“மவுல்வி சாயபு ஹாஜி அப்துல் கரீம் சாயபு அவர்கள், துலுக்கன் – துடுக்கன் என்று இந்துக்களால் சொல்லப்படுவதாய்ச் சொன்னார். இது, இந்துக்களுக்குள் பலம் இல்லாத காரணத்தாலும், தங்களுக்குள் வீரமும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தாலும் சொல்லப்படுவதேயாகும். முஸ்லிம்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும் வீரமும், இந்துக்களுக்கு துடுக்கர்களாய்க் காணப்படுவது அதிசயமில்லை. என்னை ஒரு சாயபு அடித்தால் ஒரு அய்யரோ, ஒரு செட்டியாரோ, முதலியாரோ சிபார்சுக்கு வரமாட்டார். ஏனெனில், ஜாதிப் பிரிவு காரணமாக இந்துக்களுக்குள் சகோதரத்தன்மை இல்லாமல் போய்விட்டது; ஒருவனுக்கு மற்றவனிடம் அன்பு இல்லாமல் போய்விட்டது. ஜாதிப் பிரிவு இல்லாத காரணத்தாலே முஸ்லிம் மக்களுக்கு சகோதரத் தன்மை இருந்து வருகிறது. சகோதரர்களை தாராளமாய் உடையவனைக் கண்டால் யாரும் அஞ்சுவது வழக்கம்தான்.''

– பெரியார், "குடிஅரசு', 9.8.1931

புவி வெப்பமடைகிறது என்பதற்காக உலகமே விழிப்படைந்து சூழலியலை சமன்படுத்த முயல்கிறது. ஆனால், இப்புவியில் சமனற்ற முறையில் நடத்தப்படும் மக்களின் வெப்பத்தைத் தணிப்பதற்கு எவரும் முன்வரவில்லை. போபால் நச்சு வாயு கசிந்ததால் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் (டிசம்பர் 2, 1984); ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் மீட்க முடியாத நோயில் அல்லலுறுகின்றனர். கால் நூற்றாண்டாகியும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இந்திரா காந்தி மறைந்தபோது (31.10.1984) கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை 7 ஆயிரம். அவர்களுக்கும் நீதி மறுக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்து, இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி, அதனால் கொல்லப்பட்ட (டிசம்பர் 6, 1992) பல ஆயிரக்கணக்கான மக்களுக்கும் நியாயம் கிடைக்கவில்லை. இந்தியா முழுவதும் தலித்துகள் நாள்தோறும் கொல்லப்பட்டு, பல நூற்றாண்டுகளாகப் போராடியும் மனித மாண்பு மட்டும் கிடைத்தபாடில்லை!

இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அமைக்கப்பட்ட லிபரான் ஆணையம், பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு அரைகுறையாக சில உண்மைகளை சொல்லியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அது உறுதிப்படுத்தவில்லை; காங்கிரஸ் குற்றவாளிகளை அது காப்பாற்றவும் செய்திருக்கிறது. ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் மத்திய/மாநில அமைச்சர்களாகவும், பிரதமராகவும் இருந்தவர்கள். இவர்கள் ஆட்சிக் காலத்தில் அரசு எந்திரம் எந்தளவுக்கு மதவெறியுடன் இயங்கியிருக்கும் என்பதை எவரும் எளிதில் ஊகித்துவிட முடியும். இவை எல்லாம் அரசியல் தளத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடிய விவாதங்கள். ஆனால், இந்து பயங்கரவாதங்களுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கும் சமூக, பண்பாட்டு செயல் திட்டங்களை நாம் அடையாளம் காண வேண்டும். மத நல்லிணக்கத்தைப் (இந்து – முஸ்லிம்) பேணும் அரசியல் கட்சிகளின் மேலோட்டமான நடவடிக்கைகளால் மதக் கலவரங்களைத் தடுத்துவிட முடியாது.

இந்து சமூகம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், அதன் பெரும்பான்மை மக்களாக இருப்பவர்கள் – தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான். ஒரு மளிகைக் கடையில் எல்லா பொருட்களையும் வாங்கலாம்; ஆனால் "மளிகையை' மட்டும் வாங்க முடியாது. அதைப் போலவே இந்து சமூகத்தில் (ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட) ஜாதிகள் இருக்கின்றன. ஆனால் "இந்து' என்று எவரும் இல்லை. ஜாதி என்னும் செங்கற்களாலானதுதான் இந்து சமூக அமைப்பு. அது பல்வேறு ஜாதி பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, "இந்து பண்பாடாக' மாற்றவே இந்து மதவாதிகள் முயல்கின்றனர்.

இந்து சமூக அமைப்பை பலப்படுத்தவும், ஜாதிகளாலான சமூகத்தைக் காப்பாற்றவுமே சங்கராச்சாரிகளும், மதவாத சக்திகளும் – கோயில்களை உருவாக்கி, ஆன்மீகப் பரப்புரைகளை (24 து 7) தீவிரமாக மேற்கொள்கின்றனர். மேல்தட்டு, நடுத்தட்டு, அடித்தட்டு என அனைத்து நிலையிலும், எந்த இரண்டு ஜாதிகளுமே இங்கு சமமாக இல்லை. ஏற்றத்தாழ்வுகள்தான் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தின் உயிர்நாடி. இதை திசை திருப்பி, அவர்களுக்கு ஒரு பொது எதிரியை அடையாளப்படுத்துகின்றனர் : சாதி அமைப்பின் உச்சியில் இருக்கும் பார்ப்பனர்கள், தாங்கள் அன்னியர்கள் என்பதை மறைக்கவே, முஸ்லிம்களையும், ஊருக்கு வெளியில் தள்ளப்பட்ட தலித்துகளையும் அன்னியப்படுத்துகின்றனர். இச்செயல் திட்டத்திற்கு, இந்து சமூகத்தின் அடிமைகளான பிற்படுத்தப்பட்ட மக்கள் – ஜாதியை ஏற்க மறுக்கும் தலித்துகளையும்; முஸ்லிம்களையும் தாக்கும் ஏவலாட்களாகப் பயன்படுகின்றனர்.

இந்து சமூக அமைப்பால் கடும் பாதிப்பிற்குள்ளாகும் தலித் மற்றும் முஸ்லிம்களிடையே நிலவும் புரிந்துணர்வை மேலும் பலப்படுத்துவதும்; இந்து சமூகத்தில் சூத்திரர்களாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களை நெறிப்படுத்துவதுமே – ஓர் உண்மையான சமூக நல்லிணக்கத்தை உருவாக்கி, ஜனநாயகத்தை வலுப்படுத்தும். இத்தகு அணி சேர்க்கையே இந்து பயங்கரவாதிகளை அச்சுறுத்தும்; மதக் கலவரங்கள் உருவாவதைத் தடுக்கும்! 

Pin It