தொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா

7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.

 முதன்மைப்பொருள் என்பதன் பொருள் முதன்மையானது, முக்கியமானது என்பதாகும். மேலும் ‘முதல்நிலைப்பொருள்’, ‘முதல் முதலான பொருள்’, ‘பரிணமிக்காத நிலையில் உள்ள பொருள்’ போன்ற பொருள்களைக் கொண்டதாகும். எண்ணியக்கொள்கைப்படி முதல்நிலைப் பொருள் இறுதியான உண்மையாகும் அல்லது உலகக் காரணமாகும். முதன்மைப்பொருள் என்பதற்கு மற்றொரு சொல் பிரகிருதி அதாவது மூலப்பிரகிருதி அல்லது வேர்ப்பிரகிருதி என்பதாகும். பிரகிருதி தவிர புருடன் கொள்கையை எண்ணியம் ஏற்றுக்கொண்டுள்ளது (தமிழ் மூலங்களில் புருடன் இல்லை. ஆகவே மூல எண்ணியம் புருடன் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டோபாத்தியாயா அவர்களின் இக்கருத்து தமிழ் மூலங்களை அறியாததால் ஏற்பட்ட தவறாகும்). புருடன் என்பது பிரகிருதியின் பெருக்கம் எனப்படுகிறது. புருடன் என்பது ஆணைக்குறிக்கிறது. எண்ணியத்தில் புருடன் இரண்டாவது முக்கியமற்ற நிலையில் உள்ளது. பிற்பட்ட எண்ணிய வாதிகள் ஆன்மக்கருத்துக்களை(புருடன் போன்ற) வேதங்களிலிருந்து கடன்வாங்கி எண்ணியத்தில் புகுத்த முயன்றனர். ஈசுவர கிருசுணரும் அதைத்தான் செய்தார். ஆனால் வேதங்களிலிருந்து கடன் வாங்கப்பட்ட புருடக் கோட்பாடு(ஆன்மக்கோட்பாடு) எண்ணிய அடிப்படைக் கருத்துக்களோடு ஒத்திசையவில்லை.

 Deviprasadமுதன்மைப்பொருள், பரிணாமம், பல புருடர்கள் ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் பிந்தைய எண்ணியவாதிகள் புருடன் என்பதைச் சுத்த உணர்வு எனக்கூறினார்கள். ஆனால் காரிகையின் ஆசிரியராலும் முதன்மைப்பொருள், பரிணாமக் கொள்கை ஆகியவைகளை விட்டுக்கொடுக்க இயலவில்லை. எனவே புருடன் குறித்த அவருடைய கொள்கை சங்கரருக்கு ஏற்புடையதாக இல்லை. ஆகவே காரிகைக்கும் அப்பால், முதன்மைப்பொருள், பரிணாமக் கொள்கைகளின் அடிப்படையில் மூல எண்ணியத்தை மறுபடைப்பாக்கம் செய்ய வேண்டும். புருடர்கள் பலர் என்பது மூல எண்ணியத்தின் பண்பாகும். புருடன் என்பது பிறப்பு, இறப்பு, புலன் உறுப்புகள் ஆகியன உள்ள தனி மனிதர்களைக் குறிக்கும் என்ற பொதுவான நிலைபாடு காரிகையில் உள்ளது.

 புருடர்கள் பலவாக இருப்பதற்கு உலகம் உண்மை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எண்ணியத்தின்படி காரியம் என்பது உண்மையானது. காரியம் என்பது பரிணாமவாதம் என்பதால், முதன்மைப்பொருளின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவான உலகமும் உண்மை என ஆகிறது. இவை வேதாந்த நிலைபாட்டிற்கு நேர் எதிரானது. வேதாந்தத்தின்படி காரியமும், உலகமும் உண்மையாக இருக்க முடியாது. காரிகை ஆசிரியர் எண்ணிய தத்துவத்தில் வேதாந்தக் கருத்தான புருடன் என்பதைப் பின்புறமாக நுழைத்தபோது, இந்தச்சிக்கலை விளக்குவதற்கு எல்லாவகையான முரண்பாடுகளுக்கும் ஆளானார்.

