தமிழ்ச்சூழலில் தலித் இலக்கியமும் தலித் அரசியலும் ஓரளவு வேரூன்றி விட்ட நிலையில் சமீப காலமாகத் தலித் அரசியலில் ஒரு புதிய மாற்றம் மிகத் தீவிரமாக முன்வைக்கப்படுவதை வாசகர்கள் அவதானிக்கலாம். தலித் அரசியலில் அறிமுக நிலையில் முன்வைக்கப்பட்ட அம்பேத்கரிய, பெரியாரியச் சித்தாந்தங்களில், பெரியாரைக் காலிசெய்துவிட்டு அவ்வெற்றிடத்தில் அயோத்திதாசப் பண்டிதரை முன்னிறுத்துவதுதான் அந்த மாற்றம்.

பெரியார் சிந்தனைகளில் தலித் அரசியலுக்கும் பங்களிப்பு செய்ய ஒன்றுமில்லையா? ஒரு சந்தர்ப்பத்தில் பேசிய பேச்சை மட்டுமே வைத்து பெரியாரை தலித்துகளுக்கு எதிராக நிறுத்திவிட முடியுமா? என்பது போன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, தோழர்கள் முன்னிறுத்தும் அயோத்திதாசர் அந்த இடத்துக்குத் தகுதியானவர் தானா என்பதைப் பரிசீலிப்பதும் அவசியமாகிறது. அதோடு விமர்சனப் பார்வையற்ற ஒரு வழிபாட்டுத் தொனியுடனேயே அயோத்தி தாசரை முன்வைக்கும் போக்கு தலித் அரசியலுக்கும், தலித் இலக்கியத்திற்கும் ஊறு விளைவிப்பதாகவே அமையும் என்ற புரிதலுடன், அயோத்திதாசரிடம் வெளிப்படும் சாதியக்கூறுகள் முதலானவற்றை ஆய்வுக்குள்ளாக்கும் முயற்சியாகவே இந்தக் கட்டுரை.

தலித்துகளால் தங்கள் தலைவராய் ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்பேத்கர், அவர் பிறந்த மகர் சாதிக்காரர்களால் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து தலித்துகளாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டவர். இந்தச் சிறிய சமூகத்தில் தன்னை ஒடுக்கப்பட்ட சாதித் தன்னிலையாக உணர்ந்த அம்பேத்கர், தன் விடுதலையை எல்லா ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலையோடு சேர்த்துப் பார்த்தார். எனவேதான் ஒட்டு மொத்த தலித்துகளின் விடுதலை குறித்தே அவர் சிந்தனை, பேச்சு, போராட்டம் ஆகியவை அமைந்திருந்தன.

மறுதலையாக அயோத்திதாசர் அவர் பிறந்த பறையர் சாதியினராலேயே கூட முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அயோத்திதாசரும் தன்னை ஒடுக்கப்பட்ட தன்னிலையாக உணர்ந்தாலும் தன் விடுதலையைத் தன் சாதியின் முன்னேற்றத்தோடு தொடர்புடையதாகவே பார்த்தார். தான் பிறந்த பறையர் சாதி தான் உண்மையான பிராமணர் குலமாகும். வேஷ பிராமணர்களின் சதியால் யதார்த்த பிராமணர்களான பறையர்கள் வஞ்சிக்கப்பட்டுத் தாழ்நிலையிலிருக் கின்றனர் என்கிற விதமாக அவரது புரிதலும், பிரச்சாரமும் இருந்தது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியாரின் எண்ணிக்கையில் பிரதானமானவை அருந்ததியர், பறையர், பள்ளர் ஆகிய சாதிகளாகும். இவை தவிரவும் சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட குறவர், கணியான், புரதை வண்ணார், இருளர், காட்டு நாய்க்கர் உள்ளிட்ட பிற சாதிகளையும் உள்ளடக்கியதே ‘தலித்’ என்ற சொல்லாடலாகும். இவர்களில் பள்ளர் சாதியைக் குறித்துப் பேசவே செய்யாமல் ஒரு விதப் புறக்கணிப்பை நிகழ்த்தும் அதே வேளையில், இதர தாழ்த்தப்பட்ட சாதிகளை மேலாதிக்கம் செலுத்தும் ஒரு வித மேட்டிமைப் பார்வையில் கேவலப்படுத்துவதை தனது எழுத்துகளில் தொடர்ந்து செய்கிறார் அயோத்திதாசர்.

