கீற்றில் தேட...

அனந்தபுரி

ஆச்சர்யமாக இருக்கு மக்களே!

                பத்மனாப சுவாமி, குருவாயூர் கிருஷ்ணன், சபரிமலை அய்யப்பன் எனப் பக்தி பரவசத்தில் மூழ்கித் திளைக்கிறீர்கள்!

                படிப்பில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது கேரளம்!

                பல காதம் கடந்து, கடல் தாண்டி, மலை தாண்டி பொருளீட்டுகிறீர்கள்! பாரதத்தின் சர்ய் தங்ள்ண்க்ங்ய்ற் ஊன்ய்க்ள்-ன் வற்றாத ஜீவநதியாய் திகழ்கிறீர்கள்!

                நல்லத் திரைப்படங்களை ஆதரிக்கிறீர்கள்! பருத்தி வேட்டி, சட்டை, ஒற்றைப்பீடி என எளிமையின் குறியீடாய்...

                உழைப்பின் அடையாளமாய் திகழ்கிற எண்ட மலையாள சேட்டன்களே!

                எனக்கு ஒரு சந்தேகம்!

                இவ்வளவுத் தெளிவான எண்ட சகோதரர்கள் இன்னமும் எதற்கு அதிர்ஷ்டத்தை நம்பணும்?

                இன்னமும் எதற்கு மூலைக்கு மூலை லாட்டரி கடைகள்... ரயிலில், பேருந்தில், தெருமுக்குகளிலெல்லாம் லாட்டரி விற்பனையாளர்கள்!

                ஏன்...? தோழர்களே!

                இடதுசாரி (!) ஆட்சியிலிருக்கும் கேரள மாநிலத்தில் ஏனிந்த Mind set?

                கூவுகிறதொரு ஒலிபெருக்கி. “5 கிலோ தங்கம், ஒரு கார் கூடவே ஒரு கோடி...''

                ஒரு சீட்டு வாங்கியிருக்கலாமோ...?

மூடர்கூடம்

                கலை இலக்கியத்தில்அபத்த இலக்கியம் அபத்த நாடகம் என்றெல்லாம் வகைகளுண்டு.

                சினிமாவிலும் "அபத்த சினிமா' என்ற வகையில் "மூடர்கூடம்' புதிய தமிழ்ப்படம்!

                வாழ்வின் அபத்தகணங்கள் நாம் எதிர்பாராமல் நம் வாழ்வை புரட்டி போட்டுவிடுகின்றன.

                அப்படியோர் தருணம் ஒரே நேரத்தில் 4 பேர் வாழ்வில் நிகழ, ஒரு வீட்டைக் கொள்ளையடிப்பதற்காக நால்வரும் இணைகின்றனர்.

                மெத்தப்படித்த நவீன் ஒரு குறியீடெனில், ஒன்றும் படிக்காத சென்றாயன் மற்றோர் குறியீடு.

                எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்றார் போல் புதுமுகங்கள் (ஜெயப்பிரகாஷ் தவிர), கூடவே புதுமுறையிலான கதை சொல்லல் (நாய்க்குமொரு Flashback வரலாறு)

                சின்னக் குழந்தைகளைக்கூட சிறப்பாக நடிக்க வைத்திருப்பதும், தேவையான இடைவெளியில் காட்சியி னூடாக நகைச்சுவைகள் தெளிக்கப் பட்டிருப்பதும் புதிய ரசிகர்களை வர வைக்கும்.

                இசைதான் படத்தோடு ஒட்ட வில்லை! மாறுதலான திரைக்கதைக்கு வழக்கமான இசை இல்லாதது ஓர் நெருடல்! ஆறுதலில்லா இசை!

                படம் நம்பிக்கை விதைத்து முடிகிறது! கதை, தயாரிப்பு, இயக்கம் என மூன்று தளங்களிலும் சிறப்பாக செயல் பட்டிருக்கும் நவீன்! நம்பிக்கை தரக்கூடிய சினிமாக்காரராக இருப்பார் என நம்பலாம்! இல்லையென்றாலும் ஒன்றும் கெட்டுப் போய்விடாது! அபத்தங்களால் ஆனதுதானே வாழ்க்கை!

கோவை

                பட்டணம்பொடியன் கோவை விடுதியொன்றில் தங்கியிருந்த போது ஓர் திரைப்படக் குழுவோடு நெருங்கிப் பழக நேர்ந்தது (அதிர்ஷ்டமா... துர் அதிர்ஷ்டமா...)

                ஒரு வெளிப்புற படப்பிடிப்புக்கு 80 முதல் 120 பேர் முடிய தேவையா யிருக்கிறது. ஓட்டுநர், உணவளிப்பவர், தொடங்கி Property Assistant, இணை இயக்குநர்கள், நடிகர்கள், அவர்களுக்கு உதவியாக உதவியாளர், ஒப்பனையாளர், gymboy, சமையல்காரர் என்று ஓர் கூட்டமே பெரிய நடிகர்களோடு வந்து செலவு வைக்கிறது.

                தயாரிப்பு செலவை சரியாக திட்டமிடுகிற இயக்குநராக இருந்தால், அது அதிர்ஷ்டம் தான்!

                பெரும்பாலும் தான் அவ்வப்போது யோசிக்கிற சங்கதிகளை நடைமுறைப் படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிற இயக்குநர்களே அதிகம்!

