இந்திய மொழிகளில் தமிழ்மொழியில்தான் முதன்முதலில் அகராதி உருவாக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் 1936-இல் தமிழில் பேரகராதியை உருவாக்கியது. ஒரு காலத்தில் இந்திய மொழிகள் அனைத்தும் சமற்கிருதத்தை மூலமாகக் கொண்டு அதிலிருந்துதான் உருவாயின என்று கூறப்பட்டது. இராபர்ட் கால்டுவெல் பாதிரியார் வந்த பின்தான் சமற்கிருதத்திற்குத் தொடர்பே இல்லாத சில மொழிகள் ஒரு குடும்பமாக இருப்பதாகவும் அவை ஒரு மொழிக் குடும்பத்திற்குள் அடங்கும் என்றும் ஆராய்ந்து அவற்றிற்கான ஒப்பியல் இலக்கணத்தையும் உருவாக்கினார். அவர் கூறிய மொழிக் குடும்பமே தமிழை முதன்மையாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பம். திராவிட மொழிக் குடும்பத்தில் மிகப் பழைமையான மொழியும், தொன்மையான மொழியும் தமிழ் ஆகும்.

சமற்கிருதத்தின் துணையில்லாமல் தமிழ் இயங்கக் கூடியது. மேலும் தமிழ்மொழியின் சொற்களுக்கான வேர் மூலங்களும் தமிழாகவே உள்ளன.

எனவே தமிழ் எந்த மொழியையும் சாராத தனித்தியங்கவல்ல மொழி என்று நிறுவுவதற்குத் தமிழ்ச் சொற்களின் சொற்பிறப்பியலைத் தொகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஞானப்பிரகாசர், மாகறல் கார்த்திகேயனார் போன்றவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முழுதுமாக அப்பணியைச் செய்யவில்லை.

தேவநேயப் பாவாணர் சொற்பிறப்பியல் தொடர்பாக வேர்ச்சொற் கட்டுரைகள், முதல் தாய்மொழி போன்ற ஆய்வு நூல்களை வெளியிட்டார். அனைத்துத் தமிழ்மொழிச் சொற்களுக்கும் சொற்பிறப்பியல் கண்டுபிடிப்பதற்காக ஒரு துறையையே உருவாக்கித் தர வேண்டுமென்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கையைக் கனிவாக ஏற்றுக்கொண்ட அப்போதைய முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் எக்காலத்திலும் தனித்து இயங்கும் வகையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தைத் (1974) தோற்றுவித்தார். சொற்களே மொழிக்கு அடிப்படை. சொற்களைப் பாதுகாத்தால் தான் மொழியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முடியும். சொற்கள் பெருகப் பெருக மொழியும் வளர்ந்து உயர்வு பெறும். காலந்தோறும் மொழியில் சில சொற்கள் பொருள் மாறுபாடு அடையும்; சில சொற்கள் வழக்கொழியும்; சில சொற்கள் புதிதாக உருவாகும். இவை அனைத்தையும் தொகுத்துப் பதிவு செய்து அகரமுதலி வடிவில் வெளியிடுவதே மொழி வளர்ச்சிக்கான ஆக்கப் பணியாக அமையும்.karunanidhi 473அந்த வகையில் புலமையாளர்கள், பொதுமக்கள், ஆய்வறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும் வகையில், தமிழில் சொற்பிறப்பியல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசு விரும்பியது.

இதனை நடைமுறைப்படுத்த தனி இயக்ககம் இருந்தால்தான் பணி சிறப்பாக அமையும் என்று எண்ணிய தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் என்னும் துறைத் தலைமை அலுவலகத்தை 1974-ஆம் ஆண்டு தோற்றுவித்தது.

உலக மொழிகளில் தொன்மை மிக்கதும் இலக்கணச் செறிவுடையதும், பல்வேறு துறைகளிலும் இலக்கிய வளம் கொண்டதும், மிக விரைவாக வளர்ந்து வரும் அனைத்து அறிவியல் துறைகளுக்குமான கலைச்சொற்களைத் தன் சொல்வளத்திலிருந்தே உருவாக்கிக் கொள்ளும் வல்லமை வாய்ந்ததுமான தமிழ்மொழியில், சொல்லின் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்கு உரிய வழிகாட்டுதல் தேவையாகும்.

