ரூ.500, 1000 செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி மோடி அறிவித்தற்குப் பின்பு, என் மாமனார் வசம் இருந்த சில நோட்டுகளை மாற்ற, அவருடன் கோவில்பட்டியில் இருக்கும் State Bank of India வங்கிக் கிளைக்குச் சென்றேன். ஏறக்குறைய முன்னூறு பேர் வங்கிக்கு வெளியே வரிசையில் நின்றிருந்தார்கள். மெதுவாக நகர்ந்த வரிசையில் இணைந்து, உள்ளே செல்ல இரண்டு மணி நேரம் ஆனது. உள்ளே ஒரு மூதாட்டி. அருகில் இருந்த கிராமம் ஏதோ ஒன்றிலிருந்து வந்திருக்கிறார். எல்லா கிராமங்களையும் போல அவரது கிராமத்திலும் வங்கி இல்லை. அவர் கையில் பணம் மாற்றுவதற்குத் தேவையான விண்ணப்பப் படிவம் இருந்தது. நிரப்பத் தரச் சொல்லி வருவோர், போவோரிடம் எல்லாம் கெஞ்சிக் கொண்டிருந்தார். நான் அதை வாங்கி, நிரப்பிக் கொடுத்துவிட்டு கையெழுத்து போடச் சொன்னேன். ‘கு ரு வ ம் மா ள்’ என ஒவ்வொரு எழுத்தாக எழுதினார். கையெழுத்து போடுமளவிற்கே தமிழ் கற்று இருக்கிறார். அவரிடம் கொடுக்கப்பட்ட படிவத்தில் இருந்தது எல்லாம் ஆங்கிலம்.

வரிசையில் நின்று, வங்கி அலுவலரிடம் போன பின்புதான் தெரிந்தது, அவரிடம் ஆதார் கார்டு இல்லை என்பது. ஆதார் கார்டு இல்லாமல், பணம் மாற்ற முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். ஆதார் கார்டு எங்கு வாங்குவது என்று வங்கி அலுவலரிடம் கேட்க, அவர் வள்ளென்று அந்த மூதாட்டி மீது எரிந்து விழுந்தார். கண்களில் நீர் முட்ட, அந்த மூதாட்டி மீண்டும் என்னிடம் வந்து கேட்டார். கோவில்பட்டியில் ஆதார் கார்டு எங்கு தருகிறார்கள் என்று எனக்கும் தெரியவில்லை. அருகில் இருந்து இன்னொரு நபர், அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் தாலுகா ஆபிஸிற்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையுடன் போகச் சொன்னார். அவர் ரேஷன் கார்டு எடுத்து வரவில்லை. ஊருக்குப் போய், ரேஷன் கார்டு எடுத்துக் கொண்டு நாளை வருகிறேன் என்று வங்கியை விட்டு கிளம்பினார். இத்தனைக்கும் அவரிடம் இருந்து ரூ.3000 மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் ஆறு மட்டுமே!

சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற சம்பவங்களை, பொதுமக்கள் சந்தித்த பிரச்சினைகளை நூற்றுக்கணக்கில் பார்க்க முடிந்தது. இந்திய மக்களின் இயல்பு வாழ்க்கையை ஒரே நாளில் புரட்டிப் போட்ட செல்லாக்காசு அறிவிப்பை நாம் எப்படி எதிர்கொண்டோம்? மக்களுக்காகவே உழைக்கிறோம் என்று கூறுகின்ற எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை எதிர்கொண்டன?

state bank queue

வங்கி ஊழியர்கள்:

வங்கி ஊழியர் சங்கங்கள் நினைத்து இருந்தால் மோடியின் செல்லாக் காசு அறிவிப்பை ஒரே வாரத்தில் தூக்கி, குப்பையில் எறிந்து இருக்கலாம்.

