முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, பட்டியல் சாதியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டம் (Special Component Plan - SCP) உருவான புதிதில் – மீண்டும் பிரதமர் பதவியை கைப்பற்றியிருந்த இந்திரா காந்தி, மார்ச் 12, 1980 அன்று, வரலாற்றுச் சிறப்பு மிக்க இரண்டு அரசுக் கடிதங்களை எழுதினார். ஒன்று, மய்ய அரசின் அமைச்சர்களுக்கு; இன்னொன்று மாநில முதல் அமைச்சர்களுக்கு. இவ்விரு கடிதங்களும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வரலாற்றில் மிக முக்கியமானவை.

பட்டியல் சாதியினர் தனியாகவும், குடும்பமாகவும், குழுவாகவும் பயன் பெறும் வகையில் அவர்களுடைய தேவை சார்ந்து புதிய திட்டங்களை, உருவாக்கவும்; தற்பொழுது நடைமுறையில் இருக்கும் திட்டங்களை குறிப்பிட்ட வளர்ச்சித் தேவைகளை சந்திக்கும் வகையில் மீள் உருவாக்கம் செய்யவும் அக்கடிதத்தில், அவர் மய்ய அரசு அமைச்சர்களை கேட்டிருந்தார். எல்லா துறைகளும், அமைச்சகங்களும் தமது துறைகளில் பட்டியல் சாதியினரின் மேம்பாட்டிற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தார். மேலும், எல்லா அரசுத் துறைகளும் பட்டியல் சாதியினரின் நலத் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பையும், சிறப்பு உட்கூறு திட்டங்களை எல்லா அமைச்சகமும் விரைவாக தயாரித்து – ஆண்டு திட்ட அறிக்கையிலும், அய்ந்தாண்டு திட்டத்திலும் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

dalit_boys_238அந்த கடிதத்தில், மாநில அரசுகள் பட்டியல் சாதியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை தொடங்கி விட்டிருந்தபோதும், மய்ய அமைச்சகங்கள் அதைச் செய்யவில்லை என்று கடிந்து கொண்டார். பழங்குடியினரின் பல்வேறு சமூக, பொருளாதார, பண்பாட்டு பின்புலங்களை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகளின் நிதிகளை ஒன்றுகூட்டி பழங்குடியினர் துணைத் திட்டம் (TSP) உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அழுத்தமாகச் சொல்லியிருந்தார்.

பட்டியல் சாதியினர் சுரண்டப்படுவதாலும், அடிப்படை வசதிகள்கூட சென்றடைய முடியாத தொலைவில் அவர்கள் ஒதுக்கப்பட்டதன் காரணமாகவும், பொருளாதார சுரண்டலின் காரணமாகவும் அவர்கள் படும் துன்பங்களையும், சந்திக்கும் இரட்டை இயலாமையினையும் அக்கடிதம் தெளிவாகப் பதிவு செய்திருந்தது. இதை மனதில் கொண்டு, ஒவ்வொரு மத்திய அமைச்சரும் தன் அமைச்சரவை மூலம் அதற்கான பங்களிப்பை, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சிக்காக வழங்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மாநில முதல்வர்களுக்கும் ஆளுநர்களுக்கும் எழுதிய கடிதத்தில், பட்டியல் சாதியினரின் ஒவ்வொரு வளர்ச்சித் தேவைகளையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கான வாய்ப்புகளை இனங்கண்டு கொள்ளவும், அதன் அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கவும், அதற்கேற்ற செலவினங்களுடன் சிறப்பு உட்கூறு திட்டங்களை உருவாக்கும்படியும் கேட்டிருந்தார்.

அந்த கடிதத்தில் சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியும், செயல் திட்டமும் பட்டியல் சாதியினருக்கான அடையாள நிதியாக அல்லாமல், போதுமான அளவு இருத்தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு, மாநில சிறப்பு உட்கூறு திட்டம் மேம்படுத்தப்பட்டு, தரத்தில் மட்டுமல்லாது பயனாளிகள் அளவிலும் அது நிறைவாக செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கு தெளிவான சுயதிட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மாநில முதல்வர்களிடமும், ஆளுநர்களிடமும் பட்டியல் சாதியினரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மிகுந்த முன்னுரிமை கொடுக்கவும், அதை தங்கள் தனிப் பார்வையின் கீழும், வழிகாட்டுதலிலும் செயல்படுத்தும்படி பிரதமர் கேட்டிருந்தார்.