தமிழ்மொழியின் ஒவ்வொரு சொல்லமைப்பையும் அறிந்து சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றலைப் படைப்பாளர்களும், கல்வியாளர்களும் பெற வேண்டுமெனில் தமிழின் வேர்மூலங்களை வெளிப்படுத்தும் சொற்பிறப்பியல் அகராதி அவர்களுக்கு மிகவும் இன்றியமையாதவை.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழிக்கு உருவாக்கிய பேரகராதிக்குப் பின் தமிழ்நாடு அரசே இந்தப் பொறுப்பை ஏற்றுத் தமிழ்ப் பேரகராதிக்கென ஒரு துறையைச் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்’ என்ற பெயரில் உருவாக்க திட்டம் வரைந்தது.

கலைஞர் கண்ட இயக்கம்

அதன் விளைவாக 1974ஆம் ஆண்டு, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களை முதல் இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பெற்றதே செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககமாகும்.

ஒரு மொழியின் தொன்மையைப் போலவே அதன் இளமையும் எளிமையும் பெருமைக்குரிய ஒன்றாகும். அதனடிப்படையில் இனிமை, வளமை, செம்மை, வியன்மை போன்ற சிறப்புகளை ஒருங்கேயுடைய தமிழ்மொழியை என்றும் குன்றாத வண்மொழியாக மிளிரச் செய்வதற்குச் சொல்லாக்கம் மிகவும் இன்றியமையாததாகும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வாய்மொழிக்கிணங்க அகரமுதலி இயக்ககமானது இப்போது அகராதிப் பணிகளோடு, காலத்திற்கேற்ற புதிய கலைச்சொற்களை உருவாக்கி வழங்குவது உள்பட, தமிழ்மொழியின் மேம்பாட்டுக்கான ஆக்கப் பணிகளை இவ்வியக்ககம் இடைநிற்றலின்றித் தொடர்ந்து செயற்படுத்தி வருகிறது.

இவ்வியக்சுசுத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைமுறைத் தமிழ்அகரமுதலி, மாணவர் இலக்கியத் தமிழ் அகரமுதலி, அயற்சொல் அகராதி, தமிழ்- தமிழ் பையடக்க அகராதி, மயங்கொலிச் சொல்லகராதி, ஒருபொருட் பன்மொழி அகராதி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. ஆட்சிச்சொல்லகராதி திருந்திய பதிப்பு, துறைவாரியான ஆட்சிச்சொல்லகராதி குறுநூல், தமிழ் மரபுத்தொடர் அகராதி ஆகியவை அணியமாக்கப்பட்டு அச்சில் உள்ளன.

மருத்துவக் கலைச்சொல் அகராதி

தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாக, ஆங்கிலச் சொற்களுக்கு இணையான புதிய தமிழ்க் கலைச்சொல் அகராதி உருவாக்கி வெளியிட இசைவளித்து தமிழ்நாடு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அகரமுதலி இயக்ககமானது, தமிழ்நாடு பாடநூல் (ம) கல்வியியல் பணிகள் கழகத்துடன் இணைந்து, துறைசார் வல்லுநர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து, ஆண்டுக்கொரு துறையைத் தேர்வுசெய்து கலைச்சொல் அகராதிகளை உருவாக்கி வெளியிடவுள்ளது. அதன்படி நடப்பாண்டில் முதற்கட்டமாக மருத்துவக் கலைச்சொல் அகராதி உருவாக்கப் பணி இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதற்காக 2023 ஜூன் வரை 10,10,000 சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வருகிற நவம்பர் திங்களில் வெளியிடப்படவுள்ள மருத்துவக் கலைச்சொல் அகராதி வருங்காலங்களில் மாணவர்கள் தாய்த்தமிழில் மருத்துவம் பயில பெரும் துணையாக அமையும்.

வட்டார வழக்குச் சொற்பொருள் அகராதி:

தமிழின் சொல் வளத்திற்கு ஆக்கம் சேர்ப்பவை தமிழக மக்களால் பேசப்படும் வட்டார வழக்குச் சொற்களே எனலாம். வட்டார வழக்குச் சொற்கள்தான் தமிழ் மொழியின் தொடக்க நிலையைக் கண்டறிவதற்கும், மூலச் சொற்களை உணர்ந்து புதுச் சொல்லாக்கம் படைப்பதற்கும் உதவியாக அமைகின்றன.

