தமிழகத்தில் 1998 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை சொத்துவரி உயர்த்தப்படாத காரணத்தினால் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி இல்லை என்றும், ஆதலால் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்ற வாதம் தமிழக அரசினால் முன்வைக்கப்பட்டது.  இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சொத்துவரியை உயர்த்த ஆணையிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு சொத்து வரியை 50% லிருந்து 100% வரை உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவு அக்டோபர் மாதத்தில் இருந்து  நடைமுறைக்கு வரும்.                          

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி ஆகியவை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக குப்பைக்கும் கூட வரி வசூலிக்கப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை 12 லட்சம் பேர் குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத கட்டிடங்களின் பேரில் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.540 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டப் படுகிறது. இதே போல், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப் பட்டு வருகிறது. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்குச் சொத்து வரி 50 விழுக்காடு உயர்த்தியும், வாடகை குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100 விழுக்காடு உயர்த்தியும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 விழுக்காட்டுக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்தி வசூலிக்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

IT 600இன்றைய சூழலில் தமிழகத்தில் வீட்டு வாடகை எந்த வரைமுறையும் இல்லாமல் வீட்டு உரிமையாளர்களால் வசூலிக்கப்படுகிறது. இச்சொத்து  வரி உயர்வு என்பது  வாடகை வீட்டில் குடியிருப்பவர்களை மிகக் கடுமையாக பாதிக்கும். காரணம் இந்த வரி அவர்கள் தலையில்தான் சுமத்தப்படும்.  இதனால் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதுமட்டுமல்லாமல்  கடை உட்பட வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீதம் மிகாமல் வரி விதிக்கப்படுவதால் வாடகை குடியிருப்பிலுள்ள  சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்கள்  அதிக வாடகை கொடுக்க வேண்டி வரும்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாததால் கடந்த ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய ரூ.3,558 கோடி நிதியை இந்திய அரசு  நிறுத்தி வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒவ்வொரு ஆண்டும் தமிழக உள்ளாட்சிகள் சுமார் ரூ.4,000 கோடியை இழக்கும். உள்ளாட்சித் தேர்தலை  நடத்தாததால் ஏற்படும் இழப்புடன் ஒப்பிடும் போது சொத்துவரியை உயர்த்தாததால் ஏற்படும் இழப்பு என்பது மிக மிகக் குறைவு ஆகும்.

இப்படியிருக்க எதற்காக இந்த சொத்து வரி உயர்வு? தமிழ்நாட்டின் நிதி ஆதாரங்கள் அனைத்தும் இந்திய அரசால் திட்மிட்டு, மிக வேகமாக சூறையாடப்பட்டு வருகிறது. மோடி கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு மாநில அரசுகளின் முக்கியமான வரி வருவாய்களை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு சென்றுவிட்டது. சாராயம், பேருந்து கட்டணம், எரிபொருள், சொத்துவரி ஆகியவற்றை உயர்த்தி தன்னுடைய வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டிய இழிவான நிலையில் உள்ளது தமிழக அரசு.

இதனால் தமிழக மக்கள் தலையில் மேலும் மேலும் சுமையேற்றப்படுகிறது. தமிழகத்தின் மீதான இந்திய அரசின் இத்தகைய நிதி சூறையாடலுக்கு முடிவு கட்டவில்லையென்றால் விலைவாசி உயர்வையும், வரி உயர்வையும் தடுத்திட முடியாது.

Pin It