ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒரே ஒழுக்கமுள்ளவர்களாக் இருத்தல் அவசியம். ஒழுக்கமென்பதோ, கற்பென்பதோ ஆண் - பெண் இரு பாலருக்கும் சொந்தமானதே யன்றி பெண்களுக்கு மட்டுமல்ல. இன்றைய சீர்கேடான நிலைக்குப் பெண்மக்கள் மிருகங்களிலும் கேவலமாக கருதப்பட்டதும், அவர்கள் பிள்ளை பெறும் இயந்திரங்களாக எண்ணப்பட்டதும், மனித ஜென்மத்துக்கும் பெண்களுக்கும், சம்பந்தமே இல்லையென ஆண்கள் மதித்து வந்ததும், இவைகளின் சவுகரியத்தினால் இவன் ஒழுக்கமென்பதை விட்டு விட்டு நாளாவட்டத்தில் வெகு தூரம் விலகி, அதற்கும் இவனுக்கும் சம்பந்தமில்லாது இன்று வாழ்வதுமே காரணமாகும்.
- ஈரோட்டில் 08.12.1929ல் சொற்பொழிவு- குடி அரசு 22.12.1929
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சகோதரி, அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவனும், இந்து முன்ணணியைச் சேர்ந்தவனுமான மணிகண்டன் என்ற மனித மிருகத்தைக் காதலித்து, கருவுற்று பின் அவன் மற்றும் அவனுடைய கூட்டாளிகளால் வன்புணரப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
சமூக இயக்கங்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக கொலைகாரனும் அவன் கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமாக நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட நிர்மலா பெரியசாமியும், ஆர்.எஸ்.எஸ் ‘சிலீப்பர் செல்லும்’, பார்ப்பன சமூக ஆர்வலருமான பானுகோம்ஸ் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட பெண் சார்பாகப் பேசாமல், அந்தப் பெண்ணின் வளர்ப்பையும், பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையும் தான் காரணம் என்று கேவலமாகப் பேசினார்கள்.
இந்த நூற்றாண்டிலும் பெண்கள் எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே அடங்கியிருக்க வேண்டுமென்றும், வீட்டைவிட்டு இரவு நேரங்களில் வெளியே செல்லும் பெண்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டுமென்கிறார்கள். மேலும் அவர்களைப் போன்றவர்கள் இந்தச் சமூகத்தில் மிகவும் பாதுகாப்பாக இருப்பது போலவும், பாதிக்கப்படும் பெண்கள் அனைவரும் ஒழுக்கமில்லாமலும், வளர்ப்பு சரி இல்லாமல் இருப்பதே காரணம் என்றார்கள். மேலும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் விவாதத்தில் நிர்மலா பெரியசாமி அவர்கள் நான் பெண் சுதந்திரத்தை மிகவும் விரும்புகிறவர் என்றும் நடைமுறையில் அதைக் கடைப்பிடிப்பவர் என்றும் ஆனாலும் நான் ஒரு பெண்ணியவாதி அல்ல என்றும் கூறினார். இதில் ஒரு செய்தி உண்மைதான்.
நிர்மலா பெரியசாமி அவர்கள் முதன்முதலாகத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த போது ஒரு வார இதழுக்கான நேர்காணலில் “ நான் இரவு தூங்கும் போது தாலியைக் கழட்டி வைத்துவிட்டுத் தான் தூங்குவேன்” என்று கூறியிருந்தார். அதற்கு ஆண்கள், பெண்கள் என இரண்டு பக்கத்திலிருந்தும் எதிர்ப்பு வந்தது. அதற்காக அவர் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவரின் பேச்சு அவர் மேல் ஒரு நல்ல மரியாதையை ஏற்படுத்தியது. அவரின் துணிச்சலுக்கு அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் அரசியல் பின்புலம் தான் காரணம். அப்போதும் பார்ப்பனக் கூடாரம் தான் அவர்மீது கல்வீசியது.