அம்பேத்கரின் அட்டவணைச் சாதியார் என்ற விளிப்பு எல்லா தலித்துகளையும் உள்ளடக்குவதாக இருந்தது. தீண்டாமை இழிவுகளை நீக்க எல்லா ஒடுக்கப்பட்ட சாதியாரும் ஒன்றுபடுவதை வலியுறுத்துவது அம்பேத்கரின் சித்தாந்தம். அவருடைய முழக்கமே கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்பது தான்.

அயோத்தி தாசரின் பூர்வீக திராவிடர்கள், சாதிபேதமற்ற திராவிடர்கள் என்கிற விளிப்பு பறையர்களை மட்டுமே உள்ளடக்குவதாக இருந்தது. அதோடு ஒடுக்கப்பட்ட சாதிகளின் இணைவை அவர் முன்னிறுத்தவில்லை என்பதோடு, அம்முயற்சிக்கு எதிரானவராகவும் இருந்தார் என்பது மிக முக்கியமானதாகும். சனவரி 6, 1909 நாளிட்ட, ‘இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஜாதியோருக்கு நியமிக்கப்பட்ட சங்கம்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் அயோத்திதாசர் இவ்வாறு எழுதுகிறார்.

“இந்த டிசம்பர் மாதம் விடுமுறைக் காலத்தில் சில பெரியோர்கள் கூடி இந்தியாவில் தாழ்த்தப்பட்டுள்ள சாதியோரைச் சீர்திருத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

இவற்றுள் இயல்பாகவே அறிவின்றித் தாழ்ந்துள்ள சில வகுப்பாரும் உண்டு. சாதித் தலைவர்களின் விரோதத்தால் தாழ்த்தப்பட்டுள்ளவர்களும் நாளது வரையில் தாழ்த்தி வருகிறவற்றுள் தாழ்ந்தவர்களுமாகிய ஓர் வகுப்பாரும் உண்டு.

அவர்கள் யாரென்பிரேல் குறவர், வில்லியர், சக்கிலியர், மலமெடுக்கும் தோட்டிகள் இயல்பாகவே தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள்.

சாதித் தலைவர்களாகும் வேஷ பிராமணர்களால் பறையரென்றும், சாம்பாரென்றும் வலங்கையரென்றும் கூறி அவர்களைச் சுத்த ஜலங்களை மொண்டு குடிக்க விடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்ய விடாமலும், அந்தஸ்தான உத்தியோகங்களில் பிரவேசிக்க விடாமலும், ஏதோ துரை மக்கள் கருணையால் ஓர் உத்தியோகத்தை பெற்றுக்கொண்ட போதிலும் அதனினின்று முன்னுக்கு ஏறவிடாமலும் பலவகை இடுக்கங்களைச் செய்து தாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். இவர்களைத் தாழ்ந்த வகுப்பார் என்று கூறலாகாது. சாதிபேதமுள்ள மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று கூறல் வேண்டும்.

இவற்றுள் கூளங் குப்பைகளுடன் குணப்பெரும் பொருட்களையும் சேர குவித்து குப்பைக் குழியென்பது போல கல்வியிலும், நாகரீகத்திலும், விவேகத்திலும், ஒற்றுமையிலும் மிகுந்து வேஷ பிராமணர்கள் கற்பனா கதைகளுக்கிணங்காமல் விரோதிகளாய் நின்ற திராவிட பெளத்தர்கள் யாவரையும் பறையர், சாம்பார், வலங்கையரென்று தாழ்த்திக் கொண்டதுமின்றி சக்கிலி, தோட்டி, குறவர், வில்லியர் இவர்கள் யாவரையும் ஐந்தாவது சாதியென்றும், பஞ்சம சாதியென நூதன பெயரிட்டு மேன்மக்களாம் பெளத்தர்களையும் அக்குப்பையில் சேர்த்து பஞ்சம சாதியென்று வகுத்திருக்கின்றார்கள்.” (அயோத்தி தாசர் தொகுதி 1, ப.97)

