பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துக் காந்தியார் நடத்திய போராட்டங்களில் தண்டி நெடும் பயணம் (யாத்திரை) முதன்மையான ஒன்றாகும். 1882இல் பிரித்தானிய ஆட்சி, உப்பு மீது விதித்த வரியை நீக்கக் கோரியும்-இந்தியாவில் கடற்கரையில் வாழும்  மக்களின் உப்புக் காய்ச்சும் உரிமையை நிலைநாட்டும் பொருட் டும் காந்தியார் தண்டி யாத்திரையை மேற்கொண்டார். குசராத் மாநிலத்தில் அகமதாபாத் நகருக்கு அருகில் இருந்த சபர்மதி ஆசிரமத்திலிருந்து 1930 மார்ச்சு 12 அன்று 78 தொண்டர்களுடன் குசராத் கடற்கரையில் உள்ள சிற்றூரான தண்டியில் உப்புக் காய்ச்சுவதற் கான நெடும் பயணத்தைத் தொடங்கினார். 390 கி.மீ. (240 மைல்கள்) தொலைவை 24 நாட்களில் நடந்து 1930 ஏப்பிரல் 5 அன்று தண்டியை அடைந்தார். 1930 ஏப்பிரல் 6 அன்று காலை 6.30 மணிக்குக் காந்தியார் தண்டியின் கடற்கரையில் உப்பை அள்ளினார். இந்த நிகழ்வு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான உணர்வலை களை மக்களிடம் உண்டாக்கியது. உப்புச் சக்தியாக் கிரகத்தையொட்டி காந்தி கைது செய்யப்பட்டார். 80,000 மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயினும் காந்தி யாரின் கோரிக்கையை ஆங்கிலேயர் ஆட்சி ஏற்கவில்லை.

காந்தியாரின் தண்டி நெடும் பயணத்தைக் காட்டிலும், சீனாவில் மா-சே-துங் தலைமையில் நடந்த நெடும் பயணம் இன்றளவும் உலகப் புகழ்பெற்றதாக விளங்கு கிறது. நெடும் பயணம் என்ற சொல்லே மாவோ நடத்தி யதைத்தான் குறிப்பதாக நிற்கிறது. சீனாவில் அமெரிக் காவின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த சியாங்-கே-ஷேக் படைகளின் தாக்குதல்களை முறியடித்துக் கொண்டு தென் சீனாவின் ஜியாங்சி மாகாணத்திலிருந்து வடக் கில் உள்ள ஷாங்சி மாகாணம் வரை மக்கள் செம்படை நெடும்பயணமாகச் சென்றது. வழிநெடுகிலும் மக்களி டம் பொதுவுடைமைக் கோட்பாட்டைப் பரப்பியும், பண் ணையார்களின் நிலைங்களைப் பறித்து உழவர் களுக்குப் பகிர்ந்தளித்தும் சோசலிசக் கட்சிக்கான அடித் தளத்தை அமைத்தும் செம்படை சென்றது.

1934 அக்டோபர் 16 அன்று மாவோ தலை மையில் 86,000 பேர்களுடன் புறப்பட்ட இந்த நெடும் பயணம் 9000 கி.மீ. (5600 மைல்கள்) தொலைவை 370 நாள்கள் நடந்து, 1935 அக்டோபர் 22 அன்று முடிவுற்றது. வழிநெடுக சியாங்கே ஷேக் படைகளின் தாக்குதல், பெரிய ஆறுகளின் வெள்ளப் பெருக்குகள், பனிமலை கள், இயற்கைப் பேரிடர்கள் என்று சொல்லொ ணொத் துன்பங்களைச் சந்தித்து வென்றது. வழிநெடுகிலும் நெடும் பயணத்தில் மக்கள் இணைந் தனர். ஆயினும் 1934 அக்டோபர் 16 அன்று நெடும் பயணம் புறப்பட்ட போது செம்படையில் இருந்த 86,000 பேர்களில் 1935 அக்டோபர் 22 அன்று இப்பயணம் நிறைவுற்ற போது, 7000 பேர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். மீதி 79,000 பேர்களில் பெரும்பாலோர் போரில் மாண்டனர்; மற்றவர் கள் இயற்கைப் பேரிடர்களினால் மாண்டனர். இந்த நெடும் பயணமே 1949இல் சீனாவில் சோச லிசப் புரட்சி வெற்றிபெற அடித்தளமாக அமைந்தது.

