எது தகுதி? தகுதியை வரையறை செய்யும் ஒருபடித்தான கொள்கை வடிவமைக்கப்படவில்லை. இருப்பினும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சமூகப் பொருளாதார மதிப்பு இந்த வரையறுக்கப்படாத கொள்கையின் அடிப்படையில் தான் மதிப்பிடப்படுகிறது.

தகுதிக்கான எந்தவொரு நிலையான வரையறையும், பெற்றோரின் பின்னணி, கல்வித் தகுதி, பொருளாதாரம், தொழில்கள், உடல்நிலை, இருப்பிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய "குடும்பப் பாரம்பரியம்" பற்றிய கட்டுக்கதைக்குத் தான் மீண்டும் மீண்டும் வழிவகுக்கிறது. இந்தச் சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நாம் சொல்லி புரிய வைக்கத் தேவையில்லை. பின்னர் அவர்களே தகுதி வாய்ந்தவர்கள், திறமையானவர்கள், சிறந்தவர்கள், அறிவானவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பல ஆண்டுகளாக தலித்களையும், பழங்குடிகளையும் பிற்படுத்தப்பட்டவர்களையும், பெண்களையும் சரஸ்வதியின் அருளைப் (கல்வி கற்க விடாமல்) பெற விடாமல் தடுப்பதற்கு முதன்மைக் கருவியாக மேற்சொன்ன தகுதி இருந்து வருகிறது. ஏகலைவனின் கட்டைவிரலின் மேல் தான், தகுதி எனும் பெருங்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவுகூர வேண்டும்.

எதேச்சதிகார இந்திய சமூகத்தை காலனியம் முரட்டுத்தனமாக தாக்கியது. அடிமைத்தனமான அதிகாரத்துவத்தை (ஆங்கில அரசுக்கு சேவை செய்யும் நிர்வாக அமைப்பை) உருவாக்க, ஆங்கிலேயர்கள் கல்வியில் முதலீடு செய்தனர். படிப்படியாக, கல்வியும் அறிவும் மதச்சார்பற்றதாக மாறியது. ஜோதிபா பூலே, சாவித்திரிபாய் பூலே, அயோத்திதாச பண்டிதர், பண்டிதா ரமாபாய், பேகம் ரோகேயா, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட பலரால் வேத மரபுகள் விமர்சிக்கப்பட்டன. பழமையான பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக தீவிர அறிவுசார் போர்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் பெண்களும் தலித்-பகுஜன்களும் கல்வியெனும் அறிவுக்கடலில் எதிர் நீச்சல் போடத் துவங்கி விட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு, பட்டியலின, பழங்குடியினரின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்காக, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடுகளை அரசியலமைப்பு வழங்கியது.
modi in ayodyaஅரசியலமைப்பு விதிகள்:

ஜனவரி 26, 1950 அன்று, இந்தியா தனது டொமினியன் நிலையை முடித்துக் கொண்டு, இறையாண்மை பெற்ற குடியரசாக மாறியது, மேலும் அதன் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஓடுக்கப்பட்ட அல்லது குறைவான பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ள சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு, இட ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான அரசின் பொதுக் கொள்கைகள் சமத்துவம், நீதி, ஜனநாயகம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகின்றன. உயர்கல்வியில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு நடவடிக்கைகளின் அடிப்படை இலக்குகளாக கடந்தகால பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், சமூகத்தின் ஆதிக்க பிரிவினர்களிடம் குவிந்து கிடக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுபகிர்வு செய்தல், சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை ஊக்குவிப்பது, பின்தங்கிய வகுப்பினரை சமுதாயத்தில் சிறந்த பதவிகளை பெறச் செய்வது, திறமை மற்றும் உற்பத்தித் திறன் அடிப்படையில் மாணவர்களை மதிப்பீடுதல், கல்வி வளாகங்களில் இடம்பெறுகிற பல்வேறு வகைப்பட்ட மாணவர்களுக்கு உயர்தர கல்வி மற்றும் கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், வேலை, தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு பயனுள்ள தொடர்புகளின் அடிப்படையில் சமூக மூலதனத்திற்கான கதவுகளை திறந்து விடுதல், சமூகத்தின் உயரடுக்கில் உள்ளவர்களோடு ஒருங்கிணைப்பதற்காக மேம்பட்ட வாய்ப்புகளை உருவாக்குவது, சட்டபூர்வமான, ஜனநாயக ஒழுங்கை வளர்ப்பது போன்றவை உள்ளன.

