மனிதகுல வரலாற்றில் தொடக்க காலத்தில் மேய்ச்சல் சமூகமாக இருந்தபோது, கால்நடைகளே பெருஞ்செல்வமாகக் கருதப்பட்டது. மனிதர்கள் வேளாண்மை செய்வதைக் கற்றபின், நிலம் முதன்மையான உற்பத்திச் சாதனமாகியது. நிலமே செல்வத்தின் அளவு கோலாயிற்று. நிலத்தைச் சார்ந்ததாகவே மனிதகுல வாழ்வு அமைந்தது. தமிழ்ச் சமூகத்தில் நிலத்தை அடிப்படையாகக் கொண்டே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று தமிழரின் அய்ந்திணை வாழ்வியல் அமைந்தது.

சுதந்தர இந்தியாவில் 1950இல் வேளாண்மை யையும் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களையும் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு 80 விழுக்காடு மக்கள் வாழ்ந்தனர். அதன்பின் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, சேவைப் பிரிவின் ((Service Sector) வளர்ச்சி காரணமாக 2016 இல் 60 விழுக்காடு மக்கள் நிலத் தை நம்பி வாழ்கின்றனர்.

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இரயில் பாதைகள்-சாலைகள், தொழிற்சாலைகள், கல்விச் சாலைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், படைப் பிரிவு முகாம்கள்-குடியிருப்புகள் முதலானவற்றை அமைத்தல் என்னும் பொது நோக்கத்திற்காக (Public Purpose)வும் பொதுப்பயன்பாட்டுக்காகவும் தனியார் நிலத்தை அரசு கைப்பற்றுவதற்கான சட்டம் 1894ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

1991இல் நடுவண் அரசு தாராளமயம், தனி யார்மயம், உலகமயம் என்கிற முதலாளிகளுக்கு ஆதர வான கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. நிலம் மாநில அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. ஆயினும் நடுவண் அரசும், மாநில அரசுகளும் தொழில் வளர்ச்சி, அதன் மூலமாக வேலை வாய்ப்பு பெருகுதல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்தல் என்கிற போர்வையில் நூற்றுக்கணக்கான-ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை உழவர்களிடமிருந்து கையகப்படுத்தி முதலாளிகளுக்கு அளித்தன.

இந்தியாவின் பல பகுதிகளில் முதலாளிகளுக்காக உழவர்களின் நிலங்கள் பெருமளவில் அரசால் கையகப் படுத்தப்பட்டன. உழவர்கள் தங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்தனர்; பல வகையான துன்பங்களுக்கு உள்ளாயினர். நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை; மறுகுடியமர்த்தலுக்கோ மாற்றுத் தொழில் செய்வதற்கோ அரசு எத்தகைய ஏற்பாட்டையும் செய்யவில்லை. குறைந்த அளவில் இழப்பீடாகத் தரப்பட்ட பணமும் விரைவில் செல வாயிற்று. அதனால் நிலம் சார்ந்து, உழைத்து, கண் ணியமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த உழவர்களும், வேளாண் கூலித் தொழிலாளர்களும் நடுத்தெருவில் பிச்சைக்காரர் நிலைக்குத் தள்ளப் பட்டனர். அதனால் அரசின் நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கைகளைப் பல இடங்களில் வேளாண் குடி மக்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர்.

மேற்கு வங்காளத்தில் 2006 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு, ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில், டாடா நிறுவனத்தின் ‘நானோ’ மகிழுந்து தொழிற் சாலை அமைப்பதற்காக உழவர்களிடமிருந்து தடாலடி யாக 1053 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது. இதில் பெரும்பகுதி நிலம் இரு போகம் விளையும் நல்ல நீர்ப்பாசன வசதி கொண்டதாகும். எனவே உழவர்கள் தங்கள் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையி லான இடதுசாரி கூட்டணி மேற்கு வங்காளத்தில் 1977இல் ஆட்சியில் அமர்ந்தது. மேற்கு வங்காளத்தில் பெரும்பகுதி நிலம் குத்தகை முறையில் பயிரிடப்பட்டு வந்தது. நிலப் பண்ணையாளர்கள் குத்தகையாளர் களைத் தம் விருப்பம் போல் மாற்றினர்; பலவகை யான கொடுமைகளுக்கு உள்ளாக்கினர். இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சியில் அமர்ந்ததும், குத்தகையாளர்களுக்கே நிலத்தை உரிமையாக்கியது.