காந்தியார் தண்டி யாத்திரையைத் தொடங்கிய அகமதாபாத் நகரிலிருந்து புறப்பட்டு 2016 ஆகத்து மாதம் 5ஆம் நாள் - பசுவைக் கொன்று அதன் தோலை உரித்ததாக நான்கு தலித்துகள்மீது உனாநகரில் “பசுப் பாதுகாப்புப் படை” என்ற பெயரிலான சங்பரிவார ஆட்கள் நடத்திய கொடிய தாக்குதலைக் கண்டித்து உனாநகருக்கு 10,000 தலித்துகள் பத்து நாள்கள் மேற் கொண்ட நெடும் பயணம் குசராத்தை மட்டுமின்றி, இந்தியாவையே உலுக்கியது.

மாட்டிறைச்சி உண்கின்ற-மாட்டுத் தோல் தொழில் களில் ஈடுபட்டுள்ள முசுலீம்களையும், தலித்துகளை யும் தாக்கி, அவ்விரு வகுப்பினரையும் அச்சுறுத்து வதற்காக, “பசுப் பாதுகாப்புப் படை” என்ற பெயரில் சங் பரிவாரங்கள் பல “ரவுடிக் கும்பல்களை” ஏவிவிட் டுள்ளது.

அண்மைக்காலத்தில், “கோமாதாவின்” பெயரால் தலித்துகள் தாக்கப்பட்ட முதலாவது நிகழ்ச்சி அரியானா மாவட்டத்தில் ஜஜ்ஜார் என்ற ஊரில் 2002 அக்டோபர் 15 அன்று நடந்தது. செத்துப்போன பசுவின் தோலை உரித்துக் கொண்டிருந்த அய்ந்து தலித்துகளை இந்துத் துவ வெறிக்கும்பல் தாக்கியது - தலித்துகள்தான் பசு வைக் கொன்றார்கள் என்று கூறியது துலினா காவல் நிலையத்துக்கு எதிரில், மக்கள் புடைசூழப் பார்த்திருக் கும் நிலையில், அய்ந்து தலித்துகளும் கடுமையாகத் தாக்கப்பட்டபின் எரித்துக் கொல்லப்பட்டனர்.

காவல் துறையினர் தலையிட்டுத் தடுக்கவில்லை. இதற்கு இந்திய அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தன. செத்த பசுவின் இறைச்சியை ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்த தில், தலித்துகள் அதன் தோலை உரிப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பே அப்பசு இறந்துவிட்டிருந்தது என்பது தெரிய வந்தது. அதன்பிறகுதான் தலித்துகள் மீதான தாக்குதல் தொடர்பாக 32 பேர் கைது செய் யப்பட்டனர். 1989ஆம் ஆண்டின் தலித்துகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பேரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆயினும் அவர் கள் 2003 சனவரியில் பிணையில் வெளிவந்து சுதந்தரமாக உலவிக் கொண்டிருக்கின்றனர்.

2015 செப்டம்பர் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாக்கி என்ற ஊருக்கு அருகில் உள்ள பிஷாரா என்ற சிற்றூரில் முகமத் அக்லக் என்ற முசுலீம் பசுவைக் கொன்று அதன் இறைச்சியை வீட்டில் வைத்திருக்கிறார் என்கிற பொய்யான செய்தியின் அடிப்படையில், இருநூறு பேர் கொண்ட இந்துமத வெறிக்கும்பல் அவரு டைய வீட்டையும், குடும்பத்தினரையும் தாக்கியது. இத்தாக்குதலில் முகமது அக்லக் கொல்லப்பட்டார்; அவரது மகன் தனிஷ் படுகாயமடைந்தார்.

முசுலீம்களின் வாக்கு வங்கிக்காகத் தன்னை முசுலீம்களின் காவலராகப் பல ஆண்டுகளாகக் காட்டிக் கொள்ளும் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவின் ஆட்சி, அக்லக்கைக் கொன்றவர்கள் மீது பெயரளவில் மென்மையாக நடவடிக்கை மட்டுமே எடுத்துள்ளது. தாத்ரி நிகழ்ச்சி குறித்து நடுவண் அரசுக்கு உ.பி. அரசு அனுப்பிய அறிக்கை மோடியை மகிழ்விக்கும் தன்மை யில் அமைந்திருந்தது.

