Yakkan and Vasandha Kandhasamy

எழுத்துகளின் தீராத கருத்துச் செறிவும் புத்தம் புது சிந்தனைகளை உருவாக்கும் தன்மையைக் கொண்டதுமான புரட்சியாளர் அம்பேத்கரின் எழுத்துகள், சாதி ஒழிப்புக் களத்தில் போராடும் செயல்பாட்டாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் உந்துசக்தியாகவும் விளங்குபவையாகும். புரட்சியாளர் அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே தலித் இலக்கியம் தொடங்கியிருக்கிறது. அதன் நீட்சியாகத்தான் இன்றுவரை எழுதப்படுகின்ற தலித் பிரதிகளும் விளங்குகின்றன.

மராட்டிய, கன்னட தலித் இலக்கியங்களின் அடர்த்தியும் அவற்றின் எழுச்சியும் தமிழ் தலித் இலக்கியத்தில் புதிய வீரியத்தை உருவாக்கி, படைப்பாளுமைகள் வெளிப்பட்டன. தலித் இலக்கியத்தின் தேவையும் அதன் ஆழழும் தரமும் தமிழ்ப் பதிப்பகச் சூழலை மாற்றியது. பல்வேறு பதிப்பகங்கள் தலித் எழுத்தாளர்களின் பிரதிகளை அச்சிட்டு காசு பார்த்தன. தலித் விடுதலைக்கான அக்கறையற்று வெறும் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே அது நடந்தது.

ஆனால், தலித் கருத்தியலின் அடித்தளத்தில் கட்டப்பட்டு, புரட்சியாளர் அம்பேத்கரின் எழுத்துகளை மாதிரிகளாகக் கொண்டு, சமூக அக்கறையோடு ஆதிக்க சமூகங்களின் வேர்களை அசைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கப்பட்டதுதான் ‘கலகம்' வெளியீட்டகம்.

மாற்கு எழுதிய ‘மறியல்' எனும் நாவலையும், யாழன் ஆதி ‘தலித் முரசு' இதழின் முதல் பக்கத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பான ‘நெடுந்தீ' என்னும் நூலினையும் கலகம் வெளியீட்டகம் வெளியிட்டது. வெளியீட்டு விழா, புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளான திசம்பர் 6 அன்று மாலை, எழும்பூர் ‘இக்சா' மய்யத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் அய். இளங்கோவன் தலைமை வகித்தார். கலகம் வெளியீட்டகத்தின் பொறுப்பாளர் யாக்கன் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமையுரை நிகழ்த்திய அய். இளங்கோவன், ‘கலகம்' என்ற சொல்லில் இயங்கும் அரசியல் முக்கியமானது. நாம் எல்லோரும் வெறும் வாசிப்பாளர்களாக மட்டுமின்றி, கலகம் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார். தான் நடத்திய போராட்டங்கள் பற்றியும், தன்னுடைய சிறை அனுபவம் குறித்தும் பேசியதுடன் கயர்லாஞ்சி படுகொலை எத்தகைய விவாதங்களை இங்கு ஏற்படுத்தியிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி, அவர் கூறிய செய்திகள் அரங்கை எழுச்சி கொள்ள வைத்தது.

‘மறியல்' நாவலை பேராசிரியர் வசந்தா கந்தசாமி வெளியிட, அருட்தந்தை மார்ட்டின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். ‘நெடுந்தீ'யை அய். இளங்கோவன் வெளியிட, கொடிக்கால் சேக் அப்துல்லா பெற்றுக் கொண்டார். ‘மறியல்' நாவல் குறித்த விமர்சன உரையை எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், பூங்குழலி, ஓவியா ஆகியோர் நிகழ்த்தினர்.

ஓவியா பேசுகையில், எதார்த்தமான நடையும், வரலாற்றைப் பதிவு செய்யும் எழுத்தும் நாவலுக்கு வெற்றியைத் தருகின்றன என்றார். நிகழ்ந்தவற்றைப் பதிவு செய்கையில், இலக்கியத் தேடலையும் கடந்து அதற்குள் புதைந்திருக்கும் உண்மை முக்கியம் என்ற கருத்தை பூங்குழலி வலியுறுத்தினார். சங்கரலிங்கபுரம் சாதி வன்முறையின் எழுத்துப் பதிவான இந்நூல் பாராட்டுதற்குரியது என்றார் அழகிய பெரியவன்.

‘நெடுந்தீ' குறித்து கவிஞர் யுகபாரதி பேசுகையில், நம்முடைய படைப்புகள் காலத்தை வென்று நிற்க வேண்டிய அவசியமில்லை; அந்தந்த காலத்திற்கு ஏற்ப அவை வினைபுரிந்தால் போதும் என்றார். நிலைத்திருப்பது என்பது ஆதிக்க வாதிகளின் கொள்கை, அது நமக்குத் தேவையில்லை என்றும் கூறினார். நிகழ்ச்சியை வாழ்த்தி பணி. செல்வராஜ், பணி. வளன், பணி. மார்ட்டின் ஆகியோர் உரையாற்றினர். நாவலாசிரியர் மாற்கு ஏற்புரை நிகழ்த்தினார்.

யாழன் ஆதி நன்றி கூற விழா இனிதே முடிந்தது. விழாவின் சிறப்பம்சமாக, தீத்தன் அய்.ஏ.எஸ். நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். புரட்சியாளரின் மாறுபட்ட படத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அரங்கமும், அங்கே நிரம்பிய பார்வையாளர்களும், தலித் எழுத்தின் பரவலையும் அவசியத்தையும் உணர்த்தினர்.

Pin It