இந்திரா காந்தியின் அந்த இரண்டு கடிதங்களை உருவாக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. அதில் ஈடுபட்ட மய்ய அமைச்சர்களில் வணிக மற்றும் பொது விநியோக அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜிதான், தற்பொழுது நிதியமைச்சராக இருக்கிறார்.

மய்ய அமைச்சர்களின் அலட்சியம் இன்றும் தொடர்கிறது. அரசியல் சட்டவரைவின்படியும், தேசிய கொள்கையின்படியும் – பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சியின் இலக்கான சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்தின் மீதான அலட்சியம் அரசுகளால் இன்றும் தொடரப்பட்டு வருகிறது. மேலும், இந்த அரசின் அலட்சியத்துக்கு ஈடாக ஊடகத் துறையும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும் இணைந்து செயல்படுகின்றன.

1986 ஆம் ஆண்டில் அப்போதைய திட்ட அமைச்சர் கே.ஆர். நாராயணன், மாநில முதல்வர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு பதில் அனுப்பிய அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவ், இதற்கு தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்த அதே வேளையில், மய்ய அரசு அமைச்சர்களின் மெத்தனத்தைப் புரிந்து கொண்டவராக, மய்ய அரசின் ஆலோசனைப்படி மய்ய அமைச்சர்களும் சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு உட்சபட்ச ஒத்துழைப்பை வழங்கச் செய்ய வேண்டுமென்றும் கோரியிருந்தார்.

2011 – 12 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம், இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கி வலியுறுத்தும் சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான முதன்மை இலக்கை அடையும் பொருட்டு, அதை வலியுறுத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது என்பதை ஆராயும் ஒரு தருணமாக இது இருக்கிறது.

மிக அண்மையில் சூன் 27, 2005 அன்று 57 ஆவது தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் சமூக – பொருளாதார மேம்பாட்டு இடைவெளி 10 ஆண்டுகளுக்குள் நீக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் தெளிவான பொருள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் இந்திய சமூகத்தின் எல்லா அளவுகோலின்படியும் முற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இணையாக முன்னேற வேண்டும் என்பதே.

வரவு செலவு திட்டம் வெளியிடப்படுவதற்கு சற்று முன்னதாக சிறப்பு உட்கூறு திட்டத்தின் மோசமான நிலை தற்செயலாக வெளிச்சத்திற்கு வந்தது. பொது நல விளையாட்டு (Common Wealth Games) 2010 தொடர்புடைய சர்ச்சைகளும், ஊழல்களும், குறிப்பாக இந்த விளையாட்டுப் போட்டிக்காக டில்லி மாநில அரசின் சிறப்பு உட்கூறு திட்டத்தின் பெரும் பங்கு தொகை, எந்த தொடர்பும் இல்லாத "காமன் வெல்த்' விளையாட்டுப் போட்டி திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்ட செய்திகள் வெளிவந்தன. ஆகஸ்ட் 31, 2010 அன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சரே 678.91 கோடி ரூபாய் – திருப்பி விடப்பட்டதாக ஒப்புக் கொண்டார்.

தற்செயலாக, டெல்லியில் வெளிவந்த அந்த உண்மை நிலைதான், பல்வேறு மாநில அரசுகளின் நிலையாகவும் உள்ளது. திட்டக் குழுவின் உறுப்பினர் நரேந்திர ஜாதவ் தலைமையில் சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பழங்குடியினர் துணை திட்டம் குறித்து மீள்பார்வை செய்ய அமைக்கப்பட்ட கட்டளைக் குழு, மய்ய அரசு அமைச்சரவையின் நிலைப்பாட்டில் தன் அறிக்கையை நவம்பர் 29, 2010 அன்று அளித்தது. திட்டக் குழுவின் உறுப்பினரான நரேந்திர ஜாதவ் இக்குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.

வரவு செலவு திட்டம் 2011 – 12இல் திட்டச் செலவு 4,41,546.75 கோடி ரூபாய், இது, மொத்த வரவு செலவில் 35.1 சதவிகிதமாகும். செலவுத் திட்டம் பகுதி ஒன்றின் 21,21ஏ அறிக்கையின்படி, பட்டியல் சாதியினர் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒதுக்கீடு மட்டும் 4,639.34 கோடி ரூபாய். அதுபோல் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு மட்டும் 4,245.55 கோடி ரூபாய் இது, முந்தைய வரவு செலவு திட்டத்தில் செய்ததைவிட முறையே 41.74 மற்றும் 21 சதவிதம் அதிகமாக இருந்தாலும், தற்போதைய ஒதுக்கீடு தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்ட (NREGS) நோக்கில், அதன் செலவீடோ சிறப்பு உட்கூறு திட்டத்தில்வெறும் 1.05 சதவிகிதம் (2011 பட்ஜெட் இல் 0.88 சதவிகிதம்) மற்றும் 0.96 சதவிகிதம்தான். இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்காக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் இருந்தாலும் (பட்டியல் சாதியினர் 16.2 சதவிகிதம், பழங்குடியினர் 8.2 சதவிகிதம்) அதிகமாக சுரண்டப்படும் மக்களாகவும் அவர்களே இருக்கிறார்கள்.

