அன்பார்ந்த தொழிலாளர்களே!
தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளின் கண் அசைவுக்கு ஏற்றாற்போல் நீக்கியும், மாற்றியும் வருகிறது மோடி அரசு! மொத்தமுள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றுவதை எதிர்த்து நாடு முழுவதும் தொழிலாளி வர்க்கம் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறது. ஆனாலும் கார்ப்பரேட்டுகளின் பாதங்தாங்கியான மோடியோ தன்னுடைய கார்ப்பரேட் விசுவாசத்தை மேலும் தீவிரப்படுத்தி தான் ஒரு கார்ப்பரேட் கைக்கூலி என்பதை அங்குலம் அங்குலமாக நிரூபித்து வருகிறார்.
உரிமைகளற்ற சட்டத் தொகுப்பு! தற்கொலைக்கு ஆளாகும் தொழிலாளி வர்க்கம்!
குறைந்தபட்ச ஊதியம், சம்பள சட்டம், போனஸ் சட்டம், சம வேலைக்கு சம ஊதியம் சட்டங்களை ஒன்றாக்கி ஊதிய விதிமுறை தொகுப்பு எனவும், PF, ESI மகப்பேறு பலன்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம், வேலையாள் இழப்பீடு சட்டம் உள்ளிட்ட சட்டங்களை ஒன்றாக்கி சமூக பாதுகாப்பு விதிமுறை தொகுப்பு என மாற்றி விட்டனர். இதனை நாட்டின் ‘வளர்ச்சிக்குத்’ தடையாக சட்டங்கள் இருப்பதால் மாற்றுகிறோம் என மோடி கூறுகிறார்!
நவம்பர் 29 இல் நாடாளுமன்றத்தில் “தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா 2019” அறிமுகம் செய்தபோது, தொழிலாளர் துறை அமைச்சர் உதித்த வார்த்தைகள், “முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்துவதற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எளிதாக தொழில் தொடங்க ஏதுவாகவும் இந்த மசோதா வழிவகை செய்யும்”, என குறிப்பிட்டுள்ளார். ஆடு நனையுதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதைதான் இது!
'வேலைக்கு அமர்ந்து! விருப்பம்போல் துரத்து!!' என்பதுதான் இம்மசோதாவின் நோக்கம். நிலையான கால வேலைவாய்ப்பு (FIXED TERM EMPLOYMENT) என்பது சட்ட விதிகளின் பிரிவுகளில் ஒன்றாக இருந்ததை மாற்றி, சட்டப்படி எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். அதாவது மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், அல்லது சீசன் மற்றும் ஆர்டர்களைப் பொறுத்து தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம், என மாற்றியுள்ளனர். இதன் மூலம் இனிமேல் காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு கூட வேலை இல்லை என்பதே மோடி அரசு நமக்கு கொடுத்திருக்கின்ற ‘நல்ல நாள்’ (அச்செ தின்).
1926 இந்திய தொழிற்சங்க சட்டம் தொழிலாளர் நிலை ஆணை சட்டம் மற்றும் 1947 தொழில் தாவா சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை ஒரே தொகுப்பாக்கி தொழிலாளர்களை ‘ராமராஜ்யம்’ காலத்திற்கு ப்ரமோஷன் கொடுத்துள்ளது, மோடி-அமித்ஷா கூட்டணி!
இந்திய தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற இந்த சட்டம் தொழிற்சங்கங்கள் துவக்குவது முற்றிலுமாகத் தடுக்கிறது. மேலும், ஒரு ஆலையில் நிரந்தர தொழிலாளர்கள் 75 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான தொழிலாளர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக அறிவிக்கப்படும். தற்போது இருக்கின்ற சட்டத்தின்படி 7 பேர் சேர்ந்தால் தொழிற்சங்கத்தை சட்டப்படி பதிவு செய்து உரிமைக்காகப் போராட முடியும். இந்த எதிர்ப்பையும் காட்டக் கூடாது என்பதற்காகவே கார்ப்பரேட்டுகளுக்கு விசுவாசமாக சட்டத்தை மாற்றி அமைக்கின்றனர்.
பெரும்பான்மையினரைக் கொண்டு சங்கம் துவக்கி போராடிய மாருதி, ராயல் என்ஃபீல்ட், யமஹா போன்ற ஆலைகளில் சங்கத்தை ஒழித்துக் கட்டுவதற்கு முதலாளிகள் செய்த சட்டவிரோத நடவடிக்கைகள் இனி சட்டப்பூர்வமாகக் கருதப்படும்! தற்போது கூட இந்திய அளவில் பெரிய சங்கமாக இருக்கும் ஐஎன்டியூசி, எந்த பேச்சுவார்த்தை, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க மாநாடுகளுக்கு மோடி அரசால் அழைக்கப்படுவதில்லை. மாறாக பாஜக-வின் ஊழல் சங்கமான பிஎம்எஸ்-ஐ பிரதிநிதித்துவப் படுத்துகிறது.
