2013 ஆம் ஆண்டு காங்கிரசு அமல்படுத்திய நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் பல‌ திருத்தங்களைச் செய்துப் புதிய சட்ட மசோதாவை அவசர சட்டமாகக் கொண்டு வந்தது மோடி தலைமையிலான பா.ச.க அரசு. பா.ச.க.-விற்கு உள்ளேயே இந்த அவசர சட்டம் குறித்து அதிருப்தி இருந்தாலும், மோடி கொண்டு வந்ததால் அவர்கள் அமைதி காத்தனர்.

இந்த மசோதா மக்களவையில் கடும் எதிர்ப்பிற்கு உள்ளானாலும் பா.ச.க பெரும்பான்மையாக இருப்பதால் இங்கு நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்குச் சென்றது. மாநிலங்களவையில் காங்கிரசு, கம்யூனிஸ்டு உள்ளிட்ட எல்லா எதிர்க் கட்சிகளும் எதிர்த்ததால் இது விவாதத்திற்கே அனுமதிக்கப்படவில்லை. அவசர சட்டத்தின் ஆயுட் காலமான ‌6 மாதம் முடியும் நேரத்தில் பா.ச.க. இதை மீண்டும் இன்னொரு அவசர சட்டமாகக் கொண்டு வந்துள்ளது. இப்போது இந்த அவசர சட்டம் மாநிலங்களவையின் கூட்டு குழுவின் பரிசீலனையில் உள்ளது. மோடி இந்த சட்டத்தில் மேற்கொண்டுள்ள திருத்தங்கள்....

* நில உரிமையாளரின் ஒப்புதல் தேவையில்லை என்ற திருத்தம் புதிய சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நில உரிமையாளரின் அனுமதி இல்லாமலேயே அவரது நிலத்தை அரசு எடுத்து பெருநிறுவனங்களுக்கு கொடுக்க‌முடியும்.

* விவசாய நிலங்களை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகளின் நண்பன் என்று தன்னை அறிவித்துக் கொண்ட மோடி, விவசாயிகளை அவர்களின் நிலங்களில் இருந்துப் பிடுங்கிப் பெருநிறுவனங்களின் கூலிகளாக நிறுத்துகின்றார்.

* நிலம் கையகப்படுத்தல் மூலம் ஏற்படும் சமூகப் பாதிப்பை ஆய்வு செய்யத் தேவையில்லை.

ஒருவரது சொத்தை அவரது அனுமதியில்லாமல் இன்னொருவர் அவரிடமிருந்து பிடுங்குவது குற்றம் என இந்தியக் குற்றவியல் சட்டம் கூறுகின்றது. அதே போல அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 21 ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்கான ‌உரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால், இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்தம் ஒருவரது சொத்தை அவரது அனுமதியில்லாமல் இன்னொருவர் பிடுங்கிச் செல்வது சரி என்றும், அதை அவர் தடுக்கக்கூடாது என்றும் கூறுகின்றது. அரசியலமைப்புச் சட்டம் 21 வழங்கும் வாழும் உரிமையை ஏழைகளுக்கு மறுத்தும், பணக்காரர்களுக்கு உறுதிப்படுத்தவும் செய்கின்றது இச்சட்டத்திருத்தம்.

இந்த சட்டத்தைப் பற்றி சுருங்கக் கூறின் “தனியார் முதலாளிகள் தங்களுக்கு விருப்பமான நிலங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டு, தங்கள் உடைமையாக்கிக் கொள்ளுதல்”. மோடி சொன்ன ’வளர்ச்சியும்’, ’நல்ல காலமும்’ (அச்சே தீன்) முதலாளிகளுக்கு மட்டுமே என மோடியும், அவரது அரசும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றது,

“பணக்காரர்கள் சட்டத்தை ஆளுகின்றனர்.

சட்டம் ஏழைகளை ஆளுகின்றது ”

Pin It