eelam_sceneமீளாத் துயர்க்கடலில்
திக்கறியாமல் தத்தளிக்கிறேன்
துயரத்தின் நீலம் சுற்றிச்சூழ
கரங்களை துயர்நீரில் தடைபடாமல்
காற்றின் குறுக்கே வீச முயன்று தோற்கிறேன்
கரை தென்படாமல்
தொடுவானம் வரை
துயரத்தின் உவர்ப்பு நீலநிறத்தில்
பேரலையாய் நினைவுகள் எழும்பி மோத
நினைவிழக்கிறேன்

கண்விழிக்கையில்
சமதளத்தில் என் உடல்
கரங்களை வீசுகிறேன்
துயர்நீர் தட்டுப்படவில்லை
காற்றில் அலைகின்றன கரங்கள்
கோப்பையில்
துயரக்கலப்படமில்லா
நீலநிறமற்ற நீர்
பாய்ந்து பருகுகிறேன்
அடைத்த செவிகளில்
இதுவரை ஒலித்த ரீங்காரம்
காணாமல் போன நொடியில்
பேரிரைச்சலொன்று செவிப்பறையைத் தாக்க
சுற்றிலும் துயரத்தின் பேரலைகள்
நினைவுகளாய் மோதும் பெருஞ்சத்தம்
நீலநிற கண்ணீரின் ஆழத்தில்
கண்ணாடி அறையில் நான்
சுவர்களைத் துளைத்து துயரைக் கடந்து ஊடுருவும்
என் விழிகளுக்கு
கரை தென்படவில்லை
இம்முறை தொடுவானமும் கூட
பேரலை பொங்கி மோத
மீண்டும் நினைவிழக்கிறேன்

இப்போது கண்விழிக்கையில்
மண் தரையில் என் உடல்
துயரத்தின் உவர்ப்பில்லை
நினைவுகளாய் பேரலைகள் இல்லை
கரங்களை அசைக்கிறேன்
காற்றில் சப்தமெழுப்பி அலைகின்றன அவை
மகிழ்ச்சி பொங்க
எழுந்து கால்களை ஊன்ற எத்தனிக்கிறேன்
நிலைதடுமாறி வீழ்கிறேன்
ஓர் உயிரற்ற உடல்மீது

நாசிக்குள் மயிர் கருகிய மணம்
குருதியின் வாடை
தொடுவானம் வரை மனித உடல்களும் சதைக்கூழமும்
தொலைவிலே துப்பாக்கிகளின் ஓசை
மனிதர்களின் பேரவலக் குரல்கள்
காலடியில் குண்டுகளின் அதிர்வு
துப்பாக்கிகள் மவுனிக்கும் ஓசையும்
துல்லியமாய் கேட்கிறது
கூடுகளிலிருந்து உயிர்பறவை சிறகடிக்கும் சப்தமும்
செவிவழி பாய்ந்து இதயத்தைத் தைக்கிறது
கண்ணெதிரே துயர்நீரின் கடல்
இப்போது செந்நிறத்தில்
நீலநிறத்தினதைவிடப் பெரியதாய்
 
கண்ணீர் நதியாய் பெருக்கெடுத்து
நிறபேதமின்றி செங்கடலோடு கலக்கிறது
உள்ளிருந்தும் புறத்தேயிருந்தும்
துரோகத்தின் நாற்றம்
காற்றில் பரவி மூச்சையடைக்க
இம்முறையும் நினைவிழக்கிறேன்

மீண்டும் கண்விழிக்கையில்
அதே பழைய நீலநிற துயர்நீர்
இப்போதும் பேரலையாய் துன்ப நினைவுகள்
இம்முறையும் திக்கறியாமலிருக்கிறேன்
இனி
விழிகளால் ஊடுருவி
தேடப்போவதில்லை
தொடுவானத்தையோ கரையையோ
செங்கடலைப் போலல்ல
நீலக்கடலில் ஒரு துரும்பாயினும்
கிட்டிவிடும் தப்பிக்க

- கவின் மலர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.