கேள்வி பதில்

செயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று இரண்டு மாதமாகி விட்டது. ஆனாலும் தமிழக அரசு அலுவலகங்களில் செயலலிதாவின் படம் தான் உள்ளது. தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் படம் எங்கும் இல்லை. ஏனைய கட்சிகள் இதைக் கேள்விக்குட்படுத்தாதது ஏன்?

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழ் செப்டம்பர் வரை தான் இணைய அலமாரியில் உள்ளது. செப் 27 தண்டனைக்குப் பிறகு அக்டோபர், நவம்பர் இதழ்கள் இல்லை. சென்னை கோட்டையில் முதலமைச்சர் பெயர்ப்பலகை மாற்றப்படவில்லை. அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் எனும் வகையில் படம் இருக்கிறது என்றால் முன்னாள் முதல்வர்கள் படம் அனைத்தும் இருக்க வேண்டும். முதலமைச்சர் படம் இருக்க வேண்டிய இடத்தில் தற்போதைய முதல்வர் ஓ. பி. எஸ் படம் உடனடியாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இல்லை. உத்தரவு வந்தால் அரசு அலுவலகங்களில் உடனடியாக படம் மாற்றப்படும். யார் முதலமைச்சராக வந்தாலும் செயல்பட வேண்டிய தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஆட்சிப்பணி அதிகாரிகளிடம் அடிமை மனோபாவம், விசுவாசம் மண்டிக்கிடக்கிறது. ஆட்சிக்கு வருகிற தலைவர்களுக்கு கோடிகளுக்கான ஊழல் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் முதன்மையானவர்கள் இந்த உயர்மட்ட அதிகார வர்க்கத்தினரே. தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் கட்சி என்பதால் அவர்கள் தங்களது வாலை ஆட்டிக் கொண்டு போயஸ்கார்டனுக்கு அடிமை சேவகம் செய்கின்றனர். இந்திய ஆட்சிப் பணியின் அடிமை மகத்துவம் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிகாரி சகாயம் போன்றவர்களை விதிவிலக்காகச் சொல்லலாம்.

ஏனைய கட்சிகள் தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, காங்கிரஸ், பி.ஜே.பி, ம.தி.மு.க, வலது, இடது கட்சிகள் என பட்டியல் நீளமாக இருந்தாலும் தமிழகத்தில் முதுகெலும்புள்ள, துணிச்சல் உள்ள எதிர்க்கட்சி என ஒன்று இல்லை. வெற்றிடமே உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அரசியல் சட்டத்தை வடிவமைத்த அறிஞர் அம்பேத்கர் படத்தை வைக்க தமிழகத்தின் பல்வேறு ஒன்றிய, வட்ட அலுவலகங்களில் அரசியல் முன்னணிகள் போராடிக் கொண்டுள்ளனர். சமீபத்தில் திருவாரூர் நகராட்சியில் பல்வேறு இயக்கங்களின் போராட்ட முயற்சியால் தற்போதுதான் அவரது படம் மாட்டப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம் பட்டி நகராட்சியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் 6 மாதத்திற்கு முன்புதான் அறிஞர் அம்பேத்கார் படம் வைக்கப்பட்டுள்ளது. பணவெறி, சாதி வெறிக்கு அடிமையாவ தால், அதிகார வெறிக்கு அடிபணியும் புத்திதான் உள்ளது. அண்ணல் அம்பேத்கர் படத்தை வைக்க இயக்கங்கள் போராடுவது போல ஊழல் ராணியின் படத்தை எடுக்க, போராடும் இயக்கங்கள்தான் முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.