 எண்ணியவாதிகளின் கருத்துப்படி இயற்கைவிதிகளின் காரணமாக முதல்நிலைப்பொருள் மாறுதல் அடைந்து உலகம் தோன்றியது. இதில் ஆன்மீகக் கூறுகளுக்கு இடமில்லை. மூல எண்ணியமானது முதன்மைப் பொருள்கொள்கை எனில் அது இயல்புவாதம் ஆகும். இயல்புவாதக்கொள்கை என்பது இயற்கையின் விதிக்கொள்கை எனப்படும். புல், மூலிகைகள், தண்ணீர் போன்றவை எந்த வகையான காரணமும் இன்றி அவற்றின் இயற்கை காரணமாகப் பசுவின் மூலம் பாலாக மாறுகின்றன. புல் போன்றவை மாறுவது அவற்றின் இயல்பு அல்லது இயற்கை என்றே கொள்ள வேன்டும். எனவே முதன்மைப்பொருள் மாறுவதும் இவ்வாறுதான் என ஊகிக்கலாம். இயல்புக்கொள்கையின்படி பாலுக்கான காரணம் புல்மட்டும்தான் என்று ஆகிவிடாது. அது பசுவால் உண்ணப்பட்ட புல் என்ற இயற்கையின் சிக்கலான செயல்முறையாகும். முதன்மைப்பொருள் வாதம் அல்லது பொருள்காரண வாதம் என்ற எண்ணியக் கொள்கை எண்ணிய வாதிகளை இயற்கை விதிகள் பற்றிய அறிவியல் கண்ணோட்டத்தின் முன்னோடியாக ஆக்கியது.

 சரகரது நூல் காரிகையைவிடப் பழமையானது. இதில் எண்ணியத்தை இருவேறு கோணங்களில் காணும்போக்கு இருக்கிறது. முதலாவது கருத்துப்படி புருடன் அல்லது உணர்வு(சேதனம்) ஐந்து பொருள்சார்ந்த மூலகங்களுக்கும் சமமாக உள்ளது. அதாவது புருடனும் ஒரு மூலகம் தான். இங்கு பொருள்முதல்வாதத்தன்மை மிகத்தெளிவாக உள்ளது. இரண்டாவது கருத்துப்படி மனது உட்பட 24 கூறுகள் மட்டுமே உள்ளது. இதில் ஆன்மீகக் கூறுகள் எவற்றுக்கும் இடமில்லை. புருடன் என்ற கருத்தாக்கம் இதில் இடம்பெறவில்லை. ஆகவே இது அதிக அளவில் பொருள்முதல்வாதத் தத்துவமாக உள்ளது. ஆகவே சரகர் 24 கூறுகளை மட்டுமே குறிப்பிட, ஈசுவர கிருசுணர் 25 கூறுகளைக் குறிப்பிடுகிறார். புருடன் 25ஆவது கூறாக உள்ளது(தமிழ் மரபுப்படி 24 கூறுகள் மட்டுமே உள்ளது என புறநானூறு கூறுகிறது. அதில் புருடன் இல்லை). மகாபாரதத்தில் மூன்று போக்குகள் உள்ளன. அவை 24 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள். 25 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள், 26 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள். முதலாவதில் புருடன் இல்லை. இரண்டாவதில் புருடன் உள்ளது. மூன்றாவதில் புருடனுடன் பரம்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

 ஆகவே சரகசம்கிதை, மகாபாரதம் ஆகியவற்றில் உள்ள சான்றுகளின்படி காரிகையில் இடம்பெறும் எண்ணியத்தைவிடப் பழமையான எண்ணியம் இருப்பது தெரிகிறது. இவற்றில் புருடன் என்பது பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு விளக்கப்பட்டுள்ளது. ஆகவே புருடன் என்பதைச் சுத்தமான உணர்வு எனக்குறிப்பிடுவது ஒன்று ஈசுவர கிருசுணரது கண்டுபிடிப்பு அல்லது இதனை அவர் வேறு இடத்திலிருந்து கடன் வாங்கினார் எனக் கூறலாம். புருடன் என்பதைச் சுத்தமான உணர்வு எனப்புரிந்து கொள்வது வேதாந்தச்சிந்தனையாகும்.

