vetchi poo 1என் இளமைக் கால நினைவுகளில் ஒன்று இட்லிப்பூ. 
 
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் என் ஐயாப்பா வெளியூரிலிருந்து - சென்னையாயிருக்கலாம் - செடி வாங்கி வந்தார். 
 
வீட்டின் முன்னால்  பரந்த வெளியிடம். அதன் நடுவே செயற்கை நீருற்றுடன் கூடிய வட்ட மீன் தொட்டி. வாசலின் ஒரு பக்கம் வீட்டிற்கும் தொட்டிக்குமிடையே அமர்வதற்கு கல்லாலான இருக்கை. அதன் அருகே இச் செடி வைக்கப் பட்டது. 
 
சில நாட்களில் பூவும் பூத்தது. செம்மஞ்சள் நிறத்தில் இட்லிப்பூ. நீண்ட குழல்களின் மேற்புறத்தில் நான்கு சிறிய இதழ்கள். பல குழல்கள் சேர்ந்து கொத்தாக இட்லி போல் இருக்கும். குழலை உறிஞ்சினால் இனிப்பாக இருக்கும். தேன் குடிக்கிறோம் என்று சொல்லிக் கொள்வோம். செடியில் பூ அரும்பத் துவங்கியவுடன் பேரன், பேத்திகள் நாங்கள் எனக்கு, உனக்கு என்று வரிசை போட்டு விடுவோம்.
 
சிறுவயதில் இட்லிப்பூவைத் தலையில் ஸ்டைலாக (அப்படி நினைப்பு அப்பொழுது) வைத்துக் கொண்டு பள்ளிக்குப் பெருமையாகச் சென்றிருக்கிறேன். அக்காலத்தில் விருதுநகரில் ஆரஞ்சு வண்ண இட்லிப்பூவெல்லாம் புதுமையாகத் தான் இருந்தது. இப்பொழுது பேரன், பேத்திகளிடம் சொன்னால் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்!
 
இந்த சாதாரண இட்லிப்பூ தமிழ் நாட்டின் பழமையான மலர்களில் ஒன்று; 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில், அவைகளை விடப் பழமையான தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா!
 
எங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய "வேள்பாரி" வரலாற்றுப் புதினத்தைப் படித்து முடித்த வேகத்தில், பாரியின் தோழரான கபிலரின் சங்கத் தமிழ்ப் பாடல்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். 
 
கபிலர் பிரகத்தன் என்ற ஆரிய அரசனுக்கு தமிழின் பெருமை உணர்த்த வேண்டிப் பாடியது சங்க இலக்கிய நூலான குறிஞ்சிப் பாட்டு.  அப்பாடலில் குறிஞ்சி நிலக் கோதையர் குவித்து விளையாடிதாக 99 மலர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.
 
அம்மலர்களின் பெயர்களையும், படங்களுடன் அவை பற்றிய விவரங்களையும் கண்டேன். (ஒரு திரைப்படத்தில் நடிகர் சூர்யா 99 மலர்களின் பெயர்களைக் கூறும் அந்தப் பாடல் வரிகளைக் கூறுவார்). அதில் நான்காவது மலராக இந்த இட்லிப்பூ "வெட்சிப்பூ" என்ற பெயருடன் இருந்தது..
 
"வெட்சி" என்ற பெயரைக் கேட்டவுடன் இன்னொன்றும் மணியடித்தது. பழந்தமிழ் நாட்டில் மன்னர்கள் வேற்று நாட்டுடன் போர் தொடுக்கும் போது, முதலில் பகை நாட்டின் எல்லையில் "ஆநிரை கவர்தல்" - ஆடு, மாடுகளைப் பிடித்துச் செல்லுதல் - மரபு. 
 
பழங்காலத்தில் மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்த போது ஆடுமாடுகளே அவர்களது செல்வமாக இருந்தது. வலிமை கொண்ட குழுவினர் மற்றவரின் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வர். இவ்வாறு தோன்றிய வழக்கு, குழுக்கள் மறைந்து அரசாட்சி தோன்றிய பின்னரும் போருக்கு முன் ஆநிரை கவர்தல் என்ற மரபாக நின்றது. அவ்வாறு ஆநிரை கவரச் செல்லும் வீரர்கள் தலையில் செந்நிற வெட்சிப் பூவை அணிந்து செல்வர். 
 
வெட்சி தலையில் அலங்கரிக்க, ஆநிரை கவர்தலைப் பாடுவது வெட்சித் திணை. இவை பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறும் செய்திகள். பள்ளியில், கல்லூரியில் வெட்சித் திணை பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் கூட வெட்சி என்பது இட்லிப்பூ தான் என்று கூறியதில்லை. அவர்களுக்கே தெரிந்திருக்குமோ?
 
