ஒருமுறை பெரியாரிடம், அவரது கட்சியின் கொள்கைகளை எப்படி உடனடியாக தெரிந்து கொள்வது, தங்கள் பகுதிக்கு ‘விடுதலை‘ கால தாமதமாக கிடைக்கிறது” என்று ஒருவர் கேட்டார். அதற்கு பெரியார் அவருக்கே உரித்தான முறையில் பதிலளித்தார்: “கவலையே படாதே. காலையில் எழுந்தவுடன் ‘தினமணி‘ படி. அதில் எது சரி என்று சொல்கிறார்களோ அதெல்லாம் தவறு . அவர்கள் தவறு என்று சொல்வதெல்லாம் சரி. இதுதான் நமது கொள்கை” என்றார்.

இப்போதும் இது சரி யாகிறது. சீனாவில் நாணய மதிப்பு குறைந்தவுடன் ‘சீனாவால் ஏற்பட்ட தொல்லை’ என்று தலையங்கம் எழுதுகிறது தினமணி. இதே பத்திரிக்கையில்தான் இப்போது தமிழகமெங்கும் ஆதிக்க சாதி வெறியர்களை ஒன்றிணைத்து பா.ச.க.வின் தலைமையின்கீழ் கொண்டுவர சுழன்று சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கும் எடிட்டர் குருமூர்த்தியின் கட்டுரை சில மாதங்களுக்கு முன்னால் வந்தது. அதில் இந்திய ரூபாய் மதிப்பு குறைவிற்கே சீனாதான் காரணம் என்று எழுதியிருந்தார் .

சாதாரணமாக இந்திய நாணய மதிப்பைக் கவனித்து வருபவர்களுக்கு கூட ஓர் எளிய உண்மை தெரியும். கடந்த ஒரு ஆண்டு காலமாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சடசடவென்று சரிந்து வருகிறது. தற்போது 1 டாலர் 70 ரூபாய்க்கு கீழே போயிவிட்டது. மாமியார் உடைத்தால் மண் பாணை. மருமகள் உடைத்தால் பொன் பானை. சரி பிரச்சனைக்கு வருவோம். சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கியின் சேர்மன் ரகுராம்ராஜன், “ஒவ்வொரு நாடுகளும் தங்களின் நாணய மதிப்பைக் குறைவாகவே வைத்திருந்து தங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சித்து வருகின்றன. இதனையட்டி ஒவ்வொரு நாடுகளும் இப்படி நாணய மதிப்பைக் குறைத்துக் கொண்டே போனால் 1929ல் ஏற்பட்டது போன்ற உலகம் தழுவிய ஒரு பெரும் பொருளாதார சரிவை உலகம் விரைவில் சந்திக்க நேரிடும்” என்றார்.

அவர் என்ன சொன்னாரோ அதன் ஒரு பரிமாணத்தைத்தான் இப்போது நாம் பார்க்கிறோம். சீனா அமெரிக்க டாலருக்கு நிகரான தனது நாணயமான யுவாங்கின் மதிப்பைக் குறைத்துள்ளதுதான் உலகப் பொருளதார அரங்கின் மைய விவாத புள்ளி.

சீனா தனது யுவாங்கின் மதிப்பைக் குறைத்துள்ளதால், அதிகமாக ஏற்றுமதி செய்யும் சீனா மிக மலிவான பொருட்களை உலக சந்தையில் விற்பனை செய்ய முடியும். இதனால் தங்கள் நாடுகளில் பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கமடையும். தொடர்ந்து உற்பத்தி நிறுத்தம், ஆலைமூடல், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும் போன்ற நிலைமை ஏற்படும் என்று அமெரிக்கா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஆனால் உண்மையில் நடைபெற்றது என்ன?

ஒரு நாட்டின் நாணய மதிப்பு மற்றொரு நாட்டின் நாணய மதிப்போது ஒப்பிடப்படுவது பொதுவாக அந்தந்த நாணயங்களின் தேவை - அளிப்பை (Demand - Supply) வைத்தே மதிப்பிடப்படுகிறது.

எடுத்துக்காட்டாக - ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ 70 என்றால் உலக அரங்கில் நமக்கு 70 டாலர் தேவைப்படுகிறது அதே சமயத்தில் நமது ரூபாய் 1 தான் மற்றவர்களுக்கு தேவைப்படுகிறது என்று பொருள். ஒரு வேளை நமது’ ரூபாய் 10 உலக அரங்கில் தேவை என்றால் ஒரு டாலருக்கு 7 ரூபாய்தான் கிடைக்கும் . அதாவது நமது நாணய மதிப்பு கூடிவிடும்