மேலும் நில உச்சவரம்புச் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியது. அதனால் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு நிலம் பிரித்தளிக்கப் பட்டது. இதனால் ஊரகப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் செல்வாக்குப் பெற்றது. அந்த அடித்தளத்தின் மீதுதான் 1977 முதல் 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தது.

1977இல் உழவர்களின் உரிமைகளைக் காத்த இடதுசாரி மேற்குவங்க அரசு, புத்ததேவ் பட்டாச்சாரியா வின் தலைமையில் 2006இல் சிங்கூரில் உழவர் களின் நில உரிமையை அடாவடித்தனமாகப் பறித்தது. இதை எதிர்த்த உழவர்களைக் கம்யூனிஸ்ட் கட்சியின் குண்டர்களையும் காவல்துறையையும் ஏவித் தாக்கி யது. சிங்கூரில் நடந்த உழவர்களின் போராட்டத்தின் விளைவாக மேற்கு வங்காளத்தில் நந்தி கிராம் பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தை இந்தோனேசி யாவின் பன்னாட்டு நிறுவனத்துக்கு அரசு அளிக்க முயன்றதற்கும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சிங்கூர், நந்தி கிராம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அரங்கிலும் பேசப்படும் நிலையை உண்டாக்கியது.

உழவர்களின் போராட்டத்தில் நக்சல்பாரி இயக்கத் தினரும் முழு மூச்சுடன் ஈடுபட்டனர். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக் கட்சி சிங்கூர் உழவர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தும் நிலை உருவானது. 2006இல் மேற்குவங்க அரசு 997 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு டாடா நிறுவனத்துக்கு அளித்தது. டாடா நிறுவனம் மகிழுந்து தொழிற்சாலை அமைப்பதற்கான வேலை களைத் தொடங்கியது. மேற்குவங்க அரசின் மிரட்ட லுக்கு அஞ்சி உழவர்களில் பெரும்பகுதியினர் அரசு வழங்கிய குறைந்த இழப்பீட்டுத் தொகை யைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் 400 ஏக் கரின் நில உரிமையாளர்கள் இழப்பீடு தொகையைப் பெற மறுத்து, தங்கள் நிலம் கையகப் படுத்துவதைத் தொடர்ந்து எதிர்த்தனர்.

2008 சனவரியில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் டாடா நிறுவனத்துக்காக மேற்கு வங்க அரசு நிலத்தைக் கையகப்படுத்தியது சரியே என்று தீர்ப்பளித்தது. 2008 ஆகத்து மாதம் மம்தா பானர்ஜி சிங்கூரில் கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மேற் கொண்டார். சிங்கூரில் மிகவும் பதற்றமான நிலை ஏற்பட்டது. அதனால் 2008 அக்டோபரில் டாடா நிறு வனம் சிங்கூரில் நானோ மகிழுந்து தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு வெளியேறியது. அப்போது குசராத்தில் முதலமைச்சராக இருந்த மோடி விடுத்த அழைப்பை ஏற்று, மோடி அரசு அளித்த நிலத்தில் நானோ மகிழுந்து தொழிற்சாலையை டாடா நிறுவனம் அமைத்தது.

1965இல் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்த்து மாண வர்கள் நடத்திய போராட்டத்தில் தி.மு.க. தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதன் மூலம் 1967இல் ஆட்சியைக் கைப்பற்றியது. அதுபோல் சிங்கூரில் உழ வர்கள் நடத்திய போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரசு தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டதன் மூலம் 2011 மே-சூன் மாதங்களில் நடந்த சட்டப்பேரவைக் கான தேர்தலில், 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மீண்டும் எளிதில் தலையெடுக்க முடியாத வகையில் தோற் கடித்து ஆட்சியில் அமர்ந்தது.

