தலைவர் அவர்களே! வெளியுறவுக் கொள்கை மீதான இந்த விவாதத்தில், ஒருவர் அதிகபட்சம் என்ன செய்ய முடியுமென்றால், அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு அடிப்படையாக இருக்கும் கோட்பாடுகளை விவாதிப்பதுதான். இதற்கு மேல் எதுவும் செய்வதற்கு நேரமில்லை. கோட்பாடுகள் மிகவும் மதிப்புக்குரியவை என்பதில் அய்யமில்லை. ஆனால், அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக வெளியுறவுக் கொள்கை தொடர்பாக செயல்படுவோருக்கு கோட்பாடுகள் மீது பெருமளவு வெறுப்பு இருக்கிறது. அவர்கள் விஷயங்களை, தற்காலிக அடிப்படையில், எத்தகைய கோட்பாடுகளுமின்றி, ஒவ்வொரு பரிமாற்றத்தையும் தனித்தனியாக செயல்படுத்த விரும்புகின்றனர்...
நமது பிரதமருக்கு சில கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் அவர் செயல்படுகிறார். அவர் அடிப்படையாகக் கொண்டுள்ள கோட்பாடுகள், நமக்கு பாதுகாப்பான வழிகாட்டியாக இருக்குமா? இந்த நாட்டின் வருங்காலத் "தலைவிதி'யை ஆதாரமாகக் கொள்வதற்கு அவை பொருத்தமான கோட்பாடுகள்தானா என்பதை இந்த அவைதான் முடிவு செய்ய வேண்டும். அது மட்டும்தான் நாம் விவாதிக்க வேண்டிய ஒரே பிரச்சினையாகும். இந்தக் கோட்பாடுகளைப் பற்றி மட்டுமே நான் பேசப் போகிறேன்.
பிரதமர் அடிப்படையாகக் கொண்டு முன் செல்லுகின்ற கோட்பாடுகள் அவரே அவ்வாறு கூறியிருக்கிறார்-முக்கியமாக மூன்று ஆகும். ஒன்று அமைதி. இரண்டாவது, கம்யூனிசத்திற்கும் சுதந்திர ஜனநாயகத்திற்கும் இடையிலான சகவாழ்வு. மூன்றாவது, "சியாட்டோ'வுக்கு (தென் கிழக்கு ஆசிய ராணுவக் கூட்டணி) எதிர்ப்பு. அவருடைய வெளியுறவுக் கொள்கை அடிப்படையாகக் கொண்டுள்ள மூன்று முக்கிய தூண்கள் இவையே. அய்யா, இப்பொழுது, இந்தக் கோட்பாடுகளின் செல்லத்தக்க தன்மை மற்றும் இவை போதுமானவையா என்பதை மதிப்பிடுவதற்கு, நாம் அக்கறை கொண்டுள்ள இந்தக் கோட்பாடுகள் எதற்காக வகுக்கப்பட்டுள்ளனவோ, அதனுடைய இன்றைய பிரச்சினைகளின் பின்னணியைப் பற்றி ஓரளவு அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
இப்பொழுது, இந்தப் பின்னணியானது, உலகில் கம்யூனிசம் விரிவடைந்து வருவதைத் தவிர வேறொன்றுமில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. இன்று உலகம்-அதாவது நாடாளுமன்ற மற்றும் சுதந்திர ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அந்தப் பகுதி உலகம் சந்திக்கின்ற பிரச்சினையை, அதாவது உலகில் கம்யூனிசம் விரிவடைந்து வருகிற பிரச்சினையை ஒருவர் கவனத்தில் கொண்டாலொழிய, அந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுவதோ அல்லது அந்தக் கோட்பாட்டின் செல்லத்தக்க தன்மையையும் அதனுடைய இயல்பையும் புரிந்து கொள்வதோ சாத்தியமில்லை. இது தொடர்பாக நான் சேகரித்துள்ள சில புள்ளி விவரங்களை இந்த அவையில் அளிக்க விரும்புகிறேன். மிக நீண்ட கடந்த காலத்திற்குள் நான் போகப் போவதில்லை. ஆனால், (இரண்டாவது உலகப்) போர் முடிவுக்கு வந்த 1945 மே மாதத்திலிருந்து நான் தொடங்கப் போகிறேன். 1945 மே மாதத்திற்குள் ரஷ்யா, பத்து அய்ரோப்பிய நாடுகளைத் தன்வயப்படுத்திக் கொண்டது :
1. பின்லாந்து 2. எஸ்தோனியா 3. லாத்வியா 4. லிதுவேனியா 5. போலந்து 6. செக்கோஸ்லோவாக்கியா 7. ஹங்கேரி 8. ருமேனியா 9. பல்கேரியா 10. அல்பேனியா. இதோடுகூட, ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, நார்வே ஆகியவற்றின் சில பகுதிகளையும் போர்ன்ஹோல்ம் என்ற டேனிஷ் தீவையும் ரஷ்யா தன்வசமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பத்து அய்ரோப்பிய நாடுகளில் மூன்றை ரஷ்யா, நேரடியாகவே தன்னுடன் இணைத்துக் கொண்டு, அவற்றைத் தனது நாட்டின் ஒரு பகுதியாக்கிக் கொண்டு விட்டது. எஞ்சிய ஏழு நாடுகள் ரஷ்யாவின் செல்வாக்கின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ரஷ்யாவின் இந்த அய்ரோப்பிய நாடு பிடிப்பு மொத்தம் 85,000 சதுர மைல் நிலப்பரப்பைத் தன்வயமாக்கிக் கொண்டது; 2 கோடியே 30 லட்சம் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.
தொலைக் கிழக்கில் ரஷ்யா, சீனாவின் தான்னுதுவா என்ற பிரதேசத்தையும், மஞ்சூரியா, கொரியாவில் 38ஆவது அட்ச ரேகைக்கு வடக்கில் உள்ள பிரதேசம், தெற்கு சகாலின் முதலியவற்றையும் பிடித்துக் கொண்டுள்ளது. தொலைக் கிழக்கில் இந்தப் பிரதேசம் மொத்தம் 20,000 சதுர மைல்களைக் கொண்டது; 5 லட்சம் மக்களை உள்ளடக்கியது. தென் கொரியாவையும், இந்தோ-சீனாவையும் மேலும் ஆக்கிரமித்ததன் மூலம் அவர்கள் அந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.
இந்தப் பின்புலத்தில்தான் இந்த அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு அடிப்படையாக உள்ள கோட்பாடுகளின் தன்மையைப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று நான் கூறுகிறேன். முதலாவதாக, அமைதிக் கோட்பாட்டை நான் எடுத்துக் கொள்கிறேன். நாம் அமைதியை விரும்புகிறோம். யாரும் போரை விரும்புவதில்லை. ஒரே கேள்வி என்னவெனில், இந்த அமைதியின விலை என்னவாக இருக்கப் போகிறது என்பதுதான். இந்த அமைதிக்கு என்ன விலையை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்? நாடுகளைப் பிரிவினை செய்வது மற்றும் தனித்தனி நாடுகளாக்குவது என்று கூறப்படுவதன் மூலம் அமைதி வாங்கப்பட்டு வருகிறது என்பது வெளிப்படை.
-தொடரும்