 குறிஞ்சி நிலத் தெய்வமான முருகப் பெருமான்  செச்சை என்னும் வெட்சிப்பூவாலான கண்ணியைத் (கண்ணி - தலையில் சூடும் மாலை)  தலையில் சூடியிருந்தார்,
 
      "செய்யன்....கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்" 
 
 என்று திருமுருகாற்றுப் படை கூறுகின்றது. போர்த் தெய்வமான முருகனை வழிபடுவோரும் சிவந்த காம்பினைக் கொண்ட வெட்சியைச் சூடியிருந்தனர் என்ற செய்தியும் 
 
    "செங்கால் வெட்சி" என்று அதே நூலில் வருகிறது.
 
ஊசி போல் அரும்பு விடும் வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ. அவன் போருக்குச் செல்லும் போது பனை, வெட்சி, வேங்கை மலர்கள் கலந்து கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருந்தான்,
 
"உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு வெட்சி மாமலர்" என்று புறநானூறு சொல்கிறது.
 
அகநானூறு காடைப் பறவையின் கால் நக முள் போல வெட்சிப்பூ முதிரும்,
 
"இதல முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி" 
 
என்று உவமை காட்டிப் பேசுகிறது.
 
வையை நீராடச் சென்ற பெண்கள் வெட்சிப்பூ தலையில் சூடியிருந்தனர்,
 
vetchi poo"ஈர்அமை வெட்சிஇதழ் புனை கோதையர்" 
 
என்பது பரிபாடல் காட்டும் காட்சியாகும்.
 
கலித்தொகை ஏறு தழுவச் சென்ற இடையர் குலக் காளையர் சூடியிருந்த கண்ணியில்  பலவித மலர்களோடு இலையுடன் வெட்சிப்பூவும் இருந்தது என்று கூறுகின்றது.
 
இவ்வாறு சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் படும் இட்லிப்பூ, இரட்சிப்பூ, விருட்சிப்பூ, அலம்பல் மல்லிகை, தேன்பூ என்றும் பலவாறு அழைக்கப் படுகிறது. 
 
மலையாளத்தில் செத்தப்பூ, தெலுங்கில் ராமபாணமு, கன்னடத்தில் செம்புலகிடா, இந்தியில் ருக்மணி என்பவை இட்லிப்பூவின் பெயர்கள். 
 
ரூபியேசியே குடும்பத்தில், இக்சோரா பேரினம் சார்ந்த இட்லிப்பூவில் வெள்ளை, மஞ்சள், அடர் சிவப்பு மற்றும் பல வண்ணங்களிலும், இதழ்களில் சிறு வேறுபாடுகளுடனும் ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன.
 
சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் போது, திருவில்லிப்புத்தூரிலிருந்து வரும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்தே இறங்குவார். அந்த மாலை சிவப்பு நிற இட்லிப்பூவைக் கொத்தாகக் கட்டிச் சேர்த்து நல்ல தடிமனான மாலையாக, மஞ்சள் செவந்தி, பச்சை மரு இலைகள் சேர்த்துக் கட்டப் பட்டிருக்கும். ஆண்டாளுக்குச் சாற்றி, அடுத்த நாள் மதுரைக்குக் கொண்டுவந்து, மறுநாள் விடியற்காலையில் அழகருக்குச் சாற்றும் போதும் மாலை அப்படியே இருக்கும்.
 
திருப்பதி பெருமாளுக்கும் இட்லிப்பூ வைத்துக் கட்டப் பட்ட ஆண்டாள் மாலை, பிரம்மோற்சவத்தின் போது அனுப்பப் பட்டு சாற்றப் படுகிறது.
 
மேலும் சிவபூசைக்குச் சிறப்பானது. சிவப்பு நிறத்தில் இருப்பதால் அம்மனுக்கும் சாற்றலாம். முருகனுக்கும் உகந்த மலர்.
 
"வெட்சி புனையும் வேளே போற்றி
உயரகிரி கனக சபைக்கோர் அரசே"
 
என்று கந்த சஷ்டிக் கவசத்தின் இறுதியில் வருகிறது. எத்தனை முறை சூலமங்கலம் சகோதரிகளின் இனிய குரலில் கந்த சஷ்டிக் கவசத்தைக் கேட்டிருக்கிறோம்; சேர்ந்து பாடியிருக்கிறோம், குறிஞ்சி நிலக் கடவுளான முருகவேள் புனைந்துள்ள வெட்சி என்பது இட்லிப்பூ என்ற அறியாமலே!
 
பல பதிவுகளில் வெற்றி புனையும் வேலா என்று தவறாகப் பதியப் பட்டுள்ளது.
 
இட்லிப்பூவிற்கும், அதன் இலைகளுக்கும் பலவித மருத்துவ குணங்கள் உண்டு. காய்ச்சல், வயிற்றுப் போக்கு, தோல் வியாதி மற்றும் புற்று நோய்க்கும் உகந்த மருந்து என்று கூறப் படுகிறது.
 
நம் அருகே அடிக்கடி தென்படும் சாதாரண காட்டு மலர்! அதைப் பற்றி 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சங்க இலக்கியத்தில், மற்றும் அதற்கும் முற்பட்ட தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. 
 
சில நேரங்களில் நமக்கு மிக அருகே இருப்பவற்றின் பெருமை நமக்குத் தெரிவதில்லை!
 
- பொற்செல்வி ஜெயப்பிரகாஷ்
Pin It