வேலைப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு என தங்களது சொந்த நலன் சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே போராடுவது, இந்தியாவிலுள்ள அரசு ஊழியர் சங்கங்களின் பொதுவான தன்மை. பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் அவர்களது துறை சார்ந்தவையாக இருந்தாலும், எந்தவொரு சங்கமும் கண்டு கொள்வது இல்லை; அதற்காகப் போராடுவதும் இல்லை. அதனால்தான் அரசு ஊழியர்களின் எந்தவொரு வேலைநிறுத்தத்தையும் பொதுமக்கள் எரிச்சலுடனே அணுகுகிறார்கள்.

ஏற்கனவே பொதுத் துறை வங்கிகளில் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவது குறித்து பலர் புலம்பி வருகின்றனர். இப்போது அங்கு பணம் இல்லை, தனியார் வங்கிகளில் பணம் இருக்கிறது என்பது, மறைமுகமாக மக்களைத் தனியார் வங்கிகளை நோக்கித் தள்ளும் முயற்சியாகும். இதை வங்கி ஊழியர் சங்கங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சங்க நிர்வாகிகள் ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு, வாய் கிழியப் பேசுகின்றனர். செயலில் ஒன்றையும் காணோம்.

பணம் இல்லாததால் மக்களின் கோபத்தை நேருக்கு நேர் சந்திப்பவர்கள் பொதுத்துறை வங்கி ஊழியர்கள்தான். அவர்கள் ஒன்றுபட்டு நின்றிருந்தால், மோடி எப்போதோ பின்வாங்கி இருப்பார். இன்னும் காலம் தாழ்ந்துவிடவில்லை. பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். இதைப் பார்த்தாவது ஏனைய சங்கங்களின் நிர்வாகிகளுக்கு உயிர் வந்தால் சரி!

அதிமுக:

அதிமுக கட்சியின் கொள்கை, கோட்பாடு என்ன என்பது அதை ஆரம்பித்து வைத்தவருக்கே சிறிது குழப்பம் என்பதால், குத்துமதிப்பாக 'அண்ணாயிசம்' என்று சொல்லி வைத்தார். அது ஜெயலலிதா காலத்தில் 'சர்வாதிகாரம்' என்பதாக மாறிப் போனது. காவிரி நதி நீர், முல்லைப் பெரியாறு அணை, கச்சத் தீவு என அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கிற பிரச்சினைகளில் தான் ஜெயலலிதா மத்திய அரசுடன் விடாப்பிடியாக போராடுவார். ஆனால், மற்ற பிரச்சினைகளில் குறிப்பாக பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளில் அவருக்கு என்று எந்தவொரு தனிப்பட்ட கொள்கையோ, நிலைப்பாடோ கிடையாது.

அவரது தனிப்பட்ட தன்முனைப்பு (Ego), வீம்பு காரணமாகவே மத்திய அரசுடன் மல்லுக்கு நிற்பார். நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்கிறது என்றுதான் ஆரம்ப காலங்களில் இருந்து எதிர்த்து வந்திருக்கிறார்.

ஏதாவது ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பு, டெல்லியில் இருந்து ஒரு மத்திய அமைச்சர் நேரில் வந்து, போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்து, ஆதரவு கேட்கிறார்; மோடியும் தொலைபேசியில் பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம், ஜெயலலிதா அதை ஆதரித்து வைப்பார். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கொன்று போட்டால்கூட, ஏனென்று கேட்க மாட்டார்.

500, 1000 ரூபாய் ஒழிப்பிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எல்லாக் கட்சிகளும் குரல் கொடுத்தபோது, அதிமுகவினரும் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து 'கோயிந்தா' போட்டார்கள். அப்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தார். அம்மா இருக்கிறார், அவர் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பதை அறிந்தவர்களாக அதிமுகவினர் எதிர்த்தார்கள்.

