1970இல் இந்திய அரசால் பொதுத்துறை நிறுவன மாக மக்களின் பணத்தில் இருந்து முழு உள்நாட்டு வாகன உற்பத்தியை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டது “மாருதி” நிறுவனம். தொழிலாளர்களின் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இடையே 1980களில் சுசுகி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து, முதல் 26% பங்குகளையும் 2007இல் 100% பங்குகளையும் தாரைவார்த்தது. அதே வருடம் மாநேசார் தொழிற்சாலை மாருதி சுசுகி நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. 3300 தொழிலாளர்கள் பணி புரியும் இத்தொழிற்சாலையில் சுமார் 1500 பேர் மட்டுமே நிரந்த தொழிலாளர்களாக இருந்தனர். மற்றவர்கள் அனைவரும் ஒப்பந்தம் மற்றும் பயிற்சி/தற்காலிக தொழிலாளர்களாகவே 5 ஆண்டு காலம் நீடித்து வந்தனர்.

தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க, ‘‘மாருதி சுசுகி வொர்கர்ஸ் யூனியன்’’ என்ற தொழிற்சங்கத்தை மாநேசார் ஆலையில் தொழிலாளர்கள் தொடங்கினார்கள். இதை அங்கீகரிக்க மறுத்த நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களும் ‘‘மாருதி உத்யோக் காம்கர்’’ என்ற தனது கைக்கூலி சங்கத்திலேயே உறுப்பினராக கட்டாயப்படுத்தியது.

இந்நிலையில் நிர்வாகத்தால் பழிவாங்கும் நடவடிக்கையாக 16 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். 16 தொழிலாளர்களின் வேலை நீக்கத்தைத் திரும்பப்பெற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்முறை ஒழிக்கப்பட்டு அனைவரும் நிரந்தர தொழிலாளர்கள் ஆக்கப்பட வேண்டும், ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டம் 2011 இல் தொடங்கியது. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்ட சில குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் தொழிலாளர் மீதான பழிவாங்கும் நடவடிக்கையில் நிர்வாகம் இறங்கியது. இதனால் ஏமாற்றமடைந்த தொழிலாளர்கள் மீண்டும் 2012 இல் போராட்டங்களை நோக்கித் தள்ளப்பட்டனர்.

2012 ஜூலை மாதம் 18 தேதி, நிர்வாகம், தொழிற்சாலைக்குள் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளிகளைப் பணி நேரத்திற்கு முன்னரே வந்து, கண்காணிப்பாளரின் அறிவுரையைக் கேட்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற புதிய நிபந்தனைகளை (ஜப்பானிய வேலைபாணி) ஏற்க வேண்டும் என்று நிர்பந்தித்தது. அதை மறுத்த தொழிலாளியின் கண்காணிப்பாளர் சாதிப்பேரை சொல்லி திட்டி தற்காலிக பணிநீக்கம் செய்யவே, தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். மனிதவள மேம்பாடு அதிகாரி அவனிஷ் குமார் தற்காலிக பணி நீக்க உத்தரவை நிர்வாகத்திடம் பேசித் திரும்பப் பெறுவதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால், அன்று மாலையே, தன்னுடைய முயற்சி பலன் அளிக்கவில்லை, நிர்வாகம் உத்தரவைத் திரும்பப் பெற மறுக்கிறது என்று தெரிவித்தார். இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தவே, மாலை நிர்வாகம் தொழிலாளர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

பேச்சுவார்த்தைக்கு அலுவலகத்திற்குள்ளேசெல்லும் போதே, தொழிலாளர் சீருடையில்அங்கே நின்று கொண்டிருந்த 150கும் மேற்பட்டகுண்டர்கள் (bouncers) ஆயுதங்களோடு இருந்ததைக் கவனித்தனர், பேச்சு வார்த்தை தொடங்கிய உடன், அந்தகுண்டர்கள் கலவரத்தைத் தொடங்கினர்.

தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்த அதே நேரத்தில் தொழிற்சாலை பணிமனை தீப்பற்றி எரிந்தது. அந்த நேரத்தில் தொழிற்சாலைக்கு வெளியே நின்று கொண்டிருந்த காவல்துறையை உள்ளே அனுமதிக்க நிர்வாகம் மறுத்து வந்தது, ஆனால், மாலை 7 மணிக்கு பின்னர் காவல்துறை தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்கே மனிதவள மேம்பாட்டு அதிகாரி அவனிஷ்குமார் தீயில் மூச்சுத்திணறி இறந்து கிடப்பதாக அறிவித்தது.

அன்றைய தினத்திலேயே 425 தொழிலாளர்கள் மொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு பின்னர், அன்றிரவு முழுவதும் ஆலையைச் , தொழிலாளி வீடுகளில் இருந்தும் 147 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, பல்வேறு பொய்க் குற்றசாட்டுகள் (கொலை, கொலை முயற்சி, கலவரம், ஆயுதம் வைத்திருந்தல் என) சுமத்தப்பட்டு சிறையில் இன்றுவரை சுமார் 2 1/2 ஆண்டு காலமாக அடைக்கப்பட்டுள்ளனர். இப்பொய் வழக்கிக்கு எதிரான தொடர் போராட்டத்திற்குப் பின்னர் பிப்ரவரி மாதம் 26ம் தேதி 2 பேருக்கும் மார்ச் 17ம் தேதி 77 பேருக்கும் ஏப்ரல் 13ம் தேதி 13 பேருக்கும் பிணை கிடைத்துள்ளது.

அன்று தொழிற்சாலைக்குள் நடந்த நிர்வாகத்தின் திட்டமிட்ட கலவரத்தில் தொழிலாளர்கள் பலிகடாவாக ஆக்கப்பட்டது உண்மை. பேச்சுவார்த்தைக்கு செல்லும்போதே சீருடையில் நிறுத்தப்பட்டிருந்த குண்டர்கள், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதும், தொழிலாளர்களைப் போல் அவர்களே நிர்வாகிகள் மீது தாக்குதலை ஏவியதும், ஆலைக்குள் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த கேமராவின் பதிவை வெளியிட்டால் யார் தீவைத்தது என்றும், மனிதவள மேம்பாட்டு அதிகாரியின் கொலை சம்பந்தமான உண்மையும் உலகம் அறியும்.

ஆனால், அப்பதிவை வெளியிடை தொழிலாளர்கள் பலமுறை வலியுறுத்தியும், அரசும் நிர்வாகும் அதை வெளியிட மறுத்து வருவது ஏன்? தொழிலாளர்களின் கோரிக்கைகளை கரிசனையோடு தீர்க்க முயற்சி செய்த அதிகாரி அவநீஷ்குமார் படுகொலையின் பின்னணியில் உள்ள மர்மம் வெளிப்படும் சமயத்திலேயே, அவரின் மரணத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் அவ்விழப்பிற்கான நீதி கிடைக்கும்.

நிரந்தரத் தொழிலாளர்கள், ஓராண்டு கால ஊதிய ஒப்பந்தத்தையும் போனஸ் ஒப்பந்தத்தையும் விட்டுத்தருகிறோம், அதற்கு பதிலீடாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டு, பயிற்சி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கான ஊதியம் போலவே சம உழைப்பிற்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தனர். மாருதி மாநேசார் தொழிலாளர்களுடைய இந்த கோரிக்கையானது , மாருதி நிர்வாகத்தை மட்டுமல்லாமல், ழிசிஸி (தேசிய தலைநகர மண்டலம், டில்லி - நொய்டா- குர்காவுன்-மாநேசார்- பவல்) உற்பத்தியாளர்களின் குவி மய்யத்தையே ஆட்டம் காண செய்தது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள், - நிரந்தரத் தொழிலாளர்கள் ஒற்றுமை என்பது முதலீட்டாளர்களின் இருத்தலுக்கே ஆபத்தானதாக உணர்ந்தனர். அதனால், ஜூலை 16ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கையை ஏற்க மறுத்த நிர்வாகம், நிரந்தர தொழிலாலர்களுக்கு மூன்று ஆண்டு ஊதிய மற்றும் போனஸ் ஒப்பந்தத்தில் ஒருதரப்பாக முடிவு எடுத்தது, தொழிலாளர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியாகவே சட்டவிரோத ஒப்பந்தத்தொழிலாளர் முறை, பயிற்சித் தொழிலாளர், நிரந்தரத் தொழிலாளர் என்று தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கான படிநிலைகளைத் தக்கவைக்க நிர்வாகம் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறது.