 பெல்வார்க்கர், இரானடே ஆகியோர் வேத இலக்கியங்களின் மிகப் பிந்தைய பகுதிகளில் கூட புருடன் என்பது மனிதனைக் குறிப்பதாக இருந்ததைத் தெரிவிக்கின்றனர். புருடன் ஆரம்பத்தில் மனிதனுக்குரிய உடல் அமைப்புடன் காணப்பட்டான். அதற்கு வேறு எந்த வகையான ஆன்மீகப்பொருளும் இல்லை. இரிக் வேதத்தின் பிந்தைய காலத்தில்தான் புருடன் என்பதை உலகத் தோற்றத்திற்குக் காரணமான அடிப்படையாக உயர்த்தும் போக்கு தோன்றுகிறது. புருடனைச் சுத்த உணர்வாகக் காண்பதற்கு முன் அதில் இடம்பெற்றுள்ள மானுட விடயங்கள் அகற்றப்பட்டன. அதன்பின் அதனைச் சுத்த உணர்வாக அல்லது சுயமாகக் காண்பது எளிதாக ஆகியது. இவ்விதமாக வேத பாரம்பாரியத்தில் புருடன் என்ற கருத்தாக்கம் வளர்ந்தது எனலாம். இவை சட்டோபாத்தியாயா கூறுபவையாகும்(12). தமிழ் மரபுப்படி, புருடன் இல்லாத 24 கூறுகளே உண்டு. சரக சம்கிதையும் தமிழ் மரபுப்படியான புருடன் இல்லாத 24 கூறுகளைக் குறிப்பிடுகிறது. ஆகவே மூல எண்ணியத்தில் இல்லாதிருந்த, வேதபாரம்பரியத்திற்குரிய புருடனை, வடமரபில் வலியச்சேர்த்து எண்ணியத்தை ஆன்மீகமயமாக்க முயன்றதே பல முரண்பாடுகளுக்குக் காரணமாகும். சட்டோபாத்தியாயா அவர்கள் வேதபாரம்பரியத்திற்குரிய புருடனை ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், பல புருடக்கொள்கை மூல எண்ணியத்தில் இருந்ததாகக் கருதுகிறார். தமிழ் மூலங்களை அறிந்திருந்தால் இக்குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

8.எண்ணியத்தின் தோற்றம்: சட்டோபாத்தியாயா.

 மூல எண்ணியத்தின் தோற்றத்தினை மறைமங்களில் காணலாம் என ஓல்டன்பர்க் போன்றவர்கள் கருதினர். சுதா மறைமம், சுவேதசுவதார மறைமம், பிரசன்ன மறைமம் போன்ற சிலவற்றில் எண்ணியத்திற்கே உரித்தானக் கலைச்சொற்களும், எண்ணியத்திற்கே உரித்தான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன என்பது உண்மை. ஆனால் இவற்றை எண்ணியத்தின் அடிப்படைகள் எனக் கருத இயலாது. இந்த மறைமங்களின் உண்மையான நோக்கம் மூல எண்ணியத்தின் முதன்மைப்பொருள் முக்கியமானதல்ல என்றும், அது மாயை என்றும் காட்டுவதாகும். எனவே மறைமங்களில் எண்ணியம் பற்றிய குறிப்புகள் இடம்பெறுவது அதனை மறுப்பதற்காகவே ஆகும். மேலும் எண்ணியத்தினை மேற்கோளாகக் காட்டாமல் வேதாந்தத்தினை விளக்கமுடியாது. இந்த மறைமங்களில் எண்ணியத்தினை அடிப்படையாகக் கொண்டு வேதாந்தம் விளக்கப்படுகிறது. இந்த பாரம்பரியத்தினை பாதராயணர், சங்கரர் போன்ற வைதீக தத்துவவாதிகள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே மறைமங்களில் மூலஎண்ணியம் இடம்பெறுகிறது என்று ஓல்டன்பர்க் கூறுவதற்கு எந்தச் சான்றும் இல்லை.

 சாந்தோக்ய மறைமத்தில் சுவேதகேது ஆருண்யா என்பவன் தனது தந்தையான உத்தாலக ஆருணியிடமிருந்து உயர்ந்த ஞானம் பெறும் முறையை கற்றுக்கொள்ளும் கதையில் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் வருகின்றன. இதனை எண்ணியத்திற்கு முன்னோடி என சாகோபி கூறுகிறார். இக்கதையில் எல்லாவற்றிற்கும் அடிப்படை அல்லது ஆதாரம் என்பது சத் அல்லது இருப்பு எனச்சொல்லப்படுகிறது. இந்த மறைமப்பகுதியில் வெப்பம், தண்ணீர், உணவு என்ற மூன்று பொருள்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அவை இருப்பின் பகுதிகளாகக் காட்டப்படவில்லை. அவை இருப்பிலிருந்து தோன்றுபவையாகக் கூறப்படுகின்றன. “எல்லாப் பொருள்களுக்கும் இருப்புதான் வேர், இருப்புதான் வீடு, இருப்புதான் ஆதாரம். அதுதான் சிறந்த சாராம்சம். அதுதான் எதார்த்தம்(சத்தியம்), அதுதான் ஆத்மா, அதுதான் நீ.” என சாந்தோக்ய மறைமம் முடிகிறது. ஆகவே எண்ணியத்தின் முதல்நிலைப்பொருளும், சாந்தோக்ய மறைமத்தின் இருப்பும் வேறுவேறு ஆகும். அவை வேறுவேறு உலகக் கண்ணோட்டங்களின் பிரதிபலிப்புகளாகும். ஆனால் சாந்தோக்ய மறைமத்தில் பொருள்முதல் வாதத்தின் தொன்மையான தடயங்கள் உள்ளன. அந்தப் பழங்காலப் பொருள்முதல் வாதத்தின் சிதைவிலிருந்துதான் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் உருவானது என்பதை இந்த மறைமக்கதை காட்டுகிறது. மறைமங்களில் காணப்படும் பழங்காலப் பொருள்முதல்வாதம் ஒரு தத்துவம் என்ற முறையில் மூல எண்ணியத்தைப்போன்று இருந்தது. ஆனால் அதனை எண்ணியத்தின் முன்னோடி என நாம் கருத முடியாது(13). ஆகவே மூல எண்ணியம் மறைமங்களுக்கு முற்பட்டது.