மம்தா பானர்ஜி முதலமைச்சரானதும், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, 2006ஆம் ஆண்டு சிங் கூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, ஒப்புதல் அளிக்க மறுத்த-இழப்பீடு வாங்க மறுத்தவர்களில் 400 ஏக்கர் நிலத்தை அந்தந்த உழவர்களுக்குத் திருப்பித் தருவதற்கான சட்ட வரைவை முன்மொழிந் தார். ஆனால் டாடா நிறுவனம் அந்த நிலம் மேற்குவங்க அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்ததின்படி தனக்குச் சொந்தமானது என்று கூறி, மம்தா கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக் குத் தொடுத்தது. இதை விசாரித்த நீதிபதி இச்சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தார்.

அதனால் டாடா நிறுவனம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தனி அமர்வுக்கு மேல் முறையீடு செய்தது. இந்த அமர்வு 400 ஏக்கர் நிலத்தை உழவர்களுக்குத் திருப்பித் தருவதற்கான சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. எனவே இத்தீர்ப்பை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேலும் உழவர்களும், தன்னார்வ அமைப்புகளும் இதேபோல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.

mamtha baneerji 600

சிங்கூர் உழவர்கள் மாநில அரசின் அடக்குமுறை களுக்கு அஞ்சாது நடத்திய வீரத்செறிந்த போராட்டத்தின் விளைவாக, இந்திய அளவில் நிலம் கையகப்படுத்தல் குறித்துப் பெரும் விவாதம் எழுந்தது. குறிப்பாக பெரு முதலாளிய நிறுவனங்களுக்கு, சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், தொழில் நுட்பப் பூங்காக்கள் அமைப் பதற்காக என்று உழவர்களின் நிலங்களும் அரசின் நிலமும் மிகக்குறைந்த விலையிலோ, நீண்டகாலக் குத்தகையாகவோ அளிக்கப்படுவது குறித்து, பலதரப்பி னரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். 2006 முதல் தொடர்ந்து ஊடகங்களில் நிலம் கையகப் படுத்தல் பற்றிய விவாதம் முதலிடம் பெற்று வந்தது.

இந்தப் பின்னணியில் மன்மோகன் சிங் தலை மையிலான நடுவண் அரசு 2013 ஆம் ஆண்டு “நிலம் கையப்படுத்தல், மறுகுடியமர்த்தம், மறுவாழ்வு, சட்டத்தை (Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. 2014 சனவரி 1 முதல் இது நடப்புக்கு வந்தது.

2013 ஆம் ஆண்டின் நிலம் கையப்படுத்தல் சட்டத்தில், நிலம் கையப்படுத்தலின் வெளிப்படைத் தன்மைக்கும், நியாயமான இழப்பீடு வழங்கப்படு வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு திட்டத் திற்காக நிலத்தைக் கையகப்படுத்த முடிவு செய்யும் போது அரசு முதலில், அதனால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்களை மதிப்பீடு (Social impact assessment- SIA) செய்யவேண்டும். மக்களுக்கும், சுற்றுச்சுழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிய வேண்டும். அந்தத் திட்டத்துக்கு உண்மையில் எவ்வளவு நிலம் போதுமானது என்பதை மதிப்பிட வேண்டும்.

ஏனெனில் இதற்கு முன் தொழில்களுக்குத் தேவைப்படும் நிலத்தின் அளவைப்போல் பலமடங்கு நிலம் கையகப்படுத்தப் பட்டுப் பெருமுதலாளிகளுக்கு வழங்கப்பட்டன. முத லாளிகள் தம்மிடம் அதிகமாக உள்ள நிலத்தை மற்ற வர்களுக்குக் குத்தகைக்கு விட்டும், மற்றும் தனியா ருக்கு விற்றும் கொள்ளை இலாபம் ஈட்டினர். மேலும் கையகப்படுத்தவுள்ள நிலம் பொதுநலனுக்கு (Public Purpose) உண்மையில் பயன்படக்கூடியதாக உள்ளது தானா என்பதையும் ஆராயவேண்டும்.

