கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பெரியார் பேசுகிறார்

தோழர்களே! நான் ஏதோ எனக்குத் தெரிந்தவரை சீர்திருத்தம் பேசி வருகிறேன். நான் ஒருவனே சொல்லிக் கொண்டிருந்தால் முடியுமா? மேல்நாட்டில் நான் பிறந்திருந்தால் பெர்னாட்ஷாவைவிட மேலாகக் கொண்டாடுவார்கள், இங்கு பார்ப்பன ஆதிக்கம் இருக்கின்ற காரணத்தால், என்னை அப்படியே இருட்டடிப்பு செய்து வருகிறார்கள். இதை ஏன் கூறுகிறேன் என்றால், இந்த நாட்டில் அவ்வளவு அநீதிகள் நடந்து வருகின்றன.

ஒரு நாள் பிர்லா மகனின் கனவில் காந்தி மகான் தோன்றினாராம். உடனே தூக்கம் கலைந்த மகன் தன் தந்தையிடம் சொல்ல அதற்கு அவர், வேறு எதற்கு வந்திருப்பார், எல்லாம் பணத்திற்குத்தான் என்று கூறி, தொகை போடாத ஒரு செக்கை கையெழுத்து மட்டும் போட்டு அனுப்பி விட்டார். இம்மாதிரி பெரிய வியாபாரிகளிடத்தில் கொள்ளையடித்து கட்சி வளர்த்து அவர்களின் அரசாங்கமாக உருவாயிற்று. காந்தி பிர்லா வீட்டில்தான் இறந்தார்; பட்டேலும் அப்படித்தான்.

இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு 5,6 துணிமணிகள் உடுத்துகிறார்கள். 150 வருடங்களுக்கு முன் மார்பின் மேல் துணியைப் போடாமலே இருந்திருக்கிறார்கள். பெரிய பணக்கார வீடுகளில் மார்புக்குக் கச்சை மாத்திரம்தான் கட்டியிருப்பார்கள். திருமலை நாய்க்கன் வீட்டுப் பெண்களைப் படத்தில் பார்த்தால் தெரியும். தொப்புள் நன்றாகத் தெரியும். மார்பகம் ஒன்றைத்தான் கச்சை கட்டி நன்றாக இழுத்து கட்டியிருப்பார்கள். பிறகு கலெக்டர் உத்தரவு போட்ட பிறகுதான் நாமெல்லாரும் துணி போட ஆரம்பித்தோம். நம் கொடுமைகளை அறிந்து அதற்குப் பரிகாரமாக ஏதாவது புரட்சி செய்தால்தான் முடியுமே தவிர, வாயிலேயே பேசிக் கொண்டிருந்தால் ஒன்றும் காரியத்தில் நடக்காது.

தமிழனைச் சூத்திரன் என்று ஒரு கூட்டம் கூறுகிறதே! அதை எதிர்க்க நமக்குத் துணிவு இல்லை என்றால் என்ன அர்த்தம்? எதற்காக நமக்கு 3000 வருடங்களாக ஆயிரக்கணக்கான கடவுள்களும், கோடிக்கணக்கான கோயில்களும் இருக்க வேண்டும்? குழவிக் கல்லைக் கும்பிட வேண்டும்? மாட்டு மூத்திரத்தை எதற்காகக் குடிக்க வேண்டும்? 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு எப்படி அந்தப் பட்டம் கிடைத்தது? புத்தர்களை, ஜைனர்களைத் திட்டினார்கள், தீ வைத்தார்கள், பவுத்தப் பெண்களைக் கற்பழித்தார்கள். பார்ப்பான் சொற்படி வேத, புராண, மனுதர்மங்களை மக்களிடையில் பிரச்சாரம் செய்தார்கள். அதனால் பட்டம் கிடைத்தது.

நம் கருத்துக்குத் தகுந்தபடி 2000 வருடங்களுக்கு முன்பு புத்தர் கொள்கைகள் தோன்றின. பார்ப்பனர்கள், பவுத்தர்களைக் கொன்று, பள்ளி மடங்களுக்குத் தீயிட்டு, பண்ணக்கூடõத வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார்கள், அன்பே சிவம் என்று சொல்கின்ற சைவர்கள், திருவத்திபுரத்தில் போய் பார்க்க வேண்டும் - இன்றைக்கும் சமணர்களைக் கழுவிலேற்றிய பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை! திருவத்திபுரத்தில் சைவர்கள், வேதம் பெரிது என்றார்கள். சமணர்கள், அறிவுதான் பெரிது என்று சொன்னார்கள். இரு பெயரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி நதியில் விட்டார்கள். அதில் வேதம் என்று எழுதியிருந்த சீட்டு நீரை நோக்கி எதிர்த்துப் போனதாம். ஆகவே, அறிவுதான் பெரியது என்று சொன்ன 100க்கும் மேற்பட்ட சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றனர். மேற்கண்ட நிகழ்ச்சிகளை, சதுரம் கருங்கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

இப்படி ஆரிய மூடப்பழக்கங்களை எதிர்த்து யார் கூறியிருக்கிறார்கள்? எல்லோரும் டாலர் முதல்கொண்டு போட்டு வணங்கி வரும் சாயிபாபா, ராமகிருஷ்ணர், விவேகானந்தர், யாராவது ஒருவர் கூறினார்களா? புத்தர் ஒருவர்தான் ஆரியத்தின் இந்து மதத்தின் மண்டையைப் பார்த்து ஓங்கியடித்தார். “மனிதன் தன் வாழ்க்கையில் துன்ப இன்பங்களை அனுபவிக்கிறான். தெரியாத ஆத்மாக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதைவிட "தெரிகிற ஆத்மாக்களாகிய' மனிதர்களின் துன்பத்திற்கு வழி தேட வேண்டும்'' என்றார் புத்தர்.

தேவாரம் திருவாசகம் படித்துப் பாருங்களேன். திருஞான சம்பந்தன் என்னும் பார்ப்பனன் 3 ஆம் வயதிலேயே பாட்டுப் பாடினானாம்! இவன், பவுத்தர், சமணர்களை சண்டாளர்கள், அயோக்கியர்கள் என்று கூறி, அவர்கள் பெண்களைக் கற்பழிக்க உதவ வேண்டுமென்று கடவுளை வேண்டினானாம். இந்தப் பாட்டுக்களை மடாதிபதிகள் தங்கள் பள்ளிகளில் வைத்து, பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்!

நன்றாக யோசித்துப் பாருங்கள்! புத்தர் தன் கொள்கைகளை வகுத்து சுமார் 2500 ஆண்டுகளாகின்றன. இதுவரை யாரும் அவர் பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியதில்லை. ஆனால் இப்பொழுது நாடெங்கும் கொண்டாடுகிறார்கள். காரணம் என்ன? புத்தர் இந்த பார்ப்பனர்களுக்காக தம் கொள்கையை மாற்றிவிட்டாரா, பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்களா என்றால் இல்லை. மக்கள் புத்தரின் கொள்கைகளை ஒத்துக் கொண்டார்கள். மக்களுக்குப் புத்தி வந்து விட்டது. மக்கள் முன்னேற்றமடைந்து வருகிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.