நாகம்மாவின் கணவர் பெயர் கன்னைய்யா. கடந்த 2007 இல்  செப்டிக் டேங்க் ஒன்றை சுத்தம் செய்யும்போது அவரும் அவருடன் இருவரும் இறந்துபோனார்கள். அடிப்படையில்  கட்டடத் தொழிலாளியான கன்னைய்யா, ஒரு நாள் அவர் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது அவரிடமிருந்து மலநாற்றம் வீசியிருக்கிறது. உடனே அருவருப்பான நாகம்மா,  ""அசுத்தமான வேலை ஏதாவது செய்துவிட்டு வந்திருக்கிறாயா? என்று தனது கணவரிடம் கேட்டதற்கு  ""ஆமாம்'' என்றார் கன்னைய்யா. அப்போ நீ செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்துவிட்டு வந்திருக்கிறாயில்லையா? என்று கேட்டதற்கும் அவர் ஆமாம் என்று சொல்லியிருக்கிறார். நாகம்மா தொடர்ந்தார்.

அன்னைக்கி எனக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை.பீ சுத்தம் செய்யும் வேலையை அவர் செய்வது எனக்கு அறவே பிடிக்கவில்லை.ஆத்திரமும் அழுகையுமா வந்தது. வேண்டுமென்றே நான் சமையல்கட்டு பக்கமே போகவில்லை. எல்லோரும் அன்னைக்கு வெறும் வயிற்றோடுதான் தூங்கினோம். ஆனாலும் என் புருஷன் கமுக்கமாக அவ்வப்போது அந்த பீ வேலைக்கு போய் வந்துகொண்டுதான் இருந்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது.எப்போதும் அவர் பின்னாலேயே நான் போய் வேவு பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?

அதுமாதிரிதான் ஒருநாள் அவர், வேறெங்கோ கட்டட வேலை இருப்பதாகவும் அந்த வேலைக்கு தனது மாமா கூப்பிட்டனுப்பியதாகவும் என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். சாயங்காலம் தாண்டியும் ஆள் வீடு திரும்பவில்லை. எனக்கு கவலையாகிவிட்டது. அவருடன் தொடர்பு கொள்ள அப்போது எங்களிடம் செல்போனும் இருக்கவில்லை.

வீட்டிலிருந்து கிளம்பி ஒருத்தன் வேலைக்கென வெளியே போய்விட்டால் அவனாக வீடு திரும்பும் வரையில் அவன் நிலைமை என்ன?எங்கிருக்கிறான் என்பதெல்லாம் தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை. காலையில்தான் தெரிந்தது என் கணவர் இறந்துவிட்டார் என்று. அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தான் சொன்னார்கள்.

என் கணவர்  இந்த உலகத்திலேயே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சியில் மூர்ச்சையாகி விழுந்துவிட்டேன். செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது என் கணவருடன் சேர்ந்து இன்னும் இரண்டு பேரும் இறந்திருந்தனர். மூவரின் புகைப்படங்களும் மறுநாள் பத்திரிகையில் வந்திருந்தது.

என் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக விழுந்த அந்தப் பேரிடியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எல்லோமே முடிந்து போய் விட்டதாக உணர்ந்தேன்.சித்தமே கலங்கியது போலாகியது. எனக்கு சித்தப்பிரமை பிடித்துவிட்டதாக என்னை என் அம்மா வீட்டுக்கே அனுப்பி வைத்துவிட்டனர். எங்கள் சமுதாயத்தில் ஒருவர் இறந்து போய்விட்டால், அவர் செத்து பதினைந்து நாள் கழித்து காரியம் செய்வது வழக்கம்.

அச்சமயம் நான் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தேன். அச்சடங்கில் கலந்துகொண்ட என்னை என் புருசனின் சொந்தக்காரர்கள்  எல்லோரும் தூற்றினார்கள். அவரின் சாவுக்கு நானே காரணமெனவும், அவரை நான் நல்லபடியாகவும் அக்கறையாகவும் பார்த்துக் கொள்ளவில்லையென்றும் என் மேல் குற்றஞ்சாட்டினர். இதைக்கேட்டு நான் உடைந்துபோய்விட்டேன்.