அதேபோல 300 தொழிலாளர்கள் வரை உள்ள தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் எந்த நேரத்தில் எந்த நேரத்திலும் நட்டக் கணக்கு காட்டி தொழிற்சாலையை மூடவோ, ஆட்குறைப்பு செய்யவோ, உரிமைகளைப் பறிக்கவோ அரசின் அனுமதியைப் பெற்றால் போதும் என திருத்தப்பட்டுள்ளது. அரசு என்பது தொழிலாளர் நலத்துறை என்கிற பல் பிடுங்கிய பாம்பு என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டும்! எந்த நேரத்திலும் என்கிற நிபந்தனையைக் காட்டி, தொழிலாளர்கள் தங்களின் உரிமையை நிலை நாட்டப் போராடும் போது முதலாளிகள் இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது மோடி அரசு!
வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்! அரசியல் எழுச்சியாக வளர்த்தெடுப்போம்!
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது மிகப் பெரிய தேசத் துரோகம் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது எனவும் தொடர்ந்து கூச்சலிடுகின்றனர், ஹிட்லரின் வாரிசுகள்! வளர்ச்சிக்கு எதிரானது என்பதை 'யாருடைய வளர்ச்சிக்கு?' என நாம் கேள்வி கேட்க வேண்டிய தருணமிது! தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற சட்டப்படியான உரிமைகளை கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக கொடுப்பதை தேசபக்தி எனக் கூற முடியுமா?
நாடு முழுவதும் விற்பனை சரிவு, உற்பத்தி வீழ்ச்சி, வேலை இழப்பு, ஆலை மூடல், ஆட்குறைப்பு உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த பேரழிவு நடவடிக்கைகள் மக்களை வீதியில் நிறுத்தி உள்ளது. ஆனால், மோடியோ “5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை 2024ல் எட்டுவோம்” என சவடால் விட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் எதார்த்த நிலைமையோ வேறு மாதிரி உள்ளது.
ஏழைகளின் வருவாய் இரண்டு சதவீதம் வளர்ச்சி அடைகிறது எனில், பணக்காரர்களின் வருமானம் 12 சதவீதம் வளர்ச்சி அடைகிறது. ஒரு சதவீத பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 57 சதவீதம். கடந்த நான்கு ஆண்டுகளில் இவர்களின் சொத்து மதிப்பு 79 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் மறுபுறமோ கிராமப்புற வேலைவாய்ப்பும், அமைப்புசாரா தொழில் வாய்ப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது என தேசிய மாதிரி சர்வே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணங்கள் விவசாயத்தின் அழிவு, விவசாயக் கூலிகள் நகர்புறத்திற்கு வருவதும், நகர்புறத்தில் குறைந்து வரும் வேலையின்மையால் ரிசர்வ் பட்டாளம் பெருகியுள்ளதும் ஆகும்.
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி 4.5 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது. வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் அளவு ஐந்தில் இருந்து ஏழாவது இடத்தில் சரிந்துள்ளது என மோடியின் பங்காளி உலக வங்கியே சான்றிதழ் கொடுத்துள்ளது. ஆர்பிஐ-யின் ஆய்வு சொல்கிறது, “ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர் தற்போதைய வாழ்க்கைத் தரத்தை காப்பாற்றிக் கொள்வது சவாலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்”. ஆனால் மோடி - அமித்ஷா கும்பலோ இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாட்டு மக்களை இன - மத ரீதியாக பிளவுபடுத்தி தங்களின் இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றத் துடிப்பாக செயல்படுகின்றனர்.
இதன் மூலன் உற்பத்தி - தேவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளி எந்த அளவிற்கு பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பதைக் கூட உணர முடியாத மங்குனி அமைச்சர்களை வைத்து நாம் கொண்டாட முடியுமா? உற்பத்திக்கு நிகரான தேவை சந்தையில் இல்லை; தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு அடித்தட்டு மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததை இந்த அரசு உணர்ந்திருந்தாலும், மானியம், வரி தள்ளுபடி என மாறி மாறி கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதையே தனது கொள்கையாக வைத்திருக்கிறது. அதுவே தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கைகள். இதனை முறியடிக்க நாம் உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்.
சுத்தமான குடிநீர் இல்லை, உணவு இல்லை, காற்று இல்லை. மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற பூமியாக மாற்றிய இந்த முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் நமக்கு விடிவு இல்லை என்பதை உணருவோம். அதற்கு வருகின்ற ஜனவரி 8 அகில இந்திய வேலை நிறுத்தத்தை அரசியல் ஆயுதமாக்கிப் போராடுவோம்!
- ம.சி.சுதேசி