மத்தியக் குழுவின் மதிப்பீடு, மார்ச் 2017

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் 6-ஆவது மத்தியக் குழுவின் இரண்டாவது முழு நிறைக் கூட்டம் மார்ச் 25-26, 2017 இல் நடைபெற்றது. உலகெங்கிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்த கூட்டம், ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்து வருவதையும், முதலாளித்துவ ஆளும் வகுப்பினர் பாசிச ஆட்சி முறைகளைப் பயன்படுத்தும் போக்கு வளர்ந்து வருவதையும் குறித்து பதிவு செய்தது. இந்திய முதலாளி வகுப்பு மிகவும் ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருப்பதையும், அது தன்னுடைய சுயநலமான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நம்மை ஒரு பிற்போக்கான போரில் இழுத்துவிடக் கூடும் என்பதையும் கருத்தில் எடுத்துக் கொண்டது. முதலாளி வகுப்பை முறியடிக்கக் கூடிய ஒரே சக்தி, உழவர்களோடும், பிற ஒடுக்கப்பட்டவர்களோடும் கூட்டாகச் செயல்படும் பாட்டாளி வகுப்பு மட்டுமே என்பதை அது மீண்டும் உறுதிபடக் கூறியது.

பெரு முதலாளி வகுப்பின் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு சக்தி வாய்ந்த தொழிலாளி வகுப்பின் எதிர்ப்பைக் கட்டுவதற்கு நம்முடைய எல்லா கூட்டுச் சக்தியையும் செலவிட வேண்டுமென கம்யூனிஸ்டுகள் நம்மைக் காலம் கூவியழைப்பதாக குழு மதிப்பீடு செய்தது. எல்லா வகையான சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்டுவதன் மூலம் வார்த்தைகளில் மட்டுமின்றி செயலளவிலும் அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய ஒரு அரசை நிறுவுவதற்கான புரட்சிகர திட்டத்தை தொழிலாளி வகுப்பிற்கு நாம் கொடுக்க வேண்டும்.

உலக மாற்றங்கள்

அமெரிக்காவில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுடைய முன்னாள் தலைவர்கள், டிரம்ப் நிர்வாகத்தில் முன்னணிப் பொறுப்புகளை வகித்து வருகிறார்கள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏகபோக முதலாளிகளுக்கு சுகாதார, பாதுகாப்பு தரங்களிலிருந்தும், தொழிலாளர்கள் உரிமைகள் குறித்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் மக்களையும், முஸ்லீம் பெரும்பான்மையான 6 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையும் இலக்காகக் கொண்ட பயணத் தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் மூலம், மக்கள் மீது இனவெறியும் அச்சமும் உருவாக்கப்பட்டு வருகிறது. மெக்சிகோ மற்றும் பிற நாடுகளிலிருந்து குடியேறிய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். அமெரிக்க அரசாங்கத்தோடு ஒத்துப் போகாத அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக, காவல் துறை சக்திகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

சர்வ தேச அளவில், டிரம்ப் நிர்வாகத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, ஏமன் நாட்டின் மீது தாக்குதல்கள் நடத்தி, பெரும் எண்ணிக்கையில் அப்பாவி ஆடவர், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றிருப்பதாகும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகள் மீது ஆளில்லா விமானத் (டிரோன்) தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அமெரிக்க அரசு இது வரை சட்டத்திற்கு விரோதமாக நடத்தி வந்த, “சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளை” சித்திரவதை செய்வதைச் சட்ட ரீதியாக ஆக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்திருக்கிறார். சர்வதேச அரங்கில் பின்பற்ற வேண்டிய எல்லா நெறிகளையும் தூக்கியெறிந்து விட்டு, ஆயதந்தாங்கிய குழுக்களுக்கு இரகசியமாக ஆதரவளித்தும், “பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர்” என்ற பெயரில் வெளிப்படையாகவே இராணுவ ரீதியாக தலையிட்டும் நாடுகளைச் சீரழித்து வரும் பாசிச போர் முறைகளை, அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது.