9.எண்ணியமும், ஓகமும்: சட்டோபாத்தியாயா.

 வேத நூல்களில் ஓகம் என்பது ஏரில் பூட்டுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இது மிகப்பழங்காலத்திலிருந்தே உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காகப் பின்பற்றப்பட்டு வந்த சில நடைமுறைகள் அல்லது பயிற்சிகளைக்குறித்தது. ஓகம், எண்ணியம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு ஒரு பண்டைய பாரம்பரியத்தைச் சேர்ந்தது. இடையே அத்தொடர்பு விடுபட்டுவிட்டது என்பதும், பண்டைய தொடர்பு பிந்தைய காலத்தில் எண்ணிய ஓகமாக உருவானது என்பதும் ஒரு ஊகம்தான் எனவும், இந்த ஊகம் உண்மையெனில் ஓகத்தின் தோற்றத்திலிருந்து எண்ணியத்தின் தொடக்கத்தினை நாம் கண்டுபிடிக்க இயலும் எனவும் கூறுகிறார் சட்டோபாத்தியாயா.

 பதஞ்சலி என்பவர் ஓக சூத்திரத்தை எழுதியவர் எனக் கருதப்படுகிறார். “எண்ணியத்தில் பதஞ்சலியின் பிரிவு என்பது ஓகத்தின் கருப்பொருளாக விளங்குகிறது. பதஞ்சலிதான் பல்வேறு ஓக முறைகளை ஒன்று சேர்த்து எண்ணியத்தின் இயக்கமறுப்புத் தன்மையுடன் இணைத்தார். இன்றைய வடிவமுள்ளதாக ஓகத்தினை மாற்றியமைத்தார்” என்கிறார் தாசுகுப்தா, பதஞ்சலியின் உரை நூலான “வியாசபாசியம்” எழுதிய வாசசுபதியும், விஞ்ஞானபிக்சுவும், பதஞ்சலி ஓகத்தினை உருவாக்கியவர் இல்லையென்றும் அதனைப் பதிப்பித்தவர் என்றும் கூறுகிறார்கள். பதஞ்சலியின் ஓக சூத்திரத்தில் கடவுட் கோட்பாடு செயற்கையாக அறிமுகம் செய்யப்பட்டது எனவும், ஓக சூத்திரத்தில் கடவுளைப்பற்றிக் கூறும் பகுதிகள் பொருத்தமில்லாமல் இருக்கின்றன எனவும் ஓகத்தின் உள்ளடக்கம், நோக்கம் ஆகியவற்றிற்கு இது முரண்பட்டு இருக்கிறது எனவும் கூறுகிறார் கார்பே.

 மேலும் பண்டைய ஓக கொள்கையின்படி, கடவுள் உலகத்தினை படைப்பதுமில்லை; அதனை ஆள்வதுமில்லை; அவர் மனிதனது செயல்களுக்கு பரிசளிப்பதுமில்லை; தண்டனை கொடுப்பதுமில்லை; மனிதன் தனது இறுதி இலட்சியமாகக் கடவுளோடு ஐக்கியம் ஆகவேண்டும் என்று எண்ணுவதுமில்லை என்கிறார் கார்பே ஆகவே ஓக சூத்திரத்தில் கடவுள்கொள்கை செயற்கையாகப் புகுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு ஓக சூத்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள முறைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புற உலகிலிருந்து உணர்வை முழுவதுமாக உள்வாங்கி அதனை அகத்தின் மீது ஒருமைப்படுத்திய பின்னர் அகமானது புற உலகத் தொடர்பிலிருந்து விடுதலை பெறுகிறது. புற உலகம் உணர்விலிருந்து முற்றிலுமாக மறைந்து விடுகிறது. ஓக சூத்திரத்தில் இந்த முறையில் ஓக நடைமுறைகள் கருத்துமுதல்வாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆகவே உண்மையான ஓகம் குறித்து பதஞ்சலியின் ஓக சூத்திரத்தில் தேடுவது தவறாகும்.