தாத்ரியில் முசுலீம்கள் தாக்கப்பட்ட பின், கோமாதா பெயரால் முசுலீம்கள், தலித்துகள் மீது தாக்குதல் நடத்து வது அதிகமாயிற்று. மாட்டுத்தோல் தொடர்பான தொழில் களில் முசுலீம்களும், தலித்துகளும் இருப்பதாலும், இவ்விரு பிரிவினரும் மாட்டிறைச்சி உண்பதாலும் வெறி யர்கள் இவர்களைக் குறிவைத்துத் தாக்குகின்றனர். மாடுகளின் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை அச் சுறுத்துகின்றனர். சந்தைக்கு மாடுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தித் தாக்குகின்றனர். இதனால் வடஇந்தியாவில் மாட்டுச் சந்தைகளே நடை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட்டு வணிகம் செய்யும் இரண்டு முசுலீம்களை பசுமாட்டுப் படையினர் ஒரு மரத்தில் தூக்கிலிட்டனர். இரண்டு முசுலீம்களில் ஒருவர் 17 அகவையினர். சட்டத்தை இந்து வெறியர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு இரண்டு முசுலீம்களைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து முசுலீம் கள் வீதியில் இறங்கிப் போராட முடியாது. அப்படிச் செய்தால் மேலும் பல முசுலீம்கள் கொல்லப்படுவார்கள்; அவர்களின் வீடுகள் சூறையாடப்படும் என்கிற அச்சம் முசுலீம் களை அலைக் கழித்துக் கொண்டே இருக்கிறது.

முசுலீம்கள் இவ்வாறு அஞ்சி அஞ்சி இந்துக்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்; இரண்டாம் தரக் குடிமக்களாக வாழவேண் டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தத்துவத் தலைவர் எம்.எஸ்.கோல் வால்கர் வகுத்தளித்துள்ள திட்டமாகும். இது மோடியின் ஆட்சியில் தங்குதடை யின்றி - காவல் துறையின் ஆதரவுடன் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர் நடவடிக்கையாக 2016 சூலை 11 அன்று ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. குசராத் மாநிலம் கிர்சோம்நாத் மாவட்டத்தில் உனா நகருக்கு அருகில் உள்ள மோடா சமந்ரியாலா என்ற சிற்றூரில் செத்த பசுவின் தோலை நான்கு தலித்துகள் உரித்துக் கொண்டிருந்தார்கள். சங்பரிவாரங்கள் இந்திய அளவில் உளவுப்படையை வைத்துள்ளது. இச்செய்தி உனா நகரின் பசுமாட்டுப் படைப் பிரிவுக்கு எட்டியது. உடனே ஒரு மகிழுந்தில் மோடா சத்தியாலாவிற்கு வந்தனர். பசு மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த நான்கு தலித் இளைஞர்களைக் கடுமையாக உதைத்தனர்.

அவர்களை மகிழுந்தில் கட்டி உனா நகருக்கு இழுத்துச் சென்றனர். உனா நகரில் காவல் நிலையத்திற்கு அருகில் அந்த நான்கு தலித் இளைஞர்களை அரை நிர்வாணமாக்கி, தடியாலும், இரும்புக் குழாய்களாலும் மாறி மாறி அடித்தனர். “நாங்கள் செத்த பசுவின் தோலைத்தான் உரித்தோம்” என்று அந்த நான்கு தலித் இளைஞர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கூறி மன்றாடியும், இந்துத்துவ வெறியர்கள் அவர்களை அடிப்பதை நிறுத்தவில்லை.

மதவெறி காரணமாக மனிதநேயத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்ட மக்கள் கூட்டம் இதைத் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இதைவிடக் கொடுமை என்னவெனில் காவல் துறையினரும் வேடிக்கை பார்த் ததுடன், தலித் இளைஞர்களை அடிப்பதற்குத் தங்களிடம் இருந்த ‘லத்தி’க் கம்புகளையும் கொடுத்தனர்.

கோமாதாவுக்கு ஊறு விளைவிக்க எந்தவொரு தலித்தோ, முசுலீமோ கனவிலும் நினைக்கக்கூடாது என்று பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன், உனா நகரில் நான்கு தலித்துகள் பல மணிநேரம் தாக்கப்பட்ட நிகழ்ச் சியைப் படம் பிடித்து இந்துத்துவ வெறியர்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இவர்களின் வஞ்சகக் கொடிய மனத்திற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா!

இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காட்சிதான் எவரும் எதிர்பாராத வகையில் மாபெரும் எதிர்ப்பலையாக மாறியது. குசராத்தில் தலித்து மக்கள் 7.1 விழுக்காட்டினர் உள்ளனர். குசராத் மாநிலம் பனியாக்கள்-பட்டேல்கர் எனும் மேல்சாதிகளின் ஆதிக் கக் கோட்டை ஆகும். பனியாக்கள் இந்தியாவின் மிகப் பெரிய - அதிக எண்ணிக்கையிலான முதலாளிகளாக இருக்கின்றனர். பட்டேல்கர் பெரிய நிலவுடைமையாளர்கள்; ஆதிக்கத் திமிர் பிடித்தவர்கள்.

குசராத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கூட தலைதூக்கவிடாமல் பனியா-பட்டேல் மேல்சாதி வர்க்கம் அடக்கி வைத் துள்ள நிலையில், தலித்துகள் இன்னும் கொடிய முறையில் ஒடுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

1980களில் குசராத் தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மேல்சாதியினர் நடத்திய வெறிச்செயல்கள் தலித்துகளை மேலும் ஒடுக்கின.

எனவே உனாவில் நான்கு தலித்துகள் தாக்கப் பட்ட செய்தி, அதிகம் போனால் நாளேடுகளில் ஒரு நாள் செய்தியாக மட்டும் முடிந்துவிடும் என்று இந்துத்துவ வெறியர்கள் நினைத்தார்கள். ஏனெனில் குசராத்திலும் நடுவண் அரசிலும் பா.ச.க. ஆட்சிகள் உள்ளன. ஆனால் இணைய தளத்தில் கண்மூடித்தனமாக நான்கு இளை ஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்ட தலித் இளைஞர்களும் மக்களும் சினங்கொண்டு எதிர்த்துப் போராடத் துணிந் தனர்.

முதல் நடவடிக்கையாக, செத்த பசுக்களின் உடல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும், மற்ற அரசு அலுவலகங்களின் வாயிலி லும் போட்டு, “பசு உன் அம்மா என்றால் அவளை நீ பார்த்துக் கொள்” என்று முழக்கமிட்டனர். தங்கள் சமூகம் காலங்காலமாகத் தொடர்ந்து இழிவுகளுக்கும் இயலாமைகளுக்கும் உள்ளாக் கப்பட்டு வருவதால் வெறுப்பும் சினமும் கொண்ட முப்பதுக்கும் மேற்பட்ட தலித் இளைஞர்கள் பொது இடங்களில் நஞ்சுண்டு மாய்த்துக் கொள்ள முயன்றனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

உனா, குசராத்தின் சவுராட்டிரா பகுதியில் இருக்கிறது. 1947க்குமுன் சவுராட்டிரா பகுதி முழுவதும் சிற்றரசர் களின் ஆட்சியின்கீழ் இருந்ததால் பழமைவாதமும் சாதி வெறியும் தலைவிரித்தாடின. சவுராட்டிரா பகுதி யில் முழு வேலை நிறுத்தத்திற்கு தலித்துகள்  அழைப்பு விடுத்தனர். இதைத் தடுத்திட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த போதிலும் முழு கடையடைப்பு நடந் தது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

நெடுஞ் சாலைகளில் தலித் ஆண்களும் பெண்களும் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனால் வாகனப் போக்கு வரத்து நின்றது. சில இடங்களில் பேருந்துகள், காவல் துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன. காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்தனர். கல்லெறியில் ஒரு காவலர் கொல்லப்பட்டார்.

குசராத்தில் நரேந்திர மோடி 12 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தார். வளர்ச்சியில் இந்தி யாவுக்கே குசராத் மாநிலம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்று கூறி மோடியே தன்னைச் சுற்றி ஒரு ஒலி வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

இதைக் காட்டித்தான் மோடி 2014இல் பிரதம ரானார். ஆனால் நடுவண் அரசின்கீழ் இயங்கும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட (National Crime Records Bureau - NCRB) 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் (அப்போது மோடி குசராத் முதல்வராக இருந்தார்) இந்தியாவிலேயே தலித்துகள் மீதான தாக்குதல்கள், கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் பட்டியலில் குசராத் முதல் மாநிலமாக இடம்பெற் றுள்ளது (Economic and Political Weekly, 2016, August 2016) எனக் குறிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2014ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், தலித்துகள் மீதான தாக்குதல் குறித்த வழக்குகளில் இந்திய அளவில் 28.8 விழுக்காட்டு வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வெட்கக்கேடான அளவில் குசராத்தில் தலித்துகள் தாக்கப்பட்ட வழக்குகளில் 3.4 விழுக்காட்டு வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பின்னணியில் 2016 சூலை 11 அன்று உனாவில் நான்கு தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்துத் தொடர்ந்து போராட வேண்டும் என்பதற்கான உந்துவிசையாக இணையதளத்தின் பதிவேற்றக் காட்சிகள் விளங்கின.