பசிபிக் கூட்டணி எனப்படும் டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப்-லிருந்து டிரம்ப் அரசாங்கம் விலகிக் கொண்டது. வட அமெரிக்க சுதந்திர வணிக ஒப்பந்தம் (NAFTA) பற்றி, மெக்சிகோ மற்றும் கனடாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் என்று அது அறிவித்திருக்கிறது. முன்வைக்கப்பட்டுள்ள டிரான்ஸ் அட்லான்டிக் டிரேட் அன்டு இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஷிப்-க்கு (TTIP) எதிர்ப்பை அது அறிவித்திருக்கிறது. உலக வணிக ஒப்பந்தங்கள் மூலமாக இலாபமடைய முயற்சிக்கும் அமெரிக்க ஏகபோக முதலாளிகளுக்கும், அமெரிக்கப் பொருட்களுக்கான உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாப்பதன் மூலம் இலாபமடைய முயற்சிப்பவர்களுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் நிலவுகின்றன.

வட கொரியாவை இலக்காக வைத்து, கொரிய வளைகுடாவில் அமெரிக்க மற்றும் தென் கொரிய இராணுவப் படைகள் மிகப் பெரிய இராணுவப் பயிற்சியை மார்ச் மாதத்தில் நடத்தியிருக்கின்றன. இந்தப் போர் பயிற்சியில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட தென் கொரிய, அமெரிக்கப் படைகள் பங்கேற்றன. இதன் நோக்கமானது, வட கொரியாவை ஆக்கிரமிக்கவும், அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவும், அமெரிக்கா தயாராக இருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதாகும். வட கொரியா தன்னுடைய அணு சோதனைகளை நிறுத்திக் கொண்டால், தென் கொரியாவுடன் கூட்டாக அமெரிக்கா நடத்திவரும் கூட்டுப் போர் பயிற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென சீனா முன்வைத்த தீர்வை, அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் புறக்கணித்து விட்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசிய மையக் கொள்கையின் ஒரு அங்கமாக, சப்பான் – ஒக்கினாவா-விலிருந்து ஆஸ்திரேலியா வரையிலும் சீனாவைச் சுற்றி வளைத்து 400-க்கும் மேற்பட்ட இராணுவத் தளங்களை அது வைத்திருக்கிறது.

சீனாவை இலக்காக வைத்து, தன்னுடைய ஆசிய மையக் கொள்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவுடன் ஒரு முக்கிய உறவை அமெரிக்க ஏகாதிபத்தியம் வலுப்படுத்தி வருகிறார்கள். பல்வேறு பிரச்சனைகளில் சீனாவை இந்தியா எதிர்க்க வேண்டுமென அவர்கள் தூண்டிவிட்டு வருகிறார்கள். இந்திய அரசு இந்தப் போக்கில் சென்று, இந்தியா – சீனாவிற்கும் இடையிலுள்ள முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

அண்மையில் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரும், தேசிய பாதுகாப்பு அறிவுரையாளரும் அமெரிக்கா சென்று வந்தனர். அவர்கள் அங்கு என்ன பேச்சு வார்த்தை நடத்தினார்கள் என்பது வெளியிடப்பட வில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மூர்க்கத்தனமான திட்டங்களுக்கு அமெரிக்காவினுடைய ஆதரவை இந்தியா கேட்டிருப்பதாகவும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் திட்டங்களுக்கு இந்தியாவின் இராணுவக் கூட்டுறவை அமெரிக்கா கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், செர்மன் ஏகாதிபத்தியத்திற்கும் இடையே முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. பிப்ரவரி 17-19 இல் நடைபெற்ற 53-ஆவது முனிச் பாதுகாப்புக் கருத்தரங்கு, மிக விரைவாக இராணுவமயமாக்கும் பாதையைப் பின்பற்ற செர்மனி தீர்மானித்திருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. தன்னுடைய தலைமையின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ஒன்றியமாக மாற்றுவதற்கு, செர்மன் ஏகாதிபத்தியர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். நேடோ மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் வைத்திருக்கும் கிடுக்கிப் பிடியிலிருந்து செர்மனி, ஒரு கட்டத்தில் விடுபட்டு வெளிவரும். பிரான்சினுடைய அணு ஆயுதங்களின் விரிவாக்கத்திற்கு நிதியளிப்பதில் கூட்டு சேர ஒப்புக் கொள்வதன் மூலம், அந்த ஆயுதங்களை செர்மனி பயன்படுத்த விரும்புவதாக அறிக்கைகள் கூறுகின்றன. நேடோ இராணுவக் கூட்டணியில் அமெரிக்கா தொடர்ந்து தலைமைப் பங்காற்றுமென அமெரிக்க துணை அதிபர் கருத்தரங்கில் உறுதிபடக் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் மாற்றங்கள்