கத்தி படம் எடுத்த நிறுவனம் கொலைகார இராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்றால் அதை நேரடியாக எதிர்க்காமல் திரையரங்கைத் தாக்குவது, படத்தில் நடித்த நடிகருக்கு எதிராகப் போராடுவது சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

சென்னை தவிர தமிழகத்தின் பல இடங்களில் கத்தி படத்திற்கு எதிர்ப்பு இருந்தது தெரியவில்லை. முகநூல் மற்றும் செய்தி ஊடகத்துடன் உயிரோட்ட முள்ள தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே கத்தி படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனத்தை எதிர்த்துதான் சென்னையில் போராட்டம் நடந்தது என்பது தெரியும். யார் இந்த லைக்கா? லைக்கா மொபைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் எனும் ஈழத்தமிழன். ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள முதலாளி. இனப்படுகொலையாளன் இராஜபக்சேவுக்கு நெருக்கமானவர். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இவரை ஆதரிப்பவர்களும் உண்டு. எதிர்ப்பவர்களும் உண்டு. தமிழகத் திரையுலகத்தில் காலூன்றுவதற்காக முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் லைக்கா நிறுவனம் தனது முயற்சியை கத்தி படம் மூலம் தொடங்கியது. தமிழ்நாட்டு இயக்குநர்களுக்கு பணம் போடுபவன் எவனாக இருந்தால் என்ன? பன்னாட்டு கார்ப்பரேட் ஆதிக்கத்துக்கு அடிபணிந்து சலாம் போடும் மனோநிலைதான் உள்ளது.

தென் மாவட்டங்களிலிருந்து பெருமளவில் வட்டிக்கு விடுபவர்கள், வடமாநிலத் தயாரிப்பாளர்கள், கார்ப்பரேட்டுகள் என தமிழ்த் திரையுலகம் கோடிக்கணக்கான கோடிகளில் மிதக்கிறது. கத்தி திரைப்படம் தடைபடுவதால் இயக்குனருக்கோ, நடிகர்களுக்கோ என்ன இழப்பு? தயாரிப்பு நிறுவனத்துக்குத்தான் இழப்பு. தமிழ்த்திரையுலக ரசிகர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்த அனுமதித்தால் வருங்காலத்தில் இராஜபக்சேவுக்கு ஆதரவான செயல்பாடுகளுக்கு லைக்கா நிறுவனம் முயற்சிக்காதா? அதனால்தான் இந்த எதிர்ப்பு. தமிழக அமைப்புகளின் எதிர்ப்பு லைக்கா தயாரிப்பு நிறுவனத்துக்கான எதிர்ப்பு. அரங்கில் எதிர்ப்பாளர்கள் தாக்கப்படும்போது மேடையிலிருந்தும் தடுக்காத, கண்டிக்காத இயக்குனர், நடிகர் தமிழகத்தின் தலைவராக நினைப்பது நகை முரணே. நடிகர் விஜய் ரசிகர்களைத் தூண்டிவிடுவதும், இயக்குனர் முருகதாஸ் தனது சாதியப் பின்புலத்தைப் பேசி போராடும் இயக்கங்களைத் தரக்குறைவாகப் பேசியதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எந்தவொரு திரைப்படைப்பையும் எதிர்க்க, விமர்சிக்க பார்வையாளர்களுக்கு உரிமை உண்டு. நான் நாட்டை விட்டு போயிடுவேன் என கமல் சொன்னதும், முருகதாஸ் சொல்வதும் நகைப்பிற்குரியது. போறதுன்னா போக வேண்டியதுதானே! அதற்காக திரையரங்கைத் தாக்குவது சரியானது இல்லை. லைக்கா தயாரிப்பில், லைக்கா இலாபமடைய, லைக்கா அடையாளமில்லாமல் கத்தி திரைப்படத்தை வெளியிட சமரசமானது மிகப்பெரிய நகைச்சுவை. படத்தில் கோலா கம்பெனியை எதிர்ப்பது, கோலா கம்பெனியின் அடையாளமாக விளம்பரத்தில் நடிப்பது என இரட்டை வேடம் போடாதே என நடிகர் விஜய்க்கு எதிராகப் போராடினால் சரியானது. ஒரு நடிகர் கதாநாயகனாக, வில்லனாக, சிரிப்பு நடகனாக, குணச்சித்திர நடிகனாக என இயக்குனரின், கதையின் தேவைக்காக நடிப்பதற்கு நாம் எதிரானவர்கள் இல்லை. கோலா நிறுவனத்தின் அம்பாசிடராக கோலா முன்னிறுத்தும் நடிகர் கோலா எதிர்ப்பில் நடிப்பது எதிர்க்கப்பட வேண்டியது அவசியமே. தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குனர்கள், நடிகர்கள், படைப்புகள என தமிழகப் பார்வையாளர்களுக்கு விமர்சன, எதிர்ப்பு மனோபாவத்தை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. திரைப்பட மயக்கத்தில் உள்ள தமிழக ரசிகர்களின் மயக்கம் அரசியல் வரை பாதிக்கிறது. தமிழக திரைப்படக் கதாநாயகர்கள் மீதான மயக்கத்திலிருந்து மீள வேண்டிய தேவை உள்ளது.

