பொதுப்பாதையில் ஒரு தலித் பிணம் எடுத்துச் செல்லப்படுவதைத் தடை செய்த சாதி இந்துக்களின் அடங்காத சாதி ஆதிக்கத் திமிரை உடைத்து, (காண்க ‘தலித் முரசு' செப்டம்பர் 09) பொதுப்பாதையில் பிணம் எடுத்துச் சென்ற இருபதாம் நாள், தலித் இளைஞர் ராஜாவை படுகொலை செய்துள்ளனர் வண்டிப்பாளையம் சாதி இந்துக்கள். 400க்கும் மேற்பட்ட சாதி இந்துக்களின் குடும்பங்கள் வாழும் இந்த ஊரில் தலித்துகள் வெறும் 31 குடும்பங்கள்தான் என்றாலும், தங்களது கடுமையான உழைப்பால், ஒடுக்குமுறைகளை சந்தித்தும் பொருளாதாரத்தில் சாதி இந்துக்களுக்கு நிகராக வாழ்ந்து வருகின்றனர்.
சாதி ஆதிக்கம் தளர்வதைத் தாங்கிக் கொள்ள முடியாத சாதி இந்துக்கள், தலித்துகளை மீண்டும் ஒடுக்கி, அச்சத்தின் பிடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டுள்ளனர். அதன் முதல் கட்டமாக 2.10.09 வெள்ளிக்கிழமை முதலே தலித்துகளுக்கு ஊரில் இருந்த கடைகளில் பொருட்கள் தர மறுத்துள்ளனர். குடிதண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. மணி, நாகராஜ் என்கிற இரு தலித்துகளின் கிணற்றில் இருந்த மின் மோட்டார்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தலித்துகள் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியில் எங்கும் செல்ல முடியாதபடி பொதுவழியெங்கும் முட்கள் வெட்டிப் போடப்பட்டு, சேரியை திறந்தவெளி சிறையாக மாற்ற முயன்றனர் சாதி இந்துக்கள். இது தொடர்பாக 4.10.09 அன்று காலை மரக்காணம் காவல் நிலையத்தில் தலித்துகள் புகார் கொடுத்தனர். முட்கள் போட்டு மறிக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்தும் போலிசாரிடம் கொடுத்தனர். ஆய்வாளர் மாலை விசாரிப்பதற்காக வரச் சொன்ன நிலையில், மீண்டும் மாலை 5 மணியளவில் காவல் நிலையம் சென்றுள்ளனர்.
அன்று மாலை 6 மணியளவில், தலித் குடியிருப்பில் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் இருந்த ராஜா, கண்ணுக்கெட்டிய தூரத்தில் தனது கோழிப்பண்ணை எரிவதைப் பார்த்து ஓடியுள்ளார். ஓடிய ராஜாவுடன் ஒரு சிறு பையனும் ஓடியுள்ளான். அப்போது சாதி இந்துக்களான தே.மு.தி.க.வைச் சேர்ந்த பரந்தாமன் (நாயுடு) உள்ளிட்ட பலர் ராஜாவின் 300 அடி நீள கோழிப்பண்ணை எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அருகே இருந்த சாதி இந்துவான அய்யனார் என்பவரின் கோழிப்பண்ணைக்கும் அவர்களே தீ வைத்துள்ளனர்!
சாதி வெறிக்கு தனது கோழிப்பண்ணை இரையாவதைப் பார்த்த ராஜா, அவர்களிடம் ஒன்றும் பேசாமல், விசாரணைக்காக மரக்காணம் காவல் நிலையத்தில் இருந்தவர்களிடம் தகவல் சொல்லியுள்ளார். அவர்களும் போலிசாரிடம் இச்சம்பவத்தை தெரிவித்தனர். போலிசார் உடனடியாக ஒரு தீயணைப்பு வண்டியினை ஊருக்கு அனுப்பியுள்ளனர். ஊருக்குள் சென்ற வண்டியினை வழிமறித்த சாதி இந்துக்கள், அய்யனாரின் கோழிப்பண்ணையை அணைக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு ராஜா, "என்னுடைய பண்ணை அதிகமாக எரியுது, நான்தானே போன் செஞ்சி வரவழைச்சேன். என்னுடையதை முதலில் அணைங்க" என்று கூறியுள்ளார். ஆனாலும், ஊர்க்காரர்களின் அச்சுறுத்தல் காரணமாக தீயணைப்புத் துறையினர் அய்யனாரின் பண்ணையில் தண்ணீர் அடிக்கத் தொடங்கியுள்ளனர்.
