ஒன்றிய அரசின் வரிப்பகிர்வு கொள்கை மூலம் வரி அதிகம் செலுத்தும் தென் மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு குறைவாகவும், வரி குறைவாகச் செலுத்தும் வடமாநிலங்களுக்கு அதிக வரிப்பகிர்வு அளிக்கப்படுவது குறித்தும் வில்சன் எம்.பி. மாநிலங்களவையில் பதிவிட்டுள்ள தகவல்கள் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

wilson dmk mpவில்சன் எம்.பி. அவரது x சமூக வலைதளப் பக்கத்தில், “ ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரியில், ஒன்றிய அரசு தென்மாநிலங்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுகிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா போன்ற தென்மாநிலங்கள், ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் பங்களித்த மொத்த வரி ரூபாய் 22 லட்சத்து 26 ஆயிரத்து 983.39 கோடி.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தால் பங்களிக்கப்பட்ட தொகை ரூபாய் 3 லட்சத்து 41 ஆயிரத்து 817.60 கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட தென்மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் மொத்தம் ரூபாய் 6 லட்சத்து 42 ஆயிரத்து 295.05 கோடி. உத்தரப் பிரதேசத்துக்கு விடுவிக்கப்பட்ட தொகை 6 லட்சத்து 91 ஆயிரத்து 375.12 கோடி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பெறப்பட்ட வரி விவரம் குறித்தும், வரி ஒதுக்கீடு குறித்தும் மாநிலங்கள் அவையில் வில்சன் எழுப்பிய கேள்விகளுக்கு, ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி பதில் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒவ்வொரு மாநிலமும் செலுத்திய ஒரு ரூபாய் அடிப்படையில், மத்திய அரசு திருப்பி அளித்த தொகை குறித்த விவரங்களைப் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு 26 பைசா, கர்நாடகம் 16 பைசா, தெலுங்கானா 40 பைசா, கேரளா 62 பைசா, மத்திய பிரதேசம் 1 ரூபாய் 70 பைசா, உத்தரப் பிரதேசம் 2 ரூபாய் 2 பைசா, ராஜஸ்தான் 1 ரூபாய் 14 பைசா” திரும்பக் கிடைப்பதாகப் பதிவிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் வரிப்பகிர்வு குறித்த இந்தத் தகவல் தற்போது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

(நன்றி: முரசொலி)

Pin It