நாம் ஏறக்குறைய அரசியல் ரீதியாக பார்ப்பனர்களைத் தோல்வியுறச் செய்துவிட்டோம். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரேதசம் மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களில் முதலமைச்சர்களாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள் அல்லர். பா.ஜ.க., தன்னளவிலேயே செங்குத்தாகப் பிளவுபட்டு சாகும் தருவாயில் கிடக்கிறது. இக்கட்சியிலும் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்கள் வீறுகொண்டு நடக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்தியாவில் பார்ப்பனியம் ஒழிந்துவிட்டதாக எண்ணி நாம் மகிழ்ச்சி அடைந்துவிட முடியுமா?

Ambedkar
இல்லை. இதன் உண்மையான பொருள், பார்ப்பனர்கள் அரசியல் அதிகாரத்தை மட்டுமே இழந்து வருகிறார்கள். ஆனால், தாங்கள் அரசியல் ரீதியாக ஒழிக்கப்படுவதற்கு முன்பாக, அரசியல் அதிகாரம் என்பது ஓர் அதிகாரமே இல்லை என்றளவில் அவர்கள் அதைச் சுருக்கி விட்டார்கள். "அரசியல் அதிகாரமே அனைத்திற்குமான திறவு கோல்' என்று அம்பேத்கரை மேற்கோள் காட்டுபவர்கள், ஒன்றை நமக்குத் தெளிவு படுத்த வேண்டும். தலித்துகளிடம் இந்த முக்கியத் திறவுகோல் இருக்குமேயானால், உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சி ஏன் மூன்று முறை கவிழ்ந்தது?

தலித்துகள் மூன்று முறை அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருப்பினும், உண்மையான அதிகாரம் என்பது நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம், நிதி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலியவைகளிடமே இருக்கின்றன. இவை அனைத்துமே பார்ப்பனர்களின் நூறு சதவிகித கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவேதான் டெல்லியிலும் பிற மாநிலங்களிலும் உள்ள "அரசியல் அதிகாரத் திறவுகோலை' தங்கள் கைகளில் வைத்திருப்பதாகச் சொல்லும் பார்ப்பனர் அல்லாத அரசியல் தலைவர்கள் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு சமூக நீதியை வழங்க முடியவில்லை. ஏனெனில், அரசியல் அதிகாரம் என்பது ஓர் அதிகாரமே அல்ல.

பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஊழல் செய்து அதன் மூலம் பணக்காரர்களாகி இருக்கலாம். ஆனால், அரசு எந்திரம், நீதிமன்றம், ஊடகங்கள், தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் நடை பெறும் ஊழல்களை யாரும் அம்பலப்படுத்துவதில்லை. இத்துறைகளில் இருப்பவர்கள் எல்லாம் சாதி இந்துக்கள் என்பது மட்டுமல்ல; இவர்கள் பெருமளவு ஊழல் பேர்வழிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் பார்ப்பனரல்லாத அரசியல் வர்க்கத்தின் ஊழலை மட்டுமே பெரிதுபடுத்துகின்றன. உண்மையான ஆளும் வர்க்கத்தின் ஊழல் மறைக்கப்படுகிறது. ஏனெனில், அவை முழுக்க முழுக்க பார்ப்பனியமயமாக இருப்பதே காரணம்.

தற்பொழுது உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் ஆட்சி நிர்வாகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தையே சீர்குலைக்கக்கூடிய ஓர் ஆபத்தான போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் அதிகாரம் என்பது, எல்லாவற்றுக்குமான திறவுகோல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சமூக, பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்காமல், வெறும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கானப் போராட்டத்தின் மூலம் நாம் ஆளும் வர்க்கமாக மாறிவிட முடியாது. இதைத்தான் அம்பேத்கர் வலியுறுத்துகிறார். பார்ப்பனியத்தின் வலிமை தகர்க்க முடியாத வகையில் உள்ளது. அவர்களுடைய அரசியல் அதிகாரம் பறிபோயிருக்கலாம். இந்தியாவின் உச்சபட்ச அரசியல் தலைவரான சோனியா காந்தி ஒரு கிறித்துவர்; இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஒரு இஸ்லாமியர்; பிரதமர் ஒரு சீக்கியர். இருப்பினும், அனைத்தையும் முடிவு செய்பவர்கள் பார்ப்பனர்களே. இந்நிலையில், அரசியல் அதிகாரத்தால் என்ன பயன் இருக்க முமுடியும்?

