தமிழ்நாட்டு மாணவர்கள் தற்காலிகமாக ‘நீட்’ பொதுத்தேர்வு என்னும் அநீதியிலிருந்து இந்தக் கல்வியாண்டில் காப்பாற்றப்பட்டுவிட்டார்கள். அடுத்த 2017ம் கல்வியாண்டில் கட்டாயம் ‘நீட்’ பொதுத்தேர்வு வந்துவிடும் என்றநிலையில், தற்போது மருத்துவப்படிப்பு ‘நீட்’ பொது நுழைவுத் தேர்விற்கு எதிராக காஞ்சிபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்ற மாணவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, ‘பத்தோடு பதினொன்று’ அல்ல; அதில் அவர் தெரிவித்திருக்கும் முகாந்திரம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகும்.  

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வு நடத்தப்பட்டதால், மாநிலக் கல்வி திட்டத்தில் பயின்ற  தான்,  நீட் தேர்வில் தோல்வி அடைய நேரிட்டதாகவும், எனவே இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனில் தவே அமர்வு, இந்த மனு குறித்து  மத்திய மாநில அரசுகளுக்கும், இந்திய மருத்துவக் கழகத்திற்கும் விளக்கம் கேட்டு, 4வாரத்தில் பதில் அளிக்குமாறு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநிலக் கல்வித்திட்டத்தில் பயின்ற தன்னால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையிலான ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைய நேரிட்டது என்ற வாக்குமூலம் அனைத்து இந்தியக் கல்வியாளர்களின் உணர்வுகளையும் உலுக்கி எடுத்திருக்கவேண்டும். தொண்ணூறு விழுக்காடு மாணவர்கள் தாய்மொழியிலேயே +2 கல்வியைப் படிக்கும் சூழலில், ஆங்கிலத்திலும், இந்தியிலுமான கேள்வித்தாள்கள் மட்டுமே கொடுக்கப்பட்ட ‘நீட்’ தேர்வு பெரும்பான்மை தாய்மொழிக்கல்வி பயின்ற இந்திய மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதுவே மிக முக்கியமான குற்றச்சாட்டு. மாநிலக் கல்வித்திட்டம் சிபிஎஸ்சி தரத்தைவிடக் குறைவு என்பது குறித்த விவாதம் இரண்டாம் நிலையிலேயே கவனிக்க வேண்டியதாகும். மாநிலக் கல்வித்திட்டத்திற்கும், சிபிஎஸ்சி கல்வித்திட்டத்திற்கும் உள்ள வேறுபாடு பத்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது; கேள்வித்தாள் முறைகள் உள்ளிட்ட செயலாக்கத்தில்தான் பெரும்வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது குறித்துப் பின்னர் விரிவாகப் பேசலாம்.

‘கல்வி’ என்பது நடுவண்அரசு, மாநிலஅரசுகள் என்பவற்றின் பொதுப்பட்டியலில் இதுவரை உள்ளது. எனவே, நடுவண் அரசால் கல்வித்திட்டம் வகுக்கப்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒரு பாடத்திட்டமும், பல்வேறு மாநில அரசுகளால் வகுக்கப்பட்ட வெவ்வேறு கல்வித்திட்டங்களின்  அடிப்படையில் நடத்தப்படும் பாடத்திட்டங்களும், அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், பல்வேறு நுழைவுத்தேர்வுகளைத் தவிர்க்கவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் வசூலிக்கப்படும் ‘capitation fees’ஐத் தவிர்க்கவும், இந்தியநாடெங்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தவேண்டும் என்று ஒரு சில அமைப்பினரால் தொடரப்பட்ட பொதுநல மனுக்களில் அடிப்படையில், ‘நீட்’ நுழைவுத்தேர்வை நடத்துமாறு சிபிஎஸ்சி நிறுவனத்தையும் இந்திய மருத்துவக் கழகத்தையும் பணித்து வெளியிடப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம். இத்தகைய போக்கு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மாறாகவே இருக்கிறது.