அரசியலமைப்பின் ஒரு முழுப் பிரிவும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(1) மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் காட்டப்படும் அனைத்துப் பாகுபாட்டையும் தடை செய்கிறது. அரசு நடத்தும் கல்வி கூடங்கள், உணவகங்கள், பொது வேலை வாய்ப்புகள், பொதுக் கிணறுகள், தண்ணீர்த் தொட்டிகள், சாலைகள் போன்ற அனைத்து பொது நிறுவனங்களுக்கும் இப்பிரிவு பொருந்தும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 17 தீண்டாமைப் பழக்கத்தை தடை செய்து சட்ட விரோதமாக அறிவிக்கிறது. பாகுபாட்டைத் தடைசெய்யும் பிரிவு 15 இன் துணைப்பிரிவான 15(1), "பட்டியலின, பழங்குடியின, சமூக ரீதியாகவும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக எந்தவொரு சிறப்பு ஏற்பாடுகளையும் திட்டங்களையும் செயல்படுத்தும் அதிகாரத்தை ஒன்றிய, மாநில அரசாங்கங்களுக்கு தருகிறது. 1951 ஆம் ஆண்டில், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த செண்பகம் துரைராஜன் என்பவர் தொடுத்த வழக்கில் அன்றைய சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டத்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செல்லாது என்று அறிவித்த சில வாரங்களுக்குள் 15(1) என்ற புதிய துணைப்பிரிவை அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கும் இந்த ஏற்பாடு சேர்க்கப்பட்டது. இந்தச் சட்டத்திருத்தத்தின் வேகம் இட ஒதுக்கீட்டுக்கு அன்றிருந்த வலுவான அரசியல் ஆதரவைக் குறிக்கிறது. இதேபோல், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16, "பொது வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கோடு", அரசுத் துறைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்ட குடிமக்களுக்கு ஆதரவாக பணி நியமனங்கள் அல்லது பதவிகளை இட ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கும் பிரிவுகளையும் - 16(4), அரசுத் துறை நிறுவனங்களில் பட்டியலின, பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் பிரிவுகளையும் -16(4A) கொண்டுள்ளது.

அரசியலமைப்பின் ஒரு தனிப் பிரிவு (330) பாராளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அனுமதிக்கிறது. இப்பிரிவின் கீழ் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான இடங்களின் எண்ணிக்கையானது, மிகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்தியக் குடியரசுத் தலைவரும் நாடாளுமன்றமும் இணைந்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, பட்டியல் சாதிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனத் தகுதிபெறும் குழுக்களின் பட்டியலைத் தீர்மானிக்கின்றனர். வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பின் 335 ஆவது பிரிவு, "நிர்வாகத்தின் செயல்திறனை தொடர்ந்து பராமரிப்பதுடன், பட்டியலின சாதிகள் மற்றும் பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்" என்று ஆணையிடுகிறது.

இறுதியாக, பட்டியலின, பழங்குடி வகுப்பினருக்கான சமூகப் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட திட்டங்களின் கீழ் பட்டியலின, பழங்குடி வகுப்பினருக்கான முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், ஆலோசனை செய்யவும், மதிப்பீடு செய்யவும் பட்டியலின, பழங்குடி வகுப்பினருக்கான தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டது. சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினரின் சமூக நிலைமைகளை ஆய்வு மற்றொரு ஆணையமும் உருவாக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு குறிப்பிட்ட சாதியினரை அவர்களின் நலனுக்காக அவர்களை வெளிப்படையாக தனிமைப்படுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சாதி, இனம் உள்ளிட்ட அனைத்து அளவுகோல்களின் அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்யும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவோடு குறிப்பிட்ட சாதியினருக்கு தனிச் சிறப்பு முன்னுரிமை அளிக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டப் பிரிவுகள் முரண்படுகின்றன. மேலும், பிறப்பின் மூலம் படிநிலையைத் தீர்மானிக்கும் இந்தியாவின் சாதி அமைப்பு, சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் ஆதரவான கொள்கைகளுக்கும் முரணாக உள்ளது