இந்தியா பெருமளவு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மிகச் சிறுபான்மையினரான சாதி இந்துக்கள்தான் மென்மேலும் பணக்காரர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். சுரண்டல், அநீதி, வன்கொடுமை,பெண்கள் மீதான அத்து மீறல் அனைத்தும் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. தலித் (20%), பழங்குடியினர் (10%), பிற்படுத்தப்பட்டோர் (35%), முஸ்லிம் (15%), கிறித்துவர், சீமுக்கியர் (5%) ஆகிய இவர்கள்தான் பார்ப்பனியத்தின் முதன்மையான தாக்குதலுக்கு ஆட்படுபவர்கள். பெரும்பான்மை மக்கள் மீதான வன்முறையில் ஈடுபடக்கூடிய 15 சதவிகித பார்ப்பனிய ஆட்சியாளர்கள், மூன்று சதவிகித பார்ப்பனர்களால் வழிநடத்தப்படுகிறார்கள். பார்ப்பனிய ஒடுக்குமுறையால் பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் சினங்கொள்ளாமல் அமைதியாக இருப்பதன் பின்னணி என்ன?

தங்கள் மீதான வன்முறைகளுக்கு பார்ப்பனியம்தான் காரணம் என்பதை கண்டுபிடித்து, அதை வீழ்த்த வேண்டும் என்பதற்காகப் போராடும் மக்கள், அதில் தொடர்ந்து தோல்வியை சந்திப்பது ஏன்? பார்ப்பனியத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மூன்று சதவிகித சிறுபான்மை மக்களே. பார்ப்பனிய சமூக அமைப்பால் பாதிப்பிற்குள்ளாகும் பெரும்பான்மை மக்கள் பார்ப்பனர்களை எதிர்க்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் இவர்கள் பார்ப்பனர்கள் உருவாக்கியுள்ள கடவுள்களை வணங்குகிறார்கள்; பார்ப்பனர்கள் உருவாக்கிய பார்ப்பனிய மதத்தைப் (இந்து மதம்) பின்பற்றுகிறார்கள். இச்சமூகத்தின் 65 சதவிகித மக்களான தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சாதியினர் பார்ப்பனர்களை வெறுத்தொதுக்கலாம். ஆனால், பார்ப்பனக் கடவுள்களை வழிபட்டு, அக்கடவுளர்களைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். அதுமட்டுமல்ல, அவர்கள் பார்ப்பனிய கொள்கைகளான தலைவிதி, புனர் ஜென்மம், சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் என அனைத்து வகை மூடநம்பிக்கைகளின் நிரந்தர அடிமைகளாகவும் இருக்கின்றனர். எனவேதான் இவர்களைப் பற்றி பார்ப்பனர்கள் துளியும் கவலைப்படுவதில்லை.

அண்ணல் அம்பேத்கர் இந்த சமூகத்தின் முதன்மை முரண்பாட்டைக் களைந்தெறிந்து பவுத்தத்தை கையிலெடுக்கும்படி வலியுறுத்தினார். ஆனால், அவர் சொன்னதைப் பின்பற்றியவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரே. அவ்வாறு செய்தவர்களும் பார்ப்பனிய பவுத்தத்தை கையில் எடுத்துக் கொண்டனர். பார்ப்பனியம் எவரையும் அடிமைப்படுத்தக்கூடிய நஞ்சு. இந்தியாவில் மட்டுமே அடிமைகள் தங்கள் அடிமைத்தனத்தை கொண்டாடி வருகின்றனர். உலகின் பிற பகுதிகளில் பாதிப்பிற்கு ஆளாகும் மக்கள் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து எதிரியை எதிர்த்துப் போரிடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும்தான் அடிமைகள் தங்கள் மீதான அடிமைத்தனங்களைக் கொண்டாடுவதோடு மட்டுமின்றி, எதிரிகளை தங்கள் தலைமேல் வைத்து ஆடுகிறார்கள்.