நிலத்தடி நீர் உரிமை, விவசாயம், கார்ப்பரேட் எதிர்ப்பு, கோலா, மீத்தேன் போன்ற செய்திகளைப் பேசுகிற படம் என்பதால் அவசியம் பாருங்கள். பாராட்டு விழா நடத்தாதீர்கள். விமர்சனக் கூட்டங்கள் நடத்துங்கள்.

தண்ணீர்ப் பிரச்சனைக்காக கர்நாடக, கேரள, ஆந்திராவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகள், தமிழகத்தில் பெய்த மழைநீரைத் தேக்க எதையும் செய்யாத தமிழக அரசுக்கு எதிராகத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்காமல் மௌனமாய் இருப்பது, சம்பிரதாயமாக அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்களே ஏன்?

தண்ணீரால் சூழப்பட்டுள்ள நாடுகளைக் கேள்விப்பட்டுள்ளோம். தண்ணீர்ப் பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ள நாடு தமிழ்நாடுதான். போராடித்தான் தண்ணீர் உரிமையை நிலைநாட்ட வேண்டியுள்ளது. மாறி மாறி ஆட்சியில் அமரும் கட்சிகள் பேச்சுவார்த்தை, நீதிமன்றம் என மாறி மாறி இழுத்தடித்து தற்போதுதான் முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க உரிமை பெற்றுள்ளோம். பள்ளிகளில் வரலாறு படிக்கும்போது ஏரி, கண்மாய், குளம் வெட்டினார், மரம் நட்டார் என அரசர்களைப் பற்றி படித்தோம். ஆறுகளின் அகலம் குறைந்துள்ளது. கண்மாய், ஏரி, குளங்களின் மீது எழுப்பப்பட்ட நீதிமன்றங்களின் மீது அமர்ந்து கொண்டு நீதியரசர்கள் நீர்நிலைகள் அழிக்கப்படுவது தவறு என தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் தமிழக அரசோ ஒருபுறம் பெய்யக்கூடிய மழை நீரைச் சேகரித்து வைக்கும் ஏற்பாடுகள் ஏதுமின்றி நிலத்தடி நீர் சேகரிப்புத் திட்டம் என விளம்பரத் திட்டம் அறிவித்து, வீட்டு உரிமையாளர்களை நிர்ப்பந்தித்து வருகிறது. மறுபுறம் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள், குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடிநீரை வியாபாரப் பண்டமாக்க அனுமதிப்பதுடன், அரசே தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பாரம்பரிய நீர்நிலைகளை அழித்து கட்டிடம் கட்டும் அரசு, புதிய நீர்நிலைகளை (கண்ணன்கோட்டை ஏரி) உருவாக்கப் போவதாக நாடகம் நடத்துகிறது. காவிரி, முல்லைப் பெரியார், பாலாறு ஆற்று நீர்உரிமை என தங்கள் அமைப்பு, அரசியல் நலனுக்காகப் போராடுவதுபோல பாவனை செய்யும் ஆண்ட, ஆளத் துடிக்கும் கட்சிகள் தமிழகத்தின் பாரம்பரிய நீர்நிலைகள் பல மாடிக் கட்டிடங்களாகவோ, கழிவுநீர்க் குட்டைகளாகவோ மாற்றப்பட்டு வருகின்றதை எதிர்த்து எதையும் செய்வதில்லை. மேலும் யார் ஆக்கிரமிப்பது, கோடிகளைச் சம்பாரிப்பது என போட்டியில் ஈடுபடுகின்றனர். நிலத்தடி நீர் வற்றி வரும் நிலையில் நீரை வியாபாரப் பண்டமாக, விலை பொருளாக தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும், பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீருக்காகவும் மக்கள் இயக்கங்கங்களை நடத்த வேண்டிய அவசியம் நம் முன் உள்ளது. காவிரி, முல்லைப் பெரியார், பவானி, பாலாறு நீர் உரிமைக்காகப் போராடுவோம். பெரும்பான்மை நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் தமிழகத்தின் நிலத்தடி நீர், குறையாமல் பாதுகாக்க ஏரி, குளங்கள், கண்மாய், ஆறுகளைப் பாதுகாக்கப் போராடுவோம்! ஆற்று மணல், ஏரி, குளம், கண்மாய் மணலை விற்கும் அடாவடிக் கெதிராகப் போராட வேண்டும்!

