வேத மரபுகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் சூழ்ச்சிகரமாக வீழ்த்திய வரலாறு - கடந்த இரண்டு இதழ்களில் வெளி வந்தது. பவுத்தத்தை வேத மரபு வீழ்த்தியது எப்படி?
* பவுத்தத்தை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வேதத்தை அரியணையில் ஏற்றத் துடித்தார்கள் பார்ப்பனர்கள். இதற்கு - முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் படைப்பு இலக்கி யங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும் வேலையைத் துவக்கினர். குறிப்பாக நாத்திகத்தை வலியுறுத்திய லோகாயதவாதிகளின் இலக்கி யங்களை முழுமையாக மீட்கவே முடியாதவாறு அழித்து ஒழித்து விட்டனர். இந்த லோகாயதர் களின் வேத-கடவுள் மறுப்பு சிந்தனைகளை எதிர்த்தும், இகழ்ந்தும் பார்ப்பனர்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் துண்டுதுண்டாக லோகாயத வாதம் பற்றிய கருத்துகள் காணக் கிடக்கின்றன. இதுபற்றி பிரபல ஆய்வாளர் பிரசாத் சட்போபாத்யாயா இவ்வாறு கூறுகிறார்:
“பிற சிந்தனை மரபுகளின் படைப்பிலக்கியங் களாவது ஓரளவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் லோகாயதர்களின் உன்னதப் படைப் பிலக்கியங்களின் மூலப்படிகள் மீட்கவே முடியாதவாறு அழிக்கப்பட்டு விட்டன. துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சில வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை கூட லோகாயத எதிர்ப்பாளர்களின் நூல்களில் தான் உயிர் வாழ்கின்றன.”
* படைப்பிலக்கியங்களை மட்டுமல்ல; புத்தக் கலைகளையும் - பண்பாட்டையும் அழித்து ஒழித்தனர்; புத்த மடலாயங்களை எல்லாம் அழித்தார்கள்.
* நயவஞ்சகமாக படுகொலைகளைப் புரிந்து ஆட்சிக்கு வந்த புஷ்யமித்திரன் என்னும் பார்ப்பன அரசன், அசோக மன்னர் நிறுவிய 84,000 கல்வெட்டுத் தூண்களை இடித்தான். இந்தக் கல்வெட்டுத் தூண்களில் அசோகர் பிறப்பித்த சமூக சீர்திருத்த அரசு ஆணைகளும், புத்தரின் சிந்தனைகளும், மக்களுக்கு அறிவிக்கப்பட் டிருந்தன.
* பவுத்த பிக்குகளும், பிக்குனிகளும், பவுத்தத்தைத் தழுவிய பாமர மக்களும், ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். பவுத்தத்தை வேரும் வேரடி மண்ணோடும் அழிக்கும் வரை, இந்தப் படுகொலைகள் தொடர்ந்தன.
* காஷ்மீரத்தைச் சார்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் கல்கணன் கூறுகிறார். “பிறர் பற்றி பழி கூறுவோர் சிலரின் தூண்டுதலால் ஜாலுக்கண் என்ற காஷ்மீர மன்னன், பவுத்த மடாலயங்களிலிருந்து எழுப்பப்படும் சங்கொலி, தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் காரணம் கூறி அவற்றை இடித்துத் தள்ளினான்.”