இப்போது அவர் இல்லை. தாங்கள் விழுந்து கும்பிடுவதற்கு ஒரு கால் இல்லையே என்ற பதைபதைப்பில், அதை அவர்கள் மும்முரமாகத் தேடிக் கொண்டிக்கிறார்கள். இப்போது போய், பொருளாதாரப் பிரச்சினை, அடித்தட்டு மக்களின் வாழ்நிலை என்றெல்லாம் அவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

காலில் விழுந்து கட்சிப் பதவி, அமைச்சர் பதவி வாங்குவதையே அரசியல் இலட்சியமாகக் கொண்டிருக்கும் அதிமுகவினரிடம் அடுத்து என்ன எதிர்பார்க்கலாம்? ஜெ. அளவிற்கு எல்லாம் சசிகலாவிடம் வீம்பு இல்லை. பாஜகவும், அதிமுகவும் பரஸ்பரம் தேவையானதை பேசித் தீர்த்துக் கொள்வார்கள். இல்லையேல் மிரட்டி, பணிய வைப்பார்கள். இனி பாருங்கள். தமிழ்நாட்டில் பாஜக அலுவலகமே தேவையில்லை என்று டெல்லி தலைமை முடிவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்தளவிற்கு மத்திய அரசுக்கு அதிமுகவின் ஜால்ரா இருக்கும். அடிமைக் கூட்டத்தை தங்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்த தமிழக மக்கள் இந்தக் கொடுமையை இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

திமுக

அதிமுகவை ஒரேயடியாகப் புறந்தள்ளுவதுபோல், திமுகவைப் புறந்தள்ள முடியாது. திராவிடப் பாரம்பரியத்தில் இருந்து எழும் சமஸ்கிருத எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, இடஒதுக்கீடு பாதுகாப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகியவற்றில் எல்லாம் நாடாளுமன்றத்தில் திமுக ஓங்கிக் குரல் எழுப்பும். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தும். ஆனால் அவை அனைத்தும் அடையாளப் போராட்டங்களாகவே எப்போதும் எஞ்சி விடும்.

உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளில் திமுகவின் நிலைப்பாடு எப்படி இருந்திருக்கிறது? அவர்கள் நடுவண் அரசில் பங்கு வகித்தபோது, இவற்றிற்கெல்லாம் ஆதரவு தெரிவித்தே அமைச்சரவைக் கூட்டங்களில் வாக்களித்து இருக்கிறார்கள்.

வீம்புக்காக எதிர்ப்பவர் ஜெயலலிதா என்றால், எதற்காகவும் மத்திய அரசை உண்மையாக எதிர்ப்பவர்கள் அல்லர் திமுகவினர். இந்த ரூ.500, 1000 ஒழிப்புப் பிரச்சினையையே எடுத்துக் கொள்வோம். உண்மையிலேயே இப்பிரச்சினையை அவர்கள் எதிர்ப்பவர்களாக இருந்திருந்தால், ஒரு நாள் அடையாளப் போராட்டத்தோடு நின்று போனது ஏன்? அந்த ஒரு நாள் போராட்டத்தோடு, மக்களின் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விட்டதா? வங்கி வாசல்களில் கூட்டம் குறைந்துவிட்டதா?

வங்கிகளில் வரிசையில் நிற்பவர்களுக்கு திமுகவினர் வாட்டர் பாட்டில், பிஸ்கட் கொடுத்தார்கள். இதுவா ஓர் எதிர்க்கட்சியின் போராட்ட வடிவம்? மோடி ஒருபடி மேலே போய், லட்டு கொடுக்கச் சொல்லிவிட்டார். இப்போது திமுகவினர் என்ன கொடுக்கப் போகிறார்கள்? அரைக்கிலோ பூந்தியா?

