(நாட்டின் மனிதவள மேம்பாடு குறியீட்டு அளவுதான் வெகுமக்களின் உண்மையான வளர்ச்சியை உணர்த்தும்)

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடு வதற்கு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (Gross Domestic Product - GDP) அளவீடாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. இக்கருத்தியல் 1933இல் அமெரிக் காவில் உருப்பெற்று, 1944-லிருந்து உலக வங்கியால் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அந்நாடுகளின் உள் நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்புகளின் (உ.உ.ம.) அடிப்படையில் கணித்து வரப்படுகின்றது.

வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மக் களிடையே பரவலாக வெளிப்படுகின்றது. ஆனால் வளரும் நாடுகளில் குறிப்பாக இந்திய ஒன்றியத்தில் சமூகம், பொருளாதாரம், கல்வி, மருத்துவம் போன்ற வற்றில் பெரும் மேடு பள்ளங்கள் நிலவும் சூழலில் பொத்தாம் பொதுவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி எனக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தப்பாடற்றது என்பதை உணர முடியும். அதாவது இது வெகு மக் களின் உண்மையான வளர்ச்சியைக் காட்டாது. இது ஒரு போலியான தன்மையைத்தான் வெளிப்படுத்தும்.

ஆனால், அண்மைக் காலங்களில் நாட்டின் மனித வள மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் அந்நாட்டு மக்களின் மேம்பட்ட தன்மையைக் காண முடியும். இதிலிருந்து பொருளாதார வளர்ச்சி ஒவ்வொரு தனிக் குடிமகனின் வெளித்தோற்றமான புற வளர்ச்சியை வெளிப்படுத்தும். இது ஒவ்வொரு மனிதனையும் வேறு படுத்திக் காட்டும். ஆனால் மனித வளமேம்பாடு தனி மனிதனின் அக வளர்ச்சியை மட்டுமின்றி சமூகத்தின் அக வளர்ச்சியையும் வெளிப்படுத்தும்.

மனிதவள மேம்பாட்டுக்கு அடிப்படை இடுபொருள்கள் கல்வியும், மருத்துவமும், மதிக்கத்தக்க வேலை வாய்ப் புகள், நல் மதிப்புடனான ஊதியமும் போன்றவை யாகும். இதை மக்கள் நாயகக் கோட்பாட்டின் அடிப் படைக் கூறுகளாக வளர்ந்த அய்ரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மக்கள் நாயக அரசுகள் மேற்சொன்னவற்றை மக்கள் நல அரசின் கடமையாகத் தம் மக்களுக்கு அளித்து வருகின்றன.

ஆனால் உலகின் மிகப் பெரிய மக்கள் நாயக அரசு எனச் சொல்லிக் கொள்ளும் இந்தியா மக்கள் நாயகப் பொதுக்கோட்பாடான மக்கள் நல அரசு கோட் பாட்டை காற்றில் விட்டுவிட்டதுடன் நம் நாட்டின் அரச மைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் பகுதியில் இடம் பெறும் விதி 21A-இன்படி சட்டம் நடைமுறைக்கு வந்த 1950-லிருந்து பத்து ஆண்டுகளுக்குள் 14 அகவைக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவயக் கல்வி அளித்திட வேண்டுமென்ற கட்டளைக் கோட்பாட்டையும் கருத்தில் கொள்ளாது 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அரச மைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கல்வி அளிக்கும் பொறுப்பைக் கைகழுவி விட்டுக் கடைச்சரக் காக மாற்றித் தனியாரின் முற்றுரிமை பெற்ற வணிகத் தொழிலாக ஆக்கிக் கொண்டு வருகிறது-இந்த இந்திய ஒன்றிய அரசு.

இதனைச் செயல்படுத்துவதில் அரசின் மூன்று பெரும் அலகுகளான சட்டமன்றம் (Legislature), நிருவாகத் துறை (Executive), அறமன்றம் (Judiciary) கூட்டணி யாகச் செயல்பட்டு அரசு இலவய நடுநிலைப் பள்ளிக் கல்வியைத் தன் மக்களுக்கு மறுத்துவிட்டன என்பது இந்நாட்டிற்கு அவமானம்; பெரும் தலைக்குனிவு.

இவ்வாறான இழிவுக்கு அடிப்படைக் காரணம், இங்குள்ள பார்ப்பனிய இந்துச் சமயக் கோட்பாடான வருணாசிரம, சனாதனக் கொள்கைப்படி தம் சமய வெகுமக்களுக்கு, உழைக்கும் மக்களுக்குக் கல்வி அளிக்கப்படாது என்பதுடன் மறுக்கப்பட வேண்டும் என்பதுதான். அதை அடிபிசகாமல் பின்பற்றி வருவது ஒன்றிய அரசின் கயமைத்தனம்.

இதேபோன்று இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டம் மக்கள் நல்வாழ்வு பெறும் வகையில் அரசே அவர்களுக்கு மருத்துவம் அளிக்க வேண்டுமென்று வழிகாட்டு நெறி விதி வலியுறுத்துகின்றது. ஆனால் அரசமைப்புச் சட்ட அடிப்படை விதிப்படியான இலவயக் கல்வியையே மறுத்துவிட்ட இந்திய அரசு, இதை எப்படிக் கருத்தில் கொள்ளும்? மேலும் கல்வியைத் தனியாருக் குத் தாரை வார்த்து விட்டது போன்று, ஒன்றிய அரசு மருத்துவத்தையும் தன் பொறுப்பிற்குட்பட்டது என் றெண்ணாமல் தனியாரிடமே முற்றிலும் விட்டுவிட்டு விலகிவிட்டது.

