மழை சேரும் வான் வெளியில்

பறவைகளைக் கொன்று

ரத்தக்களரியில்  எருமைகளைப் பூட்டுகிறாய்

மரணங்களை  அறுவடை செய்த

கைகளில் வீசும் மாமிச வாடையுடன்

புரள்கிறது  உன் களவின் சிரிப்பு

நிலத்தை பலிபீடமாக்கி நடத்திய

கொலைகளின் இருட்பிரதேசங்களை

விழிகளுக்குள் அடைத்துக் கொண்டவன் நீ

யாருமற்ற  நிலமெங்கிலும் நீ நிகழ்த்திய

மரணங்கள்  அலையும்

கொடூரத்தின் கணம் கடக்க முடியாததாய்

உறைந்திருக்கின்றது

எண்ணிலடங்கா பெயர்களை

கொலைப் பட்டியலாக்கிவிட்டு

எதுவுமே நடவாததைப் போல

ஏர் பிடித்து மகிழ்கொண்டாடுகிறாய்

உயிர்களை  வாழ வைக்கும் உழவனின்

கலப்பை

உயிர்களை வீழ வைத்த உன்னிடம் ?

தார்க்குச்சியை  சுழற்றி

எருமைகளை  மிரட்டும் கொல்லேர்க்காரனே!

மிரண்ட எருமைகளும்

திரும்பும்  நாளொன்று மீளும்

சகதி பூசப்பட்ட  உன் திருமேனியை

அப்போது

யார் காணக்  கூடும்?

Pin It