தங்களுடைய மக்கள் விரோதத் திட்டங்களுக்கு “மக்களுடைய ஆணையை” உற்பத்தி செய்வதற்காக, அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களை இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையான மக்களுடைய நலன்களுக்கு எதிரான ஒரு போக்கை சட்டரீதியாக ஆக்குவதற்காகவும், 2024 வரை இந்தியாவைக் கொண்டு செல்வதற்காக மோடியை “மக்களுடைய விருப்பமாக” பரப்புரை செய்வதற்கும், தேர்தல் முடிவுகள் ஏகபோக முதலாளிகளால் பயன்படுத்தப்படுகின்றன.  

பொய்யாக புனையப்பட்ட கொலைக் குற்றங்களைக் காட்டி, பல மாருதி தொழிலாளர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை கொடுத்திருப்பது, முற்போக்கான பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருதல், பசு பாதுகாப்புப் படைகள் என்றழைக்கப்படுபவர்கள் நடத்தும் வெட்கமற்ற தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் ஆளும் பெரும் முதலாளி வகுப்பினருடைய பாசிச தாக்குதல்களின் அறிகுறிகளாகும். அயோத்தியா பிரச்சனையை மீண்டும் தூண்டி விட்டிருப்பதும், அதற்குப் “பேச்சுவார்த்தை மூலம் தீர்வு” காண வேண்டுமென உச்ச நீதி மன்றம் அழைப்பு விடுத்திருப்பதும், அண்மையில் நடைபெற்றிருக்கிறது. இது, தன்னுடைய சமூக விரோத, ஏகாதிபத்தியத் திட்டங்களுக்கு எதிராக அதிகரித்துவரும் தொழிலாளி வகுப்பு மற்றும் உழவர்களுடைய எதிர்ப்பைத் திசை திருப்புவதற்காகவும், பிளவுபடுத்துவதற்காகவும் பெரும் முதலாளி வகுப்பு தன்னுடைய பழைய பிரித்தாளும் சூழ்ச்சியைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்பதைக் காட்டுகிறது.

தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் பாசிச தாக்குதல்களுக்கு எதிராக அவர்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது. பாஜக-விற்கு எதிராக ஒரு மதச் சார்பற்ற பாராளுமன்ற மாற்றைக் கொண்டுவர முயற்சிப்பவர்களால் இந்தக் கோபம் மீண்டும் ஒருமுறை திசை திருப்பப்படுவதைத் தடுத்து, புரட்சிகரத் தீர்வை நோக்கிக் கொண்டு செல்வதே கம்யூனிஸ்டுகள் நம்மை எதிர் கொண்டுள்ள சவாலாகும்.

கட்சியின் இதழான தொழிலாளர் ஒற்றுமைக் குரலை மேலும் உறுதிப்படுத்தவும், தொழில் திறன் கொண்டதாக ஆக்குவதற்கும் நவம்பரில் நடைபெற்ற 5-ஆவது மாநாட்டிற்குப் பின்னர் எடுக்கப்பட்ட அமைப்பு ரீதியான நடவடிக்கைகளை மத்தியக் குழு சிறப்பாக மதிப்பிட்டது. கட்சி இதழின் பங்கு, ஒரு கூட்டுப் பரப்புரையாளராகவும், கூட்டு ஆர்பாட்டக்காரராகவும் இருப்பது மட்டுமின்றி, ஒரு கூட்டு அணி திரட்டுபவராகவும் இருப்பதை அது மீண்டும் உறுதிபடுத்தியது. பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் ஆர்வத்திற்குரிய போராட்டங்களைப் பற்றியும், மாற்றங்கள் குறித்தும் வெளியிடுவதோடு, புரட்சிகர கருத்தியல் மற்றும் கட்சிக் கொள்கை உட்பட தொழிலாளி வகுப்பின் முன்னேறிய பிரிவினரை எதிர் கொள்ளும் கேள்விகளுக்குத் தொடர்ந்து பதிலளிப்பதும், கட்சி இதழின் கொள்கையாகும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

நம்முடைய கடமைகள்

இன்றுள்ள அமைப்பில், மக்கள் எதற்காகப் போராடி வருகிறார்களோ அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் தேர்தல் முடிவுகள் இருக்கின்றன என்ற உண்மையை அண்மையில் நடைபெற்றத் தேர்தல்கள் மூலம் பல கட்சிகளையும், குழுக்களையும் சேர்ந்த அரசியல் செயல் வீரர்கள் உணர்ந்து வருகிறார்கள். இந்தப் பாராளுமன்ற சனநாயகம், மக்களுடைய விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது என்ற மோசடி அதிக அளவில் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, மறுமலர்ச்சிக்காகவும், திட்டங்களை மக்களே தீர்மானிப்பவர்களாகவும், உழைக்கும் பெரும்பான்மையினருடைய விருப்பத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும் ஒரு புதிய அமைப்பின் அவசியத்திற்கான பரப்புரையை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

கட்சியின் இதழை வலுப்படுத்தவும், அதனுடைய வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் உயர்த்துவதற்கு அமைப்பு ரீதியான முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதோடு, அதனுடைய விற்பனையையும், வினியோகத்தையும் அதிகரிக்கும் சவால் மீது கவனம் செலுத்த வேண்டும். தற்போது நாம் செய்து வரும் கட்டத்திலிருந்து உயர் நிலைக்கு முன்னேற வேண்டும். புதிய முறைகளில் நாம் சிந்திக்க வேண்டும். நாம் தொடர்ந்து வேலை செய்து வரும் குறிப்பிட்ட பிரிவுத் தொழிலாளர்களை இலக்காக வைத்து, ஒவ்வொரு பகுதியிலும் நன்கு உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் கட்சி இதழின் விற்பனையும், வினியோகமும் செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் நம்முடைய வேலையின் ஒரு திட்டவட்டமான பகுதியாக, பெருவீதத் தொழிற்சாலைகளிலும், சேவைகளிலும் உள்ள தொழிலாளர்களிடையே குறி வைத்த பரப்புரையும், ஆர்பாட்டமும் நடத்தப்பட வேண்டும். தொழிலாளி வகுப்பின் ஒவ்வொரு பிரிவினரிடையிலும் நம்முடைய இதழுக்கான படிப்பாளர்களை அதிகரித்து, அவர்களோடு வழக்கமாகத் தொடர்புகளை ஏற்படுத்தியும், படிப்பு வட்டங்களை திட்டமிட்டு நடத்தியும், கட்சியின் அடிப்படை அமைப்புக்களைக் கட்டியும் வர வேண்டும்.

இந்த ஆண்டின் மேதினத்தையொட்டி, எல்லா கட்சி அமைப்புக்களும் பெரும் செயல்பாடுகளில் இறங்க வேண்டுமென மத்தியக் குழு தீர்மானித்தது. இந்த வேலையை, இரயில்வே, போக்குவரத்து, வங்கிகள், விமானத் துறை, வாகன மற்றும் ஆடைத் தொழில், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்துத் துறை தொழிலாளர்களிடையிலும் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த ஆண்டின் மேதின ஆர்பாட்டங்களில் பெண்களையும், இளைஞர்களையும் மாணவர்களையும் சேர்ந்து கொள்ளுமாறு அணி திரட்ட வேண்டும். நம்முடைய முக்கிய அரசியல் கருத்துக்களையும், முழக்கங்களையும் பரப்புரை செய்வதற்கு சமூக ஊடகங்களை நாம் படைப்பாற்றலோடு பயன்படுத்த வேண்டும்.

இரசியப் புரட்சியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் நமது கட்சியின் பரப்புரையும், கல்வி முயற்சியும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் மே மாத இதழிலிருந்து துவங்கியிருக்கிறது. எல்லா பகுதிகளைச் சேர்ந்த குழுக்களும் இந்தக் கட்டுரைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாபெரும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு குறித்த விவாதங்களையும், கூட்டங்களையும் நடத்துவதற்கு இவற்றை வழி காட்டியாகக் கொள்ள வேண்டும். 

Pin It