இட ஒதுக்கீடுகள் நேர்மறை பாகுபாட்டை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளாக இருக்கலாம் ஆனால் அனைத்து வகை இட ஒதுக்கீடுகளும் நேர்மறை பாகுபாட்டை ஊக்குவிக்கும் செயல்கள் இல்லை. இருப்பினும், இட ஒதுக்கீடு அனைத்து வழிமுறைகளும் சாதி, வர்க்கம், மதம், பாலினம் அல்லது இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள், குறிப்பிட்ட தனிநபர்கள், குழுக்கள் அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான கடந்தகால அரசாங்க, சமூகப் பாகுபாட்டை "சரிசெய்வதை" நோக்கமாகக் கொண்டுள்ளன. பின்தங்கிய வகுப்பினர் அனைவரும் எந்த வித தவறுகளும் செய்யாமலே, நியாயமற்ற, இழிவான, பாரபட்சமான செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். நேர்மறையான இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் சிறப்பு நடவடிக்கைக்கான நோக்கம் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படலாம் அல்லது குறிப்பிடப்படாமல் இருக்கலாம். ஆனால் மோசமாக நடத்தப்பட்ட, பாரபட்சம் அல்லது ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் என்ற அர்த்தத்தில் "நேர்மறை நடவடிக்கை" அல்லது "நேர்மறையான பாகுபாடு" பற்றி பேசுவது பொதுவானது. இது உள்ளார்ந்த சமூக-பொருளாதார, கலாச்சாரப் பண்புகளின் காரணமாக அல்லது சாதி, வர்க்கம், மத அடிப்படையிலான சிறுபான்மையினரை அதிகாரத்தில் இருப்பவர்கள் பாகுபடுத்துவதை தடுக்கிறது.

சட்டத்தாலும் சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட வாய்ப்பு மறுத்தலின் விளைவாக பரந்த எண்ணிக்கையிலான தலித்-பகுஜன்கள் பழங்குடி மக்களை கலாசார, சமூக மூலதனம் இல்லாத ஏழ்மை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டனர். இவ்வாறு ஏற்பட்ட சமூக இடைவெளியைக் குறைக்கும் வகையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் கண்ணியத்தை மீட்டமைக்கும் விதமாக இட ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் அரசியலமைப்பின்படி செயல்படுத்தப்பட்டன. அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அளிக்கும், நவீனமயமாக்கும் சக்தியாக நீண்ட காலமாக கருதப்படும் கல்வி சமூக நீதி பிரச்சாரத்தின் முக்கிய பகுதியாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் கல்விக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய தார்மீகக் கடமையை இந்திய அரசு அங்கீகரித்தாலும், அது இன்றும் நனவாகாத ஒரு கனவாகத் தான் உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகள் அவர்களுக்கு அன்னியமான பாடத்திட்டத்துடன் மட்டுமல்ல, சமூகத்தில் வேரூன்றி இருக்கும் கல்வியியல் தப்பெண்ணங்களையும் எதிர்த்துப் போராட வேண்டி இருக்கிறது.
1989 ஆம் ஆண்டில் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக வி.பி.சிங் அரசு அறிவித்தபோது பொது வெளியில் இட ஒதுக்கீடு பற்றிய விவாதம் தீவிரமடைந்தது. பரவலான இட ஒதுக்கீடு எதிர்ப்பு சிந்தனைகளுக்கு வழிவகுத்தது. மேலும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மற்றும் அதன் செயல்திறன் பற்றிய விவாதத்தை புதுப்பித்தது.

