இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அறிவித்த போராட்டத்திற்கு தமிழகத்தின் முதல்வர் கலைஞர் கருணாநிதி, போராட்டத்திற்கு முன்தினம் தனக்கே உரிய முறையில் ஒரு குழப்பமான அறிக்கையை வெளியிட்டார். ஆலய நுழைவுப் போராட்டம் வன்முறையில் முடியக்கூடாது என்ற தனது கவலையைத் தெரிவித்திருந்தார். ஆண்டாண்டு காலமாய் பொது இடங்களில் தலித் மக்களை அனுமதிக்காதது அவருக்கு வன்முறையாய் தெரியவில்லை போலும்.
"ஆண்டவன் அருகில் நின்று அவனுக்கு அர்ச்சனை செய்யும் உரிமையையும் தி.மு.கழக அரசு பெற்றுத் தந்துள்ளது. ஆனால் அரசியல் சட்டமே ஏற்றுக் கொண்டுள்ள நிலைக்கு மாறாகவும், ஆன்றோரும், சான்றோரும் அறிவியக்கப் பெரியவர்களும், ஆன்மீகப் புரட்சியாளர்களும் ஏற்றுக் கொண்டு சர்வேஸ்வரனை வணங்கவும் துதித்துப் பிராத்திக்கவும் - சம உரிமை அனைவருக்கும் உண்டு என்ற நிலை நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் காலக்கட்டத்திலும்",
“ஆலய நுழைவுக்காக போராட்டம் நடத்துவோராயினும் அதை எதிர்க்கும் வைதீகக் கூட்டத்தினராயினும்; அறவழியில் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள சட்டரீதியான அணுகுமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சமத்துவத்துக்கு ஆலயங்களிலும் வழிவிடுங்கள் என்றும் ஆத்திகப் பெருமக்களையும் போராட்டத்தைத் தடுக்கும் முயற்சியிலும் அதை மீறி உள்ளே நுழையும் முயற்சியில் ஈடுபடும் இருசாராரையும் வன்முறைக்கு வழிகோல வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.”
"ஆலய நுழைவுப் போராட்டத்தின் தத்துவத்திற்கு இந்த அரசு முரணானதல்ல; அதே நேரம் ஐதீகம் என்ற போர்வையால் பகுத்தறிவைப் பாழ்படுத்தி பள்ளத்தில் புதைக்கும் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது."
இதுவெல்லாம அவர் உதிர்த்த முத்துக்கள்.... அதாவது காங்கியனூரில் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும் என்பது, அதாவது உரிமையைக் கேட்பது வன்முறையைத் தூண்டுவதாம். அதனால்தான் காவல்துறையினர் தடியடி நடத்தினர் போலும்... இந்த அறிக்கையில் முதல்வர் வன்முறை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதுகூட அந்த தடியடியை நினைவுபடுத்தி போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களையும், போராட்டத்தில் பங்கெடுக்கும் தலித் மக்களையும் குழப்புவது அல்லது மிரட்டுவதுதான். ஆனால் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் கடந்த டிசம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் நடந்தது. தொடர்ந்து பல மாவட்டங்களில் நடக்கவும் உள்ளது.
திருச்செங்கோடு பிரம்மலிங்கேஸ்வரர் ஆலய நுழைவுப் போராட்டம்
வர்க்கப்போரின் நீங்கா நினைவு பெற்ற வெண்மணி தியாகிகள் தினமான டிசம்பர் 25 வெள்ளியன்று தீண்டாமை கொடுமைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழகம் முழுவதும் தீண்டாமைக்கு எதிரான நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இப்போராட்டம் திடீரென நடத்தப்பட்டதல்ல, மூன்று மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பள்ளிப்பாளையம் அருகேயுள்ளது கொக்கராயன் பேட்டை. இங்கு பழைமை வாய்ந்த பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் பராந்தக சோழன் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ள போதிலும், தலித் மக்கள் கோவிலினுள் சென்று வழிபட முடியாத நிலை இருந்தது. ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்து வந்தனர்.
இத்துனை ஆண்டுகளில் எந்த ஒரு தலித்தும் உள்ளே சென்று கடவுளை சந்த்திக்காத்து மட்டுமல்ல அப்படி கேள்வியை கூட அங்கு கேட்டதில்லை என்பதுதான் வரலாறு. அதைவிட கொடுமை இந்த ஆலயம் அங்குள்ள ஆதிக்கசாதியினர் பஞ்சாயத்துக்கு சொந்தமானது என பலர் நம்பிக்கொண்டு இருப்பதுதான். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த பராந்தக சோழன் எப்போது கொங்கு வேளாளர் சங்கத்தில் இணைந்தார் என்பது பிரம்மலிங்கேஸ்வரருக்கே வெளிச்சம். அந்த கோயிலில் சிமெண்ட் வேலைகள் செய்யப்பட்டு முகப்புகள் மாற்றப்பட்டுள்ளது. இப்போது யாரவது அந்த ஆலயத்திற்கு சென்றால் அது பழமை வாய்ந்த கோயில் என்று நம்பமுடியாத அளவில் மாற்றம் அடைந்துள்ளது. அதே போல அந்த ஆலயத்திற்கு சொந்தமான நிலங்கள் எங்கு உள்ளது, அதை யார் வைத்துள்ளனர் என்பது மாயமானதாய் உள்ளது. அதே போல அந்த ஊரில் தலித் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் ஆதிக்க சாதியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக அதை மீட்கப் போராட்டம் துவங்க வேண்டியுள்ளது.
இந்த அவலநிலையை முடிவுக்குக் கொண்டு வர, பலதலைமுறையாக அந்த ஆலயத்தின் கதவுகள் யாருக்காக பூட்டப்பட்டதோ அவர்களுக்காக அந்த கதவைத் திறந்திட, கடவுள் வழிப்பாட்டை ஆதரித்து அல்ல, அது ஒரு பொதுவெளி அங்கு தலித்துகளை தடைபோடுவது ஜனநாயகத்திற்கு கேடு என்பதால், இத்தகைய தீண்டாமை சுதந்திர இந்தியாவின் முகத்தில் காறி உமிழும் செயல் என்பதால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த ஆலய நுழைவுப் போராட்டத்தை அறிவித்தது.
இந்நிலையில், கடந்த 21 ம் தேதி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தையில் அனைத்து தரப்பு மக்களும் கோவிலுக்குள் சென்று வழிபட யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்த ஒத்துழைப்பு தருவதாகவும் கோவில் நிர்வாகம் சார்பாகவும், ஆதிக்கசாதியினர் தரப்பாகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தலித் மக்கள் சார்பில், வட்டாச்சியர் சார்பாகவும் கையொப்பம் இடப்பட்டு உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து வெண்மணி நினைவு தினத்தன்று வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் எ. ரங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. பெருமாள், எம்.அசோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சி.துரைசாமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்கள் ந.வேலுசாமி, எஸ். சுரேஷ், இ.கோவிந்தராஜ் மற்றும் திரளான தலித் மக்கள் ஆலயத்துக்குள் நுழைந்து வழிபாடு செய்தனர்.
போராட்டத்தையொட்டி திருச்செங்கோடு முதல் கொக்கராயன்பேட்டை வரை 18 கிலோமீட்டர் ஆயுதந்தாங்கிய காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால் ஆதிக்க சாதியினர் ஒப்பந்தப்படி நேர்மையாய் நடந்துக்கொள்ளவில்லை, பல கிராமங்களிலிருந்து ஆதிக்கசாதியைச் சார்ந்தவர்களைத் திரட்டினர். தலித் மக்களை இதுவரை ஆலயத்திற்குள் அனுமதிக்காதவர்கள் ஆலய நுழைவுப் போராட்டத்தையடுத்து வருவாய் கோட்டாட்சியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆலயத்தில் நுழைந்த தலித்துகளை மிரட்டவும் செய்தனர். இனி வரும் காலத்தில் விசைத்தறியில் வேலை கொடுக்காமல் பிழைப்பில் மண் போடப்படும் என்றும் மிரட்டினர்.
காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே தலித் மக்களை பயமுறுத்தும் வகையில் ஆதிக்க சக்தியினர் அராஜகமாகப் பேசியதையும், இதனால் தலித் மக்கள் மிரட்சி அடைந்திருப்பதையும் கணக்கில்கொண்டு காவல்துறை தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதும் முக்கியமாகும்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க போலீசார் தடை - வாலிபர் சங்கத்தினர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 8 கிலே மீட்டர் தூரத்தில் உள்ளது பழைய பட்டினம் கிராமம். இக்கிராமத்தில் தலித், முஸ்லிம், கிறிஸ்தவ, ரெட்டியார் சமூகங்களை சார்ந்த மக்கள் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. ஊராட்சி அலுவலகம், நூலகம் மற்றும் கட்சி கொடிகம்பங்கள் உள்ள அரசு இடத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அங்குள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த சிலர் அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மாலை அணிவிக்க விடமாட்டோம் என்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப் பிரச்சனையை தீர்க்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இந்நிலையில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் போராட்டத்தை வாலிபர் சங்கம் அறிவித்தது. இப்பிரச்சனை தொடர்பாக வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறிப்பிட்ட சமூகத்தினரின் பிடிவாதத்தால் தோல்வி அடைந்தது. போராட்டம் நடந்தே தீரும் என வாலிபர் சங்கத்தினர் கூறினர்.
இந்நிலையில் பழையபட்டினம் கிராமத்திற்குள் செல்லும் சாலைகள் அனைத்துக்கும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டது. கிராமத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு யாரையும் கிராமத்திற்குள் அனுமதிக்கவில்லை. விருத்தாசலத்தில் இருந்து பழையபட்டினம் கிராமத்திற்கு செல்லும் சாலைகளையும் போலீசார் மற்றும் உளவுத் துறையினர் கண்காணித்தனர். கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர், இரண்டு துணை கண்காணிப்பாளர், அதிரடிப்படையினர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிப்பதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாலிபர் சங்கத்தினர் வாகனங்களில் பாதிதூரம் வரைவந்து, வாகனத்தில் இருந்து இறங்கி முந்திரிக்காடுகள் வழியாக நடந்தே போராட்டத்திற்கு விரைந்தனர்.
அம்பேத்கருக்கே தீண்டாமையா? மாலை அணிவிக்கத் தடை என்றால் அவர் என்ன தேசவிரோதியா என்ற முழக்கத்துடன் விரைந்த வாலிபர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து சங்கத்தினர் இரண்டு மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வாலிபர் சங்கத்தை சேர்ந்த 200 பேரும், தலித் மக்கள் 300 பேரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு வாலிபர் சங்க வட்டச் செயலாளர் பொன். சோமு தலைமை தாங்கினார், மாவட்டத் தலைவர் என். எஸ்.அசோகன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேஷ் கண்ணன், பொருளாளர் வி.ராமகிருஷ்ணன், துணை செயலாளர் பி.வாஞ்சிநாதன், வி.தொ.ச. வட்ட செயலாளர் வி.சிவஞானம் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்னதர். மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே. கந்தசாமி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஏ.சந்திரசேகரன் ஆகியோரை வழியிலேயே கைது செய்தனர். வாகனத்தில் வாலிபர் சங்கத்தினர் வந்ததால் 3 வாகனங்களை பறிமுதல் செய்து, 3 ஓட்டுநர்களையும் கைது செய்தனர். பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாவட்டம் முழுவதும் வாலிபர்களை திரட்டி இப்போராட்டத்தை நடத்துவேம் என்று வாலிபர் சங்கம் அறிவித்துள்ளது.
திருப்பூர் அருகே வாலிபர்கள் போராட்டம் தீண்டாமையை கடைப்பிடிக்கும் சலூன் கடைக்கு எதிர்ப்பு
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் கொடுவாய் கிராமத்தில் தலித் மக்களுக்கு முடி திருத்த மறுத்து தீண்டாமையைக் கடைப்பிடித்துவரும் சலூன்கடையை வாலிபர் சங்கத்தினர் ஆவேசத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணி என்ற தலித் வாலிபர் அங்கு முடி திருத்தச் சென்றுள்ளார். அப்போது கடையில் யாரும் இல்லை. இருந்த போதிலும் சுப்பிரமணி தலித் என்ற காரணத்திற்காகவே அவருக்கு முடி திருத்த மறுத்துள்ளனர். இந்த அவல நிலையை முடிவுக்குக் கொண்டுவர, கடையை முற்றுகையிட்டு வாலிபர்கள் போராட்டம் நடத்தினர். வாலிபர் சங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஏராளமான தலித் இளைஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு முருகேஷ் தலைமைதாங்கினார். வாலிபர் சங்க தலைவர்கள் ஆர்.காளியப்பன், எஸ்.முத்துகண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.ராமமூர்த்தி, என்.ஆறுமுகம், பி.மோகன், வடிவேல், மணவாளன், லேகநாதன், ஜி. சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிர்ப்பு மறியல்: இந்நிலையில், ஆதிக்க சக்தியினரை தனிப்பட்ட முறையில் திரட்டிய மேற்படி சலூன் கடைக்காரர், அவ்வூரில் உள்ள இதர சலூன் கடைகளையும், பிற கடைகளையும் அடைக்கச் செய்து, வாலிபர் சங்கத்தினரை கைது செய்யக் கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அரசு நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. இது தவிர ஈரோடு மாவட்டம் நசியனூரிலும், கோவை மாவட்டம் புளியகுளத்திலும் சமுதாயக்கூடம் திறப்பு, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் நல்லமநாயக்கன்பட்டியில் முடிதிருத்தப் போராட்டம் போன்ற இயக்கங்களையும் வாலிபர் சங்கத்தினர் வெற்றிகரமாக நடத்தினர். மேலும் மதுரை, சென்னை, புதுக்கோட்டை, உளுந்தூர் பேட்டை, சேலம், சிவகங்கை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்ட செய்திகளை வெளிநாட்டிலிருந்து தொலைகாட்சியில் பார்த்த ஒரு நண்பர் "தொடர்ந்து தீண்டாமை கொடுமையை சொல்லிக்கொண்டு இருந்தால் மற்ற சமூகத்தை சார்ந்தவர்கள் உங்கள் இயக்கத்தை எப்படி ஆதரிப்பார்கள் என்று "அக்கறையுடன்" எனக்கு மினஞ்சல் அனுப்பி இருந்தார். அவருக்கு நான் அனுப்பிய பதில் அஞ்சலில் இப்படி எழுதி இருந்தேன்.
அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். தங்கள் மின் அஞ்சல் கிடைத்தது. நன்றி.
தீண்டாமைக் கொடுமைகள் இருப்பதை தொடர்ந்து பேசுவதற்கே சிரமமாய் இருப்பதாக நினைத்தால், காலகாலமாய் அதை அனுபவித்து வரும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை ஒப்பிடக்கூட அருகதையற்றவர்களாய்தான் நாம் இருக்கக்கூடும். எனவே அவர்களுக்கான போராட்டங்களை முன் எடுத்துச் செல்வது இந்த நாட்டின் குடிமக்களின் கடமை மட்டுமல்ல அது சமூக கடமையும் ஆகும். இதனால் எமது இயக்கத்தின் மீது ஆதிக்கசாதியை சார்ந்தவர்கள் கோபம் கொள்வதை தவிர்க்க முடியாதுதான். ஆனால் அதற்காக வரலாறு சாக்கடையில் தேங்கி நிற்பதை அனுமதிக்க முடியாது.
மற்றொன்றை நினைவில் வை நண்பா, வாலிபர் சங்கம் சாதிய இயக்கம் அல்ல, கடந்த டிசம்பர் 25ம் தேதி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தில் விருதாசலத்தில் கைது செய்யப்பட்டவர்களில். ஆலய நுழைவு போராட்டத்தில், தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுத்ததை எதிர்த்த போராட்டத்திலும் கலந்துக்கொண்ட வாலிபர் சங்க ஊழியர்களில் பாதிபேர் ஆதிக்க சாதியைச் சார்ந்த இளஞர்கள் என்பதை பெருமையுடன் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர் பட்டாளம் வீதியில் அலைவது அதிகமாக அதிகமாக வெட்டிப் பெருமைகளை முன்நிறுத்தி போதையில் அலைவது தவிர்க்க முடியாதது. எனவே அப்படிப்பட்ட இளைஞர்களைத் திரட்டி சாதிகடந்த இளைஞர்களின் ஒற்றுமையால்தான் வேலை பெற முடியும் என்பதை போதிக்கும் போது அவர்கள் தீண்டாமைக்கு எதிராகப் போராட வருவார்கள் என்பதை நாங்கள் நிருபித்துள்ளோம் . நன்றி.
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு