இவர் பெயரும் காந்திதான். பிறந்ததும் கூட 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மகாத்மா காந்தி மரணமடைந்த அதே நாளில்தான்; மாலை 5 மணிக்கு. நிச்சயமாக காந்திஜியின் ஆன்மா இக்குழந்தையினுள் நுழைந்திருக்க வேண்டும் என்று எல்லோரும் அப்போது சொல்லியிருக்கிறார்கள்.அதனாலேயே அந்த மாமனிதரின் பெயரையே இவருக்கு சூட்டியும் மகிழ்ந்திருக்கிறார்கள்.அது சரி, இந்த காந்தியின் வாழ்க்கைக்கும் தேசத் தந்தையின் வாழ்க்கைக்கும் இடையே சமானங்கள் இருந்தனவா?அப்படியெல்லாம் சொல்லிவிடமுடியாது.

ஆனால் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும்.இவரின் வாழ்நாளில் (கடந்த 2006 ஆம் ஆண்டில் நான் சந்தித்தபோது காந்திக்கு 58 வயது ஆகியிருந்தது) ஒன்று மட்டும் நிரந்தரமாக இருந்து வந்துள்ளது. அது, மகாத்மா காந்தி எந்தப்பணிக்கு எதிராகப் பிரச்சாரங்கள் செய்து வந்தாரோ அந்தப்பணியிலேயே தனது சிறு வயது தொடங்கி வாலிபத்தையும் வயோதிகத்தையும் தொடர்ந்து செலவிட்டு வந்துள்ளார். மனித மலத்தை அல்லது டினா (Tina இந்தியில் பேச்சுவழக்கில் மலம்) தலையில் சுமந்து சுமந்தே வாழ்நாளை கழித்துவிட்டவர் இவர்.

இன்று இவரது குடும்பத்தினர் இரண்டு தலைமுறைகளாக அதே வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இவரது மகன், மருமகள் மற்றும் 18 வயது மகன் என இவரது குடும்பத்தில் எல்லோரும் மற்றவர்கள் கழித்துப் போட்ட மலத்தை சார்ந்தே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதுவே சுதந்திர இந்தியாவில் காந்தி ஒருவரின் வாழ்க்கைக் கதை.

...வாயில் வெற்றிலையைக் குதப்பியபடியே, அரசின் கொள்கைத் திட்டங்களின் நடைமுறைக்கொவ்வாத போக்கை ஒரே மூச்சில் பிரித்து மேய்ந்துவிட்டார் குசுமி (காந்தி பேரனின் மனைவி). அந்த மொஹல்லாவில் அவரது வீட்டைப் பார்த்ததுமே இந்தப் பகுதிக்கு – கேள்விக்கு இடமில்லாமல் –  குசுமிதான் தலைவி என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அவர் என்னிடம் சொன்னார்:  ""இவ்வேலை சட்டத்திற்குப் புறம்பானது என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. ஆனால் எந்த சட்டமும் எங்கள் வயிற்றை நிரப்பிடாதே. நாங்கள் உயிர் வாழ இந்த மலம் அள்ளும் வேலையை விட்டால் வேறு மார்க்கமில்லை. 

கடனுதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசு சொல்லுகிறது. கடன் என்றால் அதை திருப்பியல்லவா கட்டவேண்டும். எங்களால் எப்படி அது முடியும்? நாங்கள் தொட்ட எதையும் எவரும் சாப்பிடுவதில்லை. அப்படியிருக்கும்போது வேறு எந்த வேலையைப் பார்த்து நாங்கள் எங்கள் வயிற்றை கழுவிவிட முடியும்?

உள்ளே போயிருந்த குசுமி, கையில் ஒரு சொம்பு நிறைய தண்ணீர் பிளாஸ்டிக் குவளை ஒன்று மற்றும் கொஞ்சம் வெல்லத்துடன் வெளியே வந்தார். தண்ணீர் சொம்பை என் முன்னால் நீட்டியவாறே, ""இந்த தண்ணீர் ரொம்பவும் சுத்தமானது''  என்றவர், தொடர்ந்து ""எங்களுக்குத் தேவை மாற்று வேலைகள் தானே தவிர கடனல்ல. வேலை செய்ய எங்கள் கைகள் தயாராக இருந்தும் எங்களுக்கு வேலை தர அரசு தயாராக இல்லை. எங்களுக்கு பணம் கொடுத்துவிட்டு அதோடு கழற்றிவிட அரசு விரும்புகிறது. அந்தப் பொறியில் நாங்கள் சிக்க மாட்டோம்'' 

Pin It