அந்தகைய வட்டார வழக்குச் சொற்களைப் பதிந்து பாதுகாக்கும் வகையில், “வட்டார வழக்குச் சொற்பொருள் அகராதி” அணியமாக்கப்பட்டு வருகிறது. இதற்காகத் தமிழ்நாட்டின் பகுதிகளை சென்னை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை ஆகிய 6 மண்டலங்களாகப் பகுத்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி ஒருங்கிணைப்பாளர்கள் அமர்த்தப்பட்டு, 2023 மார்ச்சு   19-ஆம் நாள் வரை 18,784 சொற்கள் திரட்டப் பெற்றுள்ளன. இவ்வகராதி விரைவில் வெளியிடப்படவுள்ளது.

பன்மொழி அகராதியுடன் தமிழ் கற்பிக்கும் செயலி

தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளிலும், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் தமிழ்மொழியை இலகுவாகக் கற்கும் வகையில் அந்தந்த மொழிகளில் புலமைவாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு பாடநூலும், பன்மொழி அகராதியும் உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மேலும், பன்மொழி அகராதியை உள்ளடக்கி தமிழ் கற்கும் வகையில் திறன்மிகு குறுஞ்செயலி உருவாக்கப்பட்டு, 2023ஆம் ஆண்டுக்குள்ளாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

சொல் தொகுப்பி

தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழார்வலர்கள், அயல்நாடுவாழ் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் இணையதளம் வழியாக ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களைத் தாமே உள்ளீடு செய்யும் வகையில், “கலைச்சொல் தொகுப்பி” உருவாக்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

‘சொல் வயல்’ மாத இதழ் வெளியிடுதல்

கலைச்சொல்லாக்கம், சொல்லாய்வுகள், அகராதியியல், மொழியியல் சார்ந்த கருத்துக்கள் தமிழ்மொழி குறித்த செய்திகள், இயக்ககச் செயற்பாடுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு “சொல்வயல்” மின்னிதழ் சொற்குவை வலைத்தளத்தில் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. 2021 ஜூன் முதல் 2023 ஏப்ரல் வரை 35 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சொற்குவை வலைத்தளம்

அறிவியல் பெரிதும் வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலத்திற்கேற்பக் கலைச்சொற்களை உருவாக்கும் திறன் பெற்ற மொழி மட்டுமே வாழும்; வளர்ச்சி பெறும். தமிழ்மொழியின் அனைத்துச் சொற்களையும் தொகுத்து, அச்சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களோடு பொருள்விளக்கம் அளித்து, அச்சொற்களுக்கான வேர்ச்சொல் விளக்கத்தையும் சொற்குவை (sorkuvai.com) என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

தமிழ்மொழிக்குப் பெருமை சேர்ப்பது அதன் சொல்வளமே ஆகும். இன்றைய அறிவுப்புலத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்களையெல்லாம் திரட்டி அவற்றிற்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைத்து இணையதளத்தின் வழியாகப் பொதுவெளியில் வெளியிடுவதும், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்றுதிரட்டி; அவற்றுள், வந்த சொல்லே மீளவும் வராத வகையில் (deduplication) நிரல்படுத்தி தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்வதுமே அகரமுதலி இயக்ககத்தின் ‘சொற்குவை’ திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

‘சொற்குவை’ திட்டத்திற்குச் சொல் வருவாய்க் களன்களாகக் கருதப்படுகிற தமிழ்க் கலைக்கழகம், வல்லுநர்க் குழுக்கூட்டம், சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சித் திட்டம், துறைசார் புதிய கலைச்சொற்கள் கலந்தாய்வுக் கூட்டம், இணையவழிப் பன்னாட்டுக் கலைச்சொல்லாக்கப் பயிலரங்கம் போன்றவை சொற்குவைக்குத் துணை நிற்பவையாகும்.

தமிழ்க் கலைக்கழகம்

புறநிலையில் உள்ள பலதுறை அறிஞர்களிடமிருந்து தமிழ்க் கலைச்சொற்களைப் பெற்றுச் சொற்குவை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் நோக்கில் 01.10.2021ஆம் நாளிலிருந்து இணையவழிப் பன்னாட்டுக் கலைசொல்லாக்கப் பயிலரங்கம் நடத்தப்பெற்று வருகிறது. இதுவரையிலான 81 அமர்வுகளில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 231 அயலக அறிஞர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 141 தாயக அறிஞர்களும் பங்கேற்றுள்ளனர்.