இவ்வாறு மக்கள் மேம்பாட்டைப் புறக்கணித்த ஒன்றிய அரசு, நாடு பொருளாதார வளர்ச்சியடைந்து வருகின்றது எனப் பீற்றிக்கொண்டு வருகின்றது. ஆனால் இந்திய ஒன்றிய மக்களின் கீழான மேம்பாட்டு நிலையை உலக வங்கி, அய்க்கிய நாடுகள் அவை மற்றும் பல உலகளாவிய பொது நிறுவனங்கள், தனியார் நிறு வனங்கள் விரிவான ஆய்வுகள் நிகழ்த்தி இந்திய ஒன்றிய அரசின் கீழ்மைத் தரத்தையும் இவர்கள் சொல்லும் பொருளாதார வளர்ச்சி யாருக்கு என்ற வினாவை எழுப்புவதற்கும் இவையெல்லாம் மக்கள் உண்மை யான வளர்ச்சியைக் காட்டுவதாக இல்லை என்றும், இது போலித்தனமான பொய்யானவை என கீழ்க் காணும் விவரங்கள் எண்பிப்பதாக உள்ளன.

data 450இந்தப் பின்னணியில் உலக நாடுகளின் உண்மை யான உள்நாட்டு மதிப்புடன் இந்திய ஒன்றியத்தின் உற்பத்தி மதிப்பை ஒப்பீடு செய்தால் நாட்டின் இரங்கத்தக்க நிலை வெளிப்படும். இருப்பினும் உ.உ.ம. அளவு நம்மைப் போன்றும் அதிகமாகவும் உள்ள 10 நாடுகளின் விவரங்கள் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. அதனையும் விரிவாக விளக்கியுள்ளோம் (Interpretation).

உலக வங்கி கீழேயுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார நிலை 2017

குறித்து வெளியிட்ட தகவல்கள்

‘அ’ - உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு (உ.உ.ம. - GDP - Gross Domestic Product) (டிரில்லியன் டாலரில்)

‘ஆ’ - தனிமனித ஆண்டு வருமானம் (டாலரில்)

‘இ’ - உ.உ.ம. ஆண்டு வளர்ச்சி - விழுக்காட்டில் (1 டாலர் ரூ.70/-)

நாடு     அ        ஆ        இ

அமெரிக்கா     19.39     59532    2.3

சீனா    12.24     8827       6.9

சப்பான்           4.87        38428    1.7

செர்மனி          3.68        44470    2.5

இங்கிலாந்து    2.62        39720    1.8

இந்தியா          2.60        1940       6.7

(ரூ.182 இலக்கம் கோடி)         (ரூ.135800)

பிரான்சு          2.58        38477    1.8

பிரேசில்          2.06        9821       1.0

இத்தாலி          1.93        31953    1.5

கனடா 1.65        45032    3.0

குறிப்பு : அடிப்படைப் புரிதலுக்காக.

ஆயிரம் ஆயிரம்

(1000 ஒ 1000) - 1 மில்லியன் (10, இலக்கம்)

ஆயிரம் மில்லியன்

(1000 ஒ மில்லியன்) - 1 பில்லியன் (100 கோடி)

ஆயிரம் பில்லியன்

(1000 ஒ பில்லியன்) - 1 டிரில்லியன் (ஒரு இலக்கம் கோடி)

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு பாரதிய சனதா ஆட்சிக்கு வந்த 2014-15-லிருந்து மிகைப்படுத்தப்பட்டுத்தான் கணக்கிடப்படுகின்றது என்ப தைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது உ.உ.ம. ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் போது, அந்தந்த ஆண்டுக்குக் குறைந்தது அய்ந்து முந்தைய உ.உ.ம.-ஐ அடிப்படையாகக் கொண்டு சென்ற ஆண்டுகளின் பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல்தான் நிலைத்த உ.உ.ம. (GDP at constant prices) அளவிடப்படும் அல்லது அது உண்மையான உ.உ.ம. (Real GDP) வளர்ச்சி என்று சொல்லப்படும். ஆனால் சென்ற நான் கைந்து ஆண்டுகளாக முன்பு அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிட்ட உ.உ.மதிப்பை அடிப்படையாகக் கொள்ளாமல் கணக்கிடப்படும் ஆண்டுக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முந்தைய உ.உ. மதிப்பை அதாவது பணவீக்கத்தை (inflation)யும் கணக்கில் கொண்டு அவ்வப்போதைய நிலையின் அடிப்படையில் (at concurrent prices) உ.உ.ம. (வீக்கத்துடன்) (Inflated GDP) வெளியிடப்பட்டு வருகின்றது.

இன்னும் இவர்கள் இதில் செய்யும் தில்லுமுல்லு முறைகேடானது. உ.உ. மதிப்பு கணக்கிடுவதற்கு முதன் மைத் துறை (Primary Sector), இரண்டாம் துறை (Secondary Sector), மூன்றாம் துறை(Tertiary Sector), ஆகிய மூன்றின் கீழ்வரும் துணைத் துறைகள் ஒவ் வொன்றிலும் உற்பத்திக்கு உரிய மதிப்பீடு அளவுகளை (imputed values) ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை அதிகப்படுத்திக் காட்டும் வகையில் மிகவும் அதிகப்படுத்திக் கணக்கிட்டும் மிகவும் நம்பகத் தன்மையற்ற உ.உ.மதிப்பை வெளியிடுகின்றனர்.