* ஆய்வாளர் கல்கணன் மற்றொரு அதிர்ச்சியான தகவலையும் தருகிறார். அபிமன்யு என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன், பவுத்தர்களை இனப் படுகொலை செய்தான் அது இனப்படுகொலை அல்ல என்றும், கடும் பனிப் பொழிவினால், இறக்கிறார்கள் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்தான்; இந்தப் படுகொலைகள் நடக்கும் குளிர்காலமான 6 மாதங்களில் - தனது நாட்டைவிட்டு அவன் வெளியேறி விடுவான். தன்வ பிஷாரா என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கி விடுவான்; பவுத்தர்கள் படுகொலைகள் நாட்டில் திட்டமிட்டபடி நடக்கும். கடும் பனியினால் பவுத்தர்கள் மட்டும் தான் இறப்பார்களா? பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை? “பார்ப்பனர்கள் இறக்காததற்குக் காரணம் அவர்களிடம் உள்ள ஆன்ம சக்தி; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, அவர்கள் கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய்ததால், அவர்கள் சாவதில்லை. பவுத்தர்கள் அவ்வாறு செய்யாததால் மரணமடைந்தனர்” என்று விளக்கம் கூறினான், அந்தப் பார்ப்பன மன்னன்.
* பவுத்த மதத்தினர், ஒரு பெண்ணைக் கடத்திச் சென்றார்கள் என்று கூறி, ஆத்திரமடைந்து, ஆயிரக்கணக்கான பவுத்த மடாலயங்களைத் தீக்கிரையாக்கினான், காஷ்மீர் மன்னராகிய நரன் என்ற கின்னரன். பவுத்த மதத்தினர் வாழ்ந்த அந்தக் கிராமங்களில் மத்திய மாதா எனும் பகுதியிலிருந்து பார்ப்பனர்களைக் கொண்டு வந்து குடியேற்றினான். இவை எல்லாம் ஆய்வாளர் கல்கணன் தரும் தகவல்கள்.
* காஷ்மீர் பகுதியில் மட்டுமல்ல; இந்தியாவின் பிற பகுகளிலும், பவுத்தர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். சிராவஸ்தியை ஆண்ட விக்கிரமாதித்தன் பவுத்தர்களைக் கொடுமைப் படுத்தினான். வங்காள மன்னன் சசாங்கன் பவுத்தர்களைத் தனது பிறவி எதிரிகளாகக் கருதினான். புத்தர் அறிவொளி பெற்றதாகக் கூறப்படும், போதி மரத்தை வெட்டி வேரோடு சாய்ப்பதற்குப் பலமுறை முயன்றான். கேரளாவை ஆண்ட குமாரிலபட்டன் கொடுமை தாங்காமல், பவுத்த மதத்தினர் அனைவரும் கேரளாவை விட்டு வெளியேறினர். சுதன்வனன் எனும் மன்னன், தனது குடிமக்களுக்கு இவ்வாறு ஆணையிட்டான், “தனுஷ்கோடிப் பாலத்திலிருந்து (இலங்கைக்கு ராமர் கட்டியதாகக் கூறப்படுவது) இமாலயம் வரை, பவுத்த மதத்தினரைக் குழந்தைகள், முதியவர்கள் என்று பாராது அனைவரையும் கொன்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யா தவர்கள் கொல்லப்படுவர்கள்.” இத்தகவலை ‘சங்கர விஜயம்’ என்ற நூல் தெரிவிக்கிறது, புத்த மார்க்கத்தை விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் பி. லட்சுமிநரசு, தனது ஆய்வுகளில், இந்தப் படு கொலைகள் பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார்.
* ஆய்வாளர் டபிள்யூ.டி. வில்கின்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “பவுத்தருடைய சீடர்களும் பவுத்த மதத்தைச் சார்ந்த பாமர மக்களும் ஈவு இரக்க மின்றிக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். வெட்டிக் கொல்வது, நாடு கடத்துவது அல்லது வாள்முனையில் இந்து மதத்துக்கு மாற்றுவது என்று ஏராளமான கொடுமைகள் செய்தார்கள். பிற மதத்தினர் மீது அடக்கமுறையை ஏவி விடுவதும், அட்டூழியங்கள் புரிவதும் உலகம் முழுதும் நடந்துள்ளது. ஆனால் பவுத்த மதத்தை இந்தியாவைவிட்டுத் துரத்துவதற்காக, செய்யப்பட்ட அடக்குமுறைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் ஈடான வேறு ஒன்று உலகின் எந்த மூலையிலும் நடந்தது இல்லை.
* ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ நூலின் இரண்டாவது பகுதி - பகவத் கீதையின் உள்ளடகத்தை விரிவாக அலசுகிறது. கீதையின் முரண்பாடுகளையும், வர்ணாஸ்ரமக் கோட்பாடு களையும் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டு கிறது. கீதை நாத்தி கர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று கூறுகிறது. ‘நாத்திகர்களுக்கு எதிரான போர்’ என்று - நூலாசிரியர் ஒரு தனி அத்தியாயத்தையே எழுதியிருக்கிறார்.
* “கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டு மிராண்டி” என்று பெரியார் கூறிய கருத்துகள் - தங்களைப் புண்படுத்துவதாகப் பார்ப்பனர்கள் கூக்குரலிடுவது வாடிக்கையாக இருக்கிறது. ஆனால், கீதையில் “வேதாந்தங்களை”த் தவிர (பார்ப்பனிய கருத்துகள்) மற்றக் கருத்துகளைப் பின்பற்று கிறவர்களுக்கு, தந்துள்ள பட்டங்கள் - படுமோசமானவை. துஷ்கருமன் (தீம்பு செய்பவன்), நர ஆத்மா (கீழ்மகன்), ஹத ஞானம் (செத்த அறிவு), அல்பமேதாவி (அறிவு கெட்டவன்), அபுத்துவன் (அறிவில் லாதவன்), நஷ்டன் (அழிந்து போனவன்), அசேதனன் (மூளையற்றவன்), சத்ய ஆத்மா (சந்தேகப் பிராணி), கடவுள் மறுப்பாளர்களுக்கு - கிருஷ்ணன் வழங்கியுள்ள பட்டங்கள் என்ன தெரியுமா? நஷ்டாத்துமா (அழிந்துபட்ட ஆத்மா), இடம்பமான் (இடம்பம் பேசுபவன்), மதன வித்தன் (அகந்தையானவன்), அசுரன், ராட்சசன், கடவுள் மறுப்பாளர்களை விளிக்கும் போதெல்லாம், இதே சொற்களையே கிருஷ்ணன் பயன்படுத்துகிறான்.
* அரசதிகாரத்தில் இருந்த சத்திரியர்கள் - ஒரு இயக்கமாக செயல்பட்டதால் தான் பார்ப்பனர்கள், ஆதிக்க நிலை ஆட்டம் கண்டது என்பதை ‘கிருஷ்ணன்’ நன்றாகவே உணர்ந்திருந்தான். எனவே பார்ப்பனியம் பாதுகாப்புடன் நீடிக்க வேண்டுமானால் சத்திரியர்கள் ஒற்றுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், அவர்களின் போரிடும் ஆற்றலை மழுங்கடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டான். இதற்கு நல்வாய்ப்பாக கிருஷ்ணன் மகாபாரதப் போரைப் பயன் படுத்திக் கொண்டான் என்கிறார் நூலாசிரியர்.
* போரில் வெற்றி பெற்று, பாண்டவர்கள் தலைநகருக்குத் திரும்பும்போது அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றது பார்ப்பனர்கள் தான். பாண்டவர்களின் குலத்தினரோ, போரில் உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்த வர்களோ அல்ல; பார்ப்பனக் கூட்டத்தில் நின்றிருந்த ஒரு சார்வாகன் (கடவுள் மறுப்பாளன்) யுதிஷ்டிரனைப் பார்த்து, “உற்றார் உறவினரைக் கொன்று அழித்து என்ன பயன் கண்டாய்?” என்று கோபத்துடன் கேட் கிறான் யுதிஷ்டிரன், தலைகுனிந்து நின்றான்; உடனே உயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிந்தான். உடனே கூடியிருந்த பார்ப்பனர்கள், “அவன் ஒரு அசுரன், கவலைப்படாதீர்கள்” என்று யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறினர்; உடனே சார்வாகனைப் பார்ப்ப னர்கள் பிடித்து, நெருப்பிலிட்டுக் கொளுத்தி விட்டார்கள் என்று மகாபாரதம் கூறுகிறது.