அவர்களிடமிருந்து 8,100 தமிழ்ச் சொற்கள் பெறப்பட்டு வல்லுநர்களின் ஆய்வுக்குப்பின் அவை சொற்குவை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் மிகச்சீரிய நடவடிக்கையின் காரணமாகவும் ஊக்குவிப்பின் பயனாகவும் 30.11.2022 நாளில் 7,81,533 சொற்களாகவும், 13.07.2023-ஆம் நாளன்று 10,10,008 சொற்களாகவும் உயர்ந்துள்ளது.

“உலகுக்குத் தமிழ்மொழியின்

உயர்வுதனைக் காட்டுவாது சொற்பெருக்காம்”

எனும் பாவேந்தரின் வாய்மொழிக்கிணங்க, உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழி சொல்வளம் நிறைந்த மொழி என்பதால், எட்டவேண்டிய இலக்கு இன்னும் இருக்கிறது.

அகராதியியல் ஆய்வறிஞர்கள், சொல்லாக்க வல்லுநர்கள், தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக சொற்குவை (sorkuvai.com) வலைதளம் பயன்பட்டு வருகின்றது.

சொற்குவையின் முதன்மை நோக்கங்கள்

தமிழ்மொழியின் சொல்வளத்தைக் காத்தல்

தமிழ் மொழியின் சொல்வளத்தைப் பெருக்குதல்.

என்னும் இரு முதன்மை இலக்குகளை நோக்கமாகக் கொண்டு சொற்குவை செயற்படுத்தப்பட்டு வருகிறது.

“என்றும் தமிழ் வளர்க - கலை

யாவும் தமிழ்மொழியால் விசைந்தோங்குக”

என்று பாவேந்தரின் மொழி வேட்கையை நிறைவேற்றுவதற்குத் தமிழ்மொழியின் அனைத்துச் சொற்களையும் காக்க வேண்டியது தேவையாகிறது. இக்காலம் வரையில் மட்டுமல்ல இனி எக்காலத்திலும் எந்தத்துறை சார்ந்த பிறமொழிச் சொற்களுக்கும் நிகரான, நேர்த்தியான, பொருத்தமான தமிழ்க் கலைச் சொல்லாக்கங்களை உடனடியாக வடிவமைத்திடவும், பிறமொழி நல்லறிஞர்களின் படைப்புகளைக் கருத்துச் சிதையாமல் மொழிபெயர்த்திடவும், தமிழ்மொழிவழிக் கல்வி, தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் ஆகியவற்றின் முழு வெற்றிக்காகவும் தமிழின் சொல்வளத்தைக் காக்க வேண்டியுள்ளது. இத்தகைய மொழிக்காப்புப் பணியைத்தான் சொற்குவை செய்து வருகிறது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் செயற்பாடுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில், 06.04.2023ஆம் நாள் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழில் சொற்பிறப்பியல் பேரகரமுதலிகளை உருவாக்கியதோடு, வேர்ச்சொல் ஆய்வின் வழியாகத் தமிழ்மொழியின் தொன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையும், கோட்டமும் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை அறிவிக்கச் செய்தார். இந்த அறிவிப்பு, பொன்விழா காண உள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககத்தின் தமிழ்ப்பணிகள் தமிழ்கூறு நல்லுலகம் முழுமைக்கும் ஒன்று சேர பெருவாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வெளியீடுகள்

தமிழின் சொற்களுக்குச் சொற்பிறப்பியலுடன் கலந்த பேரகரமுதலியை உருவாக்கும் பணி 1974 இல் தொடங்கி 2011இல் 38 ஆண்டுகளில் 13,270 பக்கங்களில் 31 தொகுதிகளை உருவாக்கிய போது நிறைவு பெற்றது. இதன் பிறகு கீழ்கண்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

சுருக்கப் பதிப்பு (2016)

வினைச்சொல் அகராதி (2016)

வேர்ச்சொல் சுவடி (2017)

நற்றமிழ் அறிவோம் (2017)

நடைமுறைத் தமிழ் அகரமுதலி (2021)

மாணவர் இலக்கியத் தமிழ் அகரமுதலி (2021)

அயற்சொல் அகராதி (2021)

ஒருபொருட் பன்மொழி அகராதி (2022)

மயங்கொலிச் சொல் அகராதி (2022)

தமிழ்-தமிழ்ப் பையடக்க அகராதி (2022)

- டாக்டர் சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It