 ஓக நடைமுறைகளின் உண்மையான நோக்கம் இயற்கையைக் கட்டுப்படுத்துவது ஆகும். தோன்றியத்தில் தொல்பழங்கால மந்திர நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தோன்றியத்தின் உண்மையான நோக்கமும் இயற்கையைக் கட்டுப்படுத்துவதுதான் ஆகும். ஆகவே வேதம் சாராத கருத்தியலின் முக்கிய வடிவமான தோன்றியத்தில்தான் நாம் உண்மையான ஓகத்தைக் காணவேண்டும்(14). ஆக பதஞ்சலியின் ஓக சூத்திரம் ஆன்மீகமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதால் அங்கு மூல எண்ணியத்தைக்காண இயலாது.

10.புதிய வடிவமும் உள்ளடக்கமும்: சட்டோபாத்தியாயா.

 கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திற்கு எதிராக இருந்ததும், கருத்துமுதல்வாதிகளால் எதிர்க்கப்பட்டதும், காலத்தால் முற்பட்ட உணர்வுபூர்வமானதுமான ஒரு தத்துவம் எண்ணியம் ஆகும். எண்ணியம் பற்றிய நூல்கள் மறைந்துவிட்டதாலும், பழங்காலத்திலிருந்து உரையாசிரியர்கள் காலம்வரை அதில் தொடர்ச்சி இல்லை என்பதாலும் மூலஎண்ணியத்தின் உருவம் அல்லது உள்ளடக்கம் பற்றிய கண்ணோட்டத்தை, அதன் கொள்கையைத் தீர்மானிக்கக் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்ற வேண்டும். முதன்மைப்பொருள் கொள்கைக்குப் பொருத்தமாக இருப்பவை எல்லாவற்றையும் மூலஎண்ணியத்தைச் சார்ந்தன என்றும், புருடன் பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து தோன்றுபவை அனைத்தையும் மூல எண்ணியத்திற்கு புறம்பானவை என்றும் நாம் கருதவேண்டும்.

 எண்ணியத் தத்துவமானது முழுக்க முழுக்கப் பகுத்தறிவுத்தன்மை உடையது என்கிறார் கார்பே. அதன் காரணமாகத்தான் சங்கரர் அந்தப் முதன்மைப் பொருள்கொள்கை(எண்ணியத்தத்துவம்), மிக ஆழமான பகுத்தறிவுப் போக்கினை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறினார். ஆரம்பகால எண்ணிய தத்துவவாதிகளின் பகுத்தறிவுக் கண்ணோட்டமானது மறைமங்களின் புதிர்வாதத்தை அவர்கள் உணர்வுபூர்வமாக எதிர்த்ததின் விளைவு ஆகும். அதன் காரணமாகவே எண்ணியத்தை மறுக்கும்போது, பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியர் பகுத்தறிவிற்கான சுதந்திரத்தைப் புறக்கணிப்பதற்கு ஒரு தனி சூத்திரத்தை உருவாக்கினார். சங்கரர் பகுத்தறிவை மறுத்து,

 “மனிதனது சிந்தனை தடையற்றது. பகுத்தறிவு புனித நூல்களைப் புறக்கணிக்கிறது. அது தனிநபர் கருத்துக்ககளைச் சார்ந்திருக்கிறது. ஆகையினால் அதற்கு வலுவான அடிப்படை இல்லை.......மனிதர்களது எண்ணங்கள் பலதரப்பட்டவையாக இருப்பதன் காரணமாகப் பகுத்தறிவிற்கு உறுதியான அடிப்படை உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கபிலர் போன்ற மிகத்திறமையான மனிதர்களது அறிவுபூர்வமான வாதங்களை அடிப்படையாக ஏற்றுக் கொண்டாலும் இந்தச்சிக்கல் தீருவது இல்லை. கபிலர், கணாதர் போன்ற மிகப்பெரிய அறிவாளிகள், பல தத்துவ சிந்தனைகளை உருவாக்கியவர்கள், ஒருவரை ஒருவர் மறுப்பதை நாம் காண்கிறோம்” எனக் கூறுகிறார்(15). எண்ணியக்கொள்கையின் ஆதரவாளர்கள் பகுத்தறிவின்மூலம் தங்களது கொள்கையை நிலைநாட்ட முயன்றனர். ஆகவேதான் வேதங்களுக்கு ஆதரவாகப் பகுத்தறிவு சிந்தனையை மறுத்து வாதிடுகிறார் சங்கரர். ஆகவே பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியரும், சங்கரரும் வேதாந்தத் தத்துவத்தைப் பாதுகாக்க, மனிதனது சுதந்திரச்சிந்தனைக்கு, அவனது பகுத்தறிவுச் சிந்தனைக்கு எதிராக இருந்தனர் என்பதை இந்த விவாதங்கள் உறுதி செய்கின்றன.

