கடந்த இதழில் வெளிவந்த பேராசிரியர் ராமு. மணிவண்ணன் பேட்டி இந்த இதழிலும் தொடர்கிறது

இலங்கைக்கு நேரடியாக சென்று ஈழச் சிக்கலைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததா?

2002–க்குப்பிறகு தொடர்ந்து எல்லா ஆண்டுகளும் குறைந்தது இரண்டு முறையாவது இலங்கைக்கு சென்று வந்துவிடுவேன். அமைதிப் பேச்சுவார்த்தையின்போது என்ன மாதிரியான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிய, அய்.நா. அவை சார்ந்த இயக்கங்கள் சார்பில் மேற்பார்வைக்காகப் போயிருந்தேன். அதன் மூலம் மற்ற இயக்கங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இலங்கை அரசின் அதிகாரிகள், இலங்கையின் சமூக அமைப்புகள், தேசிய அமைப்புகள் மற்றும் போராளிகள் ஆகியோருடன் பேசக்கூடிய வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன.

விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் பேசும்போது என்னுடைய தனிப்பட்ட கருத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். வடக்கு மாகாண தளபதியாக இருந்த இளம்பரிதி எனக்கு நல்ல நண்பர். இவரை முதன்முறை சந்தித்த போது காந்தியின் "சத்திய சோதனை' புத்தகத்தை கொடுத்தேன். புத்தகத்தை கொடுக்கிறபோது இரண்டு பேரும் சிரித்தோம். நான் பேசுவதற்கு முன்பே தளபதி இளம்பரிதி, “அமைதியாகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமும். எங்களுடைய தந்தை மற்றும் பெரியவர்கள் அனைவரும் அமைதி வழியில் போராடி ஓய்ந்த பிறகுதான் வேறு வழியில்லாமல் நாங்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்தோம்'' என்றார்.

அமைதிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடுகிறேன் என்ற முறையில், எனக்கு இது பெரிய மனப் பரிட்சையாக, கொள்கைப் பரிட்சையாக இருந்தது. ஆயுதம் இல்லாமல் ஜனநாயகப் புரட்சியை நடத்த முடியுமா? இதே நிலையில் காந்தி இருந்திருந்தால், என்ன முடிவு எடுத்திருப்பார் என்று யோசிக்கும்போது, காந்தியம் சார்ந்த ஒரு போராட்டம் உருவாகக் கூடிய எல்லா வாய்ப்புகளையும் – இலங்கை அரசு ஒடுக்கவும், அழிக்கவும் முனைந்திருக்கிறது. காந்தி தன்னுடைய அரசியல் சிந்தனையிலே கூட, எல்லா உரிமைகளையும் இழந்த பிறகு ஒரு மனிதன் தன்னுடைய மானத்தை, தன்னுடைய சுய உணர்வுகளைக் காப்பாற்ற, கிடைக்கின்ற ஆயுதத்தை கையிலெடுத்துப் போராடலாம் என்று கூறியிருக்கிறார். அதற்காக ஆயுதப் போராட்டம்தான் ஒரே வழி என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அதுதான் கடைசி வழி என்ற நிலையில், போராடித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

தமிழீழத்திற்கான தேவையை நீங்கள் உணர்கிறீர்களா?

ஈழம் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. இலங்கை அரசிடம் ஈழம் பற்றி ஒரு படி கீழே, ஒரு படி மேலே அரசியல் பேசலாமே ஒழிய – இலங்கை அரசின் அடிப்படை சிந்தனைகளை மாற்ற முடியாது. அடிப்படை சிந்தனைகள் என்னவென்று பார்த்தோமானால், ஒற்றை ஆட்சி, ஒற்றைத் தேசியம் என்ற ஒரே நிலைப்பாடு. இலங்கை அரசின் பார்வை மாறியிருப்பதாக 60 ஆண்டுகளில் எந்தவிதமான சாட்சியமும் இல்லை. ஒற்றுமையாக வாழ வேண்டிய வாய்ப்புகள் இல்லாத ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட நிலைப்பாட்டினால் – மனித உரிமைகளோடு, சம உரிமைகளோடு வாழ உரிமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறபோது, தனிநாடு இருந்தால்தான் இம்மக்களுக்கு அமைதி திரும்பும்; அடிப்படை வாழ்வாதாரங்கள் மற்றும் சுயமரியாதையோடு மக்கள் வாழக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என்றால், நிச்சயமாக தனிநாடு என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதே.