கனிமவளப் பிரச்சனை குறித்து சகாயம் அவர்களின் தலைமையிலான குழுவின் நடிவடிக்கையும், அதன் விளைவும் தமிழ்நாட்டில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

மதுரை மாவட்டம் மேலூரைக் கடந்து செல்பவர்கள் மலைகளை அறுத்துப் போடப்பட்டுள்ள கிரானைட் கற்களைப் பார்த்து வியப்புடன் செல்வது வழக்கம். அனுமதிக்கப்பட்டது எவ்வளவு? கூடுதலாக அறுத்தது எவ்வளவு? அரசு நிறுவனமான டாமின் தமிழ்நாடு கனிமவள நிறுவனத்திற்கு எவ்வளவு கோடி நட்டம் என்பதை ஆய்வறிக்கையில் பார்க்க முடிந்தது. கிரானைட் அதிபர் பி. ஆர். பழனிச்சாமி கைதானார். சிறையில் சொகுசாக இருந்தார். விடுதலையானபின் மீண்டும் தனது செல்வாக்கைக் காட்ட ஆரம்பித்தார். அறிக்கை கொடுத்த அதிகாரி சகாயம் ஆட்சியாளர்களால் தூக்கியடிக்கப்பட்டார். வழக்கறிஞர் டிராபிக் இராமசாமி மனுவால் தற்போது உயர்நீதிமன்றம் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு, கனிம வளக் கொள்ளையை கண்டுபிடித்து அறிக்கை கொடுக்க உத்தரவிட்டுள்ளது. மதுரை, தர்மபுரி, திருவண்ணாமலை கிரானைட் கொள்ளை, ஆற்று மணல் குவாரிகள், காடுகள் நிலத்தடிநீர், கடலோரத் தாதுமணல் கொள்ளை என தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கனிமவளக் கொள்ளை ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால் தமிழக அரசு மீண்டும் மதுரை மட்டுமே என குறுக்கி நிறுத்துகிறது. அதிகாரி சகாயம் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்துமா? என விளக்கம் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். அப்படியே அனைத்துக் கொள்ளை ஊழல்களையும் கண்டுபிடித்துக் கொடுத்தால் தமிழகத்தின் கனிவளங்கள் தனியார் கொள்ளைக்கு ஆளாகும் புள்ளி விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் மீண்டும் சிறைக்குப் போய்த் திரும்புவர். இவர்கள் மீதும் துணை போன அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது யார்? இதே 60 கோடி ஊழல் அரசுதானே. எடுக்குமா? தமிழகத்தின் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக பாதிக்கப்படும் பகுதிவாரி மக்கள் இயக்கங்களும், தமிழ்நாடு தழுவிய அரசியல் முயற்சிகளும் அவசரத் தேவை.