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பயன் பெறுவதாகக் காட்டப்படும் திட்டங்களில் 20 சதவிகித திட்டங்கள், பிரிவு 2, அறிக்கை எண். 21லும் (SC) 21–ஏ விலும் (ST) பட்டியலிடப்பட்டுள்ளன. இரு பிரிவினரின் புள்ளிவிவரங்களையும் இம்முறை தனித்தனி பிரிவாகக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக அவை ஒன்றாக குழப்பி காட்டப்பட்டு வந்தன. இந்த பிந்தைய திட்டங்களின் மதிப்பு பட்டியல் சாதியினருக்கு 25,911.66 கோடி ரூபாய் மற்றும் பழங்குடியினருக்கு 13,125.80 கோடி ரூபாய். அவை மொத்த ஒதுக்கீட்டில் முறையே பட்டியல் சாதியினருக்கும், பழங்குடியினருக்கும் – 5.87 சதவிகிதம் மற்றும் 2.97 சதவிகிதம் என்ற அளவிலும் இருக்கிறது.

இரண்டு பிரிவுகளையும் இணைத்துப் பார்த்தால், மொத்த திட்ட மதிப்பீட்டில் பட்டியல் சாதியினருக்கு 8.98 சதவிகிதமாகவும், பழங்குடியினருக்கு 5.11 சதவிகிதமாகவும் இருக்கிறது. பிரிவு 2 திட்டங்கள் மொத்தமாக 8.84 சதவிகிதம். நிதி அளவு ரீதியாக முன்னேற்றம் தெரிந்தாலும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை அளவின்படி பார்த்தால், பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை.

68 அமைச்சகத் துறைகளில், 31 துறைகள் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. 25 துறைகள் பட்டியல் சாதியினருக்கும், 26 துறைகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடுகள் செய்துள்ளன. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 21 துறைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் எஸ்.சி./எஸ்.டி. இரண்டிற்கும் சேர்த்து. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்த முன்னேற்றங்களெல்லாம் நரேந்திர ஜாதவின் தலைமையிலான அதிரடி குழுவின் செயல்பாடுகளால் நடந்தவை.

அக்குழு கணக்கிட்டபடி, 2011 – 12 மய்ய திட்டத்தில் அது பரிந்துரை செய்த சதவிகிதங்கள் செயல்படுத்தப்பட்டால், மொத்த மய்ய திட்டத்தில் 14.3 சதவிகிதம் சிறப்பு உட்கூறு திட்டத்திற்கும் (நிர்ணயித்தது 16.2 சதவிகிதம்) பழங்குடியினர் துணை திட்டம், நிர்ணயிக்கப்பட்ட 8.2 சதவிகிதத்திற்கும் அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 16.2 சதவிகிதத்தை அடைய வேண்டுமானால், 6,118 கோடி ரூபாய் அல்லது 6,100 கோடி ரூபாய் மேலதிகமாக தேவைப்படும். இந்த தொகை 2011 – 12 பட்ஜெட் அல்லது ஆண்டுத் திட்டத்தில் உறுதி செய்யப்பட்டு, திட்டக் குழு அல்லது சமூக நீதி மற்றும் அதிகாரப் படுத்தும் துறை குறிப்பிட்ட பட்டியல் சாதியினர் நோக்கிலான திட்டங்களை வைத்திருக்குமாறு அமைச்சகங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், 2011 – 12 பட்ஜெட் ஆவணங்களின்படி, பட்டியல் சாதியினர் வளர்ச்சிக்கு 7.23 சதவிகிதம் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, அளவு ரீதியான இடைவெளி என்பது அதிரடி குழுவில் கணக்கிடப்பட்ட 6,000 கோடி ரூபாய்க்கு மாறாக, அதில் ஏழு மடங்கு அதிகமான 40,980 கோடி ரூபாய் பழங்குடியினருக்கு அதிரடி குழுவில் எதிர்பார்த்த தொகைக்கு மாறாக, 18,835 கோடி ரூபாய் இடைவெளி விழுந்துள்ளது.