ஒரு கோடி தொண்டர்கள் வைத்திருக்கும் திமுக, மோடியின் செல்லாக்காசு அறிவிப்புக்கு எதிராகச் செய்ய வேண்டியது தொடர்ச்சியான, உறுதியான போராட்டங்கள்தான். திராவிட இயக்க நூற்றாண்டு விழா கொண்டாடியவர்களுக்கு பெரியார் நடத்திய போராட்டம் ஒன்று நினைவில் இருக்கும் என நம்புகிறேன்.

'பிராமணாள் கபே' என்ற ஹோட்டலுக்கு எதிரான போராட்டம் சென்னையில் நடந்தது. ஒரு நாள் நடந்த அடையாளப் போராட்டம் அல்ல அது. நாள்தோறும் திராவிடர் கழகத் தோழர்கள் அந்த ஹோட்டலுக்கு முன்பு போய், போராட்டம் நடத்தி, கைது ஆவார்கள். அடுத்த நாள் வேறொரு குழு வந்து போராட்டம் நடத்தும். இறுதியில் ஹோட்டல் நிர்வாகம் அடிபணிந்தது. இத்தகைய தொடர்ச்சியான போராட்டத்தை திமுகவால் ஏன் நடத்த முடிவதில்லை?

முதல் காரணம், அதற்கான தார்மீகத் தகுதியை அக்கட்சி இழந்து நிற்கிறது. திமுக பெருந்தலைகள் எல்லாம் கருப்புப் பண முதலைகளே! தேர்தலின்போது கருப்புப் பணத்தை வாரி இறைத்து, திருமங்கலம் ஃபார்முலா என்பதை இந்தியாவிற்கே அறிமுகப்படுத்தியவர்கள். மேல்மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரைக்கும் திமுகவினர் ஊழல் செய்து சொத்து சேர்த்திருக்கிறார்கள். திமுக தலைவர் குடும்பத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்களின் குடும்பங்கள் வரை ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ளன.

இரண்டாவது காரணம், எப்போதும் முதலாளித்துவ நலன் பேணும் கட்சியாகவே அது தன்னை வளர்த்து வந்துள்ளது. முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களை அக்கட்சி எந்நாளும் பகைத்துக் கொள்ளாது. முதலாளிகள் கொள்ளை அடிக்கும்போது சிந்துவது, சிதறுவதை எடுத்து, மக்களுக்கு இலவசங்கள் என்ற பெயரில் சில்லறை சலுகைகள் கொடுத்து வாயை அடைக்கத் தெரிந்தவர்கள்.

அதனால்தான் பெயரளவிற்கு இதை எதிர்க்கிறார்கள். இது, மக்கள் முன்பு 'உள்ளேன் அய்யா' போடும் நடவடிக்கைதானே தவிர வேறு ஒன்றுமில்லை.

மதிமுக:

சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பதில் வல்லவர் வைகோ. மோடியின் ரூ.500, 1000 ஒழிப்பிலும் இதைத்தான் செய்திருக்கிறார்.

எதற்காக கட்சி ஆரம்பித்தீர்கள் என்றால் மக்களுக்கு நல்லது செய்ய, ஆட்சியைப் பிடிக்க, சோஷலிசத்தை நிறுவ என்றுதான் காரணம் சொல்வார்கள். ஆனால், உலகிலேயே இன்னொரு கட்சியை ஒழிப்பதற்காகவே கட்சி ஆரம்பித்து, அதற்காகவே அரசியல் செய்து வருபவர் வைகோவாக மட்டுமே இருக்க முடியும். இதுதான் கொள்கை என்றான பின்பு, வேறு எதைத்தான் அவரிடம் எதிர்பார்க்க முடியும்?

