Mahaswetha Deviவங்கப் பெண் எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, ஓர் இலக்கியப் படைப்பாளியாகவும், பழங்குடி மக்களின் உரிமைக்காகப் போராடும் ஓர் இயக்கவாதியாகவும் தீரமுடன் செயல்பட்டு வருகிறார். 1926 இல் பிறந்த இவரது வாழ்க்கை, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம், இந்திய விடுதலைக் காலம், 50 ஆண்டு பின்காலனித்துவ காலம் என நீள்கிறது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், எவ்வாறு தலித் போராளிகளின் பங்களிப்பு மறைக்கப்பட்டதோ, அவ்வாறே பழங்குடியினரின் தியாகங்களும் மறைக்கப்பட்டன என்று இவரது படைப்புகளில் சுட்டிக்காட்டுகிறார். வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வனச்சட்டங்கள் என்ற பெயரில் பழங்குடி மக்களிடமிருந்தே நலங்களையும் வளங்களையும் பிடுங்கி, அதற்குப் பதிலாக அவர்களுக்கு நலமோ, இழப்பீடோ வழங்காமல் அவர்களை நாடோடிகளாக அலையவிடும் இந்திய அரசின் செயல்பாட்டையும், இதனால் பழங்குடி மக்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு வருவதையும் தமது எழுத்தில் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இவர் "தெகல்கா' ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியை இங்கு வெளியிடுகிறோம்.
தமிழில் : பூங்குழலி

அண்மையில் திருத்தப்பட்ட பழங்குடியினர் வன உரிமைகள் சட்டம், பழங்குடியின மக்கள் தற்போது அனுபவிப்பதைவிட அதிக உரிமைகளை அளிக்க முற்படுகிறது. அவர்களின் வாழ்வு மேம்பட அது உதவுமா?

நான் மக்களிடம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன் பழங்குடியினரிடமும், பிறரிடமும். மேற்கு வங்காளம், பீகார், இன்றைய ஜார்க்கண்ட், ஒரிசா மற்றும் வேறெங்கிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் செல்கிறேன். அதில் கண்டிப்பாக, பழங்குடியினர் அல்லது பின்னர் பழங்குடியினராக அறிவிக்கப்பட்டவர்கள்தான் எனது கவனத்தை ஈர்த்தனர். முதலில் நான் இரண்டு சான்றுகளை அளிக்கிறேன். அந்தமானின் "ஜாரவா'க்கள் மரபாக உணவு சேகரிப்பவர்கள். தேன் அவர்கள் வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாக இருந்தது. தேனை சேமிக்க மரத்தைக் குடைந்து பெரிய பெரிய பீப்பாய்கள் செய்து, அதை மரத்தின் அடியில் புதைத்து வைப்பார்கள். ஒரு முறை வெளியாட்கள் - நான் அந்த சொல்லைத் தெரிந்தேதான் பயன்படுத்துகிறேன் - பீப்பாய்களைத் தோண்டி எடுத்து தேன் அனைத்தையும் களவாடி விட்டனர். "ஜாரவா'க்கள் மிகுந்த ஆவேசமடைந்து அவர்களின் குடிசைகளை எரித்துவிட்டனர். ஆனால், ஜாரவாக்கள் செய்ததாகச் சொல்லப்படும் "அட்டூழியங்கள்'தான் ஊடகங்களில் வெளிவந்தது.

அந்தமானின் அதிமுக்கிய நெடுஞ்சாலை, ஜாரவாக்களின் இதயப்பகுதி வழியாகச் செல்கிறது. இதனால் இப்போது வாகனங்கள் எளிதாக அந்தப் பகுதிகளில் நுழைய முடிவதால், இந்தப் பழங்குடியின ருக்கு வேறு வகையான உணவுகள் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால், அந்த மாதிரியான உணவுகளைத் தாங்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அவர்களிடம் இல்லை. அவர்களது உணவு முறை பழங்கள், வேர்கள், தேன் போன்ற இயற்கை உணவு மட்டுமே. அதனால் அவர்கள் துன்புற்று இறக்கின்றனர். அதற்கு எதுவும் செய்யப்படவில்லை. உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான குடிகள் அந்தமானில்தான் இருக்கின்றனர் என்பது, இந்த உலகின் கவனத்தில் இல்லை. இது, எனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது.