இதில் அதிரடி குழுவின் வழிமுறைகள் மூலம் மாநில அரசுகளின் திட்டங்களுக்கு மய்ய அரசின் உதவியை கழித்து விட்டாலும், சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பழங்குடியினர் துணை திட்ட நிதியறிக்கைகள் குறைந்தபட்ச தொகைக்கே கணக்கிடப்பட்டாலும் இடைவெளி, சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு 24,570 கோடி ரூபாயாகவும் பட்டியல் சாதியினர் – பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு 15,350 கோடி ரூபாயாகவும் இருக்கும். சொல்லப்போனால், மாநில அரசுகள் மய்ய அரசின் உதவியை கழிக்க வேண்டிய அவசியமே இல்லை.

சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பழங்குடியினர் துணை திட்டம் இந்த கூறுகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். அதிரடி குழு கருத்துப்படியும், சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பழங்குடி துணை திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுவது, அந்த கூறுகளுக்கும் இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, ஒதுக்கீடு என்பது அனைத்து கூறுகளிலும் செய்யப்பட வேண்டும்.

மொத்த இடைவெளி தொகையான 40,980 கோடி ரூபாய் 24,570 கோடி ரூபாயோ அல்லது சிறப்பு உட்கூறு திட்டத்திற்கான அதிரடி குழு தொகை 6000 கோடியோ அல்லது இடைவெளி தொகையான 18,835 கோடி ரூபாயோ அல்லது பழங்குடி துணை திட்டத்திற்கான 10, 530 கோடி ரூபாயோ இதில் எதையுமே இந்த பட்ஜெட் தரவில்லை.

women_321இவற்றில் தரத்தின் அளவில் கூடுதல் முக்கியத்துவம் செலுத்த வேண்டியது பற்றி யாரும் பேசியதாகவே தெரியவில்லை. சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பழங்குடி துணை திட்டத்தின் பகுதியாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு மய்ய அமைச்சகங்களால் ஒதுக்கப்படும் நிதிகள் மிக செயற்கையாக, அறிவுப்பூர்வமற்று ஒதுக்கப்படுவதாக நம்ப காரணங்கள் உண்டு. இந்த ஒதுக்கீட்டில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் எவ்வாறு நேரடியாகவோ, தனிப்பட்ட முறையிலோ அய்யத்துக்கிடமில்லாமல் பலன் பெறுவார்கள் என்ற கணிப்பீடுகளே இருந்திருக்காது.

ஒதுக்கீடுகள் வெறும் காகித வார்த்தைகளாக மட்டும் இருந்துவிடாமல், அவற்றை கருத்தாய் செயல்படுத்த – ஒவ்வொரு அமைச்சகமும், துறையும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இந்த நேரம் தனிப்பட்ட, அய்யமற்ற பலன்களை குறிப்பிட வேண்டும். திட்டக்குழு, சமூக நீதி மற்றும் அதிகாரப்படுத்தும் துறையின் அமைச்சரும் இதைத் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும். அதை செய்யும்போது அய்.அய்.டி., அய்.அய்.என். போன்ற நிறுவனங்களை சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பழங்குடியினர் துணை திட்டத்தின் பகுதியாகக் காட்டி, அதன் கட்டட நிதியாக ஒரு பகுதியை ஒதுக்க முயற்சிக்க கூடாது. இந்த நிறுவனங்கள் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினராகவோ அல்லது அவர்களின் பெரும் நலன்களுக்காகவோ இயங்கினால் மட்டுமே அவ்வாறு செய்யலாம்.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (NREGS) பட்டியல் சாதியினருக்கான ஒதுக்கீடு, சிறப்பு உட்கூறு திட்டத்தைப் போன்றதே என்பது தவறான கருத்து. அது, பட்டியல் சாதியினரை உடல் உழைப்பு தொழிலாளர்கள் என்று வரையறுக்கும் சாதிய கோட்பாடே ஆகும். பட்டியல் சாதியினருக்கு சிறப்பு கூறுத் திட்டம் NPGEAஆல் கிடைக்கும் நேரடி மற்றும் தனிப்பட்ட பலன்களின் மதிப்பைக் கொண்டே சிறப்பு உட்கூறு திட்டம் கணக்கிடப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, பட்டியல் சாதியினர் நிலங்களில் சமுதாய ஆழ்துளை கிணறுகள், பட்டியல் சாதியினருக்கு கட்டப்பட்ட தரமான வீடுகள், பட்டியல் சாதியினர் குடியிருப்புகளிலிருந்து பள்ளி, மருத்துவ நிலையம் மற்றும் சுடுகாடுகளுக்கு போய்வர போடப்பட்ட தரமான சாலைகள், பட்டியல் சாதியினர் குடியிருப்புகளில் கட்டப்பட்ட சமூகப் படிப்பகங்கள், பட்டியல் சாதியினர் குடியிருப்பில் அங்கன்வாடிகளுக்கு கட்டடங்கள் கட்டுவது மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்துவது போன்றவை. மிகச் சிறந்ததாகக் கருதப்பட வேண்டியது, உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் மீட்கப்பட்ட லட்சக்கணக்கான ஏக்கர் உவர் நிலங்களை, நிலமில்லாத கிராமப்புற பட்டியல் சாதியினர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பது.