பாஜகவிற்கு தமிழ்நாட்டில் எப்போதும் முட்டுக் கொடுத்து வருபவர் வைகோ. தனது கட்சிப் பெயரில் இருக்கும் 'திராவிடம்' என்பதற்கும், பாஜகவின் கொள்கைகளுக்கும் என்ன தொடர்பு என்று ஒரு நாளாவது யோசித்து இருக்கிறாரா? குஜராத் படுகொலைகளை ஆதரித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியது, மோடியைப் பிரதமராக்க வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்தது போதாது என தற்போது ரூ.500, 1000 ஒழிப்பிலும் மோடிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

'அரசியலில் நேர்மை! பொதுவாழ்வில் தூய்மை! இலட்சியத்தில் உறுதி!' என்று சொல்வதைக் கேட்க இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், யாருக்கான அரசியல் , என்ன வகை இலட்சியம் என்பதைக் கொண்டுதான் அவரது பொதுவாழ்வு சீர்தூக்கிப் பார்க்கப்படும். கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், சர்வாதிகாரிகளை ஆட்சிக்குக் கொண்டு வருவதே அரசியல் இலட்சியம் என்றால், பொதுவாழ்வில் தூய்மையாக இருந்து ஒரு பயனும் இல்லை.

PNB ATM Queue

மோடியின் அறிவிப்பால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்று தொலைக்காட்சிகளில் முழங்கும் வைகோவிடம் நாம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். பெரும்பாலான மக்களுக்கு, ஏன் இப்படி தினமும் வங்கி முன்னால் வரிசையில் நின்று கஷ்டப்படுகிறோம் என்பது புரியவில்லை. நீங்கள் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை ஒரு நடைபயணம் மேற்கொள்ளுங்கள்..! கருப்புப் பணக் கொக்குகளைப் பிடிக்கத்தான் மோடி உங்கள் தலையில் வெண்ணெய் வைத்திருக்கிறார் என்பதை அந்த எளிய மக்களிடம் விளக்கிச் சொல்லுங்கள்...!

இடதுசாரிகள்:

ரூ.500, 1000 ஒழிப்பு என்பது இடதுசாரிகளின் ஏரியா. மற்ற கட்சியினரை விட இடதுசாரிகளால் ஊன்றி நின்று, மக்களுக்கான அரசியலை செய்திருக்க முடியும். ஏனெனில், இதுகுறித்துப் பேச, இடதுசாரிகளைவிட தகுதியானவர்களோ, திறமை மிக்கவர்களோ யாரும் இல்லை. ஆனால், நடந்தது என்ன என்று பார்த்தோமானால், ஒன்றுமில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் பெரிதும் மதிக்கும் இடதுசாரித் தோழர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். தோழர் பொங்கி விட்டார்.

"மக்களிடம் பேச வேண்டிய இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மக்களைப் பார்த்து ஓடி ஒளிய வேண்டிய மோடி, தைரியமாக மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இப்போது, பாஜக எம்பிக்களையும் மக்களிடம் போய் பேசுமாறு மோடி சொல்லியிருக்கிறார். ஆனால், நம்மவர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்."

மோடியின் அறிவிப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அறிவிக்கப்படாத பொருளாதார எமெர்ஜென்சி குறித்தும், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் மக்களிடம் விரிவாகப் பேசுவதற்கு இடதுசாரிகள் அளவிற்கு விவரம் தெரிந்தவர்கள் யாருமில்லை. ஆனால், ஒரு நாள் அடையாளப் போராட்டம் நடத்தியதோடு இடதுசாரிகள் இப்பிரச்சினையைக் கடந்து சென்று விட்டார்கள்.

மோடி அரசு, மக்கள் மீது அறிவிக்கப்படாத பொருளாதார வன்முறையை நிகழ்த்தி உள்ளது. நாடு முழுவதும் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆட்பட்டுள்ளார்கள். வங்கிகளின் முன் மணிக்கணக்காக வரிசையில் நிற்கும் மக்களிடம் வெளிப்படுத்த முடியாத ஒரு கோபம் உள்ளது. அவர்களின் கோபத்தை ஒருமுகப்படுத்தவும், இது யாருக்காக மோடி நடத்தும் நாடகம் என்பதைப் புரிய வைக்கவும் நம்பகமான ஒரு கட்சியோ, இயக்கமோ தேவைப்படுகிறது.