அப்போதுதான் ராஜா தாங்க முடியாத துக்கத்தில், "ஏன் இந்த மாதிரி என்னோட பண்ணையை கொளுத்திட்டு, எங்க சொத்தை அழிக்கிறீங்க" என்று கூறியதும், அங்கிருந்த சாதி இந்துக்கள், "பறப்பசங்கன்னா பழைய மாதிரி கம்முன்னு இருக்கணும். இப்ப என்னா புதுசா வழியெல்லாம் கேக்கறீங்க. இதுல வர்ற காச வச்சிகிட்டுதானே எல்லாம் செய்யுற. இனிமே எதவச்சு என்னா செய்வ" என்று கூறியபடியே கட்டையால் தாக்கியுள்ளனர். ராஜாவுடன் சென்றவர் உயிர் பயத்தில் திரும்பிவிட்டார். ராஜா அடிபட்ட நிலையில் ஓடமுயன்ற போது கைலி தடுக்கி கீழே விழுந்து விட்டார். கீழே விழுந்த ராஜாவை சாதி இந்துக்கள் அனைவரும் கூடி நின்று கட்டை, கல், கழி போன்றவற்றால் தொடர்ந்து தாக்கியுள்ளனர். பெரிய கல்லை தூக்கிப்போட்டு, முகத்தை சிதைத்துள்ளனர். கத்தியாலும் வெட்டியுள்ளனர். ராஜாவின் முகம் முழுவதும் சிதைந்துள்ளது.
சாதி இந்துக்களின் தொடர் தாக்குதலில் ராஜா மயக்கமடைந்துள்ளார். அதன்பிறகு சாதி இந்துக்களின் வன்முறைக் கும்பல் தலித் குடியிருப்பிற்குள் புகுந்து வீடுகளையும், வீட்டிலிருந்த பாத்திரம் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து, உடைத்து சேதப்படுத்தியுள்ளது. ராஜாவைப் போன்று தாங்களும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் தலித்துகள் 31 குடும்பத்தினரும் இரவோடு இரவாக தங்கள் குடியிருப்பைவிட்டு வெளியேறினர். பேச்சில்லாமல் கிடந்த ராஜாவைக் காப்பாற்ற வந்த ஆம்புலன்சை வழிமறித்த சாதி இந்துக்கள், தங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி, மிரட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு தகவல் சொல்லி, மற்றொரு ஆம்புலன்ஸ் வந்து ராஜாவை தூக்கும்போது, ராஜா இறந்துவிட்டிருந்தார். படுகொலைக்கு ஆளான ராஜாவின் மனøவி உஷா(24), மகள்கள் நித்யா(4), இனியா(5 மாதக் கை குழந்தை) ஆகியோர் எதிர்காலம் குறித்த கேள்விக்குறியுடன் உள்ளனர்.
மறுநாள் 5.10.09 திங்கட்கிழமை. கொல்லப்பட்ட ராஜாவின் உடலருகே, ராஜாவின் குடும்பத்தினரைத் தவிர உள்ளூர் தலித்துகள் எவருமே வரவில்லை. சாதி இந்துக்களின் கொடுந்தாக்குதலுக்குப் பயந்து இரவே கிராமத்தைவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். தகவல் அறிந்து கிராமத்திற்குச் சென்ற வெளியூரைச் சேர்ந்தவர்கள் ராஜாவின் இறுதி ஊர்வலத்தை நடத்தி, உடலை அடக்கம் செய்துள்ளனர்.