 இழிவுபடுத்தப்படுவதற்கும் ஒடுக் கப்படுவதற்கும் ஒரு முடிவு காணவேண்டும் என்கிற போர்க்குணம் தலித்துகளிடையே கொழுந்துவிட்டு எரிந்தது.

எனவே, உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அகமதாபாத் நகரில் ஆயிரக்கணக்கான தலித் துகள் 31.7.2016 அன்று பொது வெளியில் கூடினர். எந்த அரசியல் கட்சியின் சார்பும் இல்லாமல், தலித்துகளுக்குள் உள்ள உள்சாதிப் பிரிவுகளை ஒதுக்கிவிட்டு, தன் னெழுச்சியாக அகமதாபாத்தில் ஒன்றுதிரண்டனர். ஒரு முடிவு எடுத்தனர்.

அதன்படி, 5.8.2016 அன்று அகமதா பாத்திலிருந்து மாபெரும் பேரணியைத் தொடங்கி, வழியில் சிற்றூர் நெடுகிலும் பரப்புரை செய்து கொண்டு, 370 கி.மீ.

தொலைவில் உள்ள உனா நகரில் நான்கு தலித்துகள் தாக்கப்பட்ட இடத்தில் 15.8.2016 அன்று இந்தியாவின் சுதந்தர நாளில் தலித்துகளுக்குச் சுதந் தரம் (ஆசாத்) வேண்டும் என்ற முழக்கத்துடன் தேசிய மூவண்ணக் கொடியை ஏற்றுவது என்று முடிவு செய்தனர்.

அவ்வாறே 5.8.2016 அன்று அகமதாபாத் நகரில் பத்தாயிரம் தலித்துகள் கலந்துகொண்ட பேரணி தொடங்கியது. இப்பேரணியில் பிற மாநிலங்களி லிருந்து தலித்துகளும், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு தலித்துகள் இந்த ஆண்டு நடத்திய மற்றொரு பேரணியைப் பற்றிக் குறிப்பிட வேண்டியுள்ளது. தீண்டப்படாதவருள்ளும் தீண்டப்படாதவராகக் கருதப்படும் கையால் மலம் அள்ளும் - மனிதக் கழிவுகளை அகற்று வோர் சங்கம் 2015 திசம்பரில் அசாம் மாநிலத்தில் திப்ரும் என்ற இடத்தில் தில்லியை நோக்கிப் பேரணி நடத்தியது. இப்பேரணி 30 மாநிலங்களில் 500 மாவங்டடங்கள் வழியாக 3500 கி.மீ. தொலைவை 125 நாள்கள் நடந்தே சென்று 2016 ஏப்ரல் 13 அன்று தில்லியில் ஜந்தர்மந்தரில் முடிவுற்றது.

அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளை 125 நாள்கள் நடந்து வந்து தில்லியில் மாபெரும் கூட்டம் நடத்திக் கொண்டாடியது.

ஆனால் செய்தி ஊடகங்களில் பெரிய அளவில் இச்செய்தி வெளிவரவில்லை. கடையருள் கடையராக உள்ள இவர்களின் பேரணி எந்தவொரு மாநில அரசியலிலோ, இந்திய அளவிலான அரசியலிலோ எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்ததாக இருக்க வில்லை.

ஆனால் குசராத்தில் உனாவில் 5.8.2016 அன்று தொடங்கிய பேரணி உடனே இந்திய அரசியலில் விவாதப் பொருளாகிவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 2017 ஏப்ரல் - மே மாதங்களில் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

அதேபோல் 2017ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குசராத் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் 80 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களில் 73 இடங்களை பா.ச.க கைப்பற்றியதால் தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடிந்தது.

21 கோடி மக்கள் வாழும் உ.பி.யில் ஆட்சியைக் கட்டாயம் முலாயம் சிங் கட்சியிடமிருந்து கைப்பற்றிவிட வேண்டும் என்று பா.ச.க. திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.