இதைப் போல பல எடுத்துக்காட்டுகளை கூற முடியும். இவை அனைத்தும் கூறும் செய்தி ஒன்றுதான். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு காட்டப்பட்ட செலவினங்கள் உறுதியாக, உணரத்தக்க வகையில் அவர்களுக்கு பலனளிக்கச் செய்ய வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட இடைவெளி விகிதங்கள், சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு முறையே 16.2 மற்றும் 8.2 சதவிகிதத்தை சமன் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள், திட்டக் குழு மற்றும் இரண்டு மய்ய (nodal) கூர் நோக்கு அமைச்சகங்களின் முயற்சியால் மொத்தமாக வழங்கப்பட்டால் – துணுக்குகளுக்கு செலவு செய்து வீணாக்கப்படாமல், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரிடையே, சூன் 2005 இல் பிரதமர் மற்றும் திட்டக் குழு தலைவர் சொன்னதுபோல, பிற முன்னேறிய சாதிகளிடையே எல்லாவித வளர்ச்சி, நல்வாழ்வு அளவுகளிலும் இடைவெளியை நீக்குவதற்காக செலவு செய்யப்பட வேண்டும்.

இவையனைத்தும் ஒரு குறிக்கோளோடு முறையாக செய்யப்பட்டாலும், அது பாதி கிணறு தாண்டுவது போலத்தான். அதை முழுமையாக செய்து முடிப்பதற்கு 1982 முதலான செயற்குழு, வழிகாட்டு குழு மற்றும் 1996, முதல் பொதுப் பரப்பில் உள்ள ஆவணங்கள் (எடுத்துக்காட்டாக, தலித் அறிக்கை 1996, இமாலயா பிரகடனம் 2004 மற்றும் குறைந்த பட்ச வரைவு திட்டம் 2009) இவற்றால் மட்டுமே முடியும். மய்ய திட்ட செலவினம் மொத்தத்தில் மக்கள் தொகைக்கேற்ற (தற்போது 16.2 சதவிகிதம் மற்றும் 8.2 சதவிகிதம்) அளவு, மற்ற துறைகளுக்கு ஒடுக்கப்படுமுன் சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டம் தனியே பிரிக்கப்பட வேண்டும்.

அதேபோல, ஒவ்வொரு மாநில திட்டத்திலும் சிறப்பு உட்கூறு திட்டம், பழங்குடியினர் துணைத் திட்டம் என்று மக்கள் தொகை சதவிகிதத்திற்கேற்ப தனியே எடுத்து வைக்கப்பட வேண்டும். இவற்றினுள் மய்ய, மாநில அரசு திட்டங்களின் சிறப்பு உட்கூறு திட்டம், பழங்குடியினர் துணைத் திட்டம் பிரிக்கப்பட்ட தொகை, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு வளர்ச்சி தொகைகளுக்கேற்ப முன்னுரிமை கொடுத்து ஒதுக்கப்பட வேண்டும்.

அத்தகைய திட்டங்கள் ஒவ்வொரு வட்ட / வட்டாட்சி / மண்டல அளவில் ஒரு சிறப்புப் படை அமைத்து, அங்குள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரோடு இணைந்து, அவர்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய நிலங்களை அடையாளம் கண்டு, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, மானியத்துடன் அந்நிலங்களை நிலமற்ற பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு கொடுப்பதை கண்காணிக்கவும் வேண்டும். அதோடு 2004 இல் குடியரசுத் தலைவர் உரையிலும், அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்த பட்ச செயல்திட்டத்திலும் குறிப்பிடப்பட்டு நிறைவேற்றப்படாத பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் நிலங்களில் பாசனவசதி செய்து கொடுப்பது, ஆழ்துளை கிணறுகள் தோண்டுவது போன்றவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.