சாதி இந்துக்களால் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில், 31 தலித் குடும்பத்தினர் சுமார் 200 பேர் வண்டிப்பாளையம் கிராமத்தைவிட்டு வெளியேறி, அருகில் உள்ள நடுக்குப்பம் என்கிற கிராமத்தின் தலித் குடியிருப்பில் தங்கியுள்ளனர். அங்குள்ள தலித்துகள் உணவளித்து, ஆதரவளித்தனர். 6.10.09 அன்று காலை வீட்டில் உள்ள ஆடு, மாடு போன்ற கால்நடைகளைப் பார்த்துவர கிராமத்திற்குச் சென்ற தலித் பெண்களை, சாதி இந்துப் பெண்கள் வழிமறித்து, திட்டி, அவமானப்படுத்தி, கிராமத்திற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு, வன்னியர் சாதிப் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டதால், வன்னியர்களால் கடத்தி, படுகொலை செய்யப்பட்டார் மானூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர். இக்கிராமத்தைச் சேர்ந்த தலித் மனித உரிமை ஆர்வலர் வாசுதேவன், வண்டிப்பாளையம் ராஜா படுகொலைக்குப் பின்பு நடந்தவை குறித்து நம்மிடம் கூறினார் : ‘‘ராஜாவிற்கு அப்பா, அம்மா, தம்பி, மனைவி, மாமனார்னு எல்லாம் இருக்காங்க. ஆனா கொலை நடந்த 4 ஆம் தேதி ராத்திரி 8 மணிக்கு, 80 வயசான ராஜாவின் பெரியப்பா மாசிலாமணி (த/பெ பெருமாள்) என்பவரை மரக்காணம் போலிஸ் அழைச்சிக்கிட்டு போய் புகார் எழுதி கையெழுத்து வாங்கிட்டாங்க. அதுக்கப்புறம் போலிசார், அய்யனார் கோழிப்பண்ணையை கொளுத்தியதாகக் கூறி, காவல் நிலையத்திலேயே அவரை உட்கார வைச்சிட்டாங்க. மாசிலாமணியை போலிசார் அடைச்சி வச்சிருக்காங்கன்னு தகவல் தெரிஞ்சி மறுநாள் 5 ஆம் தேதி காலை 9 மணியளவில் காவல் நிலையம் சென்ற தலித் இளைஞர்கள், போலிசாரிடம் பேசி மாசிலாமணியை விடுவித்துள்ளனர். இதுல கொலை வழக்கு போட்ட போலிஸ், கொலை செஞ்ச முக்கியமான சில ஆளுங்கள விட்டுட்டு 9 பேரை கைது செஞ்சாங்க. அதே நேரத்தில் 19 தலித் இளைஞர்கள் பேர்ல கொலை முயற்சி வழக்கும் போட்டனர். அதிலும் குறிப்பாக, வெளியூரைச் சேர்ந்த தலித் இளைஞர்களையும் வழக்கில் சேர்த்தனர்.
இதுவரையிலும் ராஜா குடும்பத்துக்கு அரசாங்கம் எந்தவித நிவாரணமும் தரல. ஊர்க்காரங்களுக்குப் பயந்து, ஊரைவிட்டு வந்த மக்கள் திரும்பி ஊருக்குப் போக முடியாம நடுக்குப்பம் கிராமத்திலேயே இருந்தாங்க. இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம், ‘கிறிஸ்டியன் எய்டு' நிறுவனம் மூலம் ஒரு குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய்னு 31 குடும்பத்துக்கும் நிவாரணமா கொடுத்தாங்க. அப்பதான் சில பெண்கள் எங்களுக்கு இதுகூட முக்கியம் இல்ல தம்பி, எங்கள திரும்பி பாதுகாப்பா எங்க ஊர்ல கொண்டுபோய் விட்டா போதும் என்று அழுதார்கள். அதுக்கப்புறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கூட்டம் போட்டு, மக்களை கொண்டுபோய் ரேஷன் கார்டு ஒப்படைக்கிற போராட்டம் நடத்துறதுன்னு முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 12ஆம் தேதி குடும்ப அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. ஏற்கனவே கூட இந்த மாதிரி ரேஷன் கார்டு ஒப்படைக்கிற போராட்டம் நடக்கும்போது, மக்கள் கார்டை அதிகாரிகள்கிட்ட கொடுப்பாங்க. ஆனா அதிகாரிங்க கார்டை கையில வாங்க மாட்டாங்க. பேசி பிரச்சனையை தீர்ப்பதற்கு முயற்சி செய்வாங்க. ஆனா, இந்த முறை, வட்டாட்சியர் சீத்தாராமன், மக்கள் கொடுத்த குடும்ப அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டார். காலை 11 மணி முதல் 3 வரை மக்கள் உட்கார்ந்துவிட்டார்கள். 2 மணிக்கு அப்புறம் மழை பெய்தபோதும் யாரும் எந்திரிக்கல. அதற்குப்பிறகுதான் வட்டாட்சியரும், கோட்டாட்சியரும் பேசி, இப்போதே உங்களை உங்கள் கிராமத்தில் குடியேற்றுகிறோம் வாருங்கள் என்று கூறி அழைத்துச் சென்றார்கள்.