தகுதியும் வெறுப்பின் மொழியும்

டெல்லியில் மண்டல் எதிர்ப்புப் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ​​டெல்லித் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் கல்லூரி மாணவிகளை உள்ளடக்கிய புகைப்படங்களை செய்தித்தாள்கள் வெளியிட்டன. அவர்கள் ‘வேலையில்லா கணவர்கள் எங்களுக்கு வேண்டாம்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர். மாணவிகள் தங்களுக்காக அல்ல, தங்களின் வருங்கால கணவர்களின் சார்பாக போராட்டம் நடத்தினர்கள். லக்னோவில், மருத்துவ மாணவர்களும், மற்ற துறை மாணவர்களும் செருப்புகளை பாலிஷ் செய்தும், கார்களை சுத்தம் செய்தும், ரிக்சா ஓட்டிக்கொண்டும் ஊர்வலம் சென்றனர். அரசாங்கம் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தால், அவர்கள் நிலை இப்படித்தான் ஆகும் என்பதை உணர்த்துவதற்காக இவ்வகையான போராட்டங்கள் செய்யப்பட்டன. பொது இடங்களில் செய்யப்பட்ட இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகள் அறிவுசார் வளங்களின் மீதான தங்கள் பிடியை விட்டுக்கொடுக்க விரும்பாத உயர்சாதி 'தகுதிசார்' கூட்டத்தின் மத்தியில் பொதிந்துள்ள ஆதிக்க உணர்வை பிரதிபலிக்கிறது. இப்படிப்பட்ட நியாயமற்ற போராட்டங்களின் விளைவாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தடை செய்யப்பட்டது. அதனால் கல்வித்துறையில் தலித்-பகுஜன்களின் பிரதிநிதித்துவம் குறைவான அளவிலேயே இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST, OBC வகுப்பினரின் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய 27% OBC, 15% SC, 7.5% ST இடங்களை ஒதுக்க இன்று வரை (2019 ஆண்டு நிலவரம்), 200 பாயிண்ட்ஸ் ரோஸ்டர் முறை (200 Points Roaster Method) பயன்படுத்தப்படுகிறது.

200 பாயிண்ட்ஸ் ரோஸ்டர் முறைப்படி அனைத்து மத்தியப் பல்கலைக் கழகங்களிலும் உள்ள அனைத்துப் பிரிவு ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான பின்வரும் தரவை, RTI சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக UGC அமைப்பு ஜூன் 30, 2016 அன்று வழங்கியது.

200 பாயிண்ட்ஸ் ரோஸ்டர் முறை நியாயமான வகையில் செயல்படுத்தப்பட்டால், 200 பதவிகளில் 99 இடங்கள் SC, ST, OBC வகுப்பினருக்கும், மீதம் உள்ள 101 இடங்கள் பொதுப் பிரிவினருக்கு பிரித்து தரப்படும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்த முறையை தவறானது என்று உத்தரவிட்டு, இட ஒதுக்கீடுகளை துறை வாரியாகப் அமுல்படுத்த உத்தரவிட்டது. அதன்படி 13 பாயிண்ட்ஸ் ரோஸ்டர் முறை மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. இம்முறை SC, ST, OBC வகுப்பினரை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலிருந்து தடுத்தே வைத்திருக்கும். ஒவ்வொரு துறையை ஒரு அலகாகக் கருதினால், ஏழு இடங்களுக்குக் குறைவான உள்ள இந்திய வரலாறு, ஐரோப்பிய வரலாறு, இடைக்காலம், நவீனம், பண்டைய வரலாறு போன்ற சிறப்புப் பிரிவுகளைக் கொண்ட துறைகள், சிறப்புப் பகுதி ஆய்வுத் திட்டங்கள், இடங்கள் போன்ற சிறிய துறைகளில் SC, ST, OBC வகுப்பினருக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்.