இது இடதுசாரிகளுக்கு கிடைத்த ஓர் அற்புதமான வாய்ப்பு. மற்றவர்கள் யார் பேசினாலும், 'நீ யோக்கியமா?' என்று கேட்பார்கள். ஆனால், இடதுசாரிகள் நெஞ்சை நிமிர்த்திப் பேச முடியும். இடதுசாரி வங்கி ஊழியர் சங்கங்கள் மூலம் வேலைநிறுத்தத்தை அறிவித்து மோடிக்கு நெருக்கடி ஏற்படுத்தியிருக்க முடியும். இடதுசாரி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்திருந்தால், மற்ற ஊழியர் சங்கங்களும் வேறுவழியின்றி அவர்களைப் பின்பற்றி இருப்பார்கள். ஏனெனில் பொதுமக்களுக்கு அடுத்தபடியாக இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருப்பது வங்கி ஊழியர்களே.

ஓர் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி கட்டிக்கொண்டு, ஒவ்வொரு வங்கியாகச் சென்று, வரிசையில் நிற்பவர்களிடம் 'இத்திட்டம் யாருக்கானது?' என்பதை விளக்கி இடதுசாரிகள் பேசியிருக்க முடியும்; துண்டறிக்கை கொடுத்து இருக்க முடியும். ஆனால், காலம் தங்கள் முன் அளித்த அரிய வாய்ப்பை இடதுசாரிகள் நழுவ விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள்:

இந்தியாவைப் போலவே, வெனிசூலாவிலும் உயர் மதிப்பு கொண்ட நோட்டுக்களை (100 பொலிவர் நோட்டு) செல்லாது என அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ கடந்த புதன்கிழமை (14-12-2016) அறிவித்தார். ஆனால், மூன்று நாட்கள்கூட அந்த அறிவிப்பு தாங்கவில்லை. காரணம் மக்களின் கொந்தளிப்பு. நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. இப்போது அதிபர் பின்வாங்கி, செல்லா நோட்டு அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் மோடி அறிவித்து, 40 நாட்கள் கடந்துவிட்டது. மக்களிடம் எந்தவொரு கொந்தளிப்பையும் காணோம். வரிசையில் நிற்கும்போது வெளிப்படும் சின்ன சின்ன முணுமுணுப்புகள், வங்கி ஊழியர்களோடு ஏற்படும் வாக்குவாதங்களைத் தாண்டி, அரசுக்கு எதிராக மக்களிடம் எந்தவொரு அசைவும் இல்லை. விவசாயம், சிறுதொழில், வர்த்தகம், இயல்பு வாழ்க்கை என அனைத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டும், மக்கள் சொரணையற்று இருப்பது ஏன்?

"மக்களிடம் செல்லுங்கள்.. மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்" என்று இடதுசாரிகள் அடிக்கடி கூறுவார்கள்.

வங்கி வாசலில் எந்தவொரு கேள்வியுமில்லாமல், மணிக்கணக்கில் தினமும் நிற்கும் மக்களிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. மக்களைப் பற்றி பெரியார் சொன்னதுதான் இன்றைக்கும் பொருந்துகிறது.

"பொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாதவர்கள். தங்கள் முன்னோர்கள் யார்? தங்கள் நாடு எது? தங்கள் ஜாதி? இனம் என்ன? என்பவற்றையே உணராதவர்கள். மீதியுள்ளவர்களில் 14-3/4 பேர்கள் சுயநலக்காரர்கள். பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு செம்புத் தண்ணீர் கூடக் கொடுக்க மனம் வராதவர்கள். அதுவும் நம் வீடு எரியும்போது அணைக்கத் தண்ணீர் வேண்டாமா என்று கருதிக்கொண்டு அதை மிச்சப்படுத்தி வைத்திருக்கும் புத்திசாலிகள்." (பெரியார் - ’குடிஅரசு’ - சொற்பொழிவு - 18.12.1943)

இத்தகைய புத்திசாலிகளும், தற்குறிகளும் சேர்ந்து தங்களுக்கான பிரதிநிதிகளை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்?

