கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வாக்குரிமை சம்பந்தமாக இந்தியாவில் விசாரணை செய்த திரு. லோதியன் கமிட்டியின் அறிக்கையும் வெளியாகி விட்டது. வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுத்தால் ஒழிய, தேசத்தில் கஷ்ட நிலைமையை அனுபவத்தில் உணர்ந்திருக்கும் ஏழை மக்கள் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் பெற முடியாதென்றும், ஓட்டுரிமையை நூற்றுக்குப் பத்து வீதமோ, பதினைந்து வீதமோ, இருபது வீதமோ, முப்பது வீதமோ, ஐம்பது வீதமோ அதிகப் படுத்துவதனால் ஏழைகளுக்கு ஒரு வித நன்மையும் ஏற்பட்டு விடாதென்றும், இப்பொழுது இருப்பதுபோல், பணக்காரர்களும், ஜமீன்தார்களும், முதலாளிகளும் தான் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் பெற முடியுமென்றும் முன்பு எழுதியிருந்தோம். வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுக்கும் விஷயத்தைப் பற்றி. லோதியன் கமிட்டியோடு ஒத்துழைத்த யாரும் கவலை எடுத்துக் கொள்ளவில்லை யென்றும் குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறே இப்பொழுது வெளியாயிருக்கும் லோதியன் கமிட்டி அறிக்கையிலும் ஓட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப் பட்டிருப்பதைத் தவிர வேறு எந்த அபூர்வமான காரியமும் காணப்பட வில்லை. ஆகவே ஏழைமக்கள் நிலை எப்பொழுதும் ஒன்றுதான். தாழ்த்தப் பட்ட வகுப்பினர் தங்களுக்கு வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுக்க வேண்டுமென்று கேட்டுவந்தார்கள். இவ்விஷயமும் லோதியன் கமிட்டியாரால் கவனிக்கப்படவில்லை.

அடுத்தபடியாகச் சட்டசபைகளின் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக எந்தெந்த வகுப்புக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கொடுப்பது என்பதைப் பற்றியும் தனித் தொகுதி ஏற்படுத்துவதா? கலப்புத் தொகுதி ஏற்படுத்துவதா? ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதா? என்பதைப் பற்றிய லோதியன் கமிட்டி அறிக்கையில் யாதொரு முடிவும் கூறப்படவில்லை. வகுப்புப் பிரச்சினை சம்பந்தமான இம்முடிவு, பிரிட்டிஷ்பிரதம மந்திரியினால் செய்யப்பட வேண்டியிருக்கிறது. பிரதம மந்திரியோ எவ்வகையாக இவ்விஷயத்தில் முடிவு செய்யப் போகிறார் என்பது வெளிப்படவில்லை.

periyar and annaஇங்கிலாந்தில் இரண்டாவது வட்டமேஜை மகாநாடு நடந்தபோது, சிறுபான்மை வகுப்புப் பிரதிநிதிகளும் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிரதிநிதிகளும் சேர்ந்து “தங்களுக்குத் தனித்தொகுதியும், பாதுகாப்பும் வேண்டும்” என்று தீர்மானித்து கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு சட்ட சபைகளிலும் ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள்.

ராஜாங்க சபை மொத்த ஸ்தானம் இருநூறில் ஜாதி இந்துக்களுக்கு 101-ம், தாழ்த்தப்பட்டவக்ளுக்கு 20-ம், முஸ்லீம்களுக்கு 67-ம், கிறிஸ்த வர்களுக்கு 1-ம், சீக்கியர்களுக்கு 6-ம், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 1-ம், ஐரோப்பியர்களுக்கு 4-ம் ஒதுக்க வேண்டும் என்றும்;

மத்திய தலைமைச் சட்ட சபையில் மொத்தம் முன்னூறு ஸ்தானங் களில் ஜாதி இந்துக்களுக்கு 123-ம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 45-ம், முஸ்லீம்களுக்கு 100-ம், கிறிஸ்தவர்களுக்கு 7-ம், சீக்கியர்களுக்கு 10-ம், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 3-ம், ஐரோப்பியர்களுக்கு 12-ம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும்;