* பாரதப் போரினால் கிருஷ்ணனின் வஞ்சகத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறின. பார்ப்பனர்கள் மீண்டும் ஆதிக்கம் பெற்றார்கள். மரணப் படுக்கையிலிருந்த பீஷ்மன், வெற்றிவேந்தனாகிய யுதிஷ்டிரனுக்கு, கூறும் அறிவுரையே இதற்கு சரியான சான்று:
“பார்ப்பனர்களுக்கு பிரம்மதானம் கொடுப்பதே வேந்தனுக்கு அழகு. பார்ப்பனர்களுக்கு அளிக்கும் தானம் அசுவமேத யாகத்தைவிட சிறந்தது. பார்ப்பனர்களுக்கு இவ்வாறு தானம் செய்வதன் மூலம் - சத்திரியன் சொர்க்கத்தை அடைகிறான். பார்ப்பனர்களுக்கும், கடவுள்களுக்கும் மட்டுமே நிலங்கள் சொந்தமாக்கப்பட வேண்டும். பார்ப்பனர்களிடமிருந்து நிலங்களைப் பறிப்பது மன்னிக்க முடியாத குற்றம். தவறிக்கூடப் பார்ப்பனரைத் தண்டிக்காதே. பார்ப்பனர்கள்தான் மனிதரில் உயர்ந்தவர்கள். நீரிலிருந்து நெருப்பு பிறக் கிறது. பார்ப்பனரிலிருந்து சத்திரியன் பிறக்கிறான். பாறையிலிருந்து இரும்பு உண்டாகிறது. இரும்பு பாறையை வெட்டும் போதும், நீர் நெருப்பை அணைக்கும் போதும் பார்ப்பனனுக்கு சத்திரியன் பகைவன் ஆகிறான். அதன் பின் அவர்கள் முகமிழந்து அழிந்து போகிறார்கள். பார்ப்பனர்களுக்குச் சமமாகத் தங்களைக் கூறிக் கொள்கிறவர்களைத் தண்டிக்க வேண்டியது அரசனது கடமை.” (மேற்கோள் ஆதாரம்: எம்.என்.ராய் எழுதிய மெட்டிரியலிசம்)
* “ஆத்மா அழிவற்றது; எனவே கொலை செய்வது பாவமல்ல” என்று படுகொலையை நியாயப்படுத்துகிறான் கிருஷ்ணன். (காந்தியைக் கொன்ற பார்ப்பான் கோட்சே, நீதிமன்றத்தில் தந்த வாக்கு மூலத்தில், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க, கீதையின் இந்தக் கருத்தைத்தான் எடுத்துக்காட்டினான்). கிருஷ்ணனின் இந்தக் கருத்துக்கு, திலகர், டாக்டர் ராதாகிருஷ்ணன், சித்பவானந்தர் போன்ற பார்ப்பன விளக்க உரையாளர்கள் முட்டுக் கொடுக்கும் விளக்கங்களை முன் வைத்து நியாயப்படுத்துகிறார்கள்.
* கீதைக்கு உரை எழுதியதில் - கேரளத்தில் பிறந்த நம்பூதிரிப் பார்ப்பனரான சங்கரரும் ஒருவர். அவர் நிறுவியவை தான் சங்கர மடங்கள். சங்கரர் 32வது வயதில் இறந்து விட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் பவுத்தம் முழுமையாக அழிந்துவிடவும் இல்லை; இந்தியாவை விட்டு வெளியேறவும் இல்லை. அந்த நிலையில், பவுத்தத்தை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும் என்பதே பார்ப்பனர் சங்கரன் நோக்கமாக இருந்தது.