எனவே உண்மையான உ.உ.ம. இப்போது -வெளியிடப்படும் அளவில் இல்லாமல் மிகவும் குறை வாகவே இருக்கும், மேலும் இதன் அடிப்படையில் கணக் கிடப்படும் வளர்ச்சி விழுக்காடும் உண்மை நிலையைக் காட்டாது. அதிகரிக்கப்பட்ட விழுக்காட்டைத்தான் காட்டும்.

முன்பக்கத்திலுள்ள அட்டவணையைச் சற்று கூர்ந்து கவனிக்கவும். இதில் இந்திய ஒன்றியத்தின் பொருளா தாரத்தை நான்கு வகைகளில் பிற நாடுகளின் பொரு ளாதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். (அ) ஒத்த அளவு உ.உ.ம. கொண்ட நாடுகள். ஆனால் மக்கள் தொகை நம்மிலும் குறைவானவை. (ஆ) நம்மிலும் குறைவான மக்கள் தொகையும், சற்றுக் குறைவான உ.உ.ம. உடைய நாடுகள். (இ) குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு நம்மிலும் பல மடங்கு அதிகமான உ.ம.ம. உள்ளது. (ஈ) நம் போன்றே மக்கள் தொகை யுள்ள நாடும் நம்மைக் காட்டிலும் பல மடங்கு பெரிய உ.உ.ம. உடைய சீனாவை ஒப்பிடலாம்.

அ. பொதுவாக நம் நாட்டுப் பொருளியல் வல்லு நர்கள் எனப்படும் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், அருண்ஜெட்லி இவர்களுடன் மோடியும் அமித்சாவும் போன்றோர் இந்தியாவின் பொருளாதாரம் 2.5 டிரில்லி யன் டாலர் அளவையும் விஞ்சி வல்லரசு நாடுகளான பிரான்சையும் (இன்னும் ஓராண்டில் இங்கிலாந் தையும். பின்னுக்குத்தள்ளி வளர்ந்து முன்னேறி வந்துள்ளது என்பர் (ஆனால். இந்தப் பொருளாதார வளர்ச்சி யாருக்கானது என்பதை முன்பார்த்தோம்). உண்மைதான். ஆனால், இவர்களின் கூற்று எவ்வளவு பிதற்றல், பீற்றல் என்பதைக் கீழே விவரிக்கலாம்.

இந்தியாவின் பொருளாதார அளவுக்கு ஒப்ப உள்ள நாடுகளான பிரான்சு, இங்கிலாந்து நாடு களின் மக்கள் தொகை நம்மிலும் கிட்டத்தட்ட 15 மடங்கு சிறியவை. இவ்வளவு குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகளின் உ.ம.ம. இந்த அளவுக்கு இருப்பதற்குக் காரணம், அந்நாடு களின் மக்கள் அனைவரும் நாட்டின் பொருள் உற்பத்தியில் பரவலாக ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதுடன் மதிப்புடன் கூடிய உற்பத்தியைச் செய்பவர்களாகவும் உள்ளனர். ஆனால் இந்தியா வின் உற்பத்திச் சக்தியான பெரும் திரளான மக்கள் பெரும் பகுதி வேலை வாய்ப்பு அளிக்கப்படாத வர்களாகவும், வேலை வாய்ப்பு உள்ளவர் களும் மதிப்புடன் கூடிய பொருள் உற்பத்தியில் ஈடுபடுத் தப்படுவதில்லை. எனவேதான் அந்நாடுகளின் தனிமனித சராசரி ஆண்டு வருமானம் நம்நாட்டைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமாக உள்ளதை முன்பக்கத்திலுள்ள அட்டவணையிலிருந்து காணலாம்.

ஆ. இத்தாலி, கனடா நாடுகளின் பொருளாதாரம் நம்மிலும் சற்றுக் குறைவான போதிலும் அந்நாடுகளின் தனிமனித வருமானமும், நம்மைப் போன்று 20 மடங்கு அளவில் அதிகம் என்பதைக் காணமுடிகிறது. அந்நாடுகளில் உள்ள நம்மைக் காட்டிலும் பல மடங்குகள் குறைந்த அளவுள்ள மக்கள் அனைவரும் பெருமளவு உற்பத்தி சக்திகளாக உயர்த்தி உற்பத்தியையும், அதன் மதிப்பையும் மேலே விவரித்த தன்மையில் பெருமளவுக்குப் பெருக்கி நம் நாட்டு உ.ம.ம. அளவுக்கு உயர்த்தியுள்ளனர். அதனால்தான் அந்நாடுகளின் தனிமனித உற்பத்தி மதிப்பும் நம்மைவிட 30 மடங்குக்கு மேல் உயர்வாக உள்ளது.

இ. நம் நாட்டின் மக்கள் தொகையைக் காட்டிலும் 10 மடங்குக்கு மேல் குறைவாக உள்ள சப்பான், இத்தாலி நாடுகளின் உ.ம.ம. முறையே 2, 1ஙூ மடங்கு அளவுக்குப் பெரியதாக உள்ளது. குறைவான மக்கள் தொகை யுடன் தம் நாடுகளின் பொருள் உற்பத்தியைப் பெரு மளவுக்குப் பெருக்கிடும் வகையில் தம் மக்களுக்கு உற்பத்தித் திறன் மிக்க வேலை வாய்ப்புக்களையும் அவ்வழி உற்பத்தியாகும் பொருள்களுக்கு உயர் மதிப்பும் தந்து அவர்களின் தனிமனித வருமானத்தை இந்தியாவோடு ஒப்பிடும் போது முறையே 20, 23 மடங்கு அளவுக்கு உயர்த்தியுள்ளதைக் காணலாம். இதேபோன்று அமெரிக்கா, நம்மைக் காட்டிலும் 4 மடங்குக்கு மேல் குறைவான மக்கள் தொகையுடன் உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரமாக 20 டிரில்லியன் டாலர் உ.உ.ம. என்ற அளவில் நம்மைப் போன்று ஏறத்தாழ 7ஙூ மடங்கு பெரியதாக உள்ளது. அந்நாட்டின் தனிமனித சராசரி ஆண்டு வருமானம் நம்மைப் போன்று 30 மடங்குக்கும் மேலாக உள்ளது. இதேபோன்று பல நாடுகள் குறிப்பாக அய்ரோப்பிய நாடுகளின் மக்கள் தொகை நம்மைக் காட்டிலும் மிகக் குறைவாக இருப்பினும் அவர்களின் உ.உ. மதிப்பு நம் நாட்டைக் காட்டிலும் சற்றே குறைவாகக் காணப்பட் டாலும் அந்நாடுகளின் தனிமனித ஆண்டு வருமானம் நம்மைப் போன்று 10 மடங்குக்கும் மேல் பெரியதாக உள்ளது.