12 ஆண்டுகள் மோடி ஆட்சி செய்த குசராத் மாநிலத்தின் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது பெரிய மானப் பிரச்சனையாக இருக்கிறது.

மேலும் உ.பி.யில் மாயாவதி உனா வில் தலித்துகள் தாக்கப்பட்ட நிகழ்வைக் காட்டி அரசியல் ஆதாயம் அடையக்கூடும் என்று பா.ச.க. அஞ்சியது.

எனவே 5.8.2016 அன்று உனாவை நோக்கித் தலித் பேரணி தொடங்கியதும், அதன் விளைவுகளால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சம் பா.ச.க.வுக்கு ஏற்பட்டது.

20.7.2016 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உனாவில் நான்கு தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரி வித்தபோது உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், குசராத் மாநில அரசு சட்டப்படியான உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று வழக்கமான முறையில் விடையளித்தார். மோடி அப்போது வாய்திறக்கவில்லை.

ஆனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தலித்துகள் பங்கேற்கும் பேரணி பத்து நாள்களில் பல நூறு ஊர்களில் பரப்புரை செய்யத் தொடங்கிவிட்ட காரணத் தால், 7.8.2016 அன்று அய்தராபாத்தில் பாரதிய சனதா கட்சி ஊழியர்களிடம் பேசிய நரேந்திர மோடி தனக்கே உரிய நாடக பாணியில், உனாவில் தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து 25 நாள்களுக்குப் பிறகு கருத்து ரைத்தார்.

“என்னுடைய தலித் சகோதரர்களைத் தாக்க நினைப்பவர்கள், முதலில் என்னைச் சுடுங்கள்” என்று வீர வசனம் பேசினார். தலித்துகளைத் தாக்கும் பசுப்பாதுகாவலர்கள் போலி இந்துத்துவவாதிகள்; சமூக விரோதிகள் என்று மோடி கூறினார்.

அவருடைய உரையின் உட்கரு தலித்துகளைத் தாக்கியவர்களைக் கண்டிப்பதாக அல்லாமல், எதிர்க்கட்சிகள் இதை அரசிய லாக்குவதைக் கண்டிப்பதையே முதன்மையாகக் கொண்டிருந்தது.

அக்கூட்டத்தில், தான் பிரதமரான பின்னர் அம்பேத்கரின் பெருமையை-புகழைப் பரப்புவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டிய லிட்டார். அம்பேத்கர் இலண்டனில் படித்த போது வாழ்ந்த வீட்டை வாங்கி நினைவிடமாக்கியது, தில்லியில் அம்பேத்கர் நினைவாக பெரிய மணிமண்டபம் கட்டுவது, அய்க்கிய நாடுகள் மன்றத்தை அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடச் செய்தது என்று மோடி பட்டியலிட்டார்.

மோடி தலித்துகளின் காவலரா? மோடி பிரதமராவதற்கு இரண்டு ஆண்டுகளுக்குமுன் 2012 செப்டம் பர் 22, 23 ஆகிய நாள்களில் குசராத்தில் சுரேந்திரநாத் மாவட்டம், தங்காத் என்ற ஊரில் மூன்று தலித் இளைஞர்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

அப்போது மோடி அவ்வூரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் விவேகானந்தர் இளைஞர் இதர யாத்தி ரையில் பங்கேற்றிருந்தார்.

தலித் இளைஞர்கள் சுடப் பட்ட ஊருக்கு வரவில்லை; அதுகுறித்து ஒரு சொல்லும் பேசவில்லை. அதுதான் உண்மையான மோடியின் உள்ளம்.

5.8.2016 அன்று உனாவிலிருந்து புறப்பட்ட பேரணியை ஊடகவியலாளரும், வழக்குரைஞரும், சமூக செயற்பாட்டாளருமான 35 அகவையினரான ஜிக்னேஷ் மெவானி என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து நெறிப்படுத்தினார்.

இந்த நடைப்பயணத்தைச் “சுதந்தரத்துக்கான நடைப்பயணம்” (ஆசாத் கூன்) என்று அழைத்தனர். ஜிக்னேஷ் மெவானி, “எங்களுக் குச் சுதந்தரம் கொடு; பசுவின் வாலை நீங்களே வைத் துக் கொள்ளுங்கள்; எங்களுடைய நிலத்தை எங்களி டம் கொடுங்கள்” (you keep the cow’s tail; give us our land) போன்ற முழக்கத்தை முன்வைத்தார்.