மாலை 5 மணி அளவில் அதிகாரிகள் வண்டிப்பாளையத்தில் விட்டுச் சென்றனர். வண்டிப்பாளையம் காலனிகாரனுக்கு உதவி செய்றியான்னு, நடுக்குப்பம் தலித்துகளை அந்த ஊர் சாதி இந்துக்கள் மிரட்டினாங்க. இதை ஒட்டி மரக்காணம் ஒன்றியத்தில் பல கிராமங்களில் சாதி இந்துக்கள், "இந்தப் பறப்பசங்கள விட்டுடக்கூடாது ஏதாவது செய்யணும்னு" பேசினாங்க. சாதி இந்துக்கள் எல்லாம், குறிப்பாக வன்னியர் சாதியினர் ஒன்றாக சேர முயன்றனர். இன்னும் எத்தனை ராஜாக்களும், முருகேசன்களும் பலியாவதை இந்தச்சமூகம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்குமோ தெரியவில்லை" என்றார்.
வன்கொடுமை நிகழ்வு : 4
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது எண்டியூர் கிராமம். தலித் குடியிருப்பே இல்லாத இக்கிராமத்தின் அரசுப் பள்ளியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தலித் மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் தலித் மாணவர்கள் அனைவரும் இக்கிராமத்தின் வன்னியர் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நாள்தோறும் பயந்து பயந்துதான் பள்ளி சென்று வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தலித் மாணவர்கள் வன்னியர் சாதி இளைஞர் / மாணவர்களால் வன்கொடுமைத் தாக்குதலுக்கு உள்ளாகி வகுப்பறையிலேயே சிறை வைக்கப்பட்டனர்.
எண்டியூர் அரசு மேனிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு ‘பி' பிரிவு படித்து வரும் தலித் மாணவர் ஆனந்தராஜ், 2007ஆம் ஆண்டு இதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த வன்னியர் சாதியைச் சேர்ந்த சிலர், வகுப்பறையில் இருந்த ஆனந்தராஜ் மற்றும் முத்து ஆகிய இருவரையும் பள்ளி வளாகத்திலேயே தாக்கியுள்ளனர். இது குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேரடியாக காவல் நிலையத்திலும், அதிகாரிகளுக்கு அஞ்சலிலும் புகார் அனுப்பினார்கள். அதனைத் தொடர்ந்து திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. வழக்கம் போல் எந்த முடிவும் எட்டப்படாமல், தலித் மாணவர்களின் புகார்கள் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன் பின்பு 2008 ஆம் ஆண்டு கதிரவன் என்ற தலித் மாணவரை, எண்டியூரைச் சேர்ந்த வன்னியர் சாதி இளைஞர்கள் பள்ளிக்குள் புகுந்து அடித்து, தாக்கினார்கள். வெளியில் சொன்னால் மீண்டும் தாக்குவார்கள் என்ற அச்சத்தில் கதிரவன் வெளியில் இது குறித்து சொல்லவில்லை. தொடர்ந்து அப்பள்ளியில் படிக்கும் தலித் மாணவர்கள் சாதி ரீதியாக அவமானமாகவும், தரக்குறைவாகவும், பாகுபாட்டுடனும் நடத்தப்படும் சூழல் நிலவியது. இந்நிலையில், இந்தக் கல்வி ஆண்டு பள்ளி திறந்த சில நாட்களில் எண்டியூரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் ராஜதுரை என்ற மாணவன், கட்டளை, தென்நெற்குணம் ஆகிய கிராமங்களை சேர்ந்த இரு தலித் மாணவிகளின் அருகில் வேண்டுமென்றே அமர்ந்துள்ளான். அம்மாணவிகள் இருவரும், அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் அவரது அண்ணன்களான பிரகாஷ், ராஜேஷ் ஆகியோரிடம் முறையிட, ராஜதுரையிடம் இது குறித்து அவர்கள் விசாரித்துள்ளனர். அதன் பிறகு தலித் மாணவர்கள் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து முறையிட்டனர்.