மேற்சொன்ன நாடுகளெல்லாம் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளிலேயே தொழில் வளர்ச்சி யடைந்த நாடுகளாகவே பல பத்தாண்டுகள் நிலைத்த வளர்ச்சி பெற்று வளர்ந்த நாடுகளாகவே இருந்து வருகின்றன. எனவே அந்நாடுகளின் தனிமனித சராசரி உ.உ. மதிப்பும், தனிமனித ஆண்டு வருமானமும் ஒப்பீட்டளவில் இந்தியாவைக் காட்டிலும் பல மடங்குகள் அதிகமாகவே இருந்து வருகின்றன.

ஈ) ஆனால் நம் நாட்டை ஒப்ப 130 கோடிக்கும் மேலாக பெரும் மக்கள் தொகை கொண்ட சீனாவை நேரடி ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். இந்தியா, இங்கிலாந்தின் குடியேற்ற நாடாக இருந்து 1947இல் விடுதலை பெற்ற தன்னாட்சி கொண்ட நாடாக ஆன அதே காலக்கட்டத்தில், சீனா 1949இல் பொதுவுடைமை நாடானது. அக்காலக்கட்டத்தில் சீனப் பொருளாதாரம் இந்தியாவைக் காட்டிலும் சற்றுக் குறைவான அளவில் தான் இருந்தது. ஆனால் அந்நாடு தன் பெருந்திரள் மக்களையும் நாட்டு உற்பத்தியில் பங்களிப்பவர்களாக ஈடுபடுத்தி அந்நாட்டின் பொருளாதாரம் சீரான, நிலைத்த வளர்ச்சி பெற்ற நாடாகியுள்ளது. இப்போது அதன் உ.உ.ம. 12.24 டிரில்லியன் என்ற அளவில் உள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்தியா 2.60 டிரில்லியன் உ.உ.மதிப்பு கொண்ட நாடாகத்தான் இருந்து வரு கின்றது. அதாவது இந்தியாவைப் போன்று சீனா ஏறத்தாழ அய்ந்து மடங்கு பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. அதே தன்மையில் சீனாவின் தனிமனித சராசரி ஆண்டு வருமானம் இந்தியாவைக் காட்டிலும் 4ஙூ மடங்கு அதிகம்.