தமிழக நலனையும், தமிழக காங்கிரஸ்காரர்களின் உணர்வையும் டில்லி ஏற்க மறுத்ததால் தனிக் கட்சி அமைப்பதாக வாசன் தரப்பு சொல்கிறதே உண்மையில் இவர்களுக்கு என்னதான் பிரச்சனை?

காங்கிரஸ் கட்சிதான் பிரச்சனை, இவர்களால் காங்கிரசில் இருக்க முடியாது. காங்கிரசை விட்டுட்டும் இருக்க முடியாது. தமிழ்நாட்டில், இந்தி யாவில் பல்வேறு குழுக்களின் சங்கமமே காங்கிரஸ். காங்கிரஸ் ஆட்சியில் பதவியிலிருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மராட்டியத்தில் பி.ஜே.பி ஆட்சி அமைக்க கை கொடுப்பார். காமராசர் மட்டும்தான் இந்திரா காந்தியுடன் முரண்பட்டு ஸ்தாபன காங்கிரஸ் தொடங்கினார். தேர்தல் கூட்டணி செயலலிதாவுடன் வேண்டாம், கருணாநிதியுடன்தான் என்ற தகராறில் தமிழ் மாநில காங்கிரசைத் தொடங்கினார் கருப்பையா மூப்பனார். அமைதிப்படை எனும் பெயரில் இராசீவ் காந்தி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பிய போது உடனிருந்தார். ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்டபோது அமைதியாக வேடிக்கை பார்த்தார். தமிழகமே கொந்தளித்த போதும் தமிழக உணர்வை அவர் மதித்ததில்லை.

காங்கிரஸ் த.மா.க எனும் பெயரில் புதுப்பிக்கப்பட்டு கருப்பையா மறைவுக்குப் பின் அவரது மகன் வாசன் முடிவால் மீண்டும் காங்கிரசில் இணைக்கப்பட்டது. ஈ.வே.கே.எஸ் இளங்கோவன், தங்கபாலு, வாசன், சிதம்பரம், ஞானதேசிகன் என ஒவ்வொருவரும் ஒரு காங்கிரஸ். இவர்களின் இணைப்பே தமிழ்நாடு காங்கிரஸ், இவர்களைத் தாண்டி டில்லி சோனியா, இராகுல் காங்கிரஸ் வேறு. கப்பல் போக்குவரத்து அமைச்சர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருக்கும் காலம் வரை பதவியிலிருந்த வாசன் தற்போது தனிக்கட்சி காண்கிறார். 2009 தமிழகமே கொந்தளித்தது. ஈழத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழகத்தில் எதிரொலித்தது. காங்கிரஸ் சோனியாவின் பழிவாங்கல் செயலில் இராசபக்சேவுக்கு இராணுவ ரீதியாகத் துணை நின்ற இந்திய அரசின் அமைச்சராக வலம் வந்தார் வாசன், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அப்பன் கருப்பையாவும், மகன் வாசனும் முகம் கொடுத்ததில்லை. காங்கிரசிற்குள் நிலவும் குழுச்சண்டையின் உணர்வுகளையும், வாசன் குழுவினரின் நலன்களையும் வைத்தே தனிக்கட்சி தொடங்குகிறார் வாசன். காங்கிரஸ் இனி எந்தப் பெயரிலும் தமிழகத்தில் உயிர்பெற அனுமதிக்கக் கூடாது. சோனியாவை, டில்லித் தலைமையை விமர்சித்தால் நடவடிக்கை என வாசன் எச்சரித்துள்ளார். கபிஸ்தலம் பண்ணையின் வாரிசு தமிழக மக்கள் உணர்வுகளை என்றுமே மதிக்காது.

இயக்குனர் இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படம் வழக்கமானதா? புதிய வகையா?