கிராமங்களில் தலித்துகள் இப்பேரணியைப் பெரு மிதம் பொங்க வரவேற்றனர். கிராமங்களில் செய்யப்பட்ட பரப்புரைகளின் போது, சாதி இந்துக்களும் வேடிக்கைப் பார்த்தனர்.

ஜிக்னேஷ் மெவானி உரையாற்றிய எல்லா ஊர்களிலும் சாதி இந்துக்களை நோக்கி, “நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாமே; உங்கள் உடலில் இருப்பது போன்ற இரத்தம்தானே எங்கள் உடலிலும் ஓடுகிறது.

ஏன் எங்களைச் சமத்துவமாக நடத்த மறுக்கிறீர்கள்?” என்று அமைதியான முறையில் வினவினார்.

1927ஆம் ஆண்டு மகத் குளப் போராட்டக் காலத்தின் போது மேதை அம்பேத்கரும் சாதி இந்துக்களை நோக்கி, “உங்களுடைய மதம்தான் எங்களுடைய மதம் எனில், உங்களுடைய உரிமைகளும் எங்களு டைய உரிமைகளும் சமமாக இருக்க வேண்டும் அல்லவா” என்று வினவினார்.

பேரணியின் வழிநெடுகிலும் ‘சுதந்தரம், சுதந்தரம்’ (ஆசாத், ஆசாத்) என முழங்கி வந்தனர். அதே போன்று செத்த மாடுகளை இனி அப்புறப்படுத்த மாட்டோம் என்று முழங்கினர்.

1927 மார்ச்சு 19, 20 நாள்களில் மகதில் அம்பேத்கர் நடத்திய மாநாட்டில் “இறந்த விலங்கு களைச் சாதி இந்துக்களே அப்புறப்படுத்திப் புதைத்துக் கொள்ள வேண்டும்” என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

ஆனால் செத்த மாடுகளை அப்புறப்படுத்தும் பணியை இந்தியா முழுவதும் தலித்துகளே செய்து வருகின்றனர். அவற்றின் தோலை உரிக்கும் இழிந்த வாழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

துப்புரவு தொழிலாளர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் இன்றளவும் தலித்துகளாகவே இருக்கும் நிலையில், அவர்களுக்குச் சுதந்தரம் கிடைத்திருப்ப தாக அவர்களால் நினைக்க முடியுமா? மற்றவர்களால் அவ்வாறு துணிந்து கூறமுடியுமா? இப்போதும் இழி வான-தூய்மையற்ற ஏவல் தொழில்களைத் தலித்துகள் மட்டுமே செய்வது ஏன்?

சாதிக்கொரு சுடுகாடு என்று இருந்தாலும், எந்தச் சாதிக்காரன் செத்தாலும் அவனைப் புதைக்கப் பள்ளம் தோண்டுவதும், பிணத்தைக் குழியில் வைத்தபின் மண் மூடுவதும், எரிப்பதாயின் அதற்கான பிண எரிமேடையை உருவாக்கு வதும், சாம்பலாகும் வரை அருகில் காவலாக நின்று எரிக்கும் கொடுமையும் இழிவும் நீடிப்பது ஏன்? சாதிக் காரர்களே சாதியாளின் உடலை அடக்கம் செய்து கொள்ளும் நிலை ஏன் இன்னும் ஏற்படவில்லை?

அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட தலித் தன்மான எழுச்சிப் பேரணி 15.8.2016 அன்று உனா நகரை அடைந்தது. உனாவின் சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கி.மீ.

தொலைவில் உள்ள ஊர்களி லிருந்தும் பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பல ஆயிரம் தலித்துகள் வந்திருந்தனர்.

சமூக செயற்பாட்டாளர்கள், முசுலீம்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அம்பேத்கரின் உருவப்படத்தைக் கையில் ஏந்தியவாறு ‘ஜெய்பீம்’, ‘ஆசாத், ஆசாத்’ என்று விண்ணதிர முழக்கமிட்டனர்.

15.8.2016 அன்று உனா நகரில் நான்கு தலித் இளைஞர்கள் கொடுமையாகத் தாக்கப்பட்ட இடத்தில் நடப்பட்ட உயரமான கம்பத்தில் ரோகித் வெமுலாவின் தாய் இராதிகாவும், தாக்கப்பட்ட நான்கு தலித் இளைஞர்களில் ஒருவரின் தந்தையான பாலுபாய் சர்வய்யாவும் இந்தியாவின் தேசியக் கொடியை ‘ஜெய்பீம்’ என்கிற முழக்கத்கிடையே ஏற்றினர்.