எவ்வாறாயினும், ஆசிரியர் ஆட்சேர்ப்பில் தற்போது நிலவும் பின்னடைவு குறித்தும், இந்த பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்படும் என்பது பற்றியும் அலகாபாத நீதிமன்றம் குறிப்பிடத் தவறிவிட்டது. இது தொடர்பாக UGC அமைப்பு ஒன்றிய அரசின் மனித வள அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பி குறிப்பிடுகிறது. மாறாக, UGC இந்த முடிவை செயல்படுத்த தானாகவே முன்வந்தது.

பனராஸ் இந்து பல்கலைக் கழகம், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகங்கள் (CUP), தமிழ் நாட்டு மத்தியப் பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைக்கழகங்கள் ஆசிரிய ஆட்சேர்ப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டன. பஞ்சாப் மத்தியப் பல்கலைக்கழம், 1 ஜூலை 2018 அன்று (விளம்பர. எண். CUPB/18-19/003) வெவ்வேறு துறைகளில் 57 பதவிகளுக்கு விளம்பரம் செய்தது. அதில், 15 பேராசிரியர்கள், 25 இணை பேராசிரியர்கள், 12 உதவி பேராசிரியர்கள் இட ஒதுக்கீட்டிற்குள் வராத பொதுப் பிரிவினருக்கு தரப்பட்டன. வெறும் இரண்டு இடங்கள் OBC பிரிவினருக்கும், வெறும் 3 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும் கொடுக்கப்பட்டு இருந்தன.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (விளம்பர.எண் 04/2018, தேதி 14/06/2018) விளம்பரப்படி, காலியானது என அறிவிக்கப்ப்பட்ட 39 பதவிகளும், இட ஒதுக்கீட்டிற்குள் வராத பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டன. ஒரே ஒரு பிரிவின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. ராஜஸ்தானின் மத்திய பல்கலைக்கழகம் (Advt No, CURAJ/R/F.99/2018/761, தேதியிட்ட 25 மே 2018), 33 பதவிகளுக்கு ஆட்சேர்க்க விளம்பரம் செய்தது. விளம்பரம் செய்யப்பட்ட அனைத்து காலி இடங்களும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டன. அதே பிரிவில், மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

மோடினோமிக்ஸ் ஒரு பகுப்பாய்வு:

கருத்தியல் ரீதியாக, RSS-பாஜக அரசு இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது, ஏனெனில் இட ஒதுக்கீடு அவர்களின் ‘இந்து ஒருங்கிணைப்பு’ கருத்தாக்கத்திற்கு எதிரானது. பாஜகவினர் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டால், இந்து மதத்தில் சாதி இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பாஜகவின் அகண்ட பாரதமும் மண்டலும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. கடந்த சில வருடங்களாக படேல்கள், ஜாட்கள், மராத்தாக்கள், காபு உள்ளிட்ட சாதியினரின் தொடர்ச்சியான போராட்டங்களின் பிண்ணனியில், அவர்களைத் திருப்திபடுத்தும் வகையில், உயர் சாதியினரிடையே பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% EWS இட ஒதுக்கீடு வழங்குவதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. பாஜகவின் இந்த புதிய 10% EWS இட ஒதுக்கீட்டுக் கொள்கை முரண்பாடுகள் நிறைந்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாத நிலையில், நலிவடைந்த பிரிவினரை எப்படி கணக்கெடுக்கப்படுகிறார்கள்? நகர்ப்புறங்களில் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களின் சொத்து மதிப்பு கோடிகளில் இல்லையென்றாலும் லட்சங்களிலாவது இருக்கும். இந்தியாவில் (2019 ஆண்டின்) வருமான வரி உச்சவரம்பின்படி, ஒருவரின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சமாக அல்லது அதற்கு மேலாக இருந்தால், வருமான வரிச் செலுத்த வேண்டும். அப்படியென்றால், ஆண்டுக்கு எட்டு லட்சம் வருமானம் கொண்ட ஒருவர் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை என்பதை எப்படி நியாயப்படுத்துவது? மாநில அல்லது மத்திய பல்கலைகழகத்திலும் உதவிப் பேராசிரியர் கூட ஆண்டுக்கு எட்டு லட்சம் சம்பாதிப்பதில்லை. 8 இலட்சம் வருமானம் கொண்ட OBC கிரிமி லேயர் ஆகிவிடுகிறார். ஆனால் மோடி அரசின் 8 இலட்ச ரூபாய் ஏழை கதையை எப்படி பகுப்பாய்வு செய்வது?

இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை (15, & 16) மீறுகின்றன. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீட்டிற்கான மசோதாக்கள் பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, ​​48 மணி நேரத்திற்குள், 10% EWS இட ஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் விரைந்து நிறைவேற்றப்பட்டது. சமீபத்தில் (2018) நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பின் உயர் சாதியினரை திருப்திப்படுத்தவா இந்த ஏற்பாடு? UGC அமைப்பும், ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரவையும் நடப்பு கல்வியாண்டிலிருந்து (2019) புதிய 10% EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்த விரைவாக நடவடிக்கை எடுத்தன. SC, ST, OBC பிரிவுகளில் உள்ள பின்னடைவு காலியிடங்கள் இன்னும் கணக்கிடப்பட்டு நிரப்பப்படாமல் இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இந்தப் பணியிடங்களை நிரப்புவதில் பார்ப்பன மேலாதிக்க நிர்வாகங்கள் ஆர்வம் காட்டவில்லை.

ஜனவரி 29, 2019 அன்று, மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் ‘தேர்வுகளின் மீதான சர்ச்சை’ (Pareeksha Pe Charcha) என்ற தலைப்பில் தேர்வுகள் தரும் மன அழுத்தத்தைப் பற்றி மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் பணமதிப்பு நீக்கம் எனும் நள்ளிரவுக் கொள்ளை, ரிசர்வ் வங்கி மற்றும் சிபிஐ நெருக்கடி, கும்பல் படுகொலைகள், குடியுரிமை சட்டத் துயரங்கள் (CAA), சமூகத்தில் காணப்படும் பரவலான பெண் வெறுப்பு ஆகியவற்றின் மூலம் இந்த தேசம் அனுபவித்த மன அழுத்தத்தை பற்றி யார் பேசப் போவது?

டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அதை சார்ந்த கல்லூரிகளில் சுமார் 5000 தற்காலிக ஆசிரியர்களும் கவுரவ ஆசிரியர்களும் உள்ளனர். அவர்களில் சிலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக கற்பித்து வருகின்றனர். அவர்கள் 200 பாயிண்ட்ஸ் ரோஸ்டர் முறைப்படி வேலை பெற்றனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் 13 பாயிண்ட்ஸ் ரோஸ்டர் முறை அமல்படுத்தப்பட்டால், அவர்களில் 90% பேர் வேலை இழந்து விடுவார்கள். பல ஆண்டுகள் கடுமையாக படித்து, முனைவர் பட்டம் பெற்று, பல ஆண்டுகள் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தை அடைய கடினமாக உழைத்த பிறகும் அவர்கள், மோடி சொல்வதைப் போல, ‘பக்கோடா’ விற்கும் சுயதொழில் தான் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கண்ணிலிருந்தும் கண்ணீரைத் துடைப்பதே தனது வாழ்க்கையின் நோக்கம் என்பதை காந்தி குறிப்பிட்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற நேரு ஆற்றிய முதல் உரையில் (Tryst with Destiny), “ஒவ்வொரு கண்ணிலிருந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளியையும் துடைப்பதே நம் தலைமுறையின் தலைசிறந்த மனிதர்களின் லட்சியம். அந்த இலட்சியம் நமக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம், ஆனால் கண்ணீரும் துன்பமும் இருக்கும் வரை நம் பணி முடிந்து விடாது" என்றார். கோல்வால்கர் மற்றும் சாவர்க்கரின் வழித்தோன்றல்களே, ”வரலாற்றை மறந்தால் சரித்திரம் படைக்க முடியாது” என்று அம்பேத்கர் கூறியதை நினைவில் கொள்ளுங்கள்.

முனைவர் சுகுமார்

நன்றி: RoundtableIndia.co.in இணையதளம் (2019, ஜனவரி 31 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: ஆயிஷா உமர்

Pin It