இளமையில் சினிமா தவிர்க்க முடியாத ஒன்றாக சிந்துபாத்தின் தோளின் மீது ஏறிக்கொண்ட கிழவன்போல ஆகிவிட்டது. சாயங்காலம் ஐந்து மணி ஆகிவிட்டால் போதும் மனது பரபர வென்று ஆகிவிடும். ஏதாவது ஒரு சினிமாத் தியேட்டர் வாசலுக்கு இழுத்துச் சென்றுவிடும். கட்டுப்பாடான அம்மாவும் கண்டிப்புக்கார அப்பாவும் இருந்தும் அவர்களை நம்பவைக்க புதிதுபுதிதான பொய்களை வேலியாகப் போட்டுக் கொண்டு சினிமா பார்ப்பது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது எனது பொய்களை நம்பினார்களா நம்பியது போல நடித்தார்களா என்ற எண்ணம் தோன்றுகிறது.
சினிமா பார்த்துப் பார்த்துக் கெட்டுப் போகிறான் என்று பெற்றோர்கள் புலம்பிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், இளைஞர்களின் சினிமா மோகம் அதிகப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. சொல்லப் போனால், இளைஞர்களை சினிமா கெடுத்துவிடவில்லை. தியேட்டரில் சேரும் புதிய புதிய சிநேகங்களால் தான் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கெடுத்துக்கொண்டோம். தியேட்டரின் இருட்டுதான் சிகரெட் பிடிக்கும் தைரியத்தைத் தந்தது. இன்று வரை விடமுடியவில்லை. அசட்டுத் துணிச்சல், கூச்சல், கும்மாளம் எனக் கற்றுத் தந்தது தியேட்டர்தான். பாவம் சினிமா என்ன செய்யும்? பைத்தியக்காரத் தனத்துக்கு சினிமாவா பொறுப்பு? ஆனால், இன்று படம் பார்த்து உற்சாகமான அந்த நாட்கள் ஒவ்வொரு தியேட்டராக இடிபட்டுக் காணாமல் போய் திருமண மண்டபங் களாகவும், ஷாப்பிங் மால்களாவும் உருமாற்றம் அடையும்போது பழகிய நண்பனை பிரிந்துவிட்ட துயரம் சூழ்கிறது.
சினிமா என்னவோ, நல்லவன் வாழ்வான். நீதிக்குத் தலைவணங்கு, எல்லோரும் நல்லவரே என்றுதான் இருந்தது. கடைசியில் காதலுக்கு வந்தத் தடைகள் நீங்கி, வில்லன் அழிந்துவிட "சுபம்' என்றே முடிந்தது. தாயின்மீது பாசம், தந்தையின் மீது பக்தி, தங்கையின் வாழ்வில் அளவிட முடியாத அக்கறை, நட்பின் மேன்மை என்றுதான் சினிமா இருந்தது. (இன்று வேறு விஷயம்) சினிமாவினால் கெட்டுப்போவது என்பது கிடையாது. நல்ல காதல், அப்பழுக் கில்லா வீரம், கொடுமை கண்டு பொங்குதல் என நிறைய போதித்தது சினிமா, பாடப்புத்தகங்களைத் தாண்டி.
அந்நாளைய கதாநாயகிகள் நிறைவான ஆடையில் நளினமாக காதலித்தார்கள். நாயகனின் பார்வையில் கண்ணியம் இருந்தது.
“மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே'' என்று நாயகன் கேட்க “பேசும் வார்த்தை உண்மை தானோ பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேசமா?'' என்று நாயகி ஊட “கண்ணிலே, மின்னும் காதலைக் கண்டுமா, சந்தேகம் எந்தன் மீதிலே'' என நாயகன் அவள் ஊடலைத் தீர்க்க அங்கே சங்கக்காதல் காட்சியாக அரேங்கேறியிருந்தது.
“மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?'' என்று அவள் கேட்க “அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே சேர்வதினால் வரும் தொல்லையடி'' என்று அவன் காதல் களத்தில் அவளுக்குப் பொருளாதாரம் போதித்துக் கொண்டிருந்தான். வில்லன்கள் கூட மரியாதையான தொலைவில் நின்று அட்டகாசச் சிரிப்புச் சிரித்து கதாநாயகிகளை பயமுறுத்திக் கொண்டிருக்க, திரை எதிரே அமர்ந்து கொண்டு தாய்மார்கள் வில்லன்களைத் திட்டித் தீர்த்தார்கள்.
ஆனால் இன்று, நாயகனே நாயகியை படுக்கையில் போட்டுப் புரள்வது, பிழிந்து எடுப்பது என்றாயிற்று அவனும்தான் என்ன செய்வான். நாயகியின் அரைகுறையான ஆடை உதட்டுக் கடிப்பு கண்ணின் அழைப்பு என்ன நியாயம் பேசுவது. நகைச்சுவை நடிகர்களின் இரட்டை பொருள் வசனம். ஒரே பொருள் தரும் நாகரிகக் குறைவான பேச்சு என எல்லாமும் தியேட்டரில் அல்ல நம் வீட்டுக் கூடத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அது போகட்டும்.