வழக்கு விசாரணையில் முழுவதும் தொழிலாளிகளுக்கு எதிரான பொய்யான சாட்சிகளைத் தயார் செய்து மே மாதம் முதல் வாரத்திற்குள் தண்டனையை வழங்க துடிக்கும் தொழிலாளர் விரோத நீதிமன்றமும்  தொழிலாளர் குடும்பங்களை மிரட்டும் காவல்துறை அணுகுமுறையும் முதலாளித்துவ வர்க்க நலனை காக்க முன்னிற்கிறது. முதல் அமைச்சரைச் சந்திக்க சென்ற தொழிற்சங்கத்தைச் சந்திக்க மறுத்த அவர், தனித்தனியே தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்து “உங்களால்தான் அந்நிய மூலதன வருகை குறைந்திருக்கிறது , உங்கள் சங்க நடவடிக்கைகளை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் “என்று எச்சரிக்கை தொனியில் கூறியதன் மூலம் அரசு தன்னுடைய முதலாளித்துவச் சார்பை நிரூபித்துள்ளது. இந்த பொய் வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்குவதன் விளைவாக பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் நலனைக் காக்க அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதை நிரூபிக்க, இவ்வழக்கைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறது.

ஜூலை 18 கலவரத்திற்குப் பின்னர், மாருதி சுசுகி காண இந்தியாவின் தலைமை அதிகாரியான பார்கவா, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும்போது “இது ஒரு வர்க்கப் போர் என்று குறிப்பிட்டிருக்கிறார். தொழிற்சங்கச் செயல்பாடு என்பதே தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைக்கானது மட்டுமே என்று பொருளாதார வாதமும் தொழிற்ச்சங்க வாதமும் மேலோங்கி இருக்கும் சூழலில் சரியான திசைவழியைக் காட்டும் மாருதி சுசூகி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போரட்டத்தைப் பார்கவா மிகச் சரியாகவே அடையாளங்கண்டு அச்சமடைந்திருக்கிறார். கடந்த 6 மாதத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 50,000கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள்.

நோக்கியா, போக்ஸ்கோன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுடைய அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி நமது வளங்களைச் சுரண்டிக்கொண்டு வேறு தேசத்தை நோக்கி புறப்பட்டு விட்டார்கள். னீக்ஷீயீ நிறுவனமோ தன்னுடைய தொழிலாளரின் உழைப்பினால் வளர்ந்து, அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு, ஊதியத்தை உயர்த்தித் தராமல் உரிமை கேட்ட தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்கிறது. அதே நேரத்தில், உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கோ 500 கோடி ரூபாயைத் தாரை வார்த்துள்ளது.

மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டமும் அ.தி.மு.க அரசின் “விசன் 2023” யும் நாட்டின் வளத்தையும் இன்னும் எத்தனை லட்சம் தொழிலாளர்களின் வாழ்வையும் சூறை ஆடப்போகிறது. உலக முதலீட்டாளர்கள் சந்திப்புக்காக அவர்களைத் திருப்திப்படுத்த நிலம் கையகப்படுத்தல் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொழிலாளர் சட்டங்களை வலுவிழக்கச் செய்கின்றன மத்திய-மாநில அரசுகள். தொழிலாளர்கள் ஆகிய நாம் என்ன செய்யப்போகிறோம்? நம்முடைய வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டி நமக்கு எதிரான மூலதனத்தின் தாக்குதலை எதிர்கொள்ள போகிறோமா? இல்லையா? என்பது நமக்கு விடப்பட்ட சவால்! 

Pin It