காரணகாரியப் பரிணாமக் கொள்கைகள்:

 ஆரம்பகாலகாலக் கருத்துமுதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் ஆகிய இருவருக்கும் இறுதி உண்மை பற்றிய சிக்கல், உலகிற்குரிய முதற்காரணம் என்ற சிக்கலாகத் தோன்றியது. எண்ணியத் தத்துவ வாதிகள் காரணகாரியக்கொள்கையின் மூலம்தான், உலகின் இறுதி உண்மை பற்றிய ஒரு கொள்கையை உருவாக்க முடியுமென்று கருதினர். காரணம் செயல்படுவதற்கு முன்னரேயே விளைவு காரியத்தில் உள்ளது. ஏனென்றால் இல்லாத ஒன்றை உருவாக்க முடியாது. கௌடபாதர் காரணகாரியக் கொள்கையை ஐந்து கட்டங்களாகப் பிரித்தார். 1.காரியத்தின் தன்மை, 2.குறிப்பிட்ட பொருள் சார்ந்த காரணம் குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும். 3.எல்லாவற்றையும் எல்லாவற்றைக்கொண்டும் உற்பத்தி செய்ய முடியாது. 4.ஒன்று எது முடியுமோ அதைச்செய்கிறது. 5.ஒரு வகையிலிருந்து அதே வகைதான் தோன்றும்(16). எண்ணியத்தத்துவவாதிகள் இயற்கையை உற்று நோக்குவதன் மூலம் இந்த காரணகாரியக்கொள்கையை உருவாக்கினார்கள் என சங்கரர் கூறுகிறார். காரியத்தின் தன்மை காரணத்தின் தன்மையைக் கொண்டிருக்குமானால் இந்த உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும்.

 “சாந்தம், இராசசம், மந்தம் ஆகியவற்றைக்கொண்டுள்ள சடப்பொருளான இந்த உலகம், சடப்பொருளான ஒன்றிலிருந்துதான் தோன்றியிருக்க முடியும். அதுவும் இதே குணங்களைக் கொண்டுள்ளதாகவே இருக்கும்” என இதனைச் சுருக்கமாகக் கூறுகிறார் சங்கரர். இது குறித்து கார்பே அவர்கள் தரும் விளக்கத்தைக் காண்போம். “பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் பொருட்காரணத்தின் விளைவாகத் தோன்றுவதுதான் இந்த உலகம் என்ற கொள்கையை எண்ணியம் கூறுகிறது. இந்தக்கட்டத்திலிருந்து முந்திய கட்டங்களை நாம் ஊகிப்பதன் மூலம் இறுதியில் முதல் காரணத்தைக் .கண்டறியலாம். அது முதல்நிலைப்பொருள் ஆகும். இதிலிருந்து உலகமானது காலப்போக்கில் பரிணமித்தது. உலகத்தில் உள்ள பொருள்களுக்கு மூன்று குணங்கள் உள்ளன என எண்ணியம் கூறுகிறது. முதலாவது ஒளி, புகழ், இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும் சாந்தம். இரண்டாவது இயக்கம், சுறுசுறுப்பு, துன்பம் ஆகியவற்றைக்குறிக்கும் இராசசம், மூன்றாவது மந்தநிலை, தடை, சோம்பேறித்தனம் ஆகியவற்றைக் குறிக்கும் மந்தம். இந்தக் குணங்கள் சம அளவில் நிலை மாறாமல் முதல்நிலைப்பொருளில் இருந்தன. இந்த அசையா நிலையில் ஏற்படும் மாறுதல் காரணமாக உலகம் தோன்றியது”(17). முதல்பொருள் குறித்து இவ்வளவு சிறப்பாக விளக்கிய கார்பே, எண்ணியத்தில் உள்ள புருடர்கள் என்ற கொள்கை காரணமாக மூல எண்ணியம் பொருள்முதல் வாதத்தின் ஒரு வடிவம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார் சட்டோபாத்தியாயா அவர்கள்.