அடுத்ததாக, முதலாளிய நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக நிலத்தைக் கையகப்படுத்துவதாக இருந்தால் 80 விழுக்காடு குடும்பங்களின் ஒப்புதலைப் பெறவேண்டும். அரசும்-தனியாரும் கூட்டாகத் தொழில் தொடங்குவதாக இருந்தால் 70 விழுக்காடு குடும்பத் தினரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று 2013 ஆம் ஆண்டிண் சட்டம் வரையறுத்துள்ளது. கையகப் படுத்தப்படும் நிலத்திற்கு, நகரப் பகுதியாக இருப்பின், நிலத்தின் சந்தை மதிப்பைப் போல் இரண்டு மடங்கு தொகையும், ஊரகப் பகுதியாயின், நான்கு மடங்கு தொகையும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக அளிக்கவேண்டும். கையகப்படுத்தப்படும் நிலத்தைச் சார்ந்து வாழும் வேளாண் கூலித் தொழிலாளர்களுக் கும் அவர்களின் மறுவாழ்வுக்கான இழப்பீடு தர வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.

2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டம் என்பது சிங்கூர் உழவர்களின் போராட்டத்தால் விளைந்த ஒப்பரிய சாதனையாகும். ஆனால் முதலாளிகள் இச்சட்டத்தை எதிர்த்தனர்.

2014ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திரமோடி தலைமை அமைச்ச ரானார். தன்னை பெருமுதலாளிகளின் காவலர் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டார். நூறு பொலிவுறு நகரங்கள் (Smart Cities) அமைக்கப் போவதாக அறிவித்தார். 2014-15-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தில்லி-மும்பை தேசிய நெடுஞ்சாலை யில் 1,483 கிலோ மீட்டர் தொலைவில், ‘இந்தியாவில் தயாரிப்போம் வாருங்கள்’ (Make-in-India) என்று அந்நிய நாட்டினரை அழைக்கும் கோட்பாட்டைச் செயல்படுத்தும் வகையில் தொழிற்பூங்காக்களை அமைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவற் றுக்கான நிலங்களைக் கையகப்படுத்தி முதலாளிய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு 2013ஆம் ஆண் டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் விதிகள் தடையாக இருப்பதை நரேந்திரமோடி உணர்ந்தார்.

எனவே, மக்களவையில் தன் ஆட்சிக்கு உள்ள தனிப்பெரும்பான்மை வலிமையைக் கொண்டு நிறை வேற்றிவிடலாம் என்ற நினைப்பில், 2013 ஆம் ஆண்டின் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் புதிய சட்டத்தை மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால் காங்கிரசுக் கட்சி யின் கடும் எதிர்ப்பாலும் மாநிலங்கள் அவையில் பாரதிய சனதா கட்சிக்குப் பெரும்பான்மை வலிமை இல்லாததாலும் மாநிலங்கள் அவையின் ஒப்புதலைப் பெறமுடியவில்லை. மோடி அரசு கொண்டுவந்த-முதலாளிகளுக்கு ஆதரவான புதிய சட்டத்துக்கு நாடெங் கும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் மோடி பின் வாங்கவில்லை. இதற்காக இரண்டு தடவைகள் அவசரச் சட்டம் கொண்டுவந்தார். இறுதியில் எந்தவொரு தலைமை அமைச்சரும் சந்திக்காத அவமானத்தை அவர் ஏற்க நேரிட்டது.

இந்தப் பின்னணியில் சிங்கூரில் நிலம் கையகப் படுத்தப்பட்டது செல்லாது என்று, 31-8-2016 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.கோபாலகவுடா, அருண் மிஸ்ரா ஆகியோர் அளித்த 204 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு, மம்தாவுக்கு மாபெரும் வெற்றி என்பதைப் போலவே, 2013 ஆம் ஆண்டின் நிலம் கையப்படுத் தல் சட்டத்தைச் சாரமிழக்கச் செய்திட முயன்ற நரேந்திர மோடியின் தலைமேல் விழுந்த சம்மட்டியடியாகவும் இருக்கிறது.