இந்திய ஒன்றியம் புதிய பொருளாதாரக் கொள்கையை ஏறத்தாழ 30 ஆண்டுகள் பின்பற்றியதை அடுத்து பொரு ளாதார வளர்ச்சி 7, 8, 9 விழுக்காடு என்று பெருகி 2007-இல் உலகின் 12-ஆம் டிரில்லியன் நாடாகப் பறைசாற்றிக் கொண்டது. ஆனால் 80-85 விழுக்காடு பெருந்திரள் மக்களின் வாழ்நிலை தாழ்வாகவே வைக் கப்பட்டுள்ளது. அதே நேரம் 10 விழுக்காடு மக்கள் வளர்ச்சி பெருகி ஏழை மேலும் ஏழையாகவும், வசதி படைத்தோர் பெரும் வளர்ச்சி பெற்று பெரும் பணக் காரர்களாகி இவர்களுக்கிடையே மலைக்கும் மடுவுக்கும் இடையிலான பெரும் இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்தன்மையில் தனியொருவரின் சராசரி வருமானம் 100 வகைகளுக்கு மேற்பட்ட படிநிலை ஊதியம் உடை யோர் அமைப்புச்சார் அரசு மற்றும் தனியார் துறைப் பணிகளில் உள்ளனர். வேளாண், நெசவுத் தொழில் போன்று அமைப்பு சாரா தனியார் துறையில் பணி புரிவோர் தற்சார்புச் சிறு வணிகம், தொழில் மேற் கொண்டுள்ளோர் என 80-90 விழுக்காடு மக்கள் உள்ளோர். இதில் ஒருவேளை மட்டும் உணவு கிடைக்கும் கொடிய வறுமை நிலையில் துவளும் 15 கோடி மக்களின் இழி வருமானம், இரவு உணவின்றி உறங்கச் செல்லும் 25 கோடி மக்களின் மிகக் குறைவான வருமானம் (காட்டாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் நாள் கூலி ரூ.200 மட்டுமே பெற்றுப் பணிபுரியும் 20-25 கோடி மக்களுள் சிலர்) மேலும் நடுத்தரமாக உள்ள 60 விழுக்காடு மக்களின் குறைவான வருமானம், வெறும் 7.8 விழுக்காடு மக்களின் உயர் வருமானம் எஞ்சியுள்ள 3 விழுக்காட்டுப் பேரின் கொழுத்த வருமானம் (ஒரு விழுக்காடு மக்கள் நாட்டின் 57 விழுக்காட்டு சொத்துக்களைக் குவித்துள்ளோர்) என ஒரே நிரையில் மொத்தமாகக் கணக்கிடப்பட்டு தனிமனித வருமானம் சற்றொப்ப ஆண்டுக்கு ரூ.1,36,000 எனவும் நாளுக்கு ரூ.370 என்றும் காட்டப்பட்டுள்ளது. அதாவது இந்தக் கணக்குப்படி அற்றாடங்காய்ச்சிகளாக, அரை வயிற்றுச் சோற்றுக்கே இல்லாதவர்களாக உள்ள பெரும் தொகுப்பு மக்களின் நாள் கூலி ரூ.370 என்று ஏற்றிக் காட்டுவது எவ்வளவு பெரிய கயமைத் தனம்; எவ்வளவு பெரிய மோசடி, பொய்மை. இவற் றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு இவர்கள் உற்பத்திக்கு இழி மதிப்பளித்து உயர்மதிப்புடைய பொருள் களுடன் ஒருசேரச் சேர்த்துக் கொண்டு உலகின் ஆறாம், ஐந்தாம் பொருளாதாரம் இந்தியா எனப் பீற்றிக் கொள்வது மிகப்பெரிய தலைக்குனிவு.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் இந்திய ஒன்றியத்தில் உள்ள உழைக்கும் மக்களாக உள்ள பெரும்திரளான 85-90 விழுக்காட்டு மக்களின் இழிநிலையைத் தான் உலகளவில் உள்ள நாடுகளுள் மக்கள் மேம்பாட்டைக் குறிப்பது நாட்டின் வளர்ச்சி எனச் சொல்லப்படும் பொய்மையும் கயமையும் அல்ல; கல்வி, மருத்துவம் போன்ற பல்வகைத் தளங்களில் இந்தியாவின் தரம் தாழ்ந்த நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அதாவது உண்மையில் வளர்ச்சியும், மேம்பாடும் ஒருங்கே பெற்று வளமுடன் வாழ்பவர்களாக நாட்டில் 10 விழுக்காடு மக்கள் தான் உள்ளனர். அதாவது இந்தப் பத்து விழுக்காட்டு மக்களின் வளமைக்காக 90 விழுக்காட்டு உழைக்கும் மக்கள் எல்லா வழிகளிலும் வகைகளிலும் சுரண்டப்படுபவர்களாக ஆனால் அதே நேரத்தில் உணர்வற்ற, தன்மானம், தன்மதிப்பு அற்ற வர்களாக வைக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் நாட்டின் உண்மையான அவல நிலை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நாட்டின் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் மக்கள் நாயகத்தின் கோட்பாட்டுத் தத்துவமான ‘மக்கள் நல அரசு’ என்ற உணர்வே அற்ற நிலையில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இதில் கொடுமை என்னவென்றால், நாட்டில் அரசின் மூன்று பெரும் அலகுகளான சட்டமன்றம், நிருவாகம் மற்றும் அறமன்றம் (Legislature, Executive and Judiciary) மூன்றின் உயர்நிலை வகிக்கும் நாட்டின் முதன்மை அமைச்சர், பிற ஒன்றிய அமைச்சர்கள், மன்றத் தலைவர்கள், ஒன்றிய அரசு அலுவலர்கள், உச்ச, உயர்நீதி, அறமன்ற நடுவர்கள் உலகெங்கிலும் குறிப்பாக அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளுக்குப் பலப்பல ஆண்டு களாக, பல தடவைகள் சுற்றுப்பயணம் மேற்கொள் கின்றனர். அப்போதெல்லாம் அந்நாடுகளில் நிலவும் மக்கள் மேம்பாட்டு நிலை, தன்மானம், தன்மதிப்பு கொண்ட தன்மை, தரமான கல்வியும் மருத்துவமும் பாகுபாடின்றி ஒரே தன்மையில், ஒரே தரத்தின் ஒருங்கே அனைவருக்கும் வழங்கப்படுதல் இவற்றை யெல்லாம் கண்ணுறாமல் கவனத்தில் கொள்ளாமல் மரக்கட்டைகள் போன்று மக்கள் பற்று அற்றவர்களாகத் தான் உலாசென்று வருகின்றார்களா என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஏனெனில், இவர்கள் மக்கள் மேம்பாட்டுக்கான கல்வி, மருத்துவத்தை முழுவதுமாக வணிக விற்பனைப் பொருள்களாக்கத் திட்டமிட்டுத் தீவிரமாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். மேலும் மக்களை மேம்படுத்த முற்படாத அரசுகள் மாடுகளைக் காப்போம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மக்களைப் பலிவாங்கு கின்ற ஈனத்தனமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை ஊக்குவித்து வருகின்றன. இராமன் கோயில் கட்டுவோம் என ஓலமிடுகின்றனர்.