"காசு கொடுத்து ஓட்டுப் பெறுகிறான். காசு பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடுகிறான். பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறான். ஓட்டின் பலன் என்ன, அதை எப்படி, எதற்கு பயன்படுத்துவது என்ற அறிவே இல்லாமல் ஓட்டுப் போடுகிறான்." (பெரியார், "விடுதலை", 3.11.1968)

மோடி மாதிரியான யோக்கிய சிகாமணிகள் ஆட்சிக்கு வருவதும், கொடூரமான அல்லது முட்டாள்தனமான திட்டங்களை செயல்படுத்துவதும் இந்த தற்குறி மக்களின் மீதுள்ள அளவிலாத நம்பிக்கையினால்தானே? எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என்பதினால்தானே?

பாமரர்களின் நிலைதான் இப்படி என்றால், படித்த மேதாவிகளின் நிலை அதை விட மோசம்.

மோடி, ஜெயலலிதா போன்ற பாசிஸ்ட்களை தூக்கிப் பிடிப்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. IT நிறுவன ஊழியர்கள், டாக்டர்கள், அரசு ஊழியர்கள், இதர white collar job பார்ப்பவர்கள், வெளிநாடுகளில் செட்டிலான NRI-கள் எல்லாம் தேர்தல் காலத்தில் பேசிய பேச்சு அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடியவை அல்ல. குஜராத் வளர்ச்சி பற்றி மோடி குரூப் பரப்பிவிட்ட கட்டுக்கதைகள் அனைத்தையும் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த உண்மை விளம்பிகள் இவர்கள்தான்.

உண்மை என்ன என்பதை இவர்களாகவும் தேடி அறிவதில்லை. நம்மைப் போன்றவர்கள் விளக்கிச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. 'எதை எடுத்தாலும் நொட்டை சொல்லும் உங்களைப் போன்றவர்களினால்தான் இந்தியா வல்லரசாக முடியவில்லை" என்று நம்மையே கடைசியில் குற்றவாளி ஆக்கி விடுவார்கள்.

ரூ.500, 1000 செல்லாது என்று மோடி அறிவித்த போது, இந்தியா வல்லரசாகி விட்டதாகவே பேசத் தொடங்கினார்கள். இப்போது கொஞ்சம் சுருதி குறைந்து, ஜனவரி 1 வரைக்கும் பொறுங்க சார் என்கிறார்கள்.

'மாட்டு மோத்திரம் குடித்தால் உடம்புக்கு நல்லது' என்று மோடி சொன்னால், 'மோடி மோத்திரம் அதைவிட நல்லது' என்று கிளம்பி விடும் இத்தகு புத்திசாலிகளை வைத்துக் கொண்டு நாம் என்ன தான் செய்வது?

நாட்டின் பொருளாதாரத்தை, எளிய மக்களின் அன்றாட வாழ்கையை சீர்குலைக்கும் முட்டாள்தனமான யுத்தம் ஒன்றை ‘தேசபக்தி’ என்ற பெயரில் மோடி நடத்திக் கொண்டிருக்கிறார். மக்களை ஒருங்கிணைத்துப் போராட வேண்டிய அரசியல் கட்சிகளோ, துறைரீதியாக இதை எதிர்க்க வேண்டிய வங்கி ஊழியர் சங்கங்களோ அடையாளப் போராட்டங்களை நடத்தி, தங்களது வரலாற்றுக் கடமையை கைகழுவுகிறார்கள். இத்துரோகத்திற்கு வருங்காலத்தில் அதிகப்படியான விலையை அவர்கள் கொடுக்க வேண்டி வரும்.

- கீற்று நந்தன்