இந்தியா தனது 60 ஆவது சுதந்திர நாள் விழாவைக் கொண்டாடி முடித்ததற்கு மறுநாள், இரண்டு மனித உயிர்கள் மலக்குழியில் பலியானது எவருக்கும் தெரியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை. ஆகஸ்ட் 16 அன்று, அருப்புக் கோட்டை சேரியைச் சேர்ந்த மதுரைவீரன், அழகர், மகாலிங்கம், துரை ஆகிய அருந்ததியர்கள், அருகிலுள்ள சுக்கலி நத்தம் என்ற கிராமத்தில் பத்மனாபன் (ரெட்டி)யாருக்குச் சொந்தமான வீட்டின் மலக்குழியை சுத்தம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த 35 ஆண்டுகளாக இந்த மலக்குழி சுத்தம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நகராட்சியின் நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள்கூட, இந்த மலக்குழியை சுத்தம் செய்ய மறுத்தபோதும், வறுமையின் காரணமாக தற்காலிகப் பணியாளர்களான மேற்கண்ட நபர்களை அதிகமான பணம் கொடுப்பதாக பொருளாசை காட்டி அழைத்துச் சென்றார் பத்மனாபன்.

மலக்குழியினைத் திறந்து, மேல்மட்டத்திலிருந்து திரவ நிலையிலான மலங்களை வாளியால் அள்ளிய பிறகு, மதுரைவீரன் மலக்குழியில் இறங்கினார். கழுத்து வரை மலம் சூழ்ந்திருக்க வாளியாலும், கால்களினாலும் அடிப்பகுதியை கலக்க ஆரம்பித்தார். 5 வாளிகள் மலத்தை அள்ளிய பிறகுதான் 35 ஆண்டுகளாகத் தேங்கி நின்ற மலம் கூடுதலான நாற்றம் எடுத்தது. உள்ளிருந்து விஷவாயு கிளம்பியதில் மதுரைவீரன் மூச்சடைத்து மலக்குழியிலேயே மயக்கமடைந்தார். மதுரைவீரனின் மயக்க நிலையை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அழகரும், மகாலிங்கம் - மதுரைவீரனைக் காப்பாற்றுவதற்காக மலக்குழியில் குதித்தனர்.

உள்ளிருந்த மதுரைவீரனை,மகாலிங்கம் - அழகரும் தூக்கிவிட, துரை மேலிருந்து இழுத்து அவரைத் தரையில் கிடத்தினார். மகாலிங்கம் மலக்குழியிலிருந்து ஏறி மேலே வர, உள்ளிருந்த அழகர் மலக்குழியிலேயே மூழ்கினார். அழகர் மலத்தில் மூழ்குவதைக் கண்ட மகாலிங்கம் அவரைக் காப்பாற்றுவதற்காக, மீண்டும் மலக்குழியில் குதித்தார். இரண்டு பேரும் மூர்ச்சையாகி மலக்குழியிலேயே மூழ்கினர். மேலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த துரை மயக்கமடைந்து தரையிலேயே படுத்துவிட்டார். ஒருவர் பின் ஒருவராக உயிரைக் காப்பாற்றுகின்ற நோக்கில் இறங்கி மலக்குழியில் இருவர் மாண்டனர்.

துரையும், மதுரைவீரனும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மதுரைவீரனின் நிலை மிகவும் மோசமானதால், அவர் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வார காலமாக சுயநினைவின்றி இருந்த மதுரை வீரன், தற்போது சுயநினைவு பெற்றுள்ளார். எனினும், அவரது பார்வை மங்கலாகி உள்ளது. முற்றிலுமாக கண் பார்வையை இழந்து விடுவாரோ என்கிற அச்சம் உள்ளது.

சுயநினைவோடு இருக்கின்ற துரையை சந்தித்தபோது, “செப்டிக் டேங்க் மூடியை தொறந்த பிறகு நாத்தம் அதிகமா இருந்திச்சு. அதனால நாங்க உள்ள இறங்க யோசிச்சோம். அந்த நேரத்துல ரெட்டியாரு, ஒன்றும் செய்யாதுப்பா சும்மா இறங்குங்க. கூடுதலாககூட இருநூறு ரூபா தர்றேனு சொன்னாரு. அத நம்பி இறங்குனோம். ஆனா இப்பிடி ஆகும்னு நினைக்கல’ என்றார். 17.8.2006 அன்று அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில், தமிழ் நாடு அருந்ததியர் சனநாயக முன்னணியைச் சேர்ந்த தோழர்கள், இக்கொடுமையை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய காவல் துறையோடு கடுமையாகப் போராடிய போதும், வழக்கு சாதாரண பிரிவுகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கையால் மலமள்ளும் முறையை முற்றிலுமாகத் தடைசெய்யும் சட்டம் 1993 ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. இருப்பினும், நகர்ப்புறங்களில் மலக்குழியில் இறங்குவது, மாநகரங்களில் பாதாள சாக்கடையில் இறங்க வைப்பது என்பது போன்ற கொடுமைகள் நீடிக்கின்றன. இதன் விளைவாகவே இத்தகைய கொலைகள். அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழுவின் சர்வேயின்படி, கடந்த மூன்றாண்டுகளில் மட்டும், மலக்குழியில் மாண்டவர்களின் எண்ணிக்கை 32.

மேலும், கையால் மலமள்ளுதல் - ஒழிப்புச் சட்டத்தில் மலக்குழியில் இறங்கி வேலை செய்வது தண்டனைக்குரிய சட்டமாக சொல்லப்படவில்லை என்பது அதைவிடக் கொடுமை. கையால் மலமள்ளும் முறையை ஒழித்துவிட்டதாகச் சொல்லப்படும் தமிழ் நாட்டின் அவலநிலை இது. ஆனால், இது குறித்தெல்லாம் பேசுவதற்கு எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் தயாரில்லை. என்னதான் சட்டங்கள் வந்தாலும், அது உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படாதவரை, அச்சட்டம் மலக்குழியில் போடப்படும் கழிவுதானே!

-ஜக்கையன்
Pin It