மருத்துவம் பயிலவிரும்பும் மாணவர்களுக்காக, ஆறாவது வகுப்பு முதல் +2 வரை, இந்திய நாடெங்கிலும் ஒரே கல்வித்திட்டம், ஒரே பயிற்றுவிக்கும் முறை, ஒரே தேர்வு முறை, என்பவைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்ததின் பின்னரே,  ‘இந்தியநாடெங்கும் ஒரே நுழைவுத்தேர்வு – நீட்’ என்ற தீர்ப்பைக் கொடுத்திருக்க வேண்டும் உச்சநீதிமன்றம். மேலும், அனைத்து மாநில மொழிகளிலும் ‘நீட்’ கேள்வித்தாள் தரப்பட வேண்டும். இவைகளுக்கான அடிப்படைகளை உருவாக்க அந்தந்த மாநில அரசுகளுக்கும், நடுவண் அரசுக்கும் குறைந்தது ஒரு ஆண்டு திட்டமிடல், ஆறாவது வகுப்பில் தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை செயலாக்கம் என ஏழு ஆண்டுகளாவது கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். ‘நீட்’ பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் விதமான கேள்வித்தாள்கள் அடிப்படையிலான கல்விமுறையில் பயிற்றுவித்தல் ஆறாவது வகுப்பு முதலே செயலில் இருக்கவேண்டும். இத்தகைய பயிற்சிமுறைகளை உறுதி செய்தால் மட்டுமே, தனியாரால் லட்சங்களைப் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் சிறப்பு ‘நீட்’ பயிற்சிவகுப்புக் கொள்ளைகளிருந்து மாணவர்களைக் காக்க முடியும். கடைக்கோடி கிராமப் பள்ளியில் பயிலும் மாணவனும் ‘நீட்’ தேர்வை அச்சமின்றி துணிவுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள இயலும். இவைகளைச் செய்யாமல், மேலோட்டமாக அதிரடித் தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கினால், ‘தீர்ப்புகள் தரப்படலாம் சாமானியனுக்கான நீதியைத் தராமலேயே’ என்ற நிலையில் முடிந்துவிடும்.

இனி, தமிழகத்தின் +2 அளவிலான கல்வி ஏன் பெரும் பின்னடைவைச் சந்தித்தது என்பதற்கான விடையைத் தேடலாம். PUC என்னும் புகுமுக வகுப்புப் பாடத்திட்டத்தை கல்லூரியிலிருந்து மாற்றி +2 பாடமாகப் பள்ளிக்கல்வியில் அறிமுகம் செய்த புதிதில் செயலாக்கம் நன்றாகத்தான் இருந்தது. +2 கல்வித் திட்டத்தின் அறிமுக ஆண்டான 1978ல் படித்தவன் என்ற முறையில் இதை ஓரளவு என்னால் சொல்லமுடியும். 'blue print' போன்றத் திட்டங்கள் வராத காலம் அது. தன்னிடம் படிக்கும் மாணவன் டியூசன் போனால் ஆசிரியர்கள் வருத்தப்பட்ட காலம் அது. “ஏன் நான் சொல்லிக்கொடுப்பது விளங்கவில்லையா தம்பி, தயங்காமல் கேள்; நானே உனக்கு நன்றாகச் சொல்லிக்கொடுக்கிறேன்” என்று மாணவர்களுக்குப் பக்கபலமாக நின்றார்கள் ஆசிரியர்கள்.

தமிழ் நாடு முழுவதுக்கும் என அரசு மற்றும் அரசு உதவி பெரும் ஏழே பொறியியல் கல்லூரிகளில் சில நூறு பொறியியல் இடங்களே என மொத்தத் தமிழகத்துக்கும் இருந்த காலம். என்றாலும், cut-off 160 என்ற அளவில் மதிப்பெண் பெற்றவர்களும் எளிதாக பொறியியல் கல்லூரிகளில் சேர முடிந்தது. மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவனும் கூட 189 cut-off  பெற்றதாக நினைவு. கணிதப் பாடத்தில்200க்கு 90 மதிப்பெண் வாங்கிய மாணவனும்கூட, B.Sc. கணித வகுப்பின் முதல் நாள் பேராசிரியரின்  கேள்விக்குப் புரிதலுடன் பதில் சொல்லும் நிலையிலிருந்தான்; மதிப்பெண் குறைவென்றாலும், கற்றலுக்குக் குறைவில்லை என்ற நிலையிருந்தது அப்போது. ஆனால், ஓரிரு ஆண்டுகளிலேயே மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பெருகத் தொடங்கின. பள்ளிகல்வி மிகவேகமாகத் தனியார் மயமாகத் தொடங்கியது.

கடந்த ஆகஸ்டு மாதம் 24 மற்றும் 25 நாட்களில், கல்வியாளர் அறிஞர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்கள் ஒரு தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பள்ளிக்கல்வி குறித்த அவர் கருத்து என்னை  மிகவும் ஈர்த்தது. எந்தப் பகுதியிலிருந்து எத்தகைய கேள்வி வரும் என்று திட்டம் எல்லாம் தரப்படாத 1978ம் ஆண்டின் அந்த நிலையிலிருந்து 200க்கு 200 cut-off பலநூறு மாணவர்கள் வாங்கும் கல்விப் புரட்சிக் கலையை  எவ்வளவு நுட்பமாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நடத்திய கல்வி வியாபாரிகள் வளர்த்தெடுத்தனர் என்பதை அவரின் பேட்டி தோலுரித்துக் காட்டியது. குறிப்பாக அவரின் பேட்டியிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் பதிலைப் பாருங்கள்:

இன்னைக்கு, ‘பாடநூல்ல கேட்கப்பட்ட கேள்விகளைத்தான் பரீட்சையிலும் கேட்கணும்னு விதியைக் கொண்டுவந்தவங்க இந்த மாதிரி கல்வி வியாபாரிகள். கணிதப் பாடத்தில் 60% கேள்விகளை மாதிரி வினாக்கள்லேர்ந்து கேட்கணும்னு விதியைக் கொண்டுவந்தது அவங்க. இந்த ரெண்டு விஷயம் மட்டும் மேல்நிலைக் கல்வியை எவ்வளவு மோசமாக்கியிருக்குனு நல்ல ஆசிரியர்கள்கிட்ட கேட்டுப்பாருங்க. பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சிட்டுப்போன பாதிப் பேரு கல்லூரில எடுத்த எடுப்புல தேர்வுல அடி வாங்குறான். ஏன்? இதெல்லாம் மக்களுக்குத் தெரியுமா?

அவங்க காசு சம்பாதிக்குறதுக்கு ஏத்த மாதிரி எல்லாத் தையும் வளைக்குறாங்க. உண்மையில, இன்னைக்குத் தனியார் பள்ளிக்கூடங்கள்ல மட்டும் இல்லை; அரசாங்கப் பள்ளிக்கூடங்கள்ல படிக்கிற மாணவர்களோட தலையெழுத்தையும் தீர்மானிக்கிறது இந்தக் கல்வி வியாபாரிகள்தான்! இதையெல்லாம் மாத்த ஒரு மாபெரும் இயக்கம் வேணும். அதை உருவாக்கக்கூடிய சக்தி இன்னைக்கு நாட்டுல இல்லை.

அப்படிச் 200க்கு 200 cutoff சாதித்த மாணவர்கள் B.E. முதல் பருவத்தேர்வில் கணிதப் பாடத்திலும், ‘நீட்’ தேர்விலும் அடிவாங்கும் அவலங்களுக்கான காரணங்கள் தெளிவாகப் புரிந்தன. இத்தகைய புரட்சிமிகு புரிதலுடன் மருத்துவத்துக்கான NEET-தேர்வை நம் மாணவர்கள் எதிர்கொள்ளவே முடியாது என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரும் பிரச்சனை.

இன்றைய தமிழ்நாட்டு மாணவர்கள் பள்ளிக் கல்வியைக் கல்வி வியாபாரிகளிடம் பறிகொடுத்துவிட்டு ‘கற்றல்’ என்னும் தற்காக்கும் கருவியிழந்து பரிதாபமாக நிற்கின்றார்கள். ‘நீட்’ பொதுத்தேர்விலிருந்து தமிழக மாணவர்களை இந்த ஆண்டு காப்பாற்றியாகி விட்டது. ஆனால், மக்களவையில் ‘நீட்’ பொதுத்தேர்வு விரைவில் சட்டமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நுழைவுத்தேர்வு என்றால் என்ன என்றே மறந்துவிட்ட தமிழக மாணவர்கள் 2017ம் ஆண்டு முதல் ‘நீட்’ பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும். புரிதலும், கற்றலும் சரியாக இருந்தால் மட்டுமே  ‘நீட்’ பொதுத்தேர்வை எதிர்கொள்ள இயலும் நிலையில், நம் +2 பள்ளிக் கல்விமுறை மாதிரி வினாத்தாளை மட்டும் படித்துவிட்டு மதிப்பெண் ஈட்டும் பயிற்சி முறையைக் கைவிட்டு, ‘நீட்’-ல் வெற்றிபெறச் சரியான பாதையில் பயணத்தைத் துரிதப்படுத்த வேண்டும். அதே சமயம், உச்சநீதிமன்றத்தில் தகுந்தமுறையில் வாதாடி, தமிழக மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் கலந்துகொள்ள ஏழு ஆண்டுகளாவது கேட்டுப் பெறல் வேண்டும்.

இதை நாம் செய்யத் தவறினால், கற்றலும், புரிதலும் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையிலிருக்கும் தமிழக பாடத்திட்டத் தேர்வுமுறையில் பயிலும் மாணவர்களை எந்த ஆயத்தப் பயிற்சியும் தராமல், ‘நீட்’ பொதுத்தேர்வுக் கடலில் தள்ளிவிட்ட பெரும்பழிக்கு ஆளாகப் போகிறோம். தமிழகத்தின் எண்பத்து ஐந்து விழுக்காடு மருத்துவ இடங்களுக்கு, கற்றலும், புரிதலும் கொண்ட சிபிஎஸ்சிபாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கே வாய்ப்பு அதிகம். சிபிஎஸ்சி பள்ளிகள் கிராமப் புறங்களில் முற்றிலுமாக இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வெற்றிடத்தை நிறைவேற்றுவதற்கென்றே தனியார் சிறப்புப் பயிற்சி கார்ப்பொரேட் நிறுவனங்கள் (பணமுதலைகள்)  லட்சக்கணக்கில் பயிற்சிக் கட்டணமாக வசூல் செய்து கல்விச் சேவை செய்ய (முதலை வாய்பிளந்து) காத்திருக்கிறார்கள். இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது யாதெனின் சமூக நீதி என்ற ஒன்று அடியோடு அனைத்துக் கிராமப்புற மாணவர்களுக்கும் ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டுவிட்டது என்பதே! சிபிஎஸ்சி பள்ளிக்கட்டணம், ‘நீட்’- நுழைவுத்தேர்வுப் பயிற்சிக் கட்டணம் என பல இலட்சங்கள் முதலீடு செய்தால் மட்டுமே மருத்துவக் கல்வி சாத்தியம். இது எப்படிக் கடைக்கோடி கிராமத்தில் வீட்டு வேலையையும் செய்துவிட்டுப் பள்ளிக்குச் செல்லும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் சாத்தியம்?

உச்சநீதிமன்றம் அனைவருக்கும் ஒரே தரமான கல்வி என்பதை உறுதி செய்து விட்டல்லவா ‘நீட்’ பொதுத் தேர்வுக்கானத் தீர்ப்பைக் கொடுத்திருக்க வேண்டும்? அனைவருக்குமான ஒரே நுழைவுத் தேர்வு என்பதற்கான களத்தைத் தயார் செய்வதற்கே குறைந்த அளவு ஏழு ஆண்டுகள் ஆகுமே? இது குறித்துக் கல்வியாளர்களையும், தொடர்புடைய மாநிலங்களையும் கலந்து உரையாடாமல் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் எடுத்துள்ள முடிவு எளிய மக்களுக்கு எதிரானதாக அமைந்து விட்டதே? கடந்த பதினைந்து ஆண்டுகளாக, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மத்தியத் தொகுப்புக்குத் தரப்படும் 15 விழுக்காடு மருத்துவக் கல்லூரி MBBS இடங்கள் பெரும்பாலும் வெளிமாநில மாணவர்களுக்குச் சென்றுவிடுகின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்நிலைகளைக் குறித்து எந்த அரசியல் கட்சியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கவலையும்படாது.

மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், இனி எந்தச் செய்தித் தாளிலிலும், மூட்டைதூக்கும் கூலித் தொழிலாளியின் மகள் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்விக்கட்டணம் செலுத்த இயலாமல் தவிக்கிறாள்; உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்: 9443199999”  போன்ற செய்திகளோ, நாளிதழில் வந்த செய்தியின் விளைவாக, மூட்டைதூக்கும் கூலித் தொழிலாளி  மகளின் மருத்துவக்கல்லூரி கல்விக்கட்டணம் முழுவதையும் தமிழக முதல்வர் அவர்களே ஏற்றுக்கொண்டு விட்டார்கள், என்பது போன்ற செய்திகளோ வரப்போவதே இல்லை; இன்றிலிருந்து 25 ஆண்டுகள் சென்றபின் வரும் செய்தித்தாள்களில்இந்த நாளில் அன்று என்ற தலைப்பில் இத்தகைய பழைய செய்திகள் மீண்டும் வெளிவர வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. வருங்காலத் தமிழக மக்கள் ‘இன்றைய தமிழக அரசின்’ பொற்கால ஆட்சியை நிச்சயம் மெச்சுவார்கள். இது கிடக்கட்டும்.

இனி உடனடியாக நாம் செய்ய வேண்டியவைகள்:

1.        தமிழகப் பாடத்திட்டத்தை சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாகத் தரம் உயர்த்துதல்.