அப்போது இராதிகா வெமுலா பேசிய போது, “ரோகித்தின் இறப்புக்கு எனக்கு நீதி கிடைக்கவில்லை. என் மகனுக்கு நேரிட்டது போன்ற நிலை இனி எதிர்காலத்தில் எந்தவொரு தலித் துக்கும் ஏற்படாதவாறு நாம் செயல்பட வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.

சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கன்னையா குமார், “குசராத் மாநிலம் முன்னோடி என்கிற முகத் திரையைத் தலித் மக்களின் இம்மாபெரும் பேரணி கிழித்துவிட்டது” என்றார்.

அக்கூட்டத்தில், “செத்த மாடு களை அகற்றுவதில்லை; அவற்றின் தோலை உரிப்பதில்லை; மனிதக் கழிவை அகற்றுவதில்லை” என்று தலித்துகள் உறுதிமொழி எடுத்தனர்.

குசராத் அரசு தலித்துகளின் வாழ்வாதாரத்துக்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் அய்ந்து ஏக்கர் நிலத்தை ஓராண்டிற்குள் தரவேண்டும்; இல்லாவிடில் இரயில் நிறுத்தப் போராட் டம் நடத்தப்படும் என்று அக்கூட்டத்தில் அறிவிக்கப் பட்டது.

முற்றிலுமாகத் தலித் அரசியல் கட்சிகளையோ, மற்ற அரசியல் கட்சிகளையோ சாராமல், போராடி னால்தான் ஒரு தப்படியேனும் முன்னேற முடியும் என்பதை குசராத்தின் தலித் தன்மானப் பேரணி உணர்த்துகிறது.

1942இல் நாகபுரியில் தலித்துகள் மாநாட்டில் அம்பேத்கர் விடுத்த “கற்பி, போராடு, ஒன்று சேர்” என்கிற கோட்பாட்டின்படி தலித்துகள் செயல்பட்டனர். எதிர்காலத்திற்கும் இதையே முன்னோடியாகப் பின்பற்ற வேண்டும் என்பதை தலித் மக்களின் ஒன்று பட்ட பேரணி உணர்த்துகிறது.

சங்பரிவாரங்களும் பா.ச.க.வும் அயோத்தியில் பாபர் மசூதி - இராமஜென்மபூமி பிரச்சனையைப் பல ஆண்டுகள் அரசியல் கருவியாகப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் ஆழமாக வேரூன்றி வளர்ச்சி பெற்றன.

இராமர் கோயிலின் சாயம் வெளுத்துவிட்டதால் கோமாதா வாலைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டு “சொர்க்கம் போவது” போல், நடுவண் அரசின் ஆட்சியை மட்டுமின்றி எல்லா மாநிலங்களின் ஆட்சிகளையும் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளன.

‘பசு அரசியலுக்கு’ ஒரே தீர்வு - முதலாவது அரச மைப்புச் சட்டத்தை எழுதிய பெனகல் நரசிங்கராவ் எழுதிய வரைவிலோ, மேதை அம்பேத்கர் உருவா க்கிய அரசமைப்புச் சட்ட வரைவிலோ ‘பசுப் பாதுகாப்பு’ என்பது இடம்பெறவில்லை.

அரசமைப்புச் சட்ட அவை யில் இருந்த சில இந்துவெறியர்களின் கட்டாயத்தால், அரசின் கொள்கை வழிகாட்டும் நெறிப்பகுதியில் விதி 48இல் பசுப் பாதுகாப்பு - பசுவைக் கொல்லக் கூடாது என்பது இடம்பெற நேரிட்டது.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், பசுப் பாதுகாப்பு எனும் இந்துத்துவ முழக்கத்தை விஞ்சும் வகை யில் விதி 48அய் நீக்குக என்று கோரித் தீவிரமாகப் போராட வேண்டியது மதச்சார்பற்ற முற்போக்கு சன நாயக இயக்கத்தின் பல்துறை அறிஞர்களின் முதல் கடமையாகும்.

ஜெய்ப்பூரில் 6.8.2016 அன்று கோசாலையில் 500 பசுக்கள் பட்டினியால் செத்தன.

கோசாலையில் பசுக்களை அடைத்துக் கொல்லும் இந்துத்துவ வெறியர்களே உண்மையான கொலைகாரர்கள்.