                சினிமாவின் பொருளாதாரப் பின்புலம் பெரும்பாலும் கறுப்புப் பணத்தில்தான் இயங்குகிறதோ...?

                இதைப் புரிந்து - தெரிந்து கொண்டவர்கள் செய்யும் தாம்தூம் செலவுகள் தயாரிப்பு செலவைக் கூட்டுகின்றன.

                பரோட்டா தின்னு புகழடைந்த கத்தி நடிகருக்கு ஒரு நாளைக்கு ஒண்ணேகால் லட்சமாம்! காட்டுக் கத்தல் கத்தி கவுண்டமணியை நகல் செய்யும் சந்தன நடிகருக்கு ஒரு கோடியாம். ஒரு படத்துக்கு Flight, Hotel charges.

                இதையெல்லாம் எழுதி என்ன சார் பிரயோஜனம்? shooting பார்க்கவும் கூட்டம்! திரைப்படம் பார்க்கவும் கூட்டம். அதெல்லாம் கிடக்கட்டும்! அதோ பாருங்கள்! விடுதிக்குள் நுழைகின்றன வாகனங்கள்!

                அட! இன்னொரு shooting ஆரம்பம்!

ஒரு இதழ்... ஒரு நூல்

                மற்றமை (other) என்றொரு ஆய்விதழ் மதுரையிலிருந்து வெளி வருகிறது.

                மனநலம் குறித்த கட்டுரைகளைத் தாங்கி மனநல அலசல்களுக்காக மட்டுமே படைப்புகளைத் தாங்கி வருவது இதழின் சிறப்பு.

                பயன்பாட்டு மன அலசல் (Psycho analysis) வழியில் சமூக, அரசியல் நிகழ்வுகளை ஆய்வு செய்கிற கட்டுரைகளில் சமீபத்திய இதழில் "பா...-வின் கட்டுமான நெருக்கடி' ஓர் முக்கியமான படைப்பு.

                ஆர்வம் கொண்டவர்கள் வாங்கிப் படிக்கலாம்!

                “பைத்தியக்கார பொஸ்தகத்தை படிக்கிறான் பாரு லூசுப்பய'' என்று மனசுக்குள் யாரேனும் பரிகசித்தாலும் பரவாயில்லிங்கண்ணே! படிச்சுப் பாருங்க!

                புதுமைப்பித்தனின் அனைத்து சிறுகதைகளையும் கொண்ட பூம்புகார் பிரசுரத்தின் வெளியீடாக (விலை ரூ.200ஞி- தான்) வெளிவந்திருக்கும் நூலை இப்போது வாசித்தாலும் புதுமைப் பித்தனின் திறமை வியக்கவைக்கிறது.

                பாய்ச்சலான நடை வாசகனை அசர அடிக்கிறது. புதுமைப்பித்தன் எழுதிய காலத்தில் எழுதிய மண்ட்டோ ஹசன் எழுத்துக்களோடு ஒப்பிடுகையில் பு.பி.-யின் உள்ளடக்கங்கள் குறித்த சாரு நிவேதிதாவின் விமர்சனம் மிக முக்கியமானது என்றாலும் பு.பி.-யை தவிர்த்துவிட்டு தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுத இயலாது.

பொள்ளாச்சி... சிற்பி விருது

                பொள்ளாச்சியில் கடந்த மாதம் சிற்பி விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு (பார்வையாளனாகத் தான் அய்யாமாரே!) கிடைத்தது.

                சூழலியல் ஆர்வலர் "ஓசை' காளிதாஸ் தமிழீழக் கவிஞர் காசி ஆனந்தன் கவிஞர் கலைவிமர்சகர் இந்திரன் - ஆகியோருக்கு சிற்பி விருது வழங்கப் பட்டது வழக்கமான நிகழ்வுதான் எனினும், மொழிபெயர்ப்பு குறித்து உரையாற்றிய ஆங்கிலப் பேராசிரியர் பேச்சு அவையைக் கட்டிப்போட்டது.

                ஒரு தேனியைப் போல உற்சாகமாய் பணியாற்றிய கவிஞர் சிற்பி அவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது.

                “என்ன வேகம்

                இந்த வேகம்''

கவிஞர் மீரா குறிப்பிட்டது சிற்பியைத் தானோ... விருதாளர்களுக்கு கருக்கல் சார்பாக பொடியனின் வாழ்த்துக்கள்!

                சிற்பி விருது கொண்டாட்ட மகிழ்வின் வாசம் தீருமுன்னே வந்து சேர்ந்தது அந்த அதிர்வு செய்தி!

                “கவிஞர் சிற்பி அவர்களின் இளைய புதல்வர் மாரடைப்பினால் அகால மரணம்'' என்ன சொல்லி ஆற்றுவது தந்தையின் சோகத்தை... வார்த்தைகள், எழுத்துக்கள் என்ன செய்துவிட முடியும்...?

                அய்யா... கவிஞர் அய்யா... உங்களுக்கு ஆறுதல் சொல்ல வயதில்லை! ஈடு செய்ய முடியாத இழப்பை தாங்க வொண்ணா தந்தையின் துயரத்தை இலக்கியமாக மாற்றிவிடுங்கள். அதுதான் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் குடும்ப சோகத்தில் நாங்களும்...

கொசுறு:

அதற்குள் வந்துவிட்டது நிறுத்தம் முன்னிருக்கை கூந்தல் இயற்கையா செயற்கையா அறியாமல் இறங்கியதில் வருத்தம்''