 பரிணாமக்கொள்கையானது இந்தியத்தத்துவ வரலாற்றில் எண்ணியத்திற்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்துள்ளது. எண்ணியவாதிகள் முதலில் கூறியபடி இயல்புக்கோட்பாடு என்கிற இயற்கைவிதிக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். இயற்கை விதிகளின்படி இடம்பெறும் சேர்க்கை, வளர்ச்சி ஆகியவற்றில் நடைபெறமுடியாதது எதுவுமில்லை. முதன்மைப்பொருளை இயக்குவதற்கு இந்த இயற்கை விதிகளே போதுமானவைகளாகும். ஆகவே எண்ணியம் என்பது ஆரம்பத்தில் பொருள்களின் இயக்கத்தினைப்பற்றிய கொள்கையாக இருந்திருக்க வேண்டும். உலகப் பரிணாமம் குறித்தக் கொள்கையை எண்ணியர்கள் எங்கிருந்து பெற்றார்கள் எனத்தெரியவில்லை. ஆனால் மூல எண்ணியத்தில் பரிணாமம் பற்றிய கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது. ஆதலால்தான் ஆரம்பகால எண்ணியத் தத்துவங்களில் அதன் கூறுகள் இருந்தன. அவர்களுடைய முதல்நிலைப்பொருள் கொள்கையிலிருந்து இது தானாகவே உருப்பெற்றது எனலாம். இந்த முறையில் முதன்மைப்பொருள் கொள்கை(உலகிற்கு முதல்காரணம் பொருள் என்பது) இந்தியத்தத்துவ வரலாற்றில் எண்ணியத்திற்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்துள்ளது. தொடக்ககால எண்ணியம் நமது தத்துவப்பாரம்பரியத்தில் நேர்காட்சி அறிவியல்களுக்கான அடிப்படைகளை அளித்துள்ளது(18).

தமிழ் மூல எண்ணியமும் வடமொழி நூல்களும்:

 எண்ணியம் குறித்தத் தமிழ் மூலங்களை வட இந்திய தத்துவவாதிகள் அறிந்து கொள்ளாதிருந்ததன் காரணமாக, மூல எண்ணியத்தில் புருடன் இல்லை என்பது குறித்தத் தெளிவின்மை அவர்களிடையே இன்றுவரை இருந்துவருகிறது. இத்தெளிவின்மை கார்பே போன்றவர்களிடம் மட்டுமல்ல, சட்டோபாத்தியாயா போன்றவர்களிடமும் இருந்துள்ளது என்பதே உண்மை. மூல எண்ணியம் அந்த அளவு, வடமொழி நூல்களில் முழுமையாகத் திருத்தப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பதே காரணமாகும். சரகரின் மருத்துவ நூலான ‘சரக சம்கிதை’ தமிழ் வழி நூல் என முனைவர் க.நெடுஞ்செழியன் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார். அந்நூல் தமிழ்வழி நூல் என்பதால்தான் அதில் எண்ணியம் 24 கூறுகளைக்கொண்டது என்பதும் அந்த 24 கூறுகளில் புருடன் இல்லை என்பதும் சொல்லப்பட்டுள்ளது. அதே நூலில் புருடனைச்சேர்த்து 25 கூறுகள் எனவும் புருடன், பரம்பொருள் ஆகிய இரண்டையும் சேர்த்து 26 கூறுகள் எனவும் மூல எண்ணியம் திருத்தப்பட்டுள்ளது. பிற்கால நூல்கள் அனைத்திலும் புருடன் சேர்க்கப்பட்டு, 25 கூறுகள் என்பதுதான் சொல்லப்பட்டுள்ளது. 24 கூறுகள் என்பதோ, புருடன் இல்லை என்பதோ சொல்லப்படவே இல்லை. அதனால்தான் சட்டோபாத்தியாயா போன்ற மிகப்பெரிய மார்க்சிய அறிஞர்களிடமும் ஒரு தெளிவின்மை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது எனலாம்.

எண்ணியம் (எ) சாங்கியம் – நகர அரசுகளின் கோட்பாடு:

 மூல எண்ணியத்திற்கும் வேதாந்தத்திற்கும் இடையிலான போராட்டம் தீவிரமாக இருந்தது எனவும் இவை இரண்டும் பண்டைக்கால இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் எதிர் எதிர் போக்குகளாக இருந்தன எனவும் இவற்றிற்கு அடிப்படையாக வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையும், மேய்ச்சல் சார்ந்த தந்தைவழி உரிமைமுறையும் இருந்தன எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார். மேலும் அவர் எண்ணியத்தில் இடம்பெறும் பிரகிருதி என்பது முதல்நிலைப்பொருள் என்பதோடு, அது பெண்மைக் கோட்பாடு எனவும் குறிப்பிடுகிறார்(19). அதாவது எண்ணியம் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அவர் கருதுகிறார். ஆனால் எண்ணியம் வளர்ச்சிபெற்ற ஆரம்பகால வணிக நகர அரசுகளின் கோட்பாடாகும்.