தேசம், தேசியம் என்பது மக்களை அதிகமாக ஒடுக்கி, அவர்களுடைய உரிமையை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக நான் தேசியத்தை குறை சொல்லவில்லை. தேசிய வாதம் என்ற கருத்தமைப்பைக் கொண்டு தனி மனித உரிமைகள், மக்களுடைய உரிமைகள் பறிக்கப்படும்போது தனி நாடுதான் தீர்வாக முடியும்.

முள்வேலிக்குள் ஈழத்தமிழர்கள் அடைக் கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடைய போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறதா? 

போராட்டம் உறுதியாக அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும். ஒரு வரலாற்று நெருக்கடியில் நாம் இன்று தேங்கி நிற்கிறோம். இந்தத் தேக்கம் நிலையானது அல்ல. இன்னொன்று, போரில்தான் வெற்றி, தோல்வியே தவிர, அரசியலில் வெற்றி தோல்வியே கிடையாது. எல்லாமே மாறக்கூடியதுதான். அரசியலில் நடைபெறுகின்ற மாறுதல் 50 ஆண்டுகளுக்கோ, 100 ஆண்டுகளுக்கோ, 200 ஆண்டுகளுக்கோ, 300 ஆண்டுகளுக்கோ நடைபெறுகின்ற ஒரு மாறுதல். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அரசியல் மாறுதல்களைப் பார்க்க முடிவதில்லை. ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய அரசியல் அனுபவத்தைப் பார்க்கும்போது, ஒரு 30 ஆண்டுக் கால நினைவுதான் அவனுக்கு இருக்கும். ஆனால் அரசியலுக்கு 100 ஆண்டுகள் வரை நினைவிருக்கும். அந்த 100 ஆண்டுகள் அரசியல் நினைவை எடுத்துக்கொண்டு போகிறபோது, நிச்சயமாக ஈழத்தில் மாறுதல் ஏற்படும். தற்பொழுதுள்ள சூழ்நிலையும் மாறக்கூடிய ஒரு சூழ்நிலைதான்.

அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆட்படுகிறார்கள் என்பதில் ஒரு பாதிதான் உண்மை இருக்கிறது. ஒடுக்கும் மக்களுக்கும் சரி பாதியாக இந்த பாதிப்பு இருக்கும். சமூகத்தினுடைய சிந்தனைகளை அது பாதிக்கும். அதனுடைய ஜனநாயகத்தின் கொள்கைகளை பாதிக்கும். இந்த மாதிரி பாதிப்புகளால் அந்த சமூகம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளக்கூடிய அமைப்பாக உருவாகும். எல்லாவற்றிற்கும் எதிரி வெளியில் இல்லை. இந்த மாதிரி ஜனநாயக மரபே இல்லாத ஒரு சமூகத்திற்கு அந்த சமூகமேதான் எதிரி. சு.ப. தமிழ்ச் செல்வன் ஒரு காலகட்டத்தில் சொன்னது மிகப் பெரிய உண்மை. இலங்கை அரசோடு உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால் என்ன பேச வேண்டும் என்று இலங்கை அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் தீர்மானிப் பதற்கு முன்னால் சிங்கள மக்கள் அதைத் தீர்மானிக்க வேண்டும். அதைத் தீர்மானித்தார்கள் என்றால், இலங்கைக்கே விடிவு காலம் வந்துவிடும். அந்தத் தீர்மானம் இல்லாத ஒரு சமூகம், இன்றைக்கும் ஒரு மிகப்பெரிய சமூகமாக இருக்கும் தமிழ் மக்களை சிறைப்பிடித்து முள்வேலிக்குள் அடைத்து, அங்கு தேர்தல் நடத்தலாம். அது அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேர்தல் என்று ஒரு சமூகம் ஏற்றுக் கொள்கிறது என்றால், இந்த சமூகத்தில் ஜனநாயகமே செத்துப் போய்விட்டது என்றுதானே பொருள்!

அவர்களுடைய போராட்டங்கள் கடும் பின்னடைவை சந்தித்துள்ள சூழ்நிலையில், அவர்கள் மீண்டும் போராடும்போது அவர்களுக்கு யார் ஆதரவு தருவார்கள்? 