காலப்போக்கில் இவரின் நிறம் மாறி, தொலைக்காட்சியில் கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கும் போதே பெண்கள் எப்போதும் ஆண்கள் சார்ந்து தான் இருக்கவேண்டு மென்றும், குடும்பம் என்கிற அமைப்பு பெண்களால் உடைபடாமல் இருக்கவேண்டும் (ஆண்கள் எவ்வளவு கேவலனமானவர்களாக இருந்தாலும்), சாதிய அமைப்பு முறை அப்படியே இருக்க வேண்டும் என்றும் கூறிவந்தார். இந்த ‘மனு’ மன நிலைதான் பெண்களுக்கெதிராக, ஆணாதிக்க, சாதியவாதி களைப் போல் நஞ்சை கக்கச் செய்கிறது.
“எக்காலமும் மாதர் சுவாதினமுடையவர் அல்லர்; சுதந்திரம் உடையவர் அல்லர்” (மனுஸ்மிருதி- 3ம் பாகம்). மனுவுக்கும் இதே கருத்தை வலியுறுத்தும் பழமைவாதிகளுக்கும் பெரிய வேறுபாடில்லை. சகோதரி நந்தினி விசயத்தில் முதலில் அவர் பெற்றோர் சரியில்லை என்றும், ஒரு அயோக்கியன் காதல் என்ற பெயரில் நந்தினியின் பின்னால் சுற்றியதையும் கண்காணிக்கவில்லை என்றும் அதனால் கருவுற்றதையும் அறியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதில் எந்த ஒரு இடத்திலும் கூட்டுவன்புணர்வு செய்து அந்த இளம் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்த அந்தக் காட்டுமிராண்டிகளை அம்பலப்படுத்த மறுத்துவிட்டார். நந்தினி மீது இவர் வைத்த விமர்சனங்களை விட, இந்தக் கொலையாளிகளுக்கு இவர் காட்டிய பரிவு தான் நிகழ்ச்சி நடத்திய நெறியாளரையும் வெட்கப்படவைத்து விட்டது. நந்தினி விசயத்தில் அவரின் நடத்தையும், அவரின் குடும்பத்தையும் குறை சொல்லும் இவர், சமீபத்தில் சென்னையில் 7 வயது ஹாசினி என்ற குழந்தை ஒரு காமுகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதற்கும் அந்தக் குழந்தையின் வளர்ப்பு தான் காரணம் என்று சொல்வாரா? அல்லது அந்தக் குழந்தையின் நடத்தைதான் காரணம் என்று சொல்வாரா?.
பெண்களுக்கு எதிரான சட்டங்கள்
மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளின் ஒரு சில பகுதிகளில் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவன் அப்பெண்ணையே திருமணம் செய்து கொண்டால் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று அந்நாட்டின் நீதிமன்றங்கள் 475 ன் படி தீர்ப்பளித்தன. (ஆர்டிகல் 475 ன் படி திருமணம் இல்லாத உறவில் ஒரு பெண் ஈடுபடும்போது அது பாலியல் வன்புணர்வாகவே இருந்தாலும் அவள் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டதாகவே கருதப்படுவாள்) இந்தச் சட்டத்தால் வற்புறுத்தித் திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட பின் அச்சட்டம் ரத்து செய்யப்பட்டது..
இவ்வாறே லெபனான் நாட்டு சட்டத்தின் 522 ம் இதையே வலியறுத்துகிறது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அந்நாட்டின் மகளிர் அமைப்பு (ஹBஹஹனு) பல்வேறு முறையில் போராடி வருகின்றது. வன்புணர்வு ஒரு குற்றம். குற்றவாளியை தண்டிப்பதை விட்டுவிட்டு, குற்றவாளியையே பெண் திருமணம் செய்து கொள்ளச் செய்யும் சட்டத்தை ரத்து செய்யச்சொல்லி அவ்வமைப்பு போராடுகிறது.
ஆந்திரப்பிரதேச சபாநாயகர், தேசிய பெண்களுக்கான பாரளுமன்றம் நடத்திய மாநாட்டில், பெண்கள் மேம்பாடு மற்றும் பெண்களுக்கெதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் பற்றிய தலைப்பில் பேசும் போது, பெண்களை வாகனங்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். அதில் பெண்கள் கார்கள் போல வீட்டிலேயே இருந்து விட்டால் எந்த வித அசாம்பாவிதம் ஏற்படாது என்றும், வெளியே செல்லும் போது மிதமான வேகத்தில் சென்றால் குறைவான விபத்துகளும், வேகம் அதிகமாகும் போது விபத்துகள் அதிகரிப்பது மிக இயல்பு என்றார்.
ஆரம்பக் காலங்களில் பெண்கள் வீட்டிலேயே இருந்ததனால், பாலினப் பாகுபாட்டைத் தவிர மற்றபடி பாதுகாப்பாகத்தான் இருந்தார்கள் என்றும், தற்போது பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள், பல்வேறு தொழில்கள் புரிவதால் பொதுவெளியில் இயல்பாக இயங்குகிறார்கள். எவ்வளவு தூரம் அவர்கள் பொதுவெளியில் இயங்குகிறார்களோ, அவ்வளவு தூரம் பாலியல் அச்சுறுத்தல், அத்துமீறல் மற்றும் கடத்தலுக்கு உள்ளாகிறார்கள். இதைத் தவிர்க்க பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருக்கவேண்டும் என்றார்.
இப்படி பேசியதால் எங்கே பிரச்சனையாகிவிடும் என்று நினைத்து, சற்றுச் சுதாரித்து, நான் ஒன்றும் பெண்களைப் படிக்கவேண்டாம், வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லவில்லை, பெண்களுக்கு தற்காப்பு கலைகளைக் கற்றுக் கொடுத்து வீரமாக வளர்க்கவேண்டும் என்றும் வீரம் என்பது தோற்றத்தில் இல்லை. உள்ளத்தில் தான் உள்ளதென்றும், நம்பிக்கை கொடுத்து வளர்த்தால் அவர்கள் பிரச்சனைகளை அவர்களே சரி செய்து கொள்வார்கள் என்று சமாளித்தார். இவ்வாறு பெண்களைப் பற்றி ஆண்கள் எண்ணுவதென்பது இன்று நேற்றல்ல - வேத காலங்கள் என்ற கேடு கெட்ட காலம் ஆரம்பித்ததோ அன்றிலிருந்து இப்படிதான் பேசிக்கொண்டிருக் கிறார்கள்.
ஆண் வளர்ப்பில் மாற்றம் தேவை
இந்த நிலைமை மாறவேண்டுமென்றால் பெண்களாகிய நாம் தான் முதலில் மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டும். ஒழுக்கத்தை நம் வீட்டுப் பெண்களுக்கு போதிப்பதை விட, நம் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு முதலில் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது, பெண்களை புரிந்து கொண்டு, பால் வேறுபாடின்றி பழக கற்றுக் கொடுப்பது போன்ற வேலைகளை ஆரம்பிக்கவேண்டும்.
குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் பெண்களை வெளியே செல்ல வேண்டாம் என்று சொல்வதற்குப் பதிலாக, ஆண்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்க்குப் பின் வெளியே செல்லும் பெண்களிடம் எப்படி கண்ணியமாக நடக்கவேண்டுமென்பதையும் சொல்லித் தரவேண்டும். இரவு நேரங்களில் வயது வந்த தன் மகனை வெளியே அழைத்துச் செல்லவேண்டும். அப்போது தான் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள், பாதுகாப்பின்மை, ஆகியன கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குப் புரியவரும். எதிர்காலங்களில் இந்த மாதிரி வளர்க்கப் பட்ட ஆண்களால் பெண்களுக்குத் தொல்லை ஏற்படாது என்பதை நம்பலாம்.
“தனி உரிமை உலகில், பெண்கள் சுதந்திரம் வேண்டுமென்பவர்கள் பெண்களை நன்றாய்ப் படிக்கவைக்க வேண்டும். தங்கள் ஆண்பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல், பெண்களுக்கே செலவு செய்து படிக்க வைக்க வேண்டும். வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொடுக்க வேண்டும். தாய் தகப்பன்மார் பார்த்து ஒருவனுக்கு பிடித்துக் கொடுப்பது என்று இல்லாமல் அதுவாக (பெண்ணாகவே பார்த்து) தகுந்த வயதும், தொழிலும் ஏற்பட்ட பிறகு ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி செய்யவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் ‘கன்னிகாதானம், கலியாணம், தாரா முகூர்த்தம் என்கின்ற வார்த்தைகளே மறைந்து அகராதியில் கூட இல்லாமல் ஒழிய வேண்டும். அன்று தான் பெண்கள் சுதந்திரம் அனுபவிக்க இலாயக்கு உள்ளவர்களாவார்கள்”
ஈரோட்டில் 22.02.1936 ல் சொற்பொழிவு- குடி அரசு 01.3.1936