இவற்றிற்கெல்லாம் காரணம் பார்ப்பனியத்தின் கொடூரப் பிடியில் அரசுகளும், பார்ப்பனர்கள், உயர் சாதியினர் மட்டுமின்றி அனைத்து மக்களும் சிக்குண்டு இருப்பதுடன், அதற்கு மண்டியிட்டு வருணாசிரம சனா தனத்தை கடைப்பிடிப்பவர்களாக உள்ளனர். அதனால் தான் உரிமை உணர்வு அற்றவர்களாக, மனித மேம்பாட்டுச் சிந்தனை இல்லாதவர்களாக சமூகமே உள்ளது. பார்ப்பனியம் ஒழிந்தால்தான் வெகுமக்கள் நலம் பேணும் எண்ணம் துளிர்க்கும். இது ஏதோ மேலோட்டமாகப் பேசிவிட்டு நின்றுவிடாமல் தீர்வை நோக்கி நகர்ந்திடவும், செயல் திட்டங்கள் வகுத்து நடை முறைப்படுத்தப்பட வேண்டும். அவை :

* முதலில் வெறும் 10 விழுக்காடு அளவில் மட்டுமே யுள்ள அமைப்புச்சார் பணிகளைப் படிப்படியாக உயர்த்தி 90 விழுக்காடாக உள்ள அமைப்புச் சாராப் பணியமைப்பைப் பெருமளவில் அமைப்புச்சார் பணி களாகக் கட்டமைத்து பெருந்திரளான மக்களுக்குத் தன்மானம், தன்மதிப்பை உணர்பவர்களாகவும், பெருக்குமளவுக்கான பணிகளையும் மதிப்பும் பெருமைக்கு முரிய முறையான நிலைத்த ஊதியமும் அளிக்கப்பட வேண்டும்.

* குறிப்பாக அரசுப் பணிகளிலும் இந்துச் சமூகத்தின் இழிவான பல படிநிலைகள் உள்ளன. இவற்றை அடியோடு ஒழித்திடும் வகையில் ஏவல் பணி (Meanial Service), கடைநிலைப் பணி என்பவையெல்லாம் ஒழிக் கப்பட்டு, 60, 70 வகையாக உள்ள சம்பள வேறு பாடுகள், படிப்படியாக 20-30 வகைகள் எனவும் 10-20 எனவும் 5-10 வகைகளாகக் குறைக்கப்பட்டு, கடை நிலை ஊதியத்திற்கும் உயர்நிலை ஊதியத்திற்குமுள்ள 100 மடங்கு வேறுபாடு அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

இந்நிலையை எட்ட, ஏவல் பணி, எடுப்புப் பணி என்பவற்றை ஒழித்து, அனைவரும் மதிப்பு மிக்க மேலும் சில பணிகளை மேற்கொள்ளுமாறு திட்டமிட்டு இழி சம்பளத்தை ஒழித்து அனைவருக்கும் அரச மைப்புச் சட்ட விதி 21 வழங்கிடும் உரிமையைப் பெற்றிடும் வகையில் தன்மதிப்பும், தன்மானமும், பெருமைக்குரிய வாழ்க்கையை உறுதி செய்திடும் வகையில் தரமான ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.

* முதல் கட்டமாக அரசமைப்புச் சட்ட விதி 21-A படி 14 அகவைக்குட்பட்ட அனைவருக்கும் இலவயக் கல்வி அளிக்கப்பட வேண்டுமென்ற கட்டளையை இதுகாறும் காற்றில் பறக்க விட்டுவிட்டு வந்துள்ள ஒன்றிய அரசு வெட்கப்பட வேண்டும். குறிப்பாக அறமன்றங்கள் இந்த இழிநிலை கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால் மிகுந்த வியப்புக்குரியது என்னவென்றால், விதி 44 சொல்லும் நாட்டு முழுமைக்கான ஒரு பொதுக் குடிமையியல் வகுத்திட அரசு வழிகாண வேண்டும் என வழிகாட்டு நெறி விதியுள்ளதை உச்ச அறமன்ற நடுவர்கள் பல நேரங்களில் சுட்டி, அரசு இதுகுறித்து ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளதா? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தன்னெழுச்சியான வினாக்களைத் தொடுத்து வருகின்றனர்.

ஆனால் வழிகாட்டு நெறிகளைச் செயல்படுத்துவது குறித்து அறமன்றங்கள் வழி தீர்வு தேடிட இயலாது என்பதுதான் சட்டப்படியான நிலை. ஆனால் இதுகுறித்து தன்னெழுச்சியான வினா தொடுக்கும் அறமன்றம், முன்னைய விதி 45-இன்படி அதாவது தற்போதைய விதி 21-A -இன்படி அரசுகள் ஏன் 14 அகவைக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவயக் கல்வி கொடுக்கவில்லை என்ற வினாவையோ, அரசு இதற்கு முற்றிலும் முரணாகக் கல்வி வழங்குவதிலிருந்து முற்றிலும் விலகிக் கொண்டு விற்பனைக்குரிய வணிகப் பொருளாகத் தனியாரிடம் தாரைவார்த்து வருவதையோ கேள்விக்குள்ளாக்கிய தாக வரலாறு இல்லை.

இந்த அவலங்கள் தொடர்வதை அரசுகள் கை விட்டுவிட்டு, உண்மையிலேயே மக்கள் பற்றுள்ள அரசு எனில் படிப்படியாக அரசு நடுநிலைப் பள்ளிக் கல்வியை 14 அகவைக்குட்பட்டோர் அனைவருக்கும் வழங்க உடன் நடவடிக்கை மேற்கொண்டு, ஒரு காலவரையறைக்குள் முழுப் பொறுப்பையும் அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டத்தில் இந்த விதியைப் பொறுத்தமட்டில் அரசமைப்புச் சட்டமோசடி நடந்துவிட்டது எப்படி எனப் பார்ப்போம். அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்வழி விதி 21-A சேர்க்கப்படும் போது விதி 45-ஐ சீரழித்து,சிதைத்து (It was a rape on the Constitution) மாற்றியமைக்கப்பட்டுவிட்டது.