இருபது மைல்களுக்கு அருகே ஓர் இனமே அழிக்கப்படும் சூழலில், மனசாட்சி என்று தமிழகத்தில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அழிவுக்கு துணை போகாமல் இருக்கக்கூடிய சக்திகள், நிச்சயமாக தமிழகத்தில் எதிரொலிக்கும். இன்றைக்கு இல்லையென்றாலும், என்றாவது ஒரு நாள் எதிரொலிக்கும். இந்தக் குரல்கள் இருக்கிறவரை ஈழத்தை ஒடுக்கவே முடியாது. நான் கண்மூடித்தனமாக இதைச் சொல்லவில்லை. வரலாற்றுப் பூர்வமாக சொல்கிறேன். இன்றைக்கு இந்தியாவின் எதிர்காலமும் பல ஆபத்துகளை நோக்கி இருக்கிறது. இன்னும் இருபது ஆண்டு களுக்குள் இந்தியாவிற்கு அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் வரும். அரசு நிலைக்கு அப்பாற்பட்ட போராட்டங்கள், அரசு நிலைக்கு அப்பாற்பட்ட சில அமைப்புகளால் உருவாகும்போது – இந்திய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய ஒரு பாரமாகவோ, மிகப்பெரிய ஒரு சவாலாகவோ உருவாகும்போது, அந்த மாதிரியான நிலைப்பாடுகள் மாறும் போது, இலங்கை அரசுக்கு இந்தியா கொடுக்கின்ற பலமோ, உதவியோ நிச்சயமாக அந்த நிலைப்பாடுகளில் ஒரு மாற்றம் வரும்.

காரணம், இந்தியா தன்னுடைய நம்பிக்கைக்குரிய, தன்னுடைய வரலாற்று வழி வந்த ஓர் இன மக்களின் நம்பிக்கையை இழந்த ஒரு நாடு. இன்றைக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிற ஒரு நாடு. இந்த நம்பிக்கையை திரும்பப் பெறஇந்தியாவுக்கு குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும். அவ்வளவு பெரிய துரோகத்தை இந்தியா செய்திருக்கிறது. ஆனால், சீனா போன்ற பிற நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவை விட அதிகமான பலத்தால் கைப்பற்றி வரக்கூடிய காலகட்டம் இருக்கிறது. இந்தியா தன்னுடைய நிலையிலிருந்து ஒரு வெகுமான நிலைக்கு, மய்ய நிலைக்கு வந்தாலே மிகப் பெரிய தொரு மாற்றம் உருவாகும். இந்த நிலைப்பாடுகளில் எந்த ஒரு காலகட்டத்திலேயும், இந்தியாவோ, மற்ற நாடுகளோ தமிழர் பிரச்சனையை முன்னிலைப்படுத்திப் பேசும்போது, இந்தப் பிரச்சனைக்கு இலங்கை எப்பொழுதுமே ஒரு தீர்வு காணவேண்டிய கட்டாயம் இருக்கும்.

பயங்கரவாதிகளுக்கும், போராளிகளுக்கும் இடையே உள்ள கோடுகள் அழிக்கப்பட்டு, அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்துபவர்கள் எல்லாருமே பயங்கரவாதிகள்தான் என்ற நிலை உருவாகி விட்டது. இத்தகு சூழலில் எந்த ஒரு விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன?  

இங்கே அரசு தவிர, ஆயுதம் ஏந்தும் எல்லா போராட்டங்களையும் பயங்கரவாதிகளின் போராட்டங்கள் என்று சொன்னாலும் என்னுடைய நிலைப்பாடு என்ன வென்றால், அரசு எந்திரமும் அரசும் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவைதான். எல்லாருமே ஒரே நிலையில்தான் இருக்கிறார் கள். அதனால் இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்திற்குப் போகக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த கட்டத்தினுடைய போராட்டமே என்னவென்றால் ஆயுதம் ஏந்திய அரசு அமைப்புகளுக்கும், ஆயுதம் ஏந்திய அரசு அல்லாத அமைப்புகளுக்கும் நடக்கக்கூடிய ஒரு போராட்டம் தான்.

ஜனநாயக ரீதியாக ஆயுதம் ஏந்தாமல் நாம் தீர்வு காண வேண்டும் என்றால் இதனுடைய கடமை, பொறுப்பு, அரசு இயக்கங்களுக்கும், அரசு சார்ந்த அமைப்புகளுக்கும் நிறைய உண்டு. காரணம், ஜனநாயக ரீதியாக நமக்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என முற்படும்போது. அதை சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் முன்னி லைப்படுத்தி, பொருளாதார ரீதியாக மாற்றங்களை கொண்டு வர முடியும். வெறும் ஆயுதம் ஏந்தியே பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால், அரசாங்கமும் அதே ஆயுதத்தால் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கருதுகிறது. ஆகையால் இந்த மனநிலைக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும் என்றும் சொல்லும்போது, அரசு அமைப்புகளுக்கும் அதே பொறுப்பு இருக்கிறது.

அரசியல் செய்யக்கூடிய நுணுக்கத்தையும், ஆயுதம் ஏந்திப் போராடக்கூடிய நுணுக் கத்தையும் இரண்டறக் கலந்து செய்தால்தான் இதற்கு ஒரு வழி பிறக்கும். அதற்காக ஆயுதம் ஏந்திய போர்தான் சரியான தேர்வு என்று நான் சொல்ல வரவில்லை. மக்கள் உரிமைக்காகப் போராடும் போது தன்னுடைய சுய உணர்வு, சுயமரியாதை, சுய நிர்ண யம் செய்யக்கூடிய, வேறு எந்த ஓர் அரசியல் போராட்ட வாய்ப்புகளும் பறிக்கப்படும் போது, எல்லா விதமான உரிமைகளும் இழந்த பிறகு மக்கள் கடைநிலையாக ஆயுதம் ஏந்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அந்த கடைநிலையிலும் அரசியல் செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தால்தான் நாம் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

அரசியல் ரீதியான முன்னெடுப்புகள் என்று பார்க்கும்போது, "நாடு கடந்த தமிழீழ அரசை' நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நிச்சயமாக, அரசியல் குரலை எந்தக் காலகட்டத்திலும் முடக்கவே கூடாது, முடக்கவும் முடியாது! நாடு கடந்த அரசு குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இன்றைக்கு இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்து, பிற ஜனநாயக ரீதியான அமைப்புகளை உருவாக்கினால், இந்த நாடு கடந்த அரசுக்கு வேலை இல்லை. அந்த நாடு கடந்த அரசுக்கு எப்பொழுதெல்லாம் வேலை இருக்கும் என்றால், இலங்கை அரசாங்கம் தன்னுடைய கடமையை செய்யாதபோதுதான். இதனுடைய தேவையே இல்லை என்றால் நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். இலங்கை அரசாங்கம் போருக்கு முன்னால் தன் நிலை 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி என்று பேசிக்கொண்டிருந்தது; பிறகு இந்தியாவோடு பேசும்போதெல்லாம் அரசியல் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றியும்; போர் முடிந்த பிறகு இந்தப் பேச்சுக்கு இடமே இல்லை என்றும், வடக்கு கிழக்கு பகுதிகளை ஒன்றிணைப்பதற்குக்கூட வாய்ப்பே இல்லை என்றும் கூறி விட்டது. இனிமேல் எல்லாமே ஒற்றை அரசாங்கம், ஒற்றை அரசமைப்பு என்று நேரடியாகவே சொல் கிறார்கள். இந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த ஒரு நிலைப்பாடு உள்ளது.

மேலும், இலங்கை அரசு பலமான ராணுவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அது எதை நோக்கிப் போகப் போகிறது? மற்ற வெளிப்புற எதிரிகள் இல்லாத ஒரு நாடு என்கிற போது, தமிழர்களைத்தான் எதிரிகளாக நினைக்கக்கூடிய ஒரு ராணுவ அமைப் பாக அது இருக்கும். வரலாற்றுப் பூர்வமாக எந்த ஒரு போரும் முடிவு நிலைக்கு வந்த பிறகு, அந்தப் போர் கட்டமைப்புகளை எல்லாம் எடுத்து உடைப்பார்களே தவிர, மறுபடியும் ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க மாட்டார்கள். பிறகு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஓர் அமைப்பை எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று சொல்கிறார்கள். இலங்கை, அரசியல் அமைப்பாக செயல்படக் கூடிய நாடாகத் தெரியவில்லை. மக்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் குரல் ஒடுங்கிக் கொண்டே போகிறபோது, இவர்களுக்காக உலகமே பேச வேண்டும். எல்லா மக்களும் பேச வேண்டும். தமிழ் ஈழத்தைச் சார்ந்த மக்களும், தமிழ் பேசக்கூடிய மக்கள் அமைப்புகளும், நாடு கடந்த ஓர் அரசமைப்பை நிச்சயமாக உருவாக்க வேண்டும்.

சந்திப்பு : அ. செந்தில் நாராயணன்

– பேட்டி அடுத்த இதழிலும் 

Pin It