ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உலகமுழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் சில பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. மீதமுள்ள பொருட்கள் ஆங்காங்கே அப்படியே பூமியில் புதைக்கப் படுகிறது அல்லது கடலில் கொட்டப்படும் அவலநிலை தான் உள்ளது என்பதை நாம் அறிவோம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் கழிவுகள் சிதைவடைய (decompose) கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் எடுக்கும். தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ஒரு வகை பூஞ்சைகள் சில மாதங்களில் பிளாஸ்டிக்கை உணவாக உட்கொண்டு சிதைவடையச் செய்கிறது.

plastic wasteஅமேசான் வனப்பகுதியில் இருக்கும் 'Pestalotiopsis microspora' என்ற ஒரு வகை பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை மக்கச் செய்து அதை உண்பதாகத் தெரிவித்துள்ளனர் Yale University -யின் நுண்உயிரியல் ஆராய்ச்சியாளர்கள். ஒரு கட்டுப்படுத்த சோதனைக் கூடத்தில் Polyester Polyurethane (PUR) -ஐ உணவாக உட்கொள்ளும் பூஞ்சைகள் (Fungi) அதிகமாக வளரச் செய்து இந்த சோதனையை நிகழ்த்தி உள்ளனர்.

"இந்த வகை பூஞ்சைகள்/ காளான்கள் இரண்டு மாதத்தில் சிறிய அளவிலான பிளாஸ்டிக்கை மக்கச் செய்து கரிம உரமாக (organic compost) மாற்றுகிறது. எதிர்காலத்தில் இந்த முறையைப் பயன்படுத்தி அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகளை சூழலியலுக்கு ஏற்றவாறு மாற்ற முடியும்" என்றார்கள்.

Polyester Polyurethane (PUR) எனும் மூலக்கூறுகள் தான் உலகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுவது ஆகும். (https://loe.org/shows/segments.html?programID=20-P13-00003&segmentID=5)

மற்றொரு ஆய்வு என்னவென்றால், 2015 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் யுட்ரெச்ட் பல்கலைக் கழக நுண்உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் (Utrecht University in the Netherlands) பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வளர்த்த காளான்களை மனிதர்கள் உண்ணும் உணவாக மாற்றினார்கள். அதற்காக அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் Han Wösten பரிசும் பெற்றார். "இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக் குப்பைகளும் அடங்கும். அதே வேளையில் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை வைத்து காளான் வளர்ப்பு என்பது ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சி. சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் உணவுத் தேவைகளை இவ்வகையான காளான்கள் ஓரளவுக்குப் பூர்த்தி செய்யும்" என்றார் அவர். (https://www.uu.nl/en/news/prestigious-braunprize-for-converting-plastic-into-food)

ஆனால், சூழலியல் ஆர்வலர்களால் மற்றொரு கேள்வி எழுவது என்னவென்றால், "இவ்வாறு காளான்களை/ பூஞ்சைகளை வளர்ப்பது பிளாஸ்டிக் உற்பத்தியை கட்டுப்படுத்துமா? இல்லை, அவர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு ஜனவரியில் சீனா ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதாவது, "தங்கள் நாட்டில் இறக்குமதி ஆகும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு இனி தடை விதிக்கப்படும். தங்கள் நாடு இனிமேல் பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கப் போவதில்லை. பிளாஸ்டிக் குப்பைகளை கையாளுவது சிரமமாக இருப்பதாகவும், மறுசுழற்சி செய்ய அதிக செலவுகள் பிடிக்கிறது. அதற்காகவே இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்று அறிவித்தார்கள். உலக நாடுகளில் இருந்து தோராயமாக 70% -க்கு மேல் பிளாஸ்டிக் குப்பைகள் சீன நாட்டிற்குத் தான் மறுசுழற்சிக்காகச் செல்கிறது. அதில் அதிகப்படியாக அமெரிக்கா மட்டும் 700,000 டன் பிளாஸ்டிக் குப்பைகளை சீனாவுக்கு ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சீன நாடு ஆண்டுக்கு சுமார் 7 மில்லியன் டன் குப்பைகளை இறக்குமதி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. சீனாவின் இந்தத் தடைக்கு பிறகு வளர்ந்த நாடுகள் இப்போது பிற ஆசிய நாடுகளைத் தேட ஆரம்பித்துள்ளனர்.

வளர்ந்த நாடுகளில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகள் ஆசியாவின் பிற நாடுகளில் குறிப்பாக மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.

"இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 15 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உற்பத்தியாகிறது. இதில் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர மீதமுள்ளவை மறுசுழற்சிக்கு உட்படுத்தப் படுவதில்லை" என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டக் குழு (United Nations Development Programme (UNDP) India). இது இந்தியாவின் Waste management system சரியாக செயல்படாததே காரணம் என்பது வருத்தமான செய்தி.

சூழலியலைப் பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். அதேவேளையில், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதிய வாழ்வியலை நோக்கிப் பயணிக்கும் நிலை வர வேண்டும்.

- பாண்டி

Pin It