‘மெட்ராஸ்’ அவசியம் பேசப்பட வேண்டிய படம். பார்த்தவுடன் மட்டுமல்லாமல் விமர்சனம் அவசியம், விவாதம் அவசியம். கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பல படங்கள் போல போய்விடக்கூடாது. மூன்று நாட்கள் மட்டுமே ஓடிய படம். ஆனால் சிறந்த படம் எனும் கருத்துக் கொண்டதுபோல் இல்லை. 80களின் தொடக்கத்தில் வந்த ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ 3 நாட்கள் மட்டுமே ஓடியது. பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் தனி அரங்குகளில், முற்போக்கு முகாம்களில் இன்றும் தேடக்கூடிய படமாக உள்ளது. இயக்குனர் ருத்ரையா இயக்கத்தில் கமல், இரஜினி, ஸ்ரீப்பிரியா நடித்த ‘அவள் அப்படித்தான்’ பெண் விடுதலை குறித்த விவாதங்களை மையமாகக் கொண்ட படம். இயக்குனர் ருத்ரையா மறைவு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை கூடுதலாக அறிமுகப்டுத்துகிறது. ‘மெட்ராஸ்’ இந்தப் படங்களைப் போலில்லை. பாரதிராஜாவின் ‘என்னுயிர் தோழன்’ திரைப்படம் கட்சித் தலைவர்கள் மீதுள்ள விசுவாசம் தொண்டர்களை எப்படி பலி எடுக்கிறது என்பதை மட்டுமே சென்னைச் சூழலில் தந்த படம்.

‘மெட்ராஸ்’ கட்சித் தலைவர் விசுவாசத்தைத் தாண்டி அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரம் குறித்து படம் முழுவதும் முன்வைக்கிறது. தமிழ்நாடெங்கும் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம். தமிழ்த்திரையில் விளிம்புநிலை மக்களாகவும், சமூகரீதியாக தலித் மக்களையும், அவர்களது வாழ்விடத்தின் சூழலையும், அவர்கள் பங்கேற்கும் அரசியலும், எதிர்கொள்ளும் அரசியலும், காதலும், விளையாட்டும் என இதுவரை பார்க்காத கோணங்களில், மொழியில் வெளிப்பட்டுள்ளது. ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் வருகிற அதே போன்ற குடியிருப்புதான். ஆனால் ‘மெட்ராஸ்’ குடியிருப்பும், சுவரும் விளையாட்டு மைதானமும், குழாயடியும் இதுவரை பேச மறுத்த மொழியில் பேசுகிறது. அடித்தட்டு வர்க்கமாக, விளிம்பு நிலை மக்களாக, தலித் மக்களாக பலவகையில் பரிமாணம் பெறுகிறது. இத்திரைப்படத்தில் நாம, அவங்க எனும் எதிர் நிலை தொடர்ந்து இயங்குகிறது. முகத்தில் நாமம் போட்ட மேல்தட்டுச் சாதிய அடையாளம் வீடு, பண்பு என உயர்வர்க்க, உயர்சாதி, அரசியல் தலைமை ஒருபுறமும், அன்பு மேரி குடும்ப இயல்பான உரசல்களுடன், காளி அம்மா, அப்பா, பாட்டி என முட்டல், மோதல், அன்பு எனவும், கலை கட்சிக்காரர் என நீலவண்ணக் கொடிகளும் பல செய்திகளை நமக்கு உணர்த்துகிறது. படம் முழுவதும் வண்ணம் குறிப்பாக நீலவண்ணம் கருப்பு இருட்டு என கதாபாத்திரமாகவே வலம் வருகிறது. சுவர் மிக முக்கியமான கதாபாத்திரம். தொடக்கம் முதல் இறுதிவரை உருமாறுகிறது. குணம் மாறுகிறது. அது சுவர் இல்லை. அதிகாரம் எனப் பேசும் மொழி காத்திரமாக உள்ளது. விளிம்பு நிலைப் பார்வையாளனைத் தனக்கான படமாக, அடித்தட்டு வர்க்கத்தைத் தனக்கான படமாக, தலித் மக்களைத் தங்களுக்கான படமாக, இறுதிக் காட்சியில் வெளிப்படையாக தலித்துகளுக்கான படமாக என பல பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. இயக்குனர் இரஞ்சித் அவர்களை, படக்குழுவினரை கலைஞர்களை பாராட்டுவதுடன் இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து தர வாழ்த்துவோமாக. 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.