2.        கற்பித்தலை ‘அறிவு பெறும் கற்றல்’ என்ற முறையில் மாற்றியமைத்தல்; கற்றலும், கற்றலின் பயன்பாடும் கூர்மையாகும் விதத்தில் பயிற்றுவித்தல்.

3.        தேர்வு முறையைக் ‘கற்றல்’-ஐ அடிப்படையாகக் கொண்டு, சிறந்த கல்வியாளர்கள் மூலம் மாற்றியமைத்தல்.

4.        வினாத்தாள்கள் ‘நீட்’ போன்ற தேர்வுகளுக்கு கேட்கப்படுவதைப்போல் தரமாக இருக்குமாறு அமைத்தல். இதன்வழி, தனியாக ‘நீட்’ நுழைவுத்தேர்வுக்குப் பயிற்சி மையங்களுக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தை தேவையற்றதாகச் செய்தல்.

5.        ஆசிரியர்களின் தரத்தைத் தொடர்பயிற்சிகளின் மூலம் மேம்படுத்துதல்.

6.        கிராமப் பள்ளி மாணவர்களுக்கு தாராளமான நிதியுதவியும், பயிற்சியும் தர பல்லாயிரம் தன்னார்வலர்களை களமிறக்கல்.

7.        தொண்டு நிறுவனங்களும், அரசும், அத்தகைய பணிகள் செய்பவர்களுக்குச் சிறப்புச் செய்தல்.

8.        ஒவ்வொரு கல்லூரியும் ஒரு சில கிராமப் பள்ளிகளையாவது தத்தெடுத்து, நெறியாளர்களாகச் செயல்படல். கல்லூரி நாட்டுநலத் திட்டம் - NSS மூலம் இத்தகைய தொண்டுகளைச் செய்யலாம்.

 இந்நோக்கிற்கு, அனைவரும் பங்களிப்புச் செய்திடல் வேண்டும். அரசுடன் தன்னார்வலரும் கைகோர்த்துப் பணியாற்ற வேண்டும். இக்கல்விமுறை மாற்றங்களால், நம் மாணவர்கள் AIIMS, IAS, IPS, Group-I உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இப்பயிற்சிமுறைகளின் வழித் தகுதிபெறுவார்கள் என்பது உறுதி. இவைகளையெல்லாம் நாம் சமூகக் கடமையாகச் செய்தோமானால், சமூக நீதிக்கும், நம் வருங்காலச் செல்வங்களுக்கும் நன்மை செய்தவர்களாவோம்.

 “பண்டைய இந்தியாவின் இணைப்பு மொழி என்பதோடு இன்றைக்கும் நமக்கான பல பொக்கிஷங்களை உள்ளடக்கியிருக்கும் மொழி சம்ஸ்கிருதம். அது இந்தியோ, சமஸ்கிருதமோ பள்ளிக்கூடங்களில் கூடுதலாக விருப்பப் பாடமாக ஒரு மொழியைக் கொண்டுவருவதில் என்ன பிரச்சினை? கட்டாயமாக்கினால்தானே சிக்கல்?” என்ற கேள்விக்கு நெத்தியடியாக அறிஞர் எஸ்.எஸ்.இராஜகோபாலனின் கீழ்க்கண்ட பதில் அமைந்து விட்டது.

நான் எந்த மொழிக்கும் விரோதி இல்லை. ஆனா, பள்ளிக்கூடம் மட்டுமே மொழிகளைச் சொல்லிக்கொடுக்குற இடம் இல்லை. இந்தி கத்துக்கணும்னா இந்தி பிரச்சார சபா இருக்குதுல்ல? அப்படியான அமைப்புகளை உண்டாக்கிட்டு போங்க. நீங்க பள்ளிக்கூடத்துலேயே எல்லாத்தையும் கொண்டுவந்து புகுத்தும்போது குழந்தைங்க மிரண்டு போகுது.