அவர்களுக்கு இயற்கையைப் பற்றித் தெரியும். அவர்கள் கடலை ஆய்கின்றனர். தங்கள் காடுகளைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கின்றனர். ஆனால், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நாம் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் சோகம் என்னவெனில், நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க செல்கிறோம்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள அல்ல. சுனாமியின் போது, "ஜாரவா'க்களுக்கு மட்டுமல்ல, பிற பழங்குடியினருக்கும் கடலின் நிறம் மாறியதன் பொருளும் தெரிந்திருந்தது. அலையின் திசையில் ஏற்பட்ட மாற்றங்களை எல்லாம் சரியாகப் புரிந்து கொண்டு, அவர்கள் குன்றுகளின் மீது ஏறிக் கொண்டனர். அவர்கள் காப்பாற்றப்பட்டனர். அவர்கள் இறக்கவில்லை. ஆனால், பிறர் இறந்தனர். இது ஒரு சான்று.

மற்றொரு சான்று "கார்கு'கள் பற்றியது. அவர்கள் காட்டுவாசிகள். ஒரு காலத்தில் மேற்கு மகாராட்டிரத்தில் அவர்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர். பிரிட்டிஷார் இருப்புப் பாதைகள் கட்டியபோது, நாசிக் முதல் அவுரா வரை இருப்புப் பாதையிட பல பழமையான தேக்கு காடுகளை அழித்தனர். பெரும் எண்ணிக்கையில் இருந்த "கார்கு'கள் காடுகள் அழிக்கப்பட்டதால், திடீரென தங்கள் உணவு, மருந்து என அனைத்து ஆதாரங்களையும் இழந்ததை உணர்ந்தனர். நான் அவர்களைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அரசு "கார்கு'களை மகாராட்டிரத்தில் உள்ள அமால்னெரில் குடியமர்த்த முயன்றது. ஆனால், "கார்கு'களுக்கு விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால் அவர்கள் இயற்கையாக அதனோடு பொருந்தவில்லை. விளைவு, பிறர் அவர்கள் நலங்களை எடுத்துக் கொண்டனர்! கார்குகள் பெருமளவில் துன்புற்றனர். பெரும்பாலானோர் அழிந்து விட்டனர். அவர்கள் இப்போது முற்றிலும் அழிந்து கொண்டிருக்கும் ஒரு பழங்குடியினர். ஏனெனில், அவர்களுடைய காடுகளை அவர்கள் இழந்துவிட்டனர்.

ஆக, காடுகளைப் பற்றி யார் நன்கு அறிந்திருக்கிறார்களோ, யார் காடுகளைப் பராமரிக்கிறார்களோ, யார் காடுகள் தழைத்து வாழ உதவுகிறார்களோ, அம்மக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள முயல்வதே இல்லை. நாம் அவர்களையோ, அவர்கள் பழக்கவழக்கங்களையோ, பண்பாட்டையோ மதிப்பதில்லை. அவர்களிடமிருந்து காடுகள் களவாடப்படுகின்றன.

இச்சட்டத்தை விமர்சிப்பவர்கள், காட்டுவாசிகள் தங்கள் உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி காடுகளை அழித்து விடுவர் எனக் குற்றம் சுமத்துகிறார்களே?

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஜால்பாய்குரியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்குச் சென்றபோது, அங்கு காட்டுவாசிகளான பழங்குடியினர் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவர்களுக்கு பஞ்சாயத்து வசதிகள் எதுவும் தரப்படவில்லை என்பதையும் கண்டேன். சாலைகள் இல்லை. மின்சாரம் இல்லை. பள்ளிகள் இல்லை. ஏனெனில், அவர்கள் காட்டுவாசிகள். இம்மாதிரியான அநீதி பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

எங்கள் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திலும் புரூலியா, பங்குரா, மேற்கு மேதினிபூர் மற்றும் வடக்கு வங்கத்தின் பாரிய பகுதிகளில் காடுகள் காணப்படுகின்றன. ஆனால், அவைகளில் எதுவும் மிஞ்சவில்லை. அவை சுரண்டுபவர்களால் "வன தேகெதர்கள்' அல்லது உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் வனத்துறை அதிகாரிகளால் அழிக்கப்பட்டன அல்லது விற்கப்பட்டன. கடந்த 30 - 40 ஆண்டுகளாக மரத்தாலான வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஜார்கார்ம் காடுகள் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதை நான் காண்கிறேன்.