இத்தீர்ப்பில், “சிங்கூரில் கையகப்படுத்தப் பட்ட 997 ஏக்கர் நிலத்தை 10 வாரங்களுக்குள் சீர் செய்து, 12 வாரங்களுக்குள் உழவர் களுக்குத் திருப்பித்தர வேண்டும். இழப்பீடாக உழவர்களுக்கு அளிக்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறக்கூடாது. இழப்பீடு பெறாத, 400 ஏக்கருக் குரிய உழவர்களுக்கு இப்போது இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவேண்டும். ஏனெனில் பத்து ஆண்டுகளாகத் தங்கள் நிலத்தைப் பயன்படுத்த முடியாமல் இருந்தனர்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நீதிபதிகள் வி.கோபாலகவுடாவும், அருண் மிஸ்ரா வும் சிங்கூரில் நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பளித்தாலும் இருவரும் அதற்கு வெவ் வேறு காரணங்களைக் கூறியுள்ளனர். தனித்தனி யாகத் தங்கள் தீர்ப்பை எழுதினர். நீதிபதி கோபால கவுடா, “1894 ஆம் சட்டத்தில் பிரிவு 3 (எஃப்) இல் குறிப்பிட்டுள்ள ‘பொது நோக்கத்திற்காக’’ (Public Purpose) என்கிற விதி சிங்கூரில் நிலம் கையப்படுத்தப் பட்டதற்குப் பொருந்தாது. ஏனெனில் இந்த நிலம் ஒரு தனியார் முதலாளி தொழில் தொடங்குவதற்காக மட்டுமே தரப்பட்டுள்ளதால் இதில் பொது நோக்கம் என்பது அறவே இல்லை” என்று தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

நீதிபதி அருண் மிஸ்ரா, “ஒரு தனியார்-முதலாளிய நிறுவனம் தொழில் தொடங்க அரசு உழவர்களிடம் நிலத்தைக் கையகப்படுத்தி அளிப்பது என்பதில் ‘பொது நோக்கம்’ அடங்கி இருக்கிறது. முதலாளி தொழில் தொடங்குவதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உற்பத்தி பெருகுகிறது” என்று தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் இரண்டு நீதிபதிகளும் 1894 ஆம் ஆண்டின் சட்டத்தில் பகுதி 7 (Part VII) இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் நிலம் கையகப் படுத்தப்பட்டபோது பின்பற்றப்படவில்லை என்று கூறி, இது செல்லாது என்று தீர்ப்பு வழங்கினர். நிலம் கையகப்படுத்துவதற்காக அமர்த்தப்பட்ட கலெக்டர், உழவர்களிடம் முறையாகக் கலந்தாய்வு நடத்தவில்லை. அவ்வாறு நடத்தியதாக ஒரு பொய்யான அறிக்கையை அரசிடம் அளித்தார். அரசும் அதன் உண்மைத் தன் மையை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு நிலத்தைக் கையகப்படுத்தியது. இது மக்களுக்கு இழைத்த அநீதியாகும் என்று நீதிபதி அருண்மிஸ்ரா தன் தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி 15.9.2016 அன்று சிங்கூரில் நடந்த மாபெரும் விழாவில், உழவர்களுக்கு நிலத்தைத் திருப்பித் தரும்வகையில் 9,117 பேருக்கு நிலப்பட்டாக்களை வழங்கினார். நருமதை அணைக்கு எதிராகப் போராடி வரும் சமூகச் செயற்பாட்டாளர் மேதா பட்கரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

2016 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் 295 இடங்களில் 211 இடங்களை மம்தா கட்சி வென்றது. சி.பி.எம்.கட்சியின் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 32 இடங்களை மட்டுமே வென்றது. 31-8-2016 அன்று வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிங்கூரில் தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. மாறாக 1894 ஆம் ஆண்டின் சட்டத்தில் உள்ள குறை பாடே காரணம் என்று கூறியது.

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகேனும் சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உழவர்களுக்குத் திருப்பி அளிக்கலாம் என்று அக்கட்சி கோரியிருக்க வேண்டும். ஆணவத்தின் காரணமாக அவ்வாறு கோரவில்லை. சிங்கூர் உழவர்களின் போராட்டம் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மக்களுக்கு ஒரு ஒளிவிளக்காகத் திகழும்.

Pin It