நான் படிக்கிற காலத்துல ஆறாவது வகுப்புலதான் ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தினாங்க. அடுத்த ரெண்டு வருஷத்துக்குள்ள ஆங்கிலத்துல ஒரு கவிதை, கதையைப் படிக்கிற அளவுக்குத் தேறிட்டோம். ஏன்னா தாய்மொழியில இருந்த அடித்தளம். இன்னைக்கு இங்கிலீஷ் இங்கிலீஷ்னு சொல்லி என்னத்த செஞ்சிருக்கோம்? தமிழ்லேயும் சரி, ஆங்கிலத்துலேயும் சரி, பிழையில்லாம ஒரு கடிதம் எழுதக்கூடத் திராணியில்லாத கூட்டத்தை உருவாக்கிக்கிட்டிருக்கோம். பன்னிரெண்டு வருஷம் பள்ளிக்கூடம் சொல்லிக்கொடுக்குற ஆங்கிலத்தைவிட ஒருத்தன் எளிதா ஒரு சில வருஷங்கள்ல இந்தியைச் சீக்கிரம் படிச்சுடுறான், பள்ளிக்கூடத்துக்கு வெளியில அவனா விரும்பிப் போகும்போது. முழு வருஷ பரீட்சை முடிஞ்சதும் புத்தகத்தைச் சுக்குநூறா கிழிச்சு வீசிட்டுப்போற பசங்களை நான் பார்த்திருக்கேன். ஏன் புத்தகத்துக்கு மேல படிச்ச குழந்தைக்கு இவ்வளவு வெறுப்பு வருது? அவனால நம்மள கிழிக்க முடியலை; புத்தகத்தைக் கிழிக்கிறான். பள்ளிக்கூட அளவுல ஒரு அளவுல ஒரு மொழியைக் கொண்டுவர்றதுங்கறதே திணிப்புதான்.

இந்தப் பதிலின் எளிமையும், அப்பட்டமான உண்மையும் சுளீரென சாட்டையடியாக நமக்கெல்லாம், உரைக்கின்றது. ஆம், 1970 களில் இந்திப் பாடம் பள்ளிகளில் கற்றுத் தரப்படவில்லை; இருமொழிக் கொள்கை நடைமுறைக்கு வந்துவிட்டிருந்தது. மூன்றே மாதத்தில் ‘இந்திப் பிரச்சார சபா’வின் ‘மத்தியமா’ தேர்வை தனியார் ஆசிரியர் மூலம் கற்றுத் தேறினேன். என் விருப்பத்தால் படிக்கப்பட்டதால் அது சாத்தியமாயிற்று. இதையே பள்ளியில் கட்டயமாக்கியிருந்தால், ஓராண்டில் அதில் பாதியைக்கூட நான் கற்றிருக்க மாட்டேன் என்பது உறுதி.

அது மட்டுமல்ல, இந்தி பள்ளியில் திணிக்கப்பட்டிருந்தால், இந்தியின் இலக்கணத்தையும், பள்ளியில் கற்பித்த தமிழ் இலக்கணத்தையும் ஒப்புநோக்கும் நுட்பமெல்லாம் பன்னிரண்டு வயதில் வந்திருக்காது. “உயிரற்ற சடப்பொருட்களுக்கெல்லாம் ஆண்பால், பெண்பால் கூறும் விந்தையான மொழியடா இந்தி (உதாரணமாக, தமிழில் நாம் ‘அஃறிணை’ என அழைக்கும் ‘பேனா’ இந்தியில் ‘பெண்பால்’ என மரியாதையாக அழைக்கப்படுகின்றது. இந்திக்கு இந்த நோய் சமற்கிருத மொழியிலிருந்து வந்தது. இந்த மொழிதான் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாம்! தேவ மொழியாம்!) என என் பள்ளித் தோழர்களுடன் சிலாகித்துப் பேசியதன் விளைவாக, என்னுடைய தோழர்களில் பத்துப்பேர் இந்தி மொழியின் விநோதங்களைக் கற்க இந்தி வகுப்பில் சேர்ந்து விட்டனர். முதலில் மகிழ்ந்த இந்தி ஆசிரியையின் முகம், சேர்ந்ததற்கான காரணம் அறிந்ததும் ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ போல வாடிவிட்டது.

சமற்கிருதத்திலும் இத்தகைய விந்தைகள், விநோதங்கள் இன்னும் நிறைய உண்டு. அதை நாம் பெருமளவு கற்றால்தான் ‘சமற்கிருத மந்திரங்களின் ‘உண்மைப்பொருள் விளக்கம்” கிடைத்து, அவைகளில் பெரும்பான்மையானவை நாம் நினைப்பதுபோல் அல்லாமல் வெற்று ஆரவாரங்கள் என்பதை அறியவும், “சமற்கிருதமொழி உயர்ந்தது” என்ற மயக்கத்திலிருந்து விடுபடவும் முடியும்.

சமற்கிருதமொழியே இந்திய மற்றும் உலக மொழிகளின் தாயென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சியில்லாத பலர்கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறுபட்டனவாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும், ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பில் சிறந்த தமிழும், திரிபில் முதிர்ந்த சமற்கிருதமொழியும் மிகமிக வேறுபட்டனவாகும்.