ஆனால் எல்லா சமயங்களிலும் இப்படி நடைபெறுவதில்லை. சந்தை நிலவரப்படி ரூ 70 க்கு 1 டாலர் கிடைக்கிறது என்று அடிப்படையில் 1000 டாலர் மதிப்புள்ள ஒரு இயந்திரத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய ஒருவர் ஒப்பந்தம் செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஒப்பந்தம் செய்து இயந்திரம் வருவதற்கு முன்பாகவே 1 அமெரிக்க டாலருக்கு ரூ 80 என்று நமது ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டால் நிலைமை என்னவாகும். ரூ 70,000 கொடுத்து அந்த இயந்திரத்தை வாங்க நினைத்தவர் தற்போது ரூ 80,000 கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் அவருக்கு ரூ 10,000 கூடுதல் நஷ்டம் ஏற்படும். ஒரு இயந்திர விற்பனைக்கே இவ்வளவு நஷ்டமென்றால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பரிமாற்றம் நடைபெறும் ஒரு நாட்டிற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று யோசித்து பாருங்கள். எனவே இது போன்று திடீர், திடீரென்று ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை நிலைப்படுத்த உடனடியாக அந்தந்த நாடுகளின் மைய வங்கிகள் அந்நிய செலாவனி சந்தையில் தலையிடுகின்றன. எடுத்துக்காட்டாக மேலே கண்டது போன்ற சூழல் ஏற்பட்டால் நமது ரிசர்வ் வாங்கி தன் கைவசம் இருக்கும் டாலர் கையிருப்பில் தேவையான அளவு விற்று ரூபாயாக மாற்றும். இப்போது ரூபாயின் தேவை அதிகரிப்பதால் டாலரின் மதிப்பு குறைந்து பழைய நிலைக்கு திரும்பும்.

இப்படி மைய வங்கிகள் அந்நிய செலாவனி சந்தையில் தனது நாணய மதிப்பைக் காப்பாற்று வதற்காகத் தலையிடுவதைத்தான் அமெரிக்கா இதுவரை எதிர்த்து வந்தது. இப்போதுள்ள நிலைமை வேறு. சீனாவின் ஏற்றுமதி சமீபகாலமாக குறைந்து வருகிறது. இறக்குமதி அதிகரித்து வருகிறது. இன்னொரு வார்த்தையில் சொன்னால் உலக அந்நிய செலவாணி சந்தையில் சீனாவுக்கு அதிகமான டாலர் தேவைப்படுகிறது.

அதே சமயத்தில் உலக அரங்கில் சீன யுவாங்கின் தேவை குறைந்துள்ளது. இதனால் சீனாவின் யுவாங் மதிப்பு டாலரோடு குறைவாகப் போவது இயல்பானதுதான். இதில் சீன அரசு உலக சந்தை நிலவரத்தை ஒட்டியே செயல்படுகிறது. இதைதான் இதுவரை அமெரிக்காவும் வலியுறுத்தி வந்தது. ஆனால் இப்போது எதிர்க்கிறது. ஏனிந்த முரண்பாடு?

ஒரே காரணம்தான். உலக வர்த்தகத்தில் அது நிதி சந்தையாக இருந்தாலும் பொருட்சந்தையாக இருந்தாலும் என்றுமே சுதந்திரமாக செயல்பட்ட தேயில்லை அமெரிக்கா. அதே போன்று தனது நாட்டிலிருந்த தொழில்களை மூடிவிட்டு வெளிநாடுகளில் புதிதாக தொடங்குவதற்கு காரணம் வெளிநாட்டிலிருந்து அதே பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன என்பதல்ல.

எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் வாகன உற்பத்தியின் மையமாக விளங்கிய டெட்ராய்ட் நகரத்தில் இருந்த வாகன உற்பத்தி ஆலைகள் அனைத்தையும் மூடிவிட்டு சென்னை உட்பட வேறு நாடுகளில் அமெரிக்க முதலாளிகள் வாக உற்பத்தியை ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் சீன வாகனங்களோ அல்லது வேறு நாடுகளின் வாகனங்களோ மிக மலிவான விலையில் கிடைத்ததனால் அல்ல (உண்மையில் இன்றுவரை சீனா வாகன உற்பத்தித் துறையில் சற்று பின்தங்கியே உள்ளது). உண்மையில் சென்னையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற பல தொழில் திறமை பெற்றத் தொழிலாளர் கிடைக்கின்றனர். அவர்களுக்கு அனைத்து உள் கட்டுமான வசதி களையும் நமது ஏழை மக்களின் வரிப்பணத்தில் செய்து தரக்கூடிய அடிமை அரசுகள் இங்கு இருக்கின்றன. இதுதான் அடிப்படை காரணம்.

இதில் ஒரு வேடிக்கையான விசயம் என்ன வென்றால், சீனா தனது யுவாங்கின் மதிப்பைக் குறைத்ததைத் தனது முழுகட்டுப்பாட்டில் இயங்கும் சர்வதேச நிதி நிறுவனமே (IMF) ஆதரித்துள்ளது சீனா தலைமையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் புதிதாக உருவாக்கியப் புதிய வளர்ச்சி வங்கியில் ((New Development Bank) பங்குபெறக்கூடாது என்ற அமெரிக்காவின் கட்டளையையும் மீறி ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளும் அந்த வங்கியில் அண்மையில்தான் சேர்ந்து அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்தது.

தற்போது தனது அசுரக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த IMF கூட தனக்கு எதிராக அறிவிப்பை வெளியிட்டிருப்பது நெருக்கடி அமெரிக்காவின் IMF வாசற்கதவையே தட்டிவிட்டது என்பதைத் தான் சுட்டிக் காட்டுகிறது. பிரச்சனை மிக எளிமையானதுதான். இது வரை எந்த விதிகளைக் கொண்டு அமெரிக்கா விளையாடியதோ அதே விதிகளைக் கொண்டு நேற்று ரஷ்யாவும் இன்று சீனாவும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த விளையாட்டில் அமெரிக்காவைவிட மற்றவைகள் சிறப்பாக விளையாடுவதுதான் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. 

Pin It