தங்களுடைய பிரச்சினை குறித்து சிந்திக்கும் திறன் பெற்ற தாழ்த்தப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையோர், தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றால் இந்து மதத்தைக் கைவிட்டு வேறு ஏதாவது ஒரு மதத்திற்கு மாற வேண்டும் என்று நம்புகிறார்கள். 1936 ஆம் ஆண்டு மே 31 அன்று, பம்பாய் நகரில் நடைபெற்ற மகர்களின் மாநாட்டில் இது குறித்து ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாடு மகர்களின் மாநாடு என்ற போதிலும்கூட, இந்தத் தீர்மானமானது இந்தியா முழுமையிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் மிகப்பெரும் பகுதியினருடைய ஆதரவைப் பெற்றதாகும். வேறெந்த தீர்மானமும் இத்தகையதொரு உத்வேகத்தை உருவாக்கியதில்லை. இந்து சமூகம் அதன் அடித்தளம் வரை உலுக்கப்பட்டது; இந்த முயற்சியினை மேற்கொண்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிராக சாபங்கள், நிந்தனைகள், அச்சுறுத்தல்கள் அள்ளி வீசப்பட்டன.

ambedkar_276தாழ்த்தப்பட்டவர்கள் மதமாற்றம் செய்வதை எதிர்ப்பவர்கள் நான்கு முதன்மையான ஆட்சேபனைகளை எழுப்புகிறார்கள் : 1. மதமாற்றம் செய்வதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கப் போகிறது? மதமாற்றமானது, தாழ்த்தப்பட்டவர்களின் நிலையில் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை 2. அனைத்து மதங்களும் உண்மையானவை, அனைத்து மதங்களும் நல்லவை. மதத்தை மாற்றுவது என்பது பயனற்றது 3. தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறுவது என்பது அதன் இயல்பில் அரசியல் தன்மை வாய்ந்ததாகும் 4. தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறுவது உண்மையானதல்ல; ஏனென்றால் அது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இந்த ஆட்சேபனைகள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமானவை, வீணானவை, பயனற்றவை என்பதை நிலைநாட்டுவதற்கு நீண்ட விவாதம் ஏதும் தேவையில்லை.

கடைசியாகச் சொல்லப்பட்ட ஆட்சேபனையை முதலில் எடுத்துக் கொள்வோம். எவ்வித மத உள்நோக்கமும் இல்லாமலேயே மதமாற்றம் நடைபெற்றுள்ள சம்பவங்கள் வரலாற்றில் ஏராளமாகப் பொதிந்துள்ளன. கிளோவிசும் அவருடைய குடிமக்களும் கிறித்துவத்திற்கு மதம் மாறினார்களே, அதன் தன்மை என்ன? ஏதெல்லாம் பெர்டும் அவருடைய கெண்ட் குடிமக்களும் எவ்வாறு கிறித்துவர்களானார்கள்? புதிய சமயத்தை அவர்கள் ஏற்கும்படிச் செய்ததில் ஏதாவது மத உள்நோக்கம் இருந்ததா?...

நிர்பந்தம் அல்லது ஏமாற்றுதல் மூலம் மதமாற்றம் நடைபெற்றுள்ளதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. மதம் என்பது இன்று மூதாதையர் சொத்தின் ஒரு பகுதியாகி விட்டது. வாரிசுரிமை போல அது தந்தையிடமிருந்து மகனுக்கு வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய மதமாற்றங்களில் என்ன உண்மைத் தன்மை இருக்க முடியும்? தாழ்த்தப்பட்டவர்களின் மதமாற்றம் நடைபெறுவதானால், அவர்கள் இணையவிருக்கும் மதத்தின் தன்மை, இதர பல்வேறு மதங்களின் நல்ல அம்சங்கள் முதலானவை அனைத்தும் முழுமையாக ஆராய்ந்த பின்னரே நடைபெறும். அத்தகைய மதமாற்றம், உண்மையான மதமாற்றமில்லை என்று எவ்வாறு கூற முடியும்? மறுபுறத்தில், அது, வரலாற்றில் முதலாவது உண்மையான மதமாற்றமாகவும் இருக்கும். ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்களுடைய மதமாற்றத்தின் உண்மைத் தன்மையை எவரும் ஏன் சந்தேகிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமாக உள்ளது.

மூன்றாவது ஆட்சேபனையானது, ஆழ்ந்து ஆராயாமல் தெரிவிக்கப்படும் ஆட்சேபனையாகும். மதமாற்றம் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன அரசியல் ஆதாயம் அதிகரிக்கப் போகிறது என்பதை யாரும் விளக்கவில்லை. ஏதாவது அரசியல் ஆதாயம் இருக்குமானால், அது மதமாற்றத்திற்கான நேரடித் தூண்டுதல் என்று யாரும் நிரூபிக்கவில்லை. மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அதாவது, மதமாற்றத்திற்கான நேரடித் தூண்டல் மூலம் கிடைக்கும் ஆதாயத்திற்கும், மதம் மாறுவதால் தற்செயலாகக் கிட்டும் பலனுக்குமுள்ள வேறுபாட்டை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. இவ்விரண்டுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. மதம் மாறுவது என்பது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓர் அரசியல் ஆதாயம் கிடைப்பதில் போய் முடியலாம். ஆனால், இம்மாதிரியான ஆதாயம் மதம் மாறுவதற்கான நேரடித் தூண்டுதலாக அமையும்போதுதான் அது ஒழுங்கீனமானது, நெறியற்றது எனக் கண்டிக்கப்பட முடியும்.

ஆகையால், தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறவிரும்புவது அரசியல் ஆதாயத்திற்குதான்; வேறு எதற்காகவும் அல்ல என்று அதை எதிர்ப்பவர்கள் நிரூபித்தாலொழிய அவர்களுடைய குற்றச்சாட்டு ஆதாரமற்றதாகும். அரசியல் ஆதாயம் கிட்டுவது தற்செயலான நிகழ்ச்சி என்றாகும்போது, மதம் மாறுவதில் எந்த ஒழுக்கக் கேடும் இல்லை. எனினும் உண்மை என்னவென்றால், மதமாற்றம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித புதிய அரசியல் ஆதாயத்தையும் அளிக்க முடியாது என்பதேயாகும்.

– தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 403

Pin It