அவர் இறந்தபோய்விட்ட தகவலைக் கேட்டதுமே மயங்கிவிழுந்துவிட்ட என்னால், என் கணவரின் சடலத்தைக்கூட கடைசிவரை பார்க்க முடியாமல் போனதால் இப்போதும் கூட அவர் உயிரோடில்லை என்பதை என்னால் முழுசாக ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. இன்றைக்கும் கூட தோணுகிறது, "காலையில் வருவார்; கதவைத் தட்டுவார்'  என்று. அதற்காக நான் பைத்தியம் என்று அர்த்தமில்லை.

அப்படியே நான் பைத்தியமாக ஆக விரும்பினாலும், அதுவும் கூட என்னால் முடியாது. என் இரு பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பிருக்கிறதே! நான் தனியார் நிறுவனம் ஒன்றில் துப்புரவுப் பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறேன்.பிறப்பும் இறப்பும் அந்த ஆண்டவனின் செயல். நம் கையில் எதுவும் இல்லை என்று எல்லோரும் எனக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.

ஆனால் இதையெல்லாம் சொல்லுபவர்கள் யாருமே எங்கள் சாதி சனங்கள்  மட்டும் ஏன் சாக்கடைக் குழிக்குள் விழுந்து சாகிறார்கள் என்பதைப் பற்றி மட்டும் சொல்வதில்லையே! மற்ற சாதியினர் யாருமே சாக்கடைகளிலேயோ அல்லது செப்டிக் டேங்குகளுக்குள்ளேயோ சாவதில்லையே, அது ஏன்? நீங்கள் (சமூகம்) எங்களுக்கு சொல்ல விரும்புவது உங்க சனங்களெல்லாம் இப்படித்தான் கழிவறைக்குள் கிடந்துதான் சாக வேண்டும் என்று அந்த ஆண்டவனே உங்கள் தலையில் எழுதி விட்டிருக்கிறான். அதற்கு நாங்களென்ன செய்ய? என்றுதானே?

ஆனால் என்னைப் பொருத்தவரை இத்தகைய கொலைகார விதிமுறைகளை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.எங்கள் வீட்டு ஆம்பிளைகளெல்லாம் உங்களின் கழிவுகளைச் சுத்தம் செய்து செய்து உயிரை விடுவார்கள். நாங்களெல்லாம் விதவைகளாகி  வாழ்நாளை கழிக்க வேண்டும். குழந்தை குட்டிகளை வளர்க்க பாடாய்ப் பட வேண்டும். அப்படித்தானே! ச்சே..என்ன இது. நாங்கள் என்ன குற்றம் செய்தோம்.

அந்த குறிப்பிட்ட சாதியிலே பிறந்து தொலைத்துவிட்டோமே, அதுதான் குற்றமா? என்று வெடித்த நாகம்மா, தொடர்ந்து இந்த சமூகத்தின் எல்லா சாத்திர சம்பிரதாயங்களும் அரசாங்கத்தின் எல்லா சட்டதிட்டங்களும் எங்களை மலக்குழிக்குள்ளும் சாக்கடைப் பள்ளங்களிலும் பிடித்து தள்ளி விடுபவையாகவே இருக்கின்றன. எல்லாவற்றையுமே எரித்து சாம்பலாக்கிவிட வேண்டுமென்ற ஆவேசம் வருகிறது என்கிற நாகம்மா கடும் வெறுப்பில் த்தூ.. என்று காறித்துப்பிவிட்டு எச்சில் உதடுகளையும் ஈரம் கசிந்த கண்களையும் சேலைத் தலைப்பில் துடைத்துக்கொண்டு விட்டு மீண்டும் பேச தொடங்குகிறார்.

""செப்டிக் டேங்குகளிலும் சாக்கடைக் குழிகளிலும் ஆளையே சாகடிக்கும் விஷவாயுக்கள் இருப்பது உங்களுக்குத் தெரியும்; அரசுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் ஒருத்தருமே அந்த நரகல் குழிகளைச் சுத்தம் செய்வதற்கு அவற்றிற்குள் மனிதர்களை இறக்குவதற்கு பதிலாக மாற்றுவழிகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவில்லை.

அது சரி, நாங்கள் செத்தால் உங்களுக்கென்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது? உங்களின் மலத்தை சுத்தப்படுத்த எங்கள் வீட்டு ஆம்பிளைகள் குடித்துவிட்டுத்தான் குழிக்குள் இறங்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் ஒட்டுமொத்த சமூகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டு தானிருக்கிறதே ஒழிய கவலைப்பட்டதாகவே தெரியவில்லையே, அது ஏன்? வேறொன்றுமில்லை, பீ அள்ற வேலைக்குத்தான் இந்த சாதியே படைக்கப்பட்டிருக்கிறது''  என்ற நினைப்பு உங்களுக்குள் ஊறிக்கிடக்கிறது.

எங்கள் ஆட்கள் குடிகாரர்கள் என்றும்; குடித்துவிட்டுத்தான் குழிக்குள் இறங்குகிறார்கள் எனவும் குற்றம் சொல்கிறார்கள். அப்படி சொல்கிறவனுங்களின் சட்டைக்காலரைப் பிடித்து நறுக்கென்று அவனுங்களை ஒன்று கேட்க வேண்டுமென எனக்கு வெறி வருகிறது: எங்க ஆட்கள்தான் குடிகாரர்கள். குடிச்சிட்டுத்தான் இறங்குகிறார்கள். சரி, நீங்கள் போதையில் இல்லாமல் சுயநினைவோடு உள்ளே இறங்குங்களேன் பார்ப்போம்.

முடியலையா, நீங்களும் குடிச்சிட்டு கூட இறங்கித்தான் பாருங்கள். முடியுமானால் இறங்கி சுத்தம் செஞ்சுட்டு வந்து சொல்லுங்க, கேட்டுக்குரேன். முடியாது.எந்த ஒரு மனிதனாலும் இந்த வேலையை செய்ய முடியாது.எதற்காக செய்ய வேண்டும்? அப்படியும் ஒருத்தன் ஒரு தடவை செய்துவிட்டால் அதற்குப்பிறகு அவனால் ஒரு மனிதப் பிறவியாக இருக்க முடியாது. துர்நாற்றமடிக்கும் சுய தாழ்ச்சி உணர்வும் கடும் துக்கமும் அவனுள்  ஆக்கிரமித்துக்கொண்டு விடும். தனது இயலாமையை கோபமாக அவன் தனது குடும்பத்தின் மீது காட்டத் தொடங்குவான்.

அதனால்  அவன் வீடு எந்நேரமும் சண்டைச் சச்சரவுகள் நிரம்பியதாகவே ஆகிவிடும். அவன் செத்தாலும் கூட அவன் பிணத்தை செப்டிக் டேங்கில் இருந்து வெளியில் எடுத்துப் போட யாரும் வரமாட்டான். யார் சொல்கிறார்களோ இல்லையோ நான் பகிரங்கமாக சொல்லிவிடுகிறேன். எங்களையும் எங்கள் சாதியையும் இச்சமூகம் அடியோடு வெறுக்கிறது. அதனாலேயே துர்நாற்றத்துடன் கழிவுகளுக்கு மத்தியிலேயே நாங்கள் இருக்கவேண்டும்; அதைப் பார்க்க வேண்டும் என்றே விரும்புகிறது இந்த சமூகம். இது சாதியத்தின் குரூரமான விளையாட்டு.

ஒருத்தன் போய்விட்டால் இன்னொருத்தன் தயாராகவே இருக்கிறான். அப்படியிருக்கும்போது என் புருசன் செத்தாலும் வேறு யார் செத்தாலும் எத்தனைப் பேர் செத்தாலும் அவர்கள் (சமூகம்) ஏன் கவலைப்படப் போகிறார்கள்? இதை சாவு என்று கூட சொல்லக்கூடாது.கொலை. கொலைதான். அப்படியே கொலை என்று எழுதுங்கள்.

Pin It