சரி, மீண்டும் நான் பார்த்துப் பரவசப்பட்ட சினிமாக்கள் குறித்துப் பேசுவோம். அந்த நாட்களில் தியேட்டர்களில் பாட்டுப் புத்தகங்கள் விற்பார்கள். அந்தப் படப்பெட்டியுடனேயே பாட்டுப் புத்தகமும் வந்துவிடும். பரபரப்பாக விற்பனையாகும். அது வீட்டுக்கு வந்து, மிச்சம் சொச்சம் உள்ளவர்களையும் இழுக்கும். அவற்றைச் சிலர் பொக்கிஷம்போலப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். பாடப்புத்தகங்களில் ஒளிந்திருக்கும்.
பொழுது போகாத அக்காக்கள் கொல்லைப்புறத்தில் கிணற்றடியில், மரத்தடியில் கூச்சத்துடன் பாடிப் பழகிக் கொண்டிருப்பார்கள். அந்த நாள்கள் இனியவை, எளிமையானவை. பாட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அந்தப் படத்தின் கதையைக் கொஞ்சம் போலச் சொல்லி மீதியை வெள்ளித் திரையில் காண்க என்று தூண்டில் போட்டிருப்பார்கள். அந்தப் படத்தின் நாயகன், நாயகி, வில்லன், நகைச்சுவை நடிகர்கள் என வரிசையாக எழுதி கடைசியில் மற்றும்பலர் என்று முடித்திருப்பார்கள். யார் அந்த மற்றும் பலர்? கொட்டாப்புளி ஜெயராமன், புளிமூட்டை ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராஜன், ப்ரென்ட் ராமசாமி, சாயிராம், அய்யா தெரியாதய்யா ராமராவ் என எவ்வளவு நடிகர்கள்! அந்நாளில் மக்களின் துயரங்களை, வறுமையை மறக்க வைத்து மூன்று மணி நேரமாவது சந்தோஷமாக ஆக்கித்தந்த ரத்தினங்கள் அவர்கள்.
"மற்றும் பலர்' பட்டியல் மிக நீண்டது என்றாலும் நினைவில் உள்ள பெயர்கள் அவர்களின் நடிப்பு என்று பேச ஆசை. நிறைய பேசலாம். அதற்கு முன்னே, மக்கள் திலகம், நடிகர் திலகம், இலட்சிய நடிகர், நடிப்பிசைப்புலவர், நடிகவேள், நவரசத்திலகம், நடிகையர் திலகம், அபிநய சரஸ்வதி, நாட்டியப் பேரொளி என இவர்கள் குறித்தெல்லாம் பேச வேண்டியிருக்கிறது. சினிமா நூற்றாண்டு நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு ரசிகனின் பார்வை எப்படி இருந்தது என்பதை பதிவு செய்ய வேண்டும்.
தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா காலமெல்லாம் தாண்டி தான் சினிமா பார்க்கும் வாய்ப்பு இருந்தது. அந்த நாட்களை உற்சாகமாக்கிய அற்புதமான நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன். அவருடைய நடிப்பு கட்டிப்போட்டிருந்தது. மிகையில்லாத இயல்பான நடிப்பு அவரிடம் இருந்தது. இப்படி எம்.ஜி.ஆர். குறித்துப்பேசும் பொழுது அப்படியானால் சிவாஜி என்ற கேள்வி சிலருக்கு எழலாம். அவர் குறித்து பேச நிறைய இருக்கிறது. இரண்டுபேரின் நடிப்பையும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. அவர் களம் வேறு. இவர் களம் வேறு. அவர் அப்படித்தான் நடித்திருக்க முடியும். இவர் இப்படித்தான். அதில் எந்தக் குழப்பமும் ரசிகனிடம் இருக்கக்கூடாது.
இந்த இரண்டு திலகங்களுக்கும் நடுவே ஜெமினியின் நடிப்பை எப்படி பார்ப்பது. மனோகரனாக ஜெமினியை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அதுபோலவே ஜெமினியை புதுமைப் பித்தனாக்கி இருக்க முடியுமா? ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் பின்னணி இல்லாமல் டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன் என இவர்களின் குரலை ஜெமினியின் மேல் ஏற்றி ரசிக்க முடியுமா?
சிவாஜி போலவும், எம்.ஜி.ஆர். போலவும் நடிக்க முயன்று தோல்வி அடைந்தவர்கள் பற்றி நினைத்துப் பார்க்கும் பொழுது சூடுபோட்டுக் கொண்டு "மியாவ்'னு கத்தும் பூனையைப் பார்ப்பது போல இருந்தது இல்லையா - இனி எம்.ஜி.ஆர். படங்கள், அவரின் நடிப்பு என அடுத்த இதழில் பார்ப்போம்.