ஜார்கார்ம் காடுகளின் அருகே ரயில் வண்டிகளை நிறுத்தி, பெரும் எண்ணிக்கையில் தேக்கு மற்றும் சால் மரங்கள் ஏற்றப்படும் காலம் இருந்தது. அது, பழங்குடியினர் வேலை அல்ல. தங்களது சொந்த வாழ்வாதாரத்தை அவர்கள் அழிக்க மாட்டார்கள். மேலும், எந்தப் பழங்குடியினருக்கும் ஒரு வண்டி நிறைய மரத்துண்டுகளை எடுக்கும் அளவிற்குத் திறனோ, அதிகாரமோ, பணமோ கிடையாது. இந்தியா முழுவதிலும் பரவலாக காடுகள் அழிக்கப்படுகிறது என்றால், அது பழங்குடியினரால் அல்ல.

நிலைமை நீங்கள் விவரித்தபடி இருக்க, எந்தவொரு சட்டத்தாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

'லோதா'க்கள் தாங்கள் மரம் வெட்ட வற்புறுத்தப்படுவதாக என்னிடம் கூறிய காலம் ஒன்று இருந்தது. நான் ஒரு பழங்குடியின மனிதரிடம் கேட்டேன். நீங்கள் காட்டுவாசிகள், நீங்கள் வன தேவதையை வணங்குபவர்கள், நீங்கள் எப்படி இதைச் செய்யலாம்? அவர் என்னிடம் பதிலுரைத்தார் : அம்மா, எங்களுக்கு ஒரு நாளைக்கு அய்ந்து ரூபாய் தேவைப்படுகிறது. என்னை மரம் வெட்டச் சொல்லுங்கள், நான் வெட்டுகிறேன். யாருடைய தலையையாவது வெட்டச் சொல்லுங்கள், வெட்டுகிறேன். அவர்கள் மனிதத் தலைகளை வெட்டுகிறார்கள் என்று சொல்லவில்லை. அது, அவர்கள் நிலையை வெளிப்படுத்துகிறது.

நீங்கள் நினைக்கலாம், மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் நேரடியாக வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர் என்று. ஆனால், அப்படி இல்லை. உள்ளூர் அரசியல்வாதிகள், பஞ்சாயத்தார், அரசியல் கட்சிகள், இவர்களைத் தவிர வெவ்வேறு வடிவங்களில் வரும் அரசு எந்திரங்கள் என இவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவோர் பலர் உள்ளனர். அவர்கள் ஊரக வளர்ச்சி அதிகாரியிடம் செல்வர். அவர் இங்கு இல்லை. அங்கு செல்லுங்கள் என்பார். இப்படியே போய்க் கொண்டேயிருக்கும். ஒரு சான்றுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நல்லதுதான். ஆனால், எதைப் பற்றியும் எதுவுமே தெரியாதவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துவார்கள்? இப்பொழுது ஒரு புதிய சட்டம் வருகிறது. அச்சட்டத்தின் பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கு யாரிடம் செல்ல வேண்டும் என்பதோ, இச்சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதோ எப்படித் தெரியும்?

பழங்குடியினர் காடுகள் பாதுகாப்புச் சட்டம் மிகச் சிறப்பாக உள்ளது. ஆனால், காடுகள் எங்கே இருக்கின்றன? அப்படியே அவை இருந்தாலும், மக்கள் எங்கே இருக்கின்றார்கள்? பழங்குடியினருக்கு உண்மையிலேயே காடுகள் மீது ஏதேனும் உரிமை இருக்கிறதா? நாம் இந்தியாவில் ஓர் இயற்கை காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்து பழங்குடியினரிடம் ஒப்படைத்து, அவர்களை அதைக் கொண்டு வாழச் சொன்னால், இன்றைய பழங்குடியினரால் முடியும் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவர்கள் வாழ்க்கை முறை அழிந்துவிட்டது. இப்போது அவர்கள் அறிந்ததெல்லாம் பழமொழிகள் மற்றும் சடங்குகள் மூலம் அறிந்து கொண்ட வெறும் வாய்மொழி மரபு மட்டுமே. பல தலைமுறைகளாகத் தொடர்ந்த காடுகள் அழிப்புக்குப் பிறகு, காடுகளையோ மரங்களையோ பார்த்திராதவர்கள் காடுகளை வைத்து வாழ முடியும் என எதிர்பார்க்க முடியாது.

நான் 1970களில் இருந்து பலமாவுக்குப் போய் கொண்டிருக்கிறேன். தல்தோகன்ஞ்சுக்கு செல்லும் சாலை அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டிருந்தது. பலமாவுக்கு அருகில் இருக்கும் புருலியாவிலும் அதே நிலைதான். ஒரு காலத்தில் அந்தக் காடுகளில் லாக் வகை மரங்கள் நிறைந்து காணப்பட்டன. லாக் மரம் இசைத்தட்டுகள் செய்யப் பயன்படுத்தப்பட்டது. அதனால் அதற்கு மிகுந்த தேவை இருந்தது. இந்தியாதான் லாக் மரத்தை உலக சந்தைக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்தது. கிட்டத்தட்ட உலகின் 50 விழுக்காடு தேவையை இந்தியா நிறைவு செய்தது. இந்தியாவில் விளைவிக்கப்பட்ட லாக் மரங்களில் 50 விழுக்காடு பலமாவ், புருலியா என்ற இந்த இரு மாவட்டங்களிலிருந்துதான் வந்தன. தற்போது பலமாவ் பொட்டலாகி விட்டது. நான் அங்கிருந்த கொத்தடிமைகளிடம் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவர்கள் சொல்வார்கள், "காடுகள் உள்ள வரையில் நாங்கள் இருப்போம்; நாங்கள் உயிருடன் இருப்போம். தற்போது காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. நாங்களும் இறந்து விட்டோம்.' பழங்குடியினர் காடுகளை ஆயிரக்கணக்கான வழிகளில் பயன்படுத்துவர். ஆனால், காடுகளை அழித்து அவர்கள் எதையும் செய்வது இல்லை. காடுகளை எவ்வாறு மனித சமூகத்திற்கு உதவுமாறு பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்.

பழங்குடிகளுக்கு நாடு முழுவதிலும் உள்ள காடுகளில் எதுவும் சொந்தமில்லாத நிலையில், அவர்கள் கையில் எவ்வித காட்டுப் பகுதியும் இல்லாத நிலையில், அவர்களுக்கு காடுகள் மீது எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையில், இப்பொழுது ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். எல்லாம் வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். ஆம்பர் மரங்கள் நிறைந்த காடு பங்குரா. இருப்புப் பாதைகள் இந்த ஆம்பர் மரங்களின் மீதுதான் அமைக்கப்படுகின்றன என்று நான் எப்போதோ செய்திகளில் படித்த நினைவு. அவைகளின் சரியான பயன்பாடு உள்ளூர் மக்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால், அந்த மாவட்டமே செழித்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவேயில்லை.

நமது காடுகள் மிகுந்த செழிப்பானவை. இன்று உலகெங்கிலும் மிகுந்த தேவை ஏற்பட்டிருக்கும் மூலிகை மருத்துவம் பழங்குடியினர் அறிந்த ஒன்று. மூலிகை மருத்துவம் குறித்த அனைத்தும் போலியானவை அல்ல என்பதை நான் மீண்டும் மீண்டும் எழுதி வந்திருக்கிறேன். கிராம வைத்தியர்கள், கவிராஜ் என அழைக்கப்படுபவர்கள், ஒவ்வொரு செடியின் இயல்பையும் உங்களுக்கு சொல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு கொஞ்சம் பயிற்சி அளிக்கப்பட்டால் அவர்களும் பெரும் வெற்றி பெறலாம். பழங்குடியினர் உலகம் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு, இப்போது ஏன் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்? அவர்களுக்கு என்ன திருப்பி அளிக்கப் போகிறீர்கள்? அப்படியே அங்கு ஒரு காடு இருந்தால், அவர்கள் அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள்? அவர்கள் என்ன நாற்காலிகளும் மேசைகளும் செய்வதற்கு மரத்தை வெட்டப் போகிறார்களா? அவர்கள் என்ன செய்வார்கள்?

பழைய செவி வழி மரபு இன்றைய இளைய தலைமுறையினரிடையே இன்னமும் பழக்கத்தில் இருக்கிறதா?