 எண்ணியம் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதச் சிந்தனையைக்கொண்ட ஒரு பகுத்தறிவுக்கோட்பாடாகும். அதற்கு முன் அது தோன்றியக் கருத்துக்களின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கக் கூடும். ஆனால் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அதனைக்கருத இயலாது. அது வளர்ச்சிபெற்ற வணிக நகர, நகர்மைய அரசுகளில் இருந்து தோன்றிய ஒரு கோட்பாடாகும். எண்ணியம் என்கிற சாங்கியம் தமிழகத்தில் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது. கிரேக்க நகர அரசுகளில், தொடக்ககால சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய நகர அரசுகளில் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ந்தது போல்தான் தமிழக நகர அரசுகளிலும் பொருள்முதல்வாத மெய்யியல், உலகாயதம் என்கிற பூதவாதமாக, சாங்கியம் என்கிற எண்ணியமாக, வைசேடிகம் என்கிற சிறப்பியமாக, நியாயம் என்கிற அளவையியலாக வளர்ச்சி பெற்றது எனலாம்.

 எண்ணியத்தின் தோற்றுவாய், வேதங்களின் செல்வாக்கு எல்லைக்கு அப்பாற்பட்ட, பிராமணர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்த நிலப்பகுதிகளில், உலகத்தின் இரகசியம் பற்றியும், நமது இருப்பு பற்றியும் அறிவு பூர்வமாக விளக்க முதல்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்திருக்க வேண்டும் என்ற கார்பே அவர்களின் கருத்தை சட்டோபாத்தியாயா ஏற்கிறார்(20). இந்த விளக்கங்களின் அடிப்படையிலும், தமிழ் இலக்கியச் சான்றுகள் போன்ற வேறு காரணங்களின் அடிப்படையிலும் அந்நிலப்பகுதி தமிழ்நாடுதான் எனவும், கபிலர் தமிழர்தான் எனவும் க.நெடுஞ்செழியன் அவர்கள் உறுதி செய்துள்ளதை முன்பே குறிப்பிட்டுள்ளோம். பழந்தமிழகத்தில் கி.மு. 1500 முதல் நகர அரசுகள் உருவாகி வளரத்தொடங்கின(ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கிலேயே ஒரு தொழில் நகரமாக இருந்துள்ளது என்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது).

 தமிழகத்தில் இருந்த அந்த நகர அரசுகளின் வளர்ச்சியின் ஊடே இந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை தோன்றி வளர்ந்தது. அதன்பின் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சிக்குப்பின், கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தொல்கபிலரால் இச்சிந்தனை ‘எண்ணியம்’ என்ற அறிவியலையும், பொருள்முதல் வாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மிகச்சிறந்த மெய்யியல் வடிவத்தைப் பெற்றது எனலாம். மேற்கண்ட கருத்துகளை மேலும் உறுதி செய்யும்வகையில் பண்டைய தமிழ்ச்சமூகச் சூழ்நிலை, அதன் வளர்ச்சிபெற்ற உலகளாவிய வணிகம், நகர அரசுகள், அதன் பொருள்முதல்வாத மெய்யியல் முதலியன குறித்துப் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் பேசுகிறது(21). தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ‘கீழடி’ போன்ற எதிர்கால அகழாய்வுகள், தமிழகத்தின் நகர அரசுகளையும், அதன் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல் வாதச் சிந்தனையையும் வெளிப்படுத்தும் என உறுதிபடக்கூறலாம்.

பார்வை:

1.இந்திய நாத்திகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2013, பக்: 76-79, 86, 87.

2.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 72, 73.

  1.  “ “ “ 475
  2.  “ “ “ 476-480

5 “ “ “ 480; ENCYCLOPAEDIA OF RELIGION AND ETHICS. (ed) J. HASTINGS. EDINBURGH, 1908-1918, XI. 189.

6.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 480-484

  1.  “ “ “ 484-486
  2.  “ “ “ 486-489
  3.  “ “ “ 489-492
  4.  “ “ “ 498, GARBE, R.ANIRUDDHA’S COMMENTARY ON THE ORIGINAL PARTS OF VEDANTIN MAHADEVA’S COMMENTARY ON THE SNKHYA SUTRAS. CALCUTTA, 1892.

11.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 492-500

  1. “ “ “ 501-548.
  2. “ “ “ 548-562
  3. “ “ “ 562-574
  4. “ “ “ 576
  5. “ “ “ 578. TRANSLATIONS USED FROM COLEBROOKE. SANKYAK KARIKA, CALCUTTA, 1887, PAGE: 28.
  6. “ “ “ 579, 580; ENCYCLOPAEDIA OF RELIGION AND ETHICS. (ed) J. HASTINGS. EDINBURGH, 1908-1918, XI. PAGE: 190
  7. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 574-589
  8. “ “ “ 560, 561.
  9. “ “ “ 498-499.

21.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன் 2016, பக்: 261-269, 778-781, 806-817.

- கணியன் பாலன், ஈரோடு