சமற்கிருத மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகள்:

1. எழுத்துகளின் தொகை (உண்மையானபடி) வடமொழியில் 42; தென்மொழியில் 30.

2. சமற்கிருதமொழி ஒலிகள் வலியன; தென்மொழி ஒலிகள் மெலியன.

3. இடுகுறிப்பெயர் தமிழுக்கில்லை. சமற்கிருத மொழி இருபது விழுக்காடு இடுகுறிப்பெயர் காணப்படுகின்றது.

4. உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு சமற்கிருத மொழியில் இல்லை.

4. கூட்டெழுத்துகள் தென்மொழியில் இல்லை,  வினைத்தொகை சமற்கிருத மொழியில் இல்லை.

5. தமிழில் மிக முக்கியமாகக் கருதப்படும் பொருளிலக்கணம் சமற்கிருதமொழியில் இல்லை.

7. வெண்பா, ஆசிரியப்பா முதலிய பாக்களும் இவற்றின் வேறுபாடுகளும் இனங்களும் சமற்கிருத மொழியில் இல்லை.

8. இயல் இசை நாடகமெனத் தமிழை மூன்றாகப் பகுப்பது போல சமற்கிருதமொழியைப் பகுப்பதில்லை.

9. பால்கள் சமற்கிருத மொழியில் ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்று; அவை ஈறு பற்றியன;

  தமிழில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனப் பால் ஐந்து; அவை பொருளும் எண்ணும் பற்றியன.

10. தமிழில் மொழி முதல் இடை கடை வராத எழுத்துகளெல்லாம், சமற்கிருதமொழியில் மொழி முதலிடை கடை வரும்.

11. சமற்கிருதமொழியில் வரும் முன்னொட்டுச் (Prefix) சொற்கள் தமிழில் பின்னொட்டுச் (Suffix) சொற்களாயிருக்கும்.

12. குறிப்புவினை சமற்கிருதமொழியில் இல்லை.

13. சமற்கிருதமொழியில் உயிர்கள் (தீர்க்கம், குணம், விருத்தியென மூவகையில்) நெடிலாக மாறிப் புணரும்; தென்மொழியில் உடன்படுமெய் பெற்றுப் புணரும்.

14. சமற்கிருதமொழியிற் பெயரெச்சமும் பெயர் போல வேற்றுமை யேற்கும்.

நிறைய மொழிகளைக் கற்றால் மட்டுமே “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!” என்ற பாரதியின் முத்தான வரிகளை உணர முடியும்! “தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!” என்ற நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் வைர வரிகளைக் கேட்டு நம் நெஞ்சங்கள் விம்மும். ஆனால் இதெல்லாம் மூன்றாம் மொழியாக சமற்கிருதத்தைத் திணித்தால் நிச்சயம் வரப்போவதில்லை. எங்கள் பல்கலைக்கழகத்தில், மும்மொழி கொள்கை நடப்பில் உள்ள கேரளா மாநில மாணவர்கள் பள்ளியில் படித்த இந்தி மொழி அனேகமாக மறந்து விட்டதாகத்தான் சொல்கிறார்கள். இது மொழித் திணிப்பினால் வரும் பின்விளைவு.

வரலாறு மூலமாகவும் அறிஞர் எஸ்.எஸ்.இராஜகோபாலனின் கருத்துக்குக்கு வலுச்சேர்க்கும் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெரியபுராணம்-சிறுத்தொண்டநாயனார் புராணத்தில், பிள்ளையைக் கறிசமைத்து இலையில் பரிமாறிய பின், “பிள்ளையை அழைத்து வந்தால் மட்டுமே உண்ண இயலும்”, என்ற சிவனடியார், “சிறுத்தொண்டரே! நீர் அழையும்! சீராளன் வருவான்” எனக்கூற, அதன்படி தன் மகன் சீராளனைச் சிறுத்தொண்ட நாயனார், “செய்ய மணியே சீராளா வாராய்! சிவனார் அடியார் யாம் உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார்” என்று ஓலம் இட, “பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடிவருவான் போல் வந்த தரமில் வனப்பின் தனிப் புதல்வன்”  என்று பதிவு செய்துள்ளார் சோழ மன்னனின் முதலமைச்சராய்ப் பணியாற்றிய சேக்கிழார் பெருமான். உயிருடன் மீண்ட சீராளன் “பள்ளிக்கூடத்திலிருந்து ஓடி வரும் மாணவன் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வருவானோ, அவ்வளவு மகிழ்ச்சியுடன் வந்தான்” என்ற இப்பதிவு, எக்காலத்திலும், பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தரும் இடமாக இருந்ததில்லை என்பதற்கான வலுவான சான்று. எனவே,

1.        முழு வருஷ பரீட்சை முடிஞ்சதும் புத்தகத்தைச் சுக்குநூறா கிழிச்சு வீசிட்டுப்போற பசங்களை நான் பார்த்திருக்கேன். ஏன் புத்தகத்துக்கு மேல படிச்ச குழந்தைக்கு இவ்வளவு வெறுப்பு வருது? அவனால நம்மள கிழிக்க முடியலை; புத்தகத்தைக் கிழிக்கிறான்.