கூளங்குப்பைகள் ஓ குணப்பெரும் பொருட்கள்

இயல்பிலேயே தாழ்ந்துள்ள ஓ தாழ்த்தப்பட்டவர்கள்

கல்வி, நாகரீகம், விவேகம், ஒற்றுமையற்ற தாழ்ந்த மக்கள் ஓ இவைகளில் சிறந்த பறையர்கள்.

என்கிற விதமாக அயோத்திய தாசர் கட்டமைக்கும் இருமை எதிர்வுகளையும் அவற்றின் பின் ஒளிந்துள்ள பாசிசக் கூறுகளையும் தலித் அரசியலில் அக்கறையுள்ள தோழர்கள் கவனிக்க வேண்டும்.

தோட்டிகளின் குழந்தைகள் படிக்கும் கல்விச் சாலைகளுக்கும், பறைக்குழந்தைகள் படிக்கும் கல்விச் சாலைகளுக்கும் பஞ்சமர் பாடசாலையென்ற ஒரே பேரை வைத்து விட்டார்கள் என்று பதறிப் போகிறார் தலித் சிந்தனையாளர்.

 “ஆயிரத்து ஐந்நூறு வருடகாலமாக இந்த திராவிட பெளத்தர்களைத் தலையெடுக்க விடாமல் தாழ்த்திப் பலவகை இடுக்கங்களைச் செய்து வந்த சத்துருக்களாகிய வேஷ பிராமணர்களுக்கு பருப்பில் நெய்யை விட்டது போலும், பாலில் பழம் விழுந்தது போலும் மென்மேலும் ஆனந்தம் பிறந்து தங்கள் வஞ்சகங்கள் யாவையும் சரிவர நிறைவேற்றி விடுவதற்காக தோட்டிகள் பிள்ளைகளுக்குக் கல்விச் சாலை வகுத்து அதையும் பஞ்சமர் பாடசாலை எனக் குறித்து விட்டார்கள்.

இவ்வகை கருத்து யாதெனில் இன்னுஞ் சில காலங்களுக்குப்பின் தோட்டிகள், பறையர்கள் யாவரும் ஒரு வகுப்பாரென்றுங் கூறி இன்னுந் தலையெடுக்க விடாமல் நாசஞ் செய்வதற்கேயாம்” - அயோத்தி தாசர் தொகுதி 1, ப.138

சாதி பேதமற்ற திராவிடர்கள், சாதிபேதமற்ற திராவிடர்கள் என்று மூச்சுக்கு முந்நூறு முறை தங்களைச் சொல்லிக் கொள்ளும் சிந்தனையாளருக்கு சாதி பேதமென்பது எது என்ற சிந்தனையை மட்டும் யாராவது சொல்லிக் கொடுக்காமல் போய் விட்டார்களே என்ற குறைதான் நமக்கு. பறையர் சாதியின் உட்பிரிவுகளுள் உள்ள பேதங்களைத் தான் சாதிபேதம் சாதிபேதம் என்று கருதி இருக்கிறார் நம் சிந்தனையாளர்.

 ‘இயல்பாகவே தாழ்ந்த சாதியார்’ குறித்த பட்டியலை இன்னொரு இடத்திலும் தயார் செய்கிறார் தலித் சிந்தனையாளர் அயோத்தி தாசர்.