அது ஒன்றுதான் இப்போது உயிருடன் இருக்கிறது. ஆனால், இன்றைய தலைமுறையைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அவர்கள் எப்படி அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்திருக்க முடியும்? அவர்கள் காடுகளில் வாழ்வதில்லை. நகரங்களுக்கு வருகிறார்கள். கிராமங்களில் வாழ்பவர்களுக்கும் பழைய மாதிரியான கிராமங்கள் இல்லை. பழைய மாதிரியான காடுகளும் இல்லை. பழைய மூலிகைகள் இல்லை. பழைய உணவு இல்லை.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான சர்ச்சை கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில், இந்த இளைய தலைமுறையினரின் நிலை என்ன?

அந்தப் போராட்டங்கள் முற்றிலும் வேறுபட்டவை. இந்த மக்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை. நான் அதைச் சொல்ல முடியாது. மேற்கு வங்கத்தில் இரு சமூகங்கள் மேதினிபூரைச் சேர்ந்த "லோதா'க்களும், ஜால்பாய்குரியைச் சேர்ந்த "தோதோ'க்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இந்த ஆண்டு 5 "தோதோ' மாணவர்கள் "மத்திமிக்' தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றனர். ஒருவர் மேல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். "லோதா' சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனும் பெண்ணும் மிகச் சிறப்பாக முதல் வகுப்பில் தேர்வு பெற்றிருக்கின்றனர். இந்தப் பையன் எவ்வாறு மேலே படிப்பான்? நாங்கள் அவனுக்காக முயற்சி எடுக்க வேண்டும். செய்வோம். உள்ளூர் கல்லூரி ஒன்று அவனுக்கு இடம் கொடுத்துள்ளது. அது மோசமான கல்லூரி அல்ல. அங்குள்ள ஆசிரியர்கள் அவனுக்கு தங்கும் விடுதியில் இடத்திற்கு ஏற்பாடு செய்ததோடு அவனது செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால், இந்த மக்களில் இருந்து மருத்துவர்களும் பொறியாளர்களும் வரவில்லையெனில் என்ன பயன்? மரங்களும் காடுகளும், பூச்சிகளும் பறவைகளுமே தங்கள் வாழ்க்கையாகக் கொண்ட இந்த மக்களுக்கு எந்த வாய்ப்பும் அளிக்கப்பட மாட்டாது. ஆனால், பொது சமூகத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் மட்டும் மேல் படிப்பிற்குச் செல்வார்கள். இது எவ்வாறு இந்த நாட்டிற்கு நன்மை பயக்கும்? இந்தியா இன்றும் பொது சமூகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமானது அல்ல. சாலை போடுபவர்களும், விவசாயிகளும், மரம் நடுபவர்களும், இந்த ஆண்களும் பெண்களும் பொது சமூகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் அதை செய்கிறார்கள், ஆனால் தினக் கூலிக்கு.

முற்றிலும் தோற்றுப்போன நமது கல்வி முறையில்தான் தவறு உள்ளது. ஆரம்பக் கல்வி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும்கூட எதுவும் தெரிவதில்லை. நாங்கள் வளரும்போது, சாதாரண பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்குக்கூட சரியான ஆங்கிலம், சரியான வங்காளம், சரியான கணக்கு தெரியும். அது இனி இல்லை. குறிப்பிட்ட பள்ளிகளுக்கு செல்லாமல் உங்களுக்கு எதுவும் தெரிவதில்லை. சாதாரண மக்களிடமிருந்து கல்வி பறிக்கப்பட்டு விட்டது.

இறுதியாக ஒரு கேள்வி. நீங்கள் நீண்ட காலமாக களத்தில் நிற்கிறீர்கள். புதிதாக களத்திற்கு வரும் இளைய தலைமுறையினரை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

நான் எந்த இடைவெளியையும் வேறுபாட்டையும் காணவில்லை. புதியவர்கள் வருகிறார்கள். நான் இங்கு அமர்ந்து கொண்டு வேலைக்கு ஆள் எடுப்பதில்லை. விரும்புகின்றவர்கள் வந்து என்னை சந்திக்கிறார்கள். ஆர்வம் மட்டும் போதாது, அதைத் தொடர்ந்து செய்வார்களா? தொடர்ந்து பணி புரிபவர்கள் அனைவரும் பழங்குடியினர் அல்ல. பெரும்பான்மையானவர்கள் நகரங்களில் இருந்து வந்தவர்கள். ஆனால், அவர்கள் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். தங்கள் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள். அது மிகவும் நன்றாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.
Pin It