இது, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு பொருளாதார விடுதலை மற்றும் சமூக உயர்நிலையை தருவது மட்டுமல்லாது, உணவு உற்பத்திக்கும் மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும். தகுதியானவர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் குறித்த சி. ரங்கராஜன் குழு பற்றிய அச்சத்தைப் போக்கும். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு நிலங்களை அளித்தால், அதிகப்படியான உணவு உற்பத்தியை அவர்களே உறுதி செய்து கொள்வார்கள்.

கல்வித் துறையில் செய்ய வேண்டியது, அங்கன்வாடிகளை தொடக்கப்பள்ளிகளாக தரம் உயர்த்தி, எல்லா பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி அளிக்க வேண்டும். 2005 இல் அமைக்கப்பட்டு, 2008 இல் தலித் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட திட்டமான – பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் எல்லா பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்காகவும் (கிறித்துவ, முஸ்லிம் குழந்தைகள் உட்பட) உயர்தர உறைவிடப் பள்ளிகளை உருவாக்க வேண்டும்.

இந்த முன்னெடுப்புகள், பட்டியல் சாதியின் குப்பங்கள் மற்றும் பழங்குடியின கிராமங்களை எல்லா வசதி வாய்ப்புகளுடனும் கூடிய தர உயர்த்துதலோடு இணைத்து நடக்க வேண்டும். தலித் குடியிருப்புகளில் அவர்களின் குழந்தைகளுக்கு கணினியுடன் கூடிய படிப்பு அரங்கம், 24 மணி நேர மின்சாரம், சிறப்புப் பயிற்சி திட்டங்கள், உயர் கல்வி, தொழில்நுட்ப நிலையங்களில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை முழுமையாகப் பெறுவது போன்றவை அவை. இன்ன பிற கடுமையான பணியாற்றி ஒழிக்க வேண்டியவை தீண்டாமை, கொத்தடிமை, வன்கொடுமை போன்றவை.

பிற்படுத்தப்பட்டோரை எல்லா வாய்ப்பு வசதிகளையும் அளித்து முன்னேறிய சாதியினருக்கு இணையாகக் கொண்டு வருவது பற்றி யாரும் தீவிரமாக சிந்தித்ததாகவே தெரியவில்லை. அதைச் செய்ய என் தலைமையில் உருவாக்கப்பட்ட 2010 – பத்தாவது திட்டத்தின்படி, பிற்படுத்தப்பட்டோரை அதிகாரப்படுத்தும் திட்டக்குழு அறிக்கை (Report of Planning Commission's Working Group on the Empowerment of backward Classes in the Tenth Plan 2010), அரசின் ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு அறிக்கைகளை போல தூசு படிந்து கொண்டே போகிறது.

இந்தியச் சூழலில், மனித மற்றும் அரசமைப்பு விழுமியங்கள், சமூக நீதியின் மீது அக்கறை கொண்டவர்கள் – பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், குறிப்பாக பாரம்பரியமாக உள்ள நிலமற்ற ஏழை பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக மனமிரங்க வேண்டும். அவர்கள் பிரதமராகவோ, மாநில முதல்வர்களாகவே, அமைச்சர்களாகவோ, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, அரசியல் தலைவர்களாகவோ, பொருளியல் நிபுணர்களாகவோ, அய்.ஏ.எஸ். அதிகாரிகளாகவோ, கல்விமானாகவோ , மத்திய – மாநில அரசு உயர் அதிகாரிகளாகவோ யாராக இருந்தாலும் – தாமே முன்வந்து ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்புக்காகப் பணியாற்ற வேண்டும்.

நம் ஊடகங்கள், பாராட்டுக்குரிய பல செயல்களை செய்தாலும், பட்ஜெட்டில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரை அலட்சியப்படுத்தியது, பிற்படுத்தப்பட்டோரை முற்றிலும் மறந்து போனது பற்றி பேசவேயில்லை. ஊடகங்களின் இந்த தவறான பார்வை விரைவில் மாறும் என்றே எதிர்பார்க்கிறேன். 

நன்றி: 'பிரண்ட்லைன்' தமிழில்: மாணிக்கம்

Pin It