முன்னைய விதி 45-இன்படி 14 அகவைக்குள் ளான அனைவருக்கும் அரசமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்து 10 ஆண்டுகளுக்குள் இலவயக் கல்வி வழங்கப்பட வேண்டுமென காலவரை விதிக்கப்பட்டி ருந்தது. கல்வியின் அடிப்படையையும் மேன்மையை யும் உணர்ந்தவர்களாக அம்பேத்கர் தலைமையிலான அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவினர், காலக்கெடுவுடன் இந்த விதியை வகுத்தெடுத்திருந்தனர். ஆனால் வழி காட்டு நெறிப் பகுதியில் இருக்கும் 45-ஆம் விதியை அடிப்படை உரிமைகள் பகுதிக்குள் கொண்டு சேர்த்து அதற்கு வலுச்சேர்க்க வேண்டுமென்ற பெயரில் அரச மைப்புச் சட்டத் திருத்தத்தின் படி விதி 21-A சேர்த்து ஓசையின்றிக் காலவரையறையைக் காயடித்து நீக்கி விட்டது. இது அரசமைப்புச் சட்டத்தின் மீதான மிகப் பெரும் மோசடி. இதற்கு நாடு வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்தத் தலைகுனிவைக் களைந்திடும் வகையில் இந்தக் காலவரையறை முன்பிருந்தபடியே அடிக்குறிப்பிலாவது அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்திடல் வேண்டும்.

தரமான கல்வி வழங்கப்படாததின் விளைவு சமூகம், அரசியல் என எல்லாத் தளங்களிலும் மக்களுக் கான மேம்பாட்டு நடவடிக்கை காலம் தொட்டு இன்றும் நாளையும் மக்களை அடிமை நிலையில் தன் மதிப் பற்றவர்களாக வைக்கப்பட்டிருப்பது பற்றிய உணர்வே சுரணையே இல்லாமல் நாடே மௌனம் சாதித்து வருகின்றது.

* விதி 21 வலியுறுத்துவது போல், தனியொரு வரின் வாழ்வை மறுக்கக் கூடாது என்பதில் வெறும் பிழைப்பு மட்டும் நடத்தும் மனிதனாக வைத்திடுவதாக மட்டும் கொள்ளக்கூடாது. நல்ல உடல் நலத்துடன் தரமான வாழ்க்கையைத்தான் இவ்விதி வலியுறுத்து கிறது எனப் பல நிகழ்வுகளின் உயர், உச்ச அற மன்றங்கள் வலிந்து சொல்லியுள்ளன. ஆனால் கல்வி யைப் போன்றே மக்கள் மருத்துவமும் வழங்கும் பொறுப்பைக் கைகழுவி விட்டு விலைப் பொருளாக மாற்றி, தனியார் வணிகமாக்கி ஏழை, எளியவரை அதற்காகப் பெரும் செலவைச் செய்திட வைத்து அவர்கள் வாழ்வைச் சூறையாடிவிட்டது. இனியும் இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் ஒரு மக்கள் நாயக அரசு எனச் சொல்லிக் கொள்ளும் வகையில் அரசு அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவம் அளித்திட வேண்டும்.

கல்வியும் மருத்துவமும் மக்களுக்குத் தரமான முறையில் அரசு வழங்கிட வேண்டுமென்று முன்பு சொன்னோம். இவை இரண்டும் மனித மேம்பாட்டுக்கு அடிப்படைத் தேவை. இதுவன்றி இன்னும் முதன்மை யானது தன்மதிப்புடன் கூடிய வேலை வாய்ப்புடன் தரமான வாழ்க்கையை உறுதி செய்திடும் வகையில் தன்மானம் அளிக்கத்தக்க ஊதியத்தையும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அளித்திட அரசு முதன்மைக் கடமையாகக் கொள்ள வேண்டும். ஆனால் இருப்பு நிலை எவ்வளவு இழிவாக வைக்கப்பட்டு மக்களின் சராசரி வருமானமும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி யைக் காட்டும் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பும் கணக்கிடப்பட்டுள்ளன என்பதைக் கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். இத்தன்மை அடியோடு மாற்றப்பட்டு நாட்டு மக்களின் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டளவு மேலை நாடுகளை ஒப்ப உண்மையாக உயர்வடைய (இதைத்தான் பெரியார் சுருக்கமாக நம் மக்கள் தன்மானமுடைய மக்களாக மேம்பாடடைய வேண்டும் எனச் சொன்னார்) அமைப்புசாரா பணிகளை, குறிப்பாக வேளாண், நெசவு போன்றவற்றில் சில தொகுப்புகளாக வகுத்தெடுத்து மூன்று, நான்கு வகைப் பட்ட ஊதியங்களை மட்டும் வரையறுத்திட வேண்டும். ஒவ்வொருவருக்கும் நாள் ஊதியம் ரூ.500/-க்குக் குறையாமலும், திங்கள் ஊதியம் ரூ.15,000/-க்குக் குறையாமலும் இவர்களின் தரமான வாழ்க்கையை உறுதிபடுத்தும் வகையில் இருக்க வேண்டும். இவர்களின் விளைபொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை மேற்சொன்ன ஊதியம் அளித்திடும் வகையில் நிர்ண யித்து பொது மக்களுக்கு நியாயமான விலையில் கிடைத்திடச் செய்ய வேண்டும், இதில் இழப்பு ஏற்படு மெனில் அரசு முன்வந்து ஈடுகட்ட வேண்டும், இவ்வா றான நம்பிக்கையூட்டும் ஊதிய முறைகள் வகுக்கப் பட்டு செயல்படுத்தப்படுமெனில் பாட்டாளி மக்களின் உற்பத்தித் திறன் பல மடங்கு பெருகி உண்மையில் உற்பத்தியின் அளவும் பெருகும்.

மேலும் மதிப்பளிக்கும் ஊதிய முறை மக்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருப்பதால் பெருமளவு மக்கள் பெரும் பொருள் உற்பத்தியில் ஈடுபாட்டுடன் செயல்படுவர். இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை உயர்த் தியும், மக்கள் மேம்பாட்டையும் ஒருசேர உறுதி செய்யும்.

வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட தற்போது ஏதுவான துறை வேளாண்மைத் துறையும் நெசவுத் துறையும்தான். (அளவோடு தொழில்நுட்பங்கள் கடைப் பிடிக்கப்பட்டால்) பொருளியல் கோட்பாடு இரண்டாம் நிலைப் பொருளாதாரப் பிரிவாக (Secondary Sector உள்ள தொழில் துறையில் நிகழ் காலங்களில் பாய்ச்சல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் கையாளப்படுவதால் முன்பு போன்று பெருமளவுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகுவது போன்ற நிலை யின்றி மிகவும் சிறிய அளவு வேலை வாய்ப்புத்தான் உருவாகுகின்றது. காட்டாக ஆயிரம் கோடிகளில் முதலீடு செய்யும் தொழில்களில் முன்பு 1000 பேர்களுக்கும் மேல் வேலை வாய்ப்பு என்பது தற்போது வெறும் 100, 200 என்ற அளவில் குறைந்துவிட்டது. எனவே வேளாண்மைத் துறையின் வளர்ச்சி உ.உ.மதிப்பில் எட்டு விழுக்காடு என்ற அளவில் குறைந்துவிட்ட நிலையில் அதைப் படிப்படியாக உயர்த்தி இரு அல்லது மூன்று மடங்குப் பெருக்கி மேலும் பல கோடி மக்களுக் குத் தரமான ஊதியத்துடன் கூடிய, உயர் மதிப்பு வாய்ந்த உற்பத்தியையும் பெருக்கி நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை உண்மையாக உயர்த்திடலாம்.

வேளாண்மைத் துறை விரிவடையவும், பெருகிடவும், வேளாண் உற்பத்தி பல மடங்கு உயர்ந்திடவும், வேளாண் சார் 70, 80 கோடி பேர்களுக்கு இனியேனும் மதிப் பான வாழ்வை உறுதி செய்யும் வகையில் அரசே இவர்களின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் மதிப்புடன் கூடிய நல்ல விலையுடன் கொள்முதல் செய்திட வேண்டும். இதற்கான வழிவகைகளை வகுத்திட வேளாண் மக்கள் பற்றாளர்களாக உள்ள பொருளாதார வல்லுநர்கள், வேளாண் அறிவியலாளர்கள், வேளாண் மக்கள், தொழிலாளிகள், பொது பொருளியலாளர்கள் எனப் பல துறை சான்றோர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அவர்களின் பரிந்துரைகளை ஒரு காலவரையறைக் குள் பெற்றுச் செயல்படுத்தப்பட வேண்டும்.

இந்நாட்டின் 135 கோடி மக்களில் மிகப் பெரும்பாலோர் வேளாண்மை சார்ந்துள்ள நிலையில் மக்கள் பற்றாளர்களாக விளங்கி வரும் பொதுவுடைமை வாதிகள், அமைப்புகள், பொதுவுடைமைக் கட்சிகள், ஒத்த கருத்துடைய பிற அமைப்புகள், கட்சிகள் ஒருசேர ஒருங்கிணைத்து களம் கண்டு அரசுக்குக் கடுமை யான நெருக்கடி தந்து வேளாண்மை வளர்ச்சிக்கும், வேளாண் மக்கள் மேம்பாட்டுக்கும் வழிகோலும் ஒரு குழுவை விரைவில் அமைத்திட வழிகாண வேண்டும். இதே தன்மையில் நெசவுத் தொழில் துறையிலும் நடவடிக்கை எடுத்திட மேற்சொன்ன மக்கள் பற்றுக் கொண்ட அமைப்புகள், கட்சிகள் இதற்கான குழு அமைத்திட உற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இக்குழுக்கள் விரைவில் செயல்பட்டு மேலான பரிந் துரைகளைத் தந்து அவை செயல்வடிவம் பெறும் வரையில் ஆவனவெல்லாம் செய்திடல் வேண்டும்.

நெடுங்காலமாகச் சமூகத்தை எல்லா நிலையிலும் பிணித்துள்ள பார்ப்பனியம் கடுமையான விமர்சனத் திற்கு உள்ளாக்கப்பட்டு வருவது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆனால் வெறும் விமர்சனம் விடிவுக்கு இட்டுச் செல்லாது. அதனால் உண்மையில் அது ஒழிந்த நிலையில்தான் இந்திய நாட்டு மக்களின் மேம்பாடு அடங்கியுள்ளது என்பதுதான் தெளிவு. ஆனால் மாறாக, நாடே பார்ப்பனியத்தின் பிடிக்குள் விழுந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. இந்நிலை மேலும் சீரழிவுக்கு உள்ளாகாது காக்கப்பட வேண்டிய இக்கட்டான காலக் கட்டத்தில் உள்ளோம். இதனை உணர்ந்து மக்கள் பற்றாளர்கள் மேற்சொன்ன வழிகளின்றி மேலும் பல வழிகளில் மக்கள் மேம்பாட்டை முன்னிறுத்தி சமூக, பொருளாதார, அரசியல், குறிப்பாகக் கல்வி, மருத்துவம் வேலை வாய்ப்புத் தளங்களில் தீர்வை நோக்கி நகர்ந்து செயல்பட வேண்டும்; தொடர் போராட்டம் வேண்டும்.

Pin It