உதவித் தலைமை ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் இருவரும் ராஜதுரையிடம் விசாரித்துள்ளனர். ராஜதுரை எண்டியூரைச் சேர்ந்தவன் என்பது தெரிந்தும், ஆங்கில ஆசிரியர் மேற்கொண்டு எதுவும் விசாரிக்காமல் அமைதியாகிவிட்டார். உதவித் தலைமை ஆசிரியர் விசாரித்ததற்கு ராஜதுரை, "பக்கத்துல உட்கார்ந்தேனே தவிர வேற ஒண்ணும் செய்யவில்லை" என்று கூறியுள்ளான். அதன் பிறகு உதவித் தலைமை ஆசிரியர் அவனை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து வன்னியர் மாணவர்கள் தலித் மாணவர்களை மறைமுகமாக மிரட்டுவதும், இழிவுபடுத்துவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில் 8.7.09 அன்று மாலை பள்ளி முடிந்த பிறகு மேற்கண்ட ராஜதுரையின் நண்பனான, சுமனும், அதே ஊரைச் சேர்ந்த மாணவர் அல்லாத விஜயகாந்த், மணிகண்டன் ஆகிய இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு, 12ஆம் வகுப்பைச் சேர்ந்த தலித் மாணவர் சந்தோஷை, ‘‘இவனும்தான் அன்னிக்கு சார்கிட்ட போய் சொன்னான்'' என்று கூறியபடியே அடித்து தாக்கியுள்ளனர். மற்ற மாணவர்களையும் இவர்கள் வெறியோடு தேட, தகவலறிந்த தலித் மாணவர்கள் வேறு வழியாக தப்பித்துள்ளனர். இதனால் 9.7.09 அன்று தலித் மாணவர்கள் சுமார் 20 பேர், எண்டியூர் தலைவர் விநாயகம் அவர்களை நேரில் சந்தித்து, ‘‘எண்டியூர் மாணவர்கள் பள்ளியில் எங்களை சாதி வித்தியாசம் பார்த்து நடத்துகிறார்கள் பள்ளிக்கு வருவதற்கு பயமாக உள்ளது, நீங்கள் விசாரித்து சரி செய்யுங்கள்'' என்று கூறியுள்ளனர். அதற்கு அவர், பள்ளிக்கு வந்து விசாரிப்பதாகக் கூறினார்; ஆனால் விசாரிக்கவில்லை.
இந்நிலையில் 10.7.09 அன்று காலை பள்ளிக்குச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவர்களிடம், கீழ் வகுப்பு மாணவர்கள் சிலர் ஓடிச்சென்று, ‘‘உங்கள அடிக்கறதுக்காக எண்டியூர்காரங்க ஸ்கூலுக்குள்ள நிக்கறாங்க'' என்று கூறியுள்ளார்கள். அதனால் தலித் மாணவர்கள் பள்ளிக்குள் செல்லாமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்த தமிழ் ஆசிரியரும், உதவித் தலைமை ஆசிரியரும் மாணவர்கள் பள்ளிக்குள் செல்லாமல் வழியில் நிற்பதைப் பார்த்து விசாரித்துள்ளனர். ‘‘ஊர்க்காரங்க எங்கள அடிக்கறதுக்காக உள்ள இருக்காங்க'' என்று மாணவர்கள் கூறியுள்ளனர். ஆசிரியர்கள் இருவரும் நின்றிருந்த ஊர்க்காரர்களை வெளியே அனுப்பிவிட்டு, மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
அதன் பிறகு, காலைக் கூட்டம் முடிந்து வகுப்புகள் தொடங்கிய பின்பு, எண்டியூரைச் சேர்ந்த வன்னியர் மாணவர்களான வசந்தராஜா, கோவிந்தராஜ் ஆகிய இருவரும் வகுப்பில் இருந்த ஆனந்தராஜை வெளியில் அழைத்துள்ளனர். வரமறுத்த ஆனந்தராஜை, மேற்படி இரு மாணவர்களுடன் இன்னும் சிலர் சேர்ந்து திடீரென்று வகுப்பிற்குள் நுழைந்து தாக்கியுள்ளனர். தடுத்த அவனது நண்பர்களையும் அடித்துள்ளார்கள். அப்போது மேலும் சில வன்னிய இளைஞர்கள் பலர் வகுப்பிற்குள் நுழைந்து, அந்த வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களையும் அடித்து தாக்கினர். மேலும், தாக்கும்போது, ‘‘பறப்பசங்க உங்களுக்கு அவ்வளவு திமிராயிடுச்சா. வாத்தியாருங்க கிட்ட வந்து புகார் சொல்ற அளவுக்கு வளந்திட்டீங்களா'' என்று மிரட்டியுள்ளனர்.
அலுவலகத்திலிருந்த ஆசிரியர்கள் ஓடிவந்து அவர்களை வெளியில் அனுப்பி கதவை மூடியுள்ளனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த உதவி தலைமை ஆசிரியர் நெடுமாறன், வன்னியர் இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். மண்டை உடைந்து பலத்த காயமடைந்த அவர் உடனடியாக வெளியில் அனுப்பப்பட்டார். மீண்டும் வந்து தாக்குவார்களோ என்ற பயத்தில் தலித் மாணவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வகுப்பறையில் உட்கார்ந்துள்ளனர். சிறிது நேரத்தில் மீண்டும், திடீரென்று கதவை அடித்து உடைக்க முயன்றுள்ளனர் வன்னியர்கள்.