2.        பள்ளிக்கூட அளவுல ஒரு மொழியைக் கொண்டுவர்றதுங்கறதே திணிப்புதான்.

என்ற அறிஞர் எஸ்.எஸ்.இராஜகோபாலனின் கருத்தின் கனம் வாசகருக்கு உரைக்கும் என்பது என் ஆழமான நம்பிக்கை.

மும்மொழித் திட்டத்தை மீண்டும் திணிப்பதற்கான முயற்சி இந்தப் புதிய கல்வித்திட்ட வரைவில் வைக்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டுவந்தது டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் என்னும் இந்திய அரசின் கேபினெட் செயலர் பதவி வகித்த ஒரு முன்னாள் ஐஏஎஸ் நிர்வாகி.

“உங்கள் குழுவின் அறிக்கையில் எதுவுமே இல்லை என்று முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளாரே?” என்ற கேள்விக்கு

ராகுல் காந்தியை பாதுகாப் பதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. எங்களது அறிக்கையைப் படிக்க அவருக்கு நேரம் கிடையாது. கல்வியின் தரம், அனைவருக்கும் சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எங்களது அறிக்கையை தயார் செய்துள்ளோம்.என்று ஒரு அரசியல்வாதியைப் போல விடையிறுத்துள்ளார் இந்த அறிவாளி.

“உங்கள் கமிட்டியில் கல்வி யாளர்கள் இடம்பெறவில்லை என்று விமர்சிக்கப்படுகிறதே?” என்ற கேள்விக்கு

நான் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். ஏழை மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தை உருவாக்கியுள்ளேன். தலைமைச் செயலாளராக இருந்தபோது வாஷிங்டனில் நடந்த உலக வங்கியின் கல்வித் திட்ட முகாமில் பங்கேற்றுள்ளேன். இம்பீரியல் கல்லூரி, ஹார்வர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். எனது கமிட்டியில் இடம்பெற்றுள்ள இதர உறுப்பினர்களும் போதுமான கல்வி அனுபவங்களைப் பெற்றுள்ளனர். என்று இறுமாப்புடன் விடை கூறியுள்ளார் இவர்.

நம் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையே மிகக் குறைவு. வறுமை, கல்லாமை போன்ற சூழல்களில் வளரும் குழந்தைகளை, முதலில் பள்ளிகளுக்கு வரவைப்பது என்பதே பெரும்பாடு. இதில், அக்குழந்தைகளை ஐந்தாம் வகுப்பு அளவிலேயே ‘தோல்வி’யடையச் செய்யும் திட்ட முன்வரைவைச் செய்தவர் தன்னை ஒரு முன்னாள் துணைவேந்தரென்றும், அதனாலேயே தனக்குத் தகுதி வந்துவிட்டதென்றும் கூறியுள்ளது தம்பட்டமே. தற்காலத்தில் துணைவேந்தர்களின் தேர்வு முறைகளை நாடே அறியும். ஒரு கல்வியாளன் என்பதை அவர் செயலில் காட்டியிருக்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, முதியோர் கல்வி என்று இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் நம்மை முழக்கமிடச் செய்யப்போகும், நம் நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் ஒரு பிற்போக்கான திட்ட முன்வரைவைத் தந்த   இந்த மனிதர் கல்வியாளரா? வறுமைக்கோட்டுக்குக்கும் கீழுள்ள திரளான குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்ல விருப்பம் வரவழைக்கவும், எழுத்தறிவைப் பரவலாக்கவும், மதிய உணவு, சத்துணவு, என்று திட்டங்களைத் தீட்டி, எட்டாம் வகுப்பு வரை எந்தக்குழந்தையையும் ‘தோல்வி’யடையச் செய்ய வேண்டாம் என்ற பெருந்தலைவர்கள் காமராசர், எம்ஜிஆர் ஆகியோர் கல்வியாளர்களா?

“தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்” – திருக்குறள்.

- பேராசிரியர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், தகவல் தொழில்நுட்பத்துறை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

Pin It