அம்பேத்கர் மட்டுமே இந்த நோய்க்கான காரணங்களைக் கண்டுபிடித்தார். நாம் அவரைப் புகழ்கிறோம். ஆனால், அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுவதில்லை. அம்பேத்கர் மிகத் தெளிவாகச் சொன்னார் : "அடிமையிடம் போய் நீ ஓர் அடிமை என்று சொல்; அவன் கிளர்ந்தெழுவான்.' ஆனால், இந்திய அடிமைகள் கிளர்ந்தெழுந்தார்களா? இல்லை. ஏன்? அவனுடைய பிரச்சினைகளும் வேதனைகளும் அவனாலேயே ஏற்பட்டதாக அவனுக்குச் சொல்லப்பட்டது. அவனுடைய ரத்த நாளங்களில் பார்ப்பனிய நஞ்சு கலந்து விட்டதால், அவனுடைய சிந்தனையே மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. இந்திய அடிமைகள் தங்களின் அடிமைத்தனத்தைக் கொண்டாடுவதன் காரணம் இதுவே.

வன் கொடுமைகளுக்கு ஆளாகும் மக்கள் அதை உணர மறுக்கிறார்கள் என்றால், அவர்களை யார் விடுதலை செய்ய முடியும்? அவன் துன்பப்படுவதை எப்படி உணர்த்த முடியும்? தலித்துகளில் உள்ள படித்த மக்களும் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்கள். அதுமட்டுமல்ல, எதிரிகளுடன் அவர்கள் கைகோர்த்துக் கொண்டனர். பசியுள்ள மனிதன் கிளர்ந்தெழுவான் என்று எதிர்பார்க்க முடியாதுதான். சிந்திக்க நேரமில்லாதவனுக்கு கிளர்ந்தெழவும் நேரமிருக்காது. பார்ப்பனிய சக்திகள் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை அந்த அளவுக்கு வறுமையில் ஆழ்த்தியுள்ளனர். பசியோடு இருக்கும் வயிறு கிளர்ந்தெழுமா? புரட்சி செய்வதற்கு புரட்சிகர சூழல் தேவை. சிந்திக்கும் மக்களே அத்தகைய புரட்சியை ஏற்படுத்த முமுடியும். ஆனால், பெரும்பான்மை மக்கள் சிந்திக்க முடியாத அடிமைகளாக ஆக்கப்பட்டு விட்டனர். இந்து மதத்தின் அதிகாரத்தால் இது சாத்தியமாயிற்று. இதை எதிர்த்துப் போராடி ஒழித்தாக வேண்டும். ஆனால், பார்ப்பனியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்கள் உருவாக்கிய கடவுள்களை வணங்கும் வரை, இதற்கு சாத்தியமே இல்லை.

டாக்டர் அம்பேத்கர் சொன்னதுபோல, இந்தியாவின் தொல்குடி மக்கள் இந்துக்கள் அல்லர். இந்துக்கள் அல்லாத மக்கள் இந்து மதத்தினால் பாதிக்கப்படுகிறார்கள் எனில், இந்து மதத்தை எதிர்க்க ஏன் தயங்க வேண்டும்? நாம் இந்துக்கள் அல்லர் என்று சொன்னால், நாம் வேறு எந்த மதத்தைப் பின்பற்றுவது; வேறு எந்தக் கடவுளை வணங்குவது என்ற கேள்வி எழுகிறது. இதற்கும் அம்பேத்கர் தெளிவான விடை அளித்திருக்கிறார். இந்தியாவின் தொல்குடி மக்கள் குறிப்பாக தலித்துகளுக்கு தங்களின் சொந்த குல தெய்வங்கள் உண்டு. அவை பெரும்பாலும் பெண் தெய்வங்களே. இதையெல்லாம் நாம் மறந்துவிட்டோம். படித்த தலித்துகள் அம்பேத்கருடைய சிந்தனையைக் கற்பித்து, பார்ப்பனியத்தின் பிடிகளிலிருந்து மீள வேண்டும். இதையெல்லாம் செய்ய மறுத்ததால்தான் அடிமைகள் தங்களுடைய அடிமைத்தனத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி : "தலித் வாய்ஸ்'
Pin It