அதன் பிறகு போலிசார் வந்தனர். தலித் மாணவர்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்த வகுப்பறைக்கு முன்பு காவலிருந்தனர். வருவாய் அதிகாரிகள் வந்தார்கள். சற்று நேரம் கழித்து தாசில்தார் வகுப்பறைக்குள் நுழைந்து தலித் மாணவர்களை வீட்டிற்குப் போகுமாறு கூற, எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் இருந்த தலித் மாணவர்கள், ‘‘துணைக்கு இல்லாம போனா திரும்பவும் அடிப்பாங்க'' என்று மறுத்திருக்கிறார்கள். அப்போது வெளியில் நின்றிருந்த வன்னியர்கள் வகுப்பறைக்குள் ஓடி வந்து தாக்க முயன்றுள்ளனர். போலிசார் அவர்களைத் தடுத்து, பள்ளியை விட்டு கொஞ்ச தூரத்தில் தள்ளிச் சென்று நிறுத்திய பின் இரண்டு மணிநேரம் தொடர்ந்து போலிசார், டி.எஸ்.பி. வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊர் தரப்பினருடன் பேசியும் பலனில்லாமல் போனது. தலித் மாணவர்களைப் பள்ளி யில் இருந்து அனுப்ப வன்னியர்கள் சம்மதிக்கவில்லை. தலித் மாணவர்களை யாருக்கும் தெரியாமல் அதிகாரிகள் தங்கள் ஜீப் காரில் ஏற்றி, அந்தந்த மாணவர்களை அவரவர் ஊரில் இறக்கி விட்டார்கள்.
கடைசி வண்டியில் இரு தலித் மாணவர்களை ஏற்றி கிளம்பிய போது, அதைப் பார்த்துவிட்ட வன்னியர்கள் வண்டியை துரத்தினர். குறைவான எண்ணிக்கையில் இருந்த போலிசாரால் அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. ஓட்டுநர் திறமையாக சமாளித்து வேகத்துடன் வண்டியை ஓட்டிச் சென்றதால், வன்முறைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடிந்தது.
‘‘எண்டியூர் அரசு மேனிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது நிகழும் தீண்டாமை வன்கொடுமை, பாகுபாடுகளைக் களைந்து, தலித் மாணவர்கள் நிம்மதியாகவும், மன அமைதியுடன் படிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி, பள்ளிக்குள் வந்து தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தாக்கிய எண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஆனந்தராஜ் சம்பவம் நடந்த அன்றே புகார் அனுப்பினார். ஆனால் நடவடிக்கை இல்லாமல், அரசு வழக்கம்போல் அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
13.7.09 அன்று நடைபெற்ற அமைதிக் கூட்டம் குறித்து மாணவன் ஆனந்தராஜ் நம்மிடம், ‘‘அந்த அமைதிக் கூட்டத்திலாவது எங்களுக்கு நல்ல வழி கிடைக்கும் என்று நம்பினோம். முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், 2 டி.எஸ்.பி., 5 இன்ஸ்பெக்டர் எல்லாம் இருந்தாங்க. கூட்டம் ஆரம்பிச்சு 2 மணி நேரம் ஆகியும் எங்கள யாரும் விசாரிக்கல, எங்க பிரச்சனையையும் பேசல. தலைமை ஆசிரியர ரூமுக்குள்ள வச்சி பூட்டி வச்சிருந்தாங்க. அதைப் பத்தியும் விசாரிக்கல. ஊர்க்காரங்க சொல்றத எல்லாம் அதிகாரிங்க கேட்டுக் கிட்டு இருந்தாங்க, ‘சசி' அமைப்புல இருந்து வந்து, ‘‘பாதிக்கப்பட்ட மாணவங்கள விசாரிங்கன்னு'' அதிகாரிகளோடு சண்டைப் போட்டாங்க. என்னை மட்டும் விசாரிச்சாங்க. அதுக்கப்புறம் 11, 12ஆம் வகுப்பு படிக்கின்ற 30க்கும் மேற்பட்ட அனைத்து தலித் மாணவர்களுக்கும் டி.சி. கொடுங்கன்னு பேசினோம். இதனால் அதிர்ச்சியடைந்த ஊர்க்காரர்கள், ஒன்றுமே நடக்காததுபோல் எல்லாரும் சமம்னு பேசத் தொடங்கி, 5 நிமிசத்துல கூட்டத்த முடிச்சிட்டாங்க'' என்றார்.
இனி பள்ளியில் எந்தப் பிரச்சனையும் நடக்காது என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் கூட்டம் கலைந்தது. ஆனாலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில்தான் நாள் தோறும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள் தலித் மாணவர்கள்.
‘‘இன்னைக்கு வரை எந்தப் பிரச்சனையும் இல்லேன்னாலும், இந்த அமைதி எத்தனை நாளைக்கு, எத்தனை மாசத்துக்குன்னு தெரியல. கொஞ்சநாள் கழிச்சு எல்லாத்தையும் சேர்த்துவச்சு பழிவாங்குவாங்க. அதற்குள் அரசு இந்தப் பள்ளியை இந்த ஊரில் இருந்து அகற்றி வேறு ஊரில் வைத்தால் நல்லது'' என்பதே மாணவர்களின் கோரிக்கை.
வழக்குரைஞர் மீதும் வன்கொடுமைத் தாக்குதல்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்றாலும், சட்டம் படித்த வழக்குரைஞர் என்றாலும், பிறரால் மதிக்கப்படும் நிலையில் இருந்தாலும், “நீ தாழ்த்தப்பட்டவன்தானே தவிர, சமூகத்தில் உயர்ந்தவன் அல்ல” என்று சாதிய சமூகம் இன்றும் தலித்துகளை தீண்டாமைக்கு ஆளாக்கி வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் வழக்குரைஞர் ரத்தினத்திற்கு உதவியாகப் பணியாற்றியவர் பூபால். மேலவளவு படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இக்குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த பிணையை ரத்து செய்யக் கோரி, 12 வழக்குரைஞர்களுடன் இணைந்து மனு தாக்கல் செய்தவர். சொந்த ஊரில் பாதிக்கப்படும் மக்களுக்கு சட்ட உதவிகளைச் செய்வதற்காக திண்டிவனம் திரும்பி, கடந்த 5 ஆண்டுகளாக வழக்குரைஞராக செயலாற்றி வருகிறார்.
திண்டிவனத்தைச் சுற்றியுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இவருடைய தொடர் முயற்சியால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள் தரும் புகார்களில் போலிசார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முக்கியக் காரணமாக உள்ளார். திண்டிவனம் நகர மன்றத்தின் உறுப்பினராக பணியாற்றும் இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளராகவும் செயலாற்றுகிறார். இவரைத்தான் திண்டிவனம் ரோசனை காவல் நிலைய தலைமைக் காவலர் சுப்பையா, கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தி, இழிவு செய்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து அவரே நம்மிடம் கூறினார்:
“18.10.09 அன்னிக்கு மதியம் 2 மணியளவில் எங்கள் ரோசனைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை ரோசனை காவல் நிலையத்தில் வச்சி, போலிஸ்காரங்க அடிச்சிக்கிட்டு இருக்கிறதா தகவல் கிடைச்சது. உடனே நான் போனேன். போகும்போதும் பசங்கள அடிச்சிகிட்டுதான் இருந்தாங்க. விசாரித்ததில் பசங்க பேர்ல யாரும் எதுவும் புகாரும் கொடுக்கல, எந்த வழக்கும் இல்லை. டூ வீலர் வண்டில, ரோசனை பையன் போகும்போது, பட்டணம்கிற கிராமத்துகிட்ட, அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ இடிச்சிருக்கு. ஆக்சிடென்ட்னு போன் செஞ்சிருக்கான். பசங்க 7 பேர் போயிருக்காங்க. இடிச்ச ஆட்டோ டிரைவர்கிட்ட பேசினதுல, அவர் வண்டிய சரிபண்ணி கொடுக்கறன்னு சொல்லியிருக்காரு. பசங்க கிளம்ப தயாராகியிருக்காங்க, அப்பதான் ரோசனை போலிஸ் ஜீப்ல அங்க போய் நின்னுகிட்டு இருந்த பசங்கள அங்கேயும் அடிச்சி, வண்டில தூக்கிப் போட்டுக்கிட்டு காவல் நிலையம் வந்து, அங்கயும் அடிச்சிகிட்டு இருந்திருக்காங்க. இதுதான் நடந்த சம்பவம். இதுல போலிஸ் எப்படி வந்தாங்க, எதுக்கு வந்தாங்கன்னு தெரியல. பசங்க பேர்ல எந்தப் புகாரும் இல்ல.
