர்.
மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விதைக்கும்போது அதிலிருந்து வரும் மகரந்தத்தூள் சாதாரண கத்தரிச் செடியில் இணையும்போது அதுவும் மலடாகும் வாய்ப்புகள் உள்ளன. மலட்டுத்தன்மையுள்ள காய்களைத் தொடர்ந்து உண்பதால் மலட்டுத் தன்மை வருமா என்பது பற்றிய ஆய்வுகள் இல்லை. அரசு இப்படிப்பட்ட பரிசோதனைகளுக்கு வெறும் 90 நாட்கள் மட்டும் எடுத்துக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் ஒரு கும்பணியே தனக்கான ஆராய்ச்சியை தானே செய்து, அதற்கான ஒப்புதலை அதுவே பெற்றுக் கொள்வது என்பது அறிவியலுக்கும் நீதிக்கும் முரணானது என்கின்றனர். மேலும் ஆய்வில் ஈடுபட்ட அறிவியல் அறிஞர்கள் யாரும் இந்த ஆய்வறிக்கையில் கையப்பம் இடவில்லை என்றும், இதில் மிக மோசமான கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் செராலினி கூறுகிறார்.
அதுமட்டுமல்லாது இந்தக் கத்தரியானது எதிர்உயிர்மிகளை (antibiotics) எதிர்கொள்ளும் எதிர்ப்பாற்றல் திறன் பெற்றுள்ளதாக இருக்கும். அதாவது நோய்க்குக் கொடுக்கும் எதிர்உயிர்மிகள் செயல்பட முடியாதவாறு செய்துவிடும். இந்தக் காயை உண்ணும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் எதிர்உயிர்மிகளை எதிர்க்கும் ஆற்றல் வந்துவிட்டால், பிறகு சாதாரண எதிர்உயிர்மி மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது போகலாம். நமக்கு எந்த நோயையும் குணப்படுத்த முடியாது போகலாம். எலிகளுக்கு இதைக் கொடுத்துப் பார்த்ததில் அவற்றுக்கு வயிற்றுப் போக்கு, எடைக்குறைவு போன்ற துன்பங்கள் ஏற்பட்டதாக தெளிவாகிறது.
அதுமட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் 2000க்கும் மேற்பட்ட கத்தரி வகைகள் உள்ளன. இந்தப் உயிர் பன்மயத்திற்கு (Biodiversity) ஆபத்து ஏற்பட்டுவிடும். அதாவது மலட்டுக் கத்தரிக்காயின் மகரந்தம் இணைந்து மரபீனிய மாசுபாடு ஏற்பட்டால், இந்த வளமான மரபீனிய வளம் பாதிக்கும். இதனால் இப்போது ஏற்பட்டுவரும் பருவநிலை மாறுபாடுகளுக்கு ஏற்ற பயிரினங்கள் அழிந்துபோக வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் அமெரிக்காவில் பன்றிகளுக்குக் கொடுக்கும் மக்காச்சோளத்தில் தடுப்புமருந்து கொடுப்பதற்கான மரபீனியை இணைத்துவிட்டனர். இதன் விளைவாக ஐந்து லட்சம் டன் சோயா மொச்சை மாசுபட்டது.
மரபீனி மாற்றப் பயிர்களால் ஏற்படும் மற்றொரு ஆபத்து அதனால் உருவாகும் மீமிகைக் களைகள் (super weeds). இவை எந்த பூச்சிகளுக்கும் கட்டுப்படாமல் வளரலாம். இதனால் பிற பயிரினங்களைச் சாகுபடி செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்படும். ஏற்கனவே ஆந்திரா போன்ற மாநிலங்களில் பா-து பருத்திச் சாகுபடியாளர்கள் கடுமையான பொருளியல் நெருக்கடியால் தற்கொலைக்கு ஆளாயினர். இப்போது கத்தரிச் சாகுபடியாளர்களைக் குறிவைத்து காய்களை நகர்த்துகின்றனர். பா-து பருத்தியின் தோல்வி பற்றிய எவ்வித வெள்ளை அறிக்கையும் கொடுக்காமல் கத்தரிக்குத் தாவியுள்ள ஒப்பேற்புக் குழுவின் நடவடிக்கைகளை என்னவென்று சொல்வது?
சுற்றுச்சூழல் அமைச்சர் மரபீனிப் பொறியியல் ஒப்பேற்புக் குழுமத்தின் ஏற்புக்குப் பின்பு அறிவியலாளர்கள், தன்னார்வ அமைப்புகள், உழவர் அமைப்புகள் போன்ற அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து பின்னர் முடிவெடுப்பதாக அறிவித்துள்ளார். மக்கள் மீதும் மண்ணின் மீதும் அக்கறை கொண்டோர் அனைவரும் இந்த அறிவியல் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
- வற்றிப் போகும் காவிரி
- கடலின் மீது ஒரு சுமை
- கார்பன் டை ஆக்சைடை கைப்பற்ற....
- பச்சை நிழல்
- நியூட்ரினோ ஆய்வகம் - வரமா? சாபமா?
- பட்டாசு வெடிக்கலாமா?
- சமையல் அறையிலும் சூழலை காக்கலாம்
- அணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்
- அவசரக் கத்திரி - அறிவியல் அநீதி
- அழிவின் விளிம்பில் பவளப் பாறைகள்
- BPA என்னும் நஞ்சு
- பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
- உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!
- ஆல்கா பெட்ரோல்
- வளிமண்டலத்தை தூய்மைப்படுத்தும் மழைக் காடுகள்
- சாகிறதா சாக்கடல்?
- கொள்ளை போகும் தண்ணீர்
- சூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்
- காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகள் - தர்மசங்கடமான உண்மைகள் சமரசங்கள் தீர்வைத் தருமா?
- எலும்புகள்