 “சாதி பேதமற்ற திராவிடர்களைப்போல் பராய சாதியோர்களால் நசுங்கிக் குன்றாமல் அவர்கள் சார்பாய் நிற்கும் படுகர், தொதுவர், கோத்தர், குறும்பர், வில்லியர், குறவர் இவர்கள்மீது மிஷினெரிமார்கள் வேண கருணை வைத்து கல்விப் பயிற்சி செய்து வந்த போதினும் கல்விவிருத்தியும், உத்தியோக விருத்தியும் இல்லாமலே மயங்கி நிற்கின்றார்கள். காரணம் இவர்கள் பூர்வம் நல்ல அந்தஸ்தில் இல்லாமல் தற்காலம் இருக்கும் நிலையிலேயே இருந்தவர்களாதலின் கருணை தங்கிய மிஷினெரியார்கள் யாது விருத்திசெய்யினும் முழு விருத்தியடையாமல் இயங்குகின்றார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களோ அத்தகைய திகைப்பின்றி எங்கு கல்வி விருத்தி கிடைக்கின்றதோ அங்கு விருத்தி பெற்றுச் சுகமடைகின்றார்கள்.” - அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1, ப.118

இந்தப் பட்டியலில் இயல்பாய்த் தாழ்ந்த வகுப்பினரின் பட்டியல் இன்னும் கொஞ்சம் பெரிதாய் இருப்பதை வாசகர்கள் கவனிக்கலாம். இயல்பாகத் தாழ்ந்த சாதியாய் இருப்பது என்பது எப்படி என்று நமக்கு விளங்கவில்லை. சரித்திரத்தின் பின்னோக்கிய பக்கங்களில் ஒன்றில் இந்த குறிப்பிட்ட சாதியோர் எல்லாம் ஒன்றாய் கூடி இன்றுமுதல் நாம் இயல்பாய்த் தாழ்ந்த சாதியராய் இருப்போம் என்று பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார்களா? அல்லது புத்த பகவான் தான் இவர்களை இயல்பாய் தாழ்ந்த சாதியாய் இருக்கக் கடவீர்கள் என்று அருளாசி அருளிப் போந்தாரா, பார்ப்பனீயம் வழங்கும் வருணாசிரம தர்மம் குறித்த வரையறைகளையும் பிரம்ம தோற்றுவாய் குறித்த கதைகளையும் அயோத்தி தாசர் ஏற்கவில்லை என்பதால் இத்தகைய கருதுகோள்களுக்கு நாம் வரலாம்.

பண்டைத் தமிழரின் ஐவகை நிலமும், அந்நிலத்தில் வாழும் மக்களைக் குறித்தும் நாம் அறிந்தபடி குறிஞ்சி நிலம் சார்ந்த மக்களாய் அறியப்படுபவர்கள் குறவர்கள்-குறத்தியர்கள் ஆவார்கள். நம் சிந்தனையாளரின் இயல்பாய்த் தாழ்ந்தோரின் பட்டியலில் தவறாது இடம் பெறும் பாக்கியத்தை இவர்கள் பெற்றதும் பெறும்பேறுதான் போங்கள்.

இத்தகைய குறவர்கள் குறித்த தம் அரிய கண்டுபிடிப்பை நம் சிந்தனையாளர் ஓரிடத்தில் வெளிப்படுத்துகிறார்.

“நூதன சாதி வேஷம் பூண்டுள்ள யாவரும் சாதிபேதமில்லாமல் வாழ்ந்திருந்தப் பூர்வகுடிகளைத் தாழ்ந்த சாதிகளெனக் கூறித் தாங்கள் தாழ்த்தி தலையெடுக்க விடாமற் செய்வதுடன் வந்து குடியேறும் அன்னிய தேசத்தாருக்குந் தாழ்ந்த சாதியோர் எனக்கூறி அவர்களாலும் இழிவு கூறச் செய்து மலமெடுக்குந் தோட்டிகளுக்கும், மலோபாதைக்குப் போனால் காலலம்பாது பூனையையும் பெருச்சாளியையும் பிடித்துத் தின்னும் குறவர் வில்லியருக்குங் கற்பித்து இவர்களைத் தாழ்ந்த சாதியோரெனக் கூறச் செய்து வரும் விரோத செய்கைகளையும் நாளுக்கு நாள் கண்டறிய முயன்ற எமக்கு...” (11.1913 ப.469)

நம் தோழர்கள் முன்வைக்கும் தலித் சிந்தனையாளரின் தலித் உணர்வைக் கண்டு நாம் மெய் சிலிர்த்துப் போகாமல் இருக்க முடியாது. பெரியாரின் நம்மில் கீழ்த்தர மக்கள், சோறு, சீலை, காசுக்கு அலைபவர்கள் என்ற பிரயோகங்களை வைத்துக் கொண்டு அந்தக் குதி குதித்தவர்கள் அதே விதமாய் இந்தப் பிரயோகங்களுக்கும் குதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா எல்லது பறைச்சிந்தனையாளர் குசு நாறாது, மணக்கும் என்பார்களா என்பதை அவர்களே தான் முடிவு செய்து கொள்ளட்டுமே.

அங்ஙனமே நம் சிந்தனையாளர் துவேஷங் கொள்ளும் இன்னொரு மக்கள் கூட்டம் சக்கிலியர்கள் ஆவார்கள். “இயல்பாய் தாழ்ந்த சாதியாரின்” பட்டியலில் இடம்பெறும் இவர்களை இழித்துப் பேசுவதில் பேறெந்த ஆதிக்கச் சாதிப் பாசிசச் சிந்தனையாளனும் பிச்சை கேட்க வேண்டும் போங்கள்!

இயல்பாய் தாழ்ந்த சாதியாருக்கான பொதுக்குணங்களான கல்வி நாகரீகம், விவேகம், ஒற்றுமை ஆகியவை அற்ற குப்பை கூளங்கள் என்ற நிரந்தரச் சான்றிதழ் அளித்ததோடு திருப்தி அடையாமல் பறையனாகிய நான் இழிந்தவனா என்று கேட்கும் போதெல்லாம் மேற்படி துர்பாக்கிய சாக்கியரென்னும் சக்கிலியரை நோக்கி கை நீட்டாமல் இருக்க முடியாது அவருக்கு.

 “தாழ்ந்த சாதியோர் வாசஞ்செய்யும் இடத்தில் உயர்ந்த சாதிகள் போவதில் சாதி கெடும் என்பது அவரது அபிப்பிராயமாய் இருக்குமாயில் சக்கிலிப் பிணம், தோட்டிப் பிணங்களை அறுத்து சோதிப்பதை விட பறைச்சேரியின் வழியாகப் போவதால் சாதி கெடமாட்டாது. (செப்.23 - 1908. ப.74)

தற்போது கிறிஸ்தவர்கள், பஞ்சமர்கள், மகமதியர்களென்றுக் குறிப்பிட்டு காப்பி வோட்டல் பலகைகளில் எழுதி வைத்துள்ளவைகள் சாதி சம்பந்தச் செயலாயின் மற்றைய குறவர், வில்லியர், சக்கிலியர், தோட்டிகளென்னும் நான்கு வகுப்பாரும் வரலாமோ, வரக்கூடாதோ விளங்கவில்லை. அவர்களும் வரக் கூடாதாயின் அந்நான்கு வகுப்புப் பெயர்களையும் பலகைகளில் எழுதி வைத்திருத்தல் வேண்டும். (ஆகஸ்டு - 14-1910. ப.273)

“.நமது அம்மட்டன் பறையர்களுக்கு சவரம் பண்ணக்கூடாது. நமது வண்ணான் பறையர்களுடைய வஸ்திரங்களை எடுத்து வெளுக்கப்படாது. டாக்டர் வேலையிலமர்ந்து, தோட்டிப் பிணமாயினும் சக்கிலிப் பிணமாயினும் நன்றாய் தொட்டு அறுக்கலாம். உறுப்புகளைச் சோதிக்கலாம். ஆயினும் பறையனை மட்டிலுந்தீண்டப்படாது....” (பிப்.5 - 1913, ப. 452)

இவை தவிரவும் கம்மாளர், சக்கிலியர், பறையர் உறவு குறித்த ஒரு வாசகரின் கேள்வியையும் அதற்கான பண்டிதரின் பதிலையும் பார்ப்போம்.

வினா: பூர்வ பெளத்த சக்கிரவர்த்திகளின் வமிஷ வரிசையோரும் பெளத்த சிகாமணிகளுமா யிருந்து தற்காலம் பறையரென்று அழைக்கப்படுவோர் களுமாய் ஏழை மாக்கள் விசுவ பிரம்ம குலத்தாரென்னும் கம்மாளரிடம் ஜலபானஞ் செய்யாது சாத முதலியது உண்ணாதுந் தங்களை விட கம்மாளர் கீழானவர்களென்றுக் கொண்டுள்ள வைராக்கியம் யாதுக்கு?

கோசிங்கிகள் என்றழைக்கப்படுஞ் சக்கிலியரை பறையரென்போர் மாமன் மைத்துனன் உறவாய் முறை கொண்டாடி, உண்பன, கொள்வன, கொடுப்பன வைகளில் சம்பந்தப்படர்மனிற்பதோ ஒருவருக்கொருவர் வீதிகளில் ஒருவருக்கொருவர் பாதரட்சை அணிந்து ஏகாது உறுதி செய்து கொண்டு இவ்விரு தரத்தாரில் யாரேனுந் தெரிந்தோ, தெரியாதோ வீதிகளில் பாதரட்சை அணிந்து ஏகினால் இருவகுப்பாரும் பஞ்சாய சபைக் கூட்டி தவறு செய்தவனிடம் அபராதம் முதலியவைகள் வாங்கி வருவதெற்றுக்கு? சி.முத்துக்குமாரசாமி, நாதமுனி, தீர்த்தகிரி வாத்தியாயர், ஜோலார்பதி)

விடை: ஜோலார்பதி உபாத்தியாயர்களே சற்று நோக்குவீர்களாக தாங்கள் வினவியுள்ள சங்கைகள் யாவும் மத்தியில், தோன்றி மறைந்தவைகளேயாம். அதாவது பிராமணர்களென் போருக்கும், கம்மாளர்களென்போருக்கும் சித்தூர் ஜில்லாவில் நேரிட்ட வழக்கில், கம்மாளர் ஜெயம் பெற்றபோது பிராமணர் களென்போர் பறையர்களென்று அழைக்கப்படுவோரை வலங்கையரெனத் தங்களுடன் சேர்த்துக் கொண்டு இவர்களுக்குக் கற்பித்த விரோதச் செயலால் அவ்வகை உண்பினையைத் தவிர்த்து வீண் விரோதிகளாகி விட்டார்களன்றி வேறில்லை. மற்றபடி இவர்கள் அவர்களுக்குத் தாழ்ந்தவர் களல்ல. அவர்கள் இவர்களுக்குத் தாழ்ந்தவர்களல்ல. பிராமணர்களென்போர் செய்த விரோதசெயல் களேயாம்.

வசிஷ்டரைச் சக்கிலிச்சு மகனென்று கூறியுள்ள ஒரு சரித்திரத்தைக் கொண்டும் விஸ்வாமித்திரர் பரம்பரையைக் கொண்டும் மைத்துனர் முறை கொண்டாடி வந்த சில சரித்திரங்களை ஓட்டிப் பேசிவந்த போதிலும் அவர்களது அசுத்த செயலை ஒட்டி உண்பிணையற்றிருப்பதுடன் வாசஞ் செய்யும் வீதிகளில் பாதரட்சை அணிந்து வரப்போகாதென்றுந் தடுத்து வந்தார்கள். (சனவரி 30, 1912, ப.675)

கேள்விகளின் இரு பகுதிகளுக்கான பதில்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறதா? கேள்வியாளர் ஒருவருக்கொருவர் என்று இரு தரப்பாரையும் குறிப்பிட்டு கேட்பதற்குத் தந்திரமாய் சக்கிலியரை மாத்திரம் குறிப்பிட்டுப் பதில் சொல்வதை கவனியுங்கள்.

பறையர்கள் பூர்வ பெளத்தர்கள் என்று சொல்வதற்கான காரணங்கள் என்று அவர் காட்டும் அத்தனையும் அருந்ததியர்களுக்கும் பொருந்துபனவாயிருப்பதை ஏன் மறந்து போகிறார் என்பதும் முக்கியமான கேள்வி.

ஆயிரந்தைந்நூறு வருடங்களுக்கு முன் பறையர்கள் நல்ல நிலையில் இருந்தார்கள் என்று துப்பறிந்து சொல்லும் பண்டிதருக்கு ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கூட படைத்தலைவர்களாக அருந்ததியர்கள் இருந்த வரலாறு ஏன் வசதியாக மறந்துபோகிறது. மதுரை வீரன், ஒண்டி வீரன், பொட்டிப் பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை என்று மாவீரர்கள் பிறந்த மக்கள் கூட்டம் அது என்கிற அறிவு வெள்ளைக்காரர்களுக்கு உருவி விட்டுக் கொண்டிருந்ததால் இல்லாமல் போனதா? வெள்ளைக்காரர்கள் வரும் வரையிலும் இங்கு மலம் கழிக்க கக்கூஸ்கள் என்ற ஒரு தனி அமைப்பு இல்லாமலிருந்தும், அதுவரையில் மனித கழிவுகளை மனிதர் எடுக்கும் அவலம் இல்லாமல் இருந்ததும் உறைக்காமல், மனித இனம் தோன்றியது முதலே அருந்ததியர்கள் மலமெடுத்து வந்ததைப் போல் அத்தனை அருவருப்புடன் அவர்களைப் பார்க்கச் செய்வது எது?

அதோடு அம்மாமிகள் ஸ்ரீராம ஜெயம் எழுதுவது மாதிரி பக்கத்துக்குப் பக்கம், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடமாட்டேனென்கிறார்கள். அம்மட்டர்களை சவரம் செய்ய விடமாட்டேனென் கிறார்கள் என்று புகார் மனு எழுதிக் கொண்டே போகிறவருக்கு அவர்கள் மட்டும் வண்ணார்களாகவும், அம்பட்டர்களாகவும் ஏன் இருக்க வேண்டும் என்கிற கேள்வி மட்டும் ஏன் ஒரு போது எழவேயில்லை?

தூய்மை ஓ அசுத்தம் என்கிற விதமான எதிர்வுகளைக் கட்டமைத்து மற்றதைத் தீட்டு என்று ஒதுக்கி வைப்பது பார்ப்பனீயத்தின் கூறு.

கல்வியறிவில்லாமை, நாகரீகமில்லாமை என்ற காரணங்களினால் மனிதர்களில் சேர்த்தியில்லாதவர்கள் என்று காரணம் சொல்லிக் கருப்பர்களை ஒடுக்கியது வெள்ளையரின் நிறவெறிச் சித்தாந்தம். இவ்விரண்டு விதமான பார்வைகளுடனும் பிற தலித் சாதியினரை கேவலப்படுத்தும் போக்கை அயோத்தி தாசரிடம் நாம் காணலாம்.

இவ்வாறு, பார்ப்பனீயமும், பாசிசமும் இணைந்த பார்வையே ஏனைய தலித் சாதிகள் மீதான அயோத்தி தாசரின் பார்வை என்பதை நிறுவலாம். மற்றப்படி அவர் தலித்துகளுக்கான சிந்தனையாளர் அல்ல என்பதை நிறுவ அவர் எந்த இடத்திலும் பறையர் தவிர்த்த பிற தலித் மக்களுக்காக ஒரு வரியும் எழுதவில்லை என்கிற உண்மையே போதுமான ஒன்றாகும்.

இவ்வளவு விமர்சனங்களிருக்கையில் அயோத்திதாசரைப் பெரிய ஒளிவட்டத்துடன் முன்னிறுத்தும் தோழர்கள் உண்மையில் அயோத்திதாசரைப் படித்திருக்கிறார்களா? படித்திருந்தால் இந்த கேள்விகள் எல்லாம் அவர்களுக்கு எழவில்லையா? எழுந்தால் அவை குறித்த விமர்சனங்களை எங்கேனும் முன்வைத்திருக்கிறார்களா? குறைந்தபட்சம் புத்தமித்திரன் போன்றவர்கள் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பிறகும் ஏன் வாய்திறக்க மறுக்கிறார்கள்? என்ற கேள்விகளுடன் இப்போதைக்கு நிறுத்தி கொள்ளலாம். இதற்காகவாவது வாய் திறப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.

       நன்றி: புதியதடம், ஜீலை - செப்டம்பர் 2003.

Pin It