அதனால் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசினேன். “எதுக்கு சார் பசங்கள இப்படிப் போட்டு அடிக்கிறீங்க” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஊர்க்காரங்க புகார் கொடுத்தா நாங்க விசாரிக்கக் கூடாதா?” என்றார். தொடர்ந்து நானும், “விசாரிக்கிறத யாரும் வேணாம்னு சொல்ல மாட்டாங்க சார். புகாரே எதுவும் இல்லாம 10 பசங்கள இப்படி ரத்தக் காயம் வர்ற அளவுக்கு எதுக்கு சார் அடிக்கணும். அவனுங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா, வழக்கு போட்டு ரிமான்ட் செய்யுங்க. எதுவும் இல்லாம இப்படி வச்சி அடிச்சிங்கன்னா என்னா அர்த்தம்? எஸ்.சி. பசங்கன்றதாலதானே நீங்க இந்த மாதிரி வச்சி அடிக்கிறீங்க?” என்று கேட்டேன். அதற்கு அவர் நேரடியாக எதுவும் பதில் சொல்லாமல் சமாளிக்கத் தொடங்கினார். அதனால் நான், “எஸ்.பி., டி.எஸ்.பி.க்கு புகார் எழுதிட்டு அப்புறம் பேசிக்கிறேன். இல்லன்னா கட்சிகாரங்கள கூப்பிட்டு சாலை மறியல்தான் செய்யணும்” என்று கூறிவிட்டு, எழுந்து வெளியில் செல்லத் திரும்பினேன்.
அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஏட்டு சுப்பையா என்பவர் எழுந்து, “சாலை மறியல் செஞ்சிடுவியா நீ, புகார் எழுதிடுவியா” என்று கூறியபடி என்னை கன்னத்தில் ஓங்கி அடிச்சிட்டார். அதற்குள் சில போலிசார் ஓடிவந்து என்னை சமாதானப்படுத்த முயன்றனர். அடைத்து வைத்திருந்த அந்த 10 இளைஞர்களையும் விடுவித்தனர்.
நாங்கள் நேராக அரசு மருத்துவமனைக்குச் சென்று, காயங்களைப் பதிவு செய்து, சிகிச்சை பெற்று மீண்டும் காவல் நிலையம் வந்தோம். தகவல் அறிந்து, எங்கள் பகுதி மக்கள் சுமார் 300 பேர் திரண்டிருந்தனர். என்னை நன்றாக தெரிஞ்சிருந்தும், அடிச்ச ஏட்டு சுப்பையா பேர்ல வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துல வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி நானும், பசங்க, அவங்கள அடிச்சதுக்கும், வண்டி விபத்துக்கும் தனித்தனியாக புகார் கொடுத்தோம். அதுக்கு ரசீது கொடுக்கல.
சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல் துறையினரும் சாதி ஆதிக்கத்திற்கு ஆளாகி, தலித்துகளுக்கு எதிராக செயல்படுவது, சமூகம் சாதிய ஆதிக்கத்தின் பிடியில் முழுமையாக சிக்கி கொண்டுள்ளது என்பதைத்தான் காட்டுகின்றது.”
கை கட்டி நிற்கும் கலைஞர் (காவல்) துறை
வண்டிப்பாளையத்தில் 19.10.2009 அன்று மாலை 6.45 மணியளவில் தலித் குடியிருப்பில் 4 வீடுகள் சாதி இந்துக்களால் கொளுத்தப்பட்டன. வீடுகள் எரிந்த நிலையில் பணம், துணி, பாத்திரம் என அனைத்தையும் பறிகொடுத்து மாற்றுத் துணிக்குக் கூட வழியில்லாமல் இருக்கின்றனர். நான்கு வீடுகளில் வாழ்ந்த ஏழு குடும்பத்தினரையும் மறுநாள் காலை ஏழு மணிக்கு நாம் சென்று பார்க்கும் போது எரிந்த நெருப்பில் நெல் புகைந்து கொண்டிருந்தது. குடிசைக்கு தூணாக இருந்த கருங்கல் கூட இரவு முழுவதும் எரிந்த நெருப்பில் வெந்து தொட்டதும் ஒடிந்து விழுந்தது. சாதி இந்துக்களின் தொடர் வன்முறைகளால் கடும் பாதிப்புக்குள்ளான தலித்துகள் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் அச்சத்துடன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
வன்னியர்களின் வன்கொடுமை வெறியாட்டம் அடுத்த இதழிலும்