தமிழ்நாட்டு மீனவர்களை ஒவ்வொரு நாளும் சுட்டுக் கொல்வதும், சிறை பிடிப்பதுமான அடாவடித்தனங்களை மேற்கொண்டு வரும் சிறீலங்கா அரசு, தமிழ்நாட்டு மீனவர்களையும், ஈழத் தமிழர்களையும், மேலும் அழித்தொழிக்க ஆயுதங்களை வழங்கப் போகிறது இந்திய அரசு. பாதுகாப்பு ஆயுதங்கள் மட்டுமே வழங்கி வருவதாக இதுவரை சொல்லி வந்த மன்மோகன்சிங் ஆட்சி, இனி அழித்தொழிப்பு ஆயுதங்களையும், அதற்கான பயிற்சிகளையும் தர முடிவு செய்து விட்டது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு’ (ஜூலை 1) முதல் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒரு பக்கம் பிரச்சனையைப் பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கிக் கொண்டு, மற்றொரு பக்கத்தில், போராட்டத்தைத் தீவிரப்படுத்த ஆயுதங்களை இந்தியா சிறிலங்காவுக்கு வழங்கப் போகிறது என்றும், 2008-2009 இல் 500 சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு மிசோராமிலுள்ள ராணுவ பள்ளியில் இந்திய ராணுவம் பயிற்சி வழங்கப் போவதாகவும் அந்த செய்தி கூறுகிறது. அதே போல மகாராஷ்டிராவில் தேவ்லாளி எனுமிடத்தில் சிங்கள கப்பல் படைக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப் போகிறதாம்.
ஆயுதம் வழங்குதல் - ராணுவப் பயிற்சிகளோடு இந்திய உளவுத் துறையும், சிங்கள உளவுத்துறையோடு இணைந்து செயல்படப் போவதாகவும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிநாட்டுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புத் துறை செயலாளர் விஜய்சிங் ஆகியோர், 10 நாட்களுக்கு முன் மேற் கொண்ட கொழும்பு பயணத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சீனா, பாகிஸ்தானிடமிருந்து சிறிலங்கா கூடுதலாக ஆயுதம் வாங்குவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது. தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகப் போய்விடுமே என்று கருதி, இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தி வைத்திருந்த இந்தியா, இப்போது, தனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளது என்றும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் செய்தி கூறுகிறது.
லண்டனில் பேரெழுச்சி புலிகளுக்கு கொசாவா பகிரங்க ஆதரவு
தமிழ் ஈழத்துக்கான கோரிக்கை விடுதலைப் புலிகளையும் தாண்டி உலகம் முழுதும் தீவிரம் பெற்று வருகிறது என்று ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேடு (ஜூலை 14) முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சனிக் கிழமை லண்டனிலுள்ள ரோகேம்ப்டன் விளையாட்டு மைதானத்தில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்ச்சியில் 25,000த்துக்கும் அதிகமான தமிழர்கள் திரண்டனர் என்று லண்டன் சென்று திரும்பியுள்ள, அந்நாளேட்டின் செய்தியாளர் பகவான்சிங் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனில் - பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், சர்வதேச விடுதலை இயக்கங்களின் பிரதிநிதிகளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றதோடு, சிங்கள இடதுசாரி கட்சியினரும் பங்கேற்றுப் பேசியுள்ளனர். பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் திரண்டதோடு, பிரபாகரன் உருவம் பொதித்த பனியன்களை அணிந்து வந்திருந்தனர். பிரிட்டனில், விடுதலைப் புலிகளின் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பேரணிக்கு தடை போடவில்லை. உலகம் முழுது மிருந்தும் மனித உரிமையாளர்கள் திரண்டிருந்தனர்.
அண்மையில் விடுதலை பெற்ற நாடான கொசாவாவின் மைத்ரோவிக்கா நகர மேயரான டாக்டர் பஜ்ராம் ரக்சேபி இதில் பங்கேற்றது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். கொசாவா விடுதலை இயக்கத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தவர் இவர். இவர் தனது உரையில்,
“கொசாவா விடுதலை இயக்கமும், விடுதலைப்புலிகள் போல் பயங்கரவாத இயக்கப் பட்டியலில் தான் இடம் பெற்றிருந்தது. காலம் மாறி விட்டது. அதே நிலை விடுதலைப் புலிகளுக்கும் வரும். விடுதலைப் புலிகளின் தமிழ் ஈழப் போராட்டத்துக்கு கொசாவா, தனது முழு ஆதரவை வழங்கும்” என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
“லண்டனைச் சுற்றியுள்ள 12 நகரங்களிலிருந்தும் தமிழர்கள் திரண்டு வந்திருந்தனர். இதற்கு முன் எப்போதும் இருந்திடாத அளவில் தமிழர்கள் உலகம் முழுதும், தங்களது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி வருகிறார்கள்” என்று லண்டனில் உள்ள தமிழ்ப் பொறியாளர் சார்லஸ் அந்தோணிதாஸ் தெரிவித்தார்.
இவ்வாறு ‘டெக்கான் குரோனிக்கல்’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.