வங்காள சட்டசபையில் மொத்தம் 200 ஸ்தானங்களில், ஜாதி இந்துக் களுக்கு 38-ம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35-ம், முஸ்லீம்களுக்கு 102-ம், கிறிஸ்தவர்களுக்கு 2-ம், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 3-ம், ஐரோப்பியர் களுக்கு 20 ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும்;

பம்பாய் சட்டசபையில் மொத்த ஸ்தானங்கள் இருநூறில் ஜாதி இந்துக் களுக்கு 88-ம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 28-ம், முஸ்லீம்களுக்கு 66-ம், கிறிஸ்தவர்களுக்கு 2-ம், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 3-ம், ஐரோப் பியர்களுக்கு 13-ம் ஒதுக்கி வைக்க வேண்டுமென்றும்;

சென்னை சட்டசபையில் 200 மொத்த ஸ்தானங்களில் ஜாதி இந்துக்களுக்கு 102-ம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 40-ம், முஸ்லீம்களுக்கு 30-ம், கிறிஸ்தவர்களுக்கு 14-ம், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 4-ம், ஐரோப் பியர்களுக்கு 8-ம், மலை ஜாதியார்களுக்கு 2-ம் ஒதுக்கி வைக்க வேண்டுமென்றும்,

பாஞ்சால சட்டசபையில் 100 மொத்த ஸ்தானங்களில் ஜாதி இந்துக் களுக்கு 14-ம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 10-ம், முஸ்லீம்களுக்கு 51-ம், சீக்கியர்களுக்கு 20-ம், மற்றவர்களுக்கு 5-ம் ஒதுக்கி வைக்கவேண்டு மென்றும்;

சிந்து மாகாணத்தில் இந்துக்களுக்கும், எல்லைப்புற மாகாணத்தில் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் விசேஷ பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இவ்வொப்பந் தத்தில் திருவாளர்கள் ஆகாகான், பன்னீர்ச் செல்வம், அம்பெட்கார், கிட்னிகார் முதலியவர்கள் கையெழுத்திட்டு இதைப் பிரதம மந்திரி திரு. மேக்டனால்டு அவர்களிடம் அளித்திருக்கின்றார்கள். அவரும் இவ் வொப்பந்தத்தைப் பெற்றுக் கொண்டபோது “வகுப்புப்பிரச்சினையைப் பற்றி முடிவு கூறும்போது இவ்வொப்பந்தம் முக்கியமானதாகக் கவனிக்கப்படும்” என்று கூறினார். ஆனால் இவ்வொப்பந்தப்படி பிரதம மந்திரி முடிவு செய்யப் போகிறாரா? அல்லது இதைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வேறு விதமாக முடிவு செய்யப்போகிறாரா? என்பது பிறகுதான் தெரியும்.

ஆனால் இச்சமயத்தில், மேற்கண்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாயிருந்த, முஸ்லீம்களும் தாழ்த்தப்பட்டவர்களும் எவ்வித அபிப்பிராயம் உடையவர்களா யிருக்கின்றார்கள் என்பது கவனிக்க வேண்டியதாகும். அவ்வொப்பந்தத்தில் கண்டுள்ளபடி ஸ்தானங்கள் ஒதுக்கிவைக்கப்படும் எண்ணிக்கை விஷயமாக முஸ்லீம்களுக்குள்ளும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குள்ளும் மாறுபாடான அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஆனால் தனித்தொகுதியும், பாதுகாப்பும் கோரும் விஷயத்தில் முஸ்லீம்களுக்குள்ளும் தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளும் பெரும்பான்மையோருடைய அபிப்பிராயம் அவ்வொப்பந்தத்திற்குச் சாதகமாகவே இருக்கிறதென்பதை யாரும் மறுக்க முடியாது. இதனை ஆதிமுதல் மௌலானா ஷெளக்கத் அலி அவர்கள், முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி கொடுக்க வேண்டுமென்றே போராடிக் கொண்டிருப்பதைக் கொண்டும், சமீபத்தில் இந்தியாவில் உள்ள பிரபல முஸ்லீம் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, ‘லண்டன் டைம்ஸ்’ என்னும் பத்திரிகையில் வெளியிட்டிருக்கும் ஒரு மகஜரில் “ஆங்கில அரசாட்சிக்குப் பதிலாக இந்துக்களில் அரசாட்சி ஏற்படுவதாயிருந்தால், அப்பொழுது முஸ்லீம்கள், ஆங்கில அரசாட்சியே சிறந்ததென்று கருதுவார்கள். ஏனெனில் ஆங்கில அரசாட்சி பாரபட்ச மற்றதாக இருக்கிறது. அல்லாமலும் ஆங்கில அரசாட்சி நீங்கிவிட்டால் பலசாலிகளான முஸ்லீம்களுக்கும், சதியா லோசனை இரத்தவெறி முதலிய கெட்டகுணங்களைக் காங்கிரசின் மூலம் கற்றுக் கொண்டிருக்கும் இந்துக் களுக்கும் ஓயாமல் சண்டை உண்டாகிக் கொண்டேயிருக்கும். ஆகவே பொறுப்பாட்சியுடன் ஐக்கிய அரசாட்சியை ஏற்படுத்தி எல்லா வகுப்பினர்க்கும் அதிகாரத்தைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டுமென்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எண்ணமாக இருக்குமானால் இரு சமூகங்களின் உரிமைகளையும் வரையறுக்கும் பொழுது ஒவ்வொரு சமூகத்தின் ராஜ விசுவாசத்தையும் கவனிக்கப்படுமென்று நம்புகிறோம்” என்று கூறியிருப்பதைக் கொண்டும் உணரலாம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களும் இவ்வொப்பந்தத்தை ஆதரித்தும், தனித்தொகுதியையும் பாதுகாப்பையும் வற்புறுத்தியும் தீர்மானங்கள் செய்திருக்கின்றார்கள். ‘தனித் தொகுதி வேண்டாம், பொதுத் தொகுதியில் ஸ்தானங் கள் ஒதுக்கி வைக்கப்படவேண்டும்’ என்றும் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கும் திரு எம். சி. ராஜாவின் கூட்டத்தாருக்கு இந்து மகாசபைக் காரர்களின் ஆதரவும், தனித்தொகுதிக்கு விரோதமாயிருப் பவர்களின் ஆதரவும் தான் இருக்கின்றனவேயொழிய தாழ்த்தப்பட்ட சமூகத்தில் அதிக ஆதரவில்லை என்று சொல்லப்படுகிறது. மற்றைய சிறுபான்மை சமூகத்தினரும் தனித்தொகுதியை விரும்பி நிற்கின்றனர்.

ஆனால் இச்சமயத்தில் திரு. மாளவியா, திரு. மூஞ்சே முதலிய இந்து மகாசபைக் கூட்டத்தாராலும் காங்கிரஸ் அபிமானமுடையவர்களாலும் தனித் தொகுதிக்கு விரோதமாகப் பிரசாரம் பண்ணப்பட்டு வருகிறது. இப்பிரசாரத்தினால் முதல் மந்திரியார் மயங்கி தனித்தொகுதிக்கு ஆதரவளிக்காமல் விட்டுவிடுவாரானால் பொதுத்தொகுதிக்கு ஆதரவு அளித்து அவ்வாறு முடிவு செய்யும்படி விட்டு விடுவாரானால் இந்தியாவில் எப்பொழுதும் இந்து முஸ்லீம் கலகம் மாத்திரம் அல்லாமல் மற்றும் பல வகுப்புக் கலகங்களும் உண்டாகுமென்பதில் ஐயமில்லை. இப்பொழுது இருக்கும் மதச்சண்டை போதாமல் தேர்தல் சண்டைகளும் முளைத்து விடும் என்பது நிச்சயம். ஆகையால் தேசத்தில் வகுப்புக் கலகங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் பிற்போக்கான சமூகங்களுக்குத் தனித்தொகுதி ஏற்படுத்துவதே சிறந்தது என்பதை